WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்Japan-China tensions flare up over disputed Diaoyu islets
சர்ச்சைக்குரிய டயோயு தீவுகள் குறித்து ஜப்பான்-சீனாவிற்கிடையே பதட்டம்
By John Chan
14 September 2010
Back to
screen version
செப்டம்பர் 7ம் தேதி இரு ஜப்பானிய கடலோரப் பாதுகாப்பு கப்பல்கள் சர்ச்சைக்குரிய டயோயு தீவுகள் அருகே (ஜப்பானின் சென்காகு என அறியப்படுவது) ஒரு மீன்பிடிக்கும் படகுடன் மோதியதாகக் கூறப்படுவதை அடுத்து ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் தீவிரமாகியுள்ளன. இரு அரசாங்கங்களும் குறிப்பான கடின நிலைப்பாட்டைக் கொண்டு, தீவுகள் மீது தங்கள் இறைமை “சர்ச்சைக்கு உட்பட்டவை அல்ல”, “மறுக்க முடியாதவை” என்று வலியுறுத்தியுள்ளன.
ஜப்பானிய அரசாங்கம் ஆத்திரமூட்டும் வகையில் சிறிய 166- தொன் கப்பலின் தளபதியையும் 14 பணியாட்கள் குழுவினரையும் கைதுசெய்தது. அவர்கள் ஓகினாவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜப்பானில் உள்ள சீனத் தூதரிடமும் டோக்கியோ ஜப்பானிய கடற்பகுதியில் கப்பலின் நடவடிக்கைகள் பற்றிப் புகார் கொடுத்தது. பெய்ஜிங்கின் எதிர்ப்புக்களையும் மீறி, ஒரு ஜப்பானிய நீதிமன்றம் கப்பலின் தளபதி ஜான் க்விஜியோங்கைக் காவலில் வைக்க ஒப்புதல் கொடுத்தது. அவர் வேண்டுமென்றே ஒரு ஜப்பானிய ரோந்துப் படகின் மீது மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு கிடைக்கக்கூடும்.
சர்ச்சைக்குரிய பகுதிக்கு சீனா மீன்துறை கட்டுப்பாட்டுக் கப்பல்களை அனுப்பிவைத்துள்ளது. கடந்த சனியன்று டோக்கியோ மற்றொரு முறையான எதிர்ப்பை முன்வைத்து ஒரு சீனக் கப்பல் ஜப்பானிய கடலோரப் பாதுகாப்புக் கப்பல் ஒன்றை ஓகினாவா ஜப்பானியத் தீவிற்கு வடமேற்கே 280 கிலோ மீட்டருக்கு அருகே நிறுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
டோக்கியோ ஜான் க்விஜியோங்கை விடுவிக்க வேண்டும், மற்றும் “சீனக் கடற்பகுதிகளில்” கப்பல்களை “சட்டவிரோதமாகத் தடுத்தலை” முடிக்க வேண்டும் என்று பெய்ஜிங் கோரியுள்ளது. சீனாவில் உள்ள ஜப்பானிய தூதர் உய்ஷிரோ நிவா சீன அதிகாரிகளால் நான்கு முறை அழைக்கப்பட்டார்—கடைசி முறை State Councillor, Dai Bingguo வால், அவரது அந்தஸ்து சீனத் துணைப் பிரதமருக்கு ஒப்பானது. சீனச் செய்தி ஊடகக் கருத்துப்படி டாய் நிவாவிடம் டோக்கியோ “சூழ்நிலையை தவறாக உணரக்கூடாது, அறிவார்ந்த அரசியல் விருப்பத் தேர்வை எடுக்க வேண்டும்”, அதாவது உடனடியாக மீன்பிடிப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.” என்று கூறினார். நேற்று கப்பல் தலைவரை தவிர மற்ற குழு உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜப்பானியக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாத நடுப்பகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய கடற்பகுதிக்கு அருகே பெருகிய முறையில் சீன மீன்பிடிக்கும் படகுகள் வந்துள்ளன. மோதல் நடந்ததாகக் கூறப்படும் அன்று, அப்பகுதியில் 160 சீன மீன்பிடிக்கும் படகுகள் இருந்தன, அவற்றுள் 30 அதன் நிலப்பகுதிசார்ந்த கடற்பகுதியில் டயோயுவிற்கு 22 கி.மீ.க்குள் இருந்தன என்றும் ஜப்பான் கூறியுள்ளது.
டயோயு குறித்த சர்ச்சை —தைவானுக்கும் ஓகினாவாவிற்கும் இடையே உள்ள சில தீவுக்கூட்டம்— கடந்த தசாப்தத்தில் தீவிரமாகியுள்ளது. ஜப்பானிய, சீன அரசாங்கங்கள் இரண்டுமே பிரச்சினையைப் பயன்படுத்தி தேசிய உணர்வைத் தூண்டி, தங்கள் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றுள்ளன. வேறுபாடுகள் கிழக்கு சீனக் கடலின் நிலம்சார் கடற்பகுதியை எப்படி வரையறை செய்வது என்பது பற்றிய மாறுபட்ட கருத்துக்களால் இன்னும் சிக்கலாகி விட்டது. இதில் பணயத்திற்கு உரியது கணிசமான நீருக்கடியிலுள்ள எரிசக்தி இருப்புக்களும் மீன்பிடிக்கும் பகுதிகளும்தான்.
ஆனால் சமீபத்திய மோதல் வெடிப்பு சீனா, ஜப்பான் மட்டுமில்லாமல் அமெரிக்காவையும் அடக்கிய பரந்த போட்டிகளுடன் இணைந்துள்ளது. சமீப மாதங்களில் ஒபாமா நிர்வாகம் ஆத்திரமூட்டும் தன்மையில் தென் சீனக் கடலில் சீனாவின் உரிமைக் கோரிக்கைகளுக்கு சவால் விடுத்துள்ளதுடன் கொரிய தீபகற்பத்திற்கு அருகே உள்ள கடற்பகுதி பற்றியும் சவால் விட்டுள்ளது. ஜூலை மாதம் ஹனோயில் நடைபெற்ற ASEAN கூட்டத்தில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் முதல் தடவையாக அமெரிக்காவிற்கு தெற்கு சீனக் கடல் பகுதியில் “சுதந்திரமான கப்பல் போக்குவரத்து” தடையின்றி நடத்துவது பற்றி “ஒரு தேசிய அக்கறை” உள்ளது என்றார். அமெரிக்க அதிகாரிகளிடம் பெய்ஜிங் இக்கடற்பகுதி சீனாவின் “முக்கிய நலன் பகுதிகளில்” ஒன்று, தைவான், திபெத் போல்தான் இதுவும் என்று கூறியுள்ளது.
அதன் பெரிய அமெரிக்க மரைன் விமானத் தளத்தை ஓகினாவாவில் தக்க வைத்துக் கொள்வதிலும் ஒபாமா நிர்வாகம் உறுதியாக உள்ளது. இது சீன தரைப்பகுதியை அண்டி மூலோபாய முறையில் உள்ளது. DPJ எனப்படும் ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி கடந்த செப்டம்பர் மாதத் தேர்தலின் போது கொடுத்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஓகினாவா தளத்தை அகற்றுவதாக அது கூறியிருந்தது. அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவுடன், யுகியோ ஹடோயமா பிரதம மந்திரி பதவியில் இருந்து ஜூன் மாதம் விலகி, நாவோடான் கான் பதவியேற்க வழிவகுத்தார்.
பதவி எடுத்துக் கொண்டதிலிருந்து கான் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுத்து, நிலத்தையொட்டிய கடற்பகுதிகளில் சீனாவுடன் கடின நிலைப்பாட்டைக் காட்டுகிறார். சீன எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும்கூட, அமெரிக்காவும் தென் கொரியாவும் ஜப்பான் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தின. இது மார்ச் மாதம் தென்கொரிய சியோனன் என்னும் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் வட கொரியாவிற்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவதற்கு விடையிறுப்பு ஆகும். மூன்று ஜப்பானிய கடற்படை அதிகாரிகளை இதில் பங்கு பெறுவதற்கு குறிப்பாக கான் அனுப்பியிருந்தார். மேலும் 1976க்குப் பின்னர் ஜூலை மாதம் டோக்கியோ முதல்தடவையாக ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறனை விரிவாக்கும் திட்டத்தை அறிவித்தது. இது “சீன கடற்படை அச்சுறுத்தலை” எதிர்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
கடந்த மாதம் கான் அரசாங்கம் ஜப்பானிய முக்கிய தீவுக்கூட்டங்களுக்கு வெளியே, டயோயு/சென்ககு உட்பட 25 தீவுகள் பட்டியல் இடுதலுக்கு வருவதுரைக்கும் விதத்தில் அவற்றை “தேசியச் சொத்தில்” சேர்த்திருந்தது. இந்த அறிவிப்பு பகிரங்கமாக தீவுகளும் அவற்றைச் சுற்றியுள்ள நீருக்கடியிலுள்ள தாதுப்பொருட்கள், மீன் இருப்புக்கள் அனைத்தும் “பிரத்தியேகமாக” ஜப்பானுக்குத்தான் சொந்தம் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஜப்பானிய செய்தி ஊடகம் டோக்கியோ “தீவுகளைக் கைப்பற்றுதலில்” குவிப்பு காட்டும் விதத்தில் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவப் பயிற்சியைப் பெரிய அளவில் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, அரசாங்கம் அதன் பாதுகாப்புத்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட்டு சீனாவின் பெருகிய கடற்படை நடவடிக்கைகளைப் பற்றி “ஜப்பானிய கடற்பகுதிக்கு அருகே” உட்பட, எச்சரிக்கையை காட்டியது. சீனாவின் இராணுவச் செலவு கடந்த தசாப்தத்தில் நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது, அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மந்த அதிகரிப்பால், ஜப்பானுடையது 4 சதவிகிதம் குறைந்துவிட்டது என்பது பற்றியும் அது கவலை தெரிவித்தது. இந்த ஆவணம் ஜப்பானுக்கு சீனாவிற்கு எதிரான தடுப்பு என்ற முறையில் அமெரிக்க இராணுவ உதவி தேவை என்ற முடிவுரையையும் கூறியது.
சீனாவுடன் ஜப்பானின் உறவுகளில், இன்று கானுக்கு DPJ தலைவர், அதையொட்டி பிரதம மந்திரி என்ற நிலைக்கு Ichiro Ozawa சவால் விடுப்பது குறித்து முடிவு குறிப்பிடத்தக்க காரணியாகும். ஓசவா வாஷிங்டனுடன் ஓகினாவா தளம் பற்றி பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான பிணைப்பு இல்லாத சுயாதீன வெளியுறவுக் கொள்கைகளையும் முன்வைக்கிறார். இவர் சீனாவுடன் நல்ல உறவுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானின் பெருநிறுவன உயரடுக்கின் கவலையான வாஷிங்டனுடைய கூடுதல் ஆக்கிரோஷக் கொள்கைக்கு டோக்கியோ கொடுக்கும் ஆதரவு ஜப்பானின் அதிக வணிகப் பங்கு கொண்ட சீனாவுடன் பொருளாதார உறவுகளைச் சேதப்படுத்தும் என்பதைத்தான் ஒசாவா பிரதிபலிக்கிறார். சீன-ஜப்பானிய வணிகம் கடந்த ஆண்டு 238.7 பில்லியன் டொலரைக் கடந்தது. இந்த ஆண்டு 300 பில்லியன் டொலரைக் கடக்கக் கூடும்.
டயோயு மற்றும் கப்பல் தளபதி கைது பற்றி சீனாவும் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பெய்ஜிங்கில் பல டஜன் எதிர்ப்பாளர்கள் ஜப்பானியத் தூதரகத்தின் முன் கடந்த வாரம் ஆர்ப்பரித்தனர். அதே போல் திங்களன்றும் நடைபெற்றது. இக்கட்டத்தில், சீன அரசாங்கம் எதிர்ப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இவற்றுள் தீவிர தேசியவாதிகள் ஹாங்காங்கில் இருந்தும் Macau வில் இருந்தும் சீன இறைமையைப் பிரகடனப்படுத்த தீவுக் கூட்டத்தில் இறங்கும் திட்டமும் உள்ளது.
ஆனால் சீன ஆட்சி எளிதில் 2005 நடைபெற்றது போல் ஜப்பானிய எதிர்ப்புக்கள் என்னும் இழிந்த செயல்களைக் கட்டவிழ்க்க முடியும். அப்பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜப்பானிய நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரையும் தாக்கினர். கடந்த 20 ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முழு நனவுடன் தேசிய வாதத்தை வளர்க்கிறது, குறிப்பாக ஜப்பானிய எதிர்ப்பு தேசிய வெறியையாகும். இது உள்நாட்டில் பெருகும் சமூக அழுத்தங்களைத் திசை திருப்பும் முயற்சி ஆகும். இவ்வாறு செய்கையில் அது 1930 கள், 1940 களின் ஜப்பானிய இராணுவவாதத்தின் குற்றங்களை ஜப்பானிய மக்கள் அனைவர் மீதும் சுமத்தி, வேண்டுமென்றே சீன ஆளும் மேற்தட்டு தன் ஆசியப் போட்டியாளர்களில் ஒன்றாக இருப்பதின் மீது விரோதப் போக்கை ஊக்குவிக்கிறது.
கடந்த வாரம் கப்பல் நிகழ்விற்கு சற்று முன்னதாக, சீனாவின் 9 உயர்மட்டத் தலைவர்களும், ஜனாதிபதி ஹு ஜின்டாவோ உட்பட, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான இயக்கத்தின் போர் பற்றிய அருங்காட்சியகத்தில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியத் தோல்வியின் ஆண்டு நினைவு தினத்தை பொது விழாவாக நடத்தினர்.
இன்று அரசாங்கத்தின் Global Times ல் வந்துள்ள கட்டுரை ஒன்று ஜப்பான் சீனாவின் கப்பல் தளபதியை விடுவிப்பதில் பின்வாங்காவிட்டால், “வலுவான பதிலடி நடவடிக்கைகள்” குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. “ஜப்பான் அதன் நடவடிக்கைகளால் எந்த அளவிற்கு இழப்பு பெறக்கூடும் என்பதை உணரவில்லை” என்று அது அறிவித்து, சீனாவை ஏற்றுமதிச் சந்தைகளுக்கு நம்பியிருக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டியுள்ளது. DPJ தலைமைக்கான தேர்தலைக் குறிப்பிட்டபின், அது முடிவுரையாகக் கூறியது: “எவர் வெற்றி பெற்றாலும், ஜப்பானிய தலைவர் தீவிர விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் ஜப்பான் சீனாவை மிரட்டவோ, பகைத்துக் கொள்ளவோ முடியாது என்பதை எதிர்கொள்ள வேண்டும்”.
விளைவு எப்படி இருந்தாலும் டயோயுவின் கடந்த வார நிகழ்வு வட கிழக்கு ஆசியாவில் ஆபத்தான மோதலுக்கான திறனை உயர்த்திக் காட்டுகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டி வலுக்கிறது. |