WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama’s victory for torturers
ஒபாமாவின் வெற்றி சித்திரவதைக்காரர்களுக்கு
Bill Van Auken
10 September 2010
Back to
screen version
CIA யின் “அசாதாரண கடத்தல்” திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கை புதனன்று ஒரு கூட்டாட்சி முறையீட்டு மன்றம் நிராகரித்துள்ளதானது ஒபாமா நிர்வாகத்தின் சித்திரவதை மற்றும் சர்வாதிகார அதிகாரங்களை பாதுகாப்பதற்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியை பிரதிபலிக்கிறது.
6 க்கு 5 பெரும்பான்மை தீர்ப்பில், ஒன்பதாவது சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் ஒபாமா நிர்வாகம் அளித்த வாதங்களை ஏற்று—அதற்கு முன்னால் இருந்த புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலித்தவை—வழக்கு ஏற்கப்படுவது என்பது “அரச இரகசியங்களை” சமரசத்திற்கு உட்படுத்துவது என்பதற்கு ஒப்பாகும், அதையொட்டி “தேசியப் பாதுகாப்பிற்கு” ஆபத்து எற்படக்கூடும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
இரு நிர்வாகங்களின் கீழும் நீதித்துறை, அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு என்று இல்லாமல் Jeppesen Dataplan, Inc. க்கு எதிரான வழக்கிலும் தலையிட்டது. இந்த போயிங் நிறுவனம் இரகசிய CIA பயணங்களுக்கு உதவியளித்து, ஏற்பாடு செய்தவற்றில் பங்கு பெற்று இலாபம் அடைந்தது. இவற்றில் அமெரிக்க உளவு அமைப்பினால் கடத்தப்பட்ட தனிநபர்கள் கால்விலங்கு மற்றும் முகமூடி போடப்பட்டு, பல நேரமும் மயக்க மருத்தும் கொடுக்கப்பட்டு “இருண்ட பகுதிகள்” என்று அழைக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ள இரகசிய சிறைச் சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் CIA யின் சித்திரவதைக்கு உட்பட்டதுடன், வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகளின் விசாரணைக்கும் உட்பட்டனர்.
Mohamed v. Jeppsen Dataplan Inc. வழக்கில் தலையிட்டது, நிர்வாகத்தை எவரும் பொறுப்புக் கூறாத தீய குற்றங்களை மூடிமறைத்து பாதுகாப்பதற்கு உட்படுத்துகிறது.
முக்கிய வழக்கு தொடர்பவரான பின்யம் மஹ்மதை அமெரிக்கா நடத்திய முறை மிக மோசமான பாசிச இராணுவ சர்வாதிகாரம் நடத்தியதற்கு ஒப்பான காட்டுமிராண்டித்தனத்தைத்தான் கொண்டிருந்தது. பாக்கிஸ்தானில் கடத்தப்பட்டு CIA இனால் மொரோக்கோவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இவர், சட்டப் புகாரின்படி, “வாடிக்கையாக உதைபட்டார், முறிந்த எலும்புகளால் வருந்தினார், பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்வையும் இழந்தார்.” இவருடைய உடைகள் ஒரு கூரிய கத்தியால் கிழிக்கப்பட்டன, அதே கத்தி அவருடைய உடலில் பல இடங்களில் கீறவும் பயன்படுத்தப்பட்டது; அதில் அவருடைய பிறப்புறுப்பும் அடங்கும். சூடான திரவம் ஒன்று கீறப்பட்ட பிறப்புறுப்புக் காயங்களில் ஊற்றப்பட்டது. அடிக்கடி அவர் பாலியல் துன்புறுத்தல், மின்சாரம் மூலம் கொலைசெய்தல், சாகடிப்பு ஆகிய அச்சுறுத்தல்களையும் கொண்டார்.”
இவ்விதத்தில் ஒன்றரை ஆண்டுகள் கடந்தபின், அவர் மீண்டும் CIA யினால் அதன் “இருண்ட பகுதி” ஒன்றிற்கு ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளத்தில் இருந்த சிறைக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவர் அடி, உதைகளுக்கு உட்பட்டார். நாளொன்றிற்கு 23 மணி நேரம் பெரும் இருளில் வைக்கப்பட்டிருந்த 6 அடி சதுர அறையில் அவர் வைக்கப்பட்டிருந்தபோது இவை நடந்தன. பெண்களும், குழந்தைகளும் பீதியில் பெரும் கூச்சல் இடும் உரத்த ஒலிகள் இந்த அறைக்குள் ஒலிக்க வைக்கப்பட்டன.
இந்த சித்திரவதைக்குப் பின்னர், அவர் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கியூபாவிலுள்ள குவாண்டநாமோ குடாவில் காவல் முகாமில் அடைக்கப்பட்டார். 2009 பெப்ருவரி மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் பிரிட்டனுக்கு சென்றார். அங்குதான் அவர் சட்டபூர்வமாக வசிப்பவர். பயங்கரவாதத்துடன் அவரை இணைக்கும் எந்தவித நம்பகத்தன்மையுடைய சாட்சியமும் அளிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை உடனடியாக விடுவித்தது.
பெப்ருவரி 2009ல் சான்பிரான்ஸிஸ்கோ ஒன்பதாவது சுழற்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒபாமாவின் நீதித்துறை வக்கீல்கள்—ஒபாமா பதவியேற்ற சில வாரங்களுக்குள்—தங்கள் போக்கை மாற்றுவதாக இல்லை, புஷ் ஏற்றிருந்த சித்திரவதை முறை தொடரும் என்று அறிவித்தபோது, நீதிபதிகள் கூட அதிர்ச்சிக்கு உட்பட்டனர் எனத் தோன்றியது. பல முறை இதுதான் புதிய நிர்வாகத்தின் நிலைப்பாடா என்ற வினாவையும் எழுப்பினர். ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின் “இடது” வக்காலத்து வாங்குபர்கள் பலரும் இதை நியாயப்படுத்த பரபரப்புடன் செயல்பட்டனர்.
18 மாதங்களுக்கு பின்னர், அசாதாரண கடத்தல் வழக்கில் தலையீடு என்பது புஷ் சகாப்தத்தில் நடத்தப்பட்ட முழுக் குற்றங்களையும் குற்றவாளிகளையும் பாதுகாப்பதன் ஒரு பகுதிதான் என்பது தெளிவாயிற்று. நிர்வாகம் இரு ஆக்கிரமிப்புப் போர்களை தொடர்ந்தது, கடத்தல் கொள்கையை ஏற்றது, இன்னும் அதிக முறையில் அரசியலமைப்பிற்கு புறம்பான அதிகாரங்களையும் ஏற்றது.
கடந்த ஒன்றரை ஆண்டில் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், முந்தைய நிர்வாகத்தை விட இதன் கொள்கைகள் பெரும் அமெரிக்க இராணுவம், உளவுத்துறைக் கருவிகளின் ஆணைகளால் உந்துதல் பெறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.
பின்யம் மஹ்மத் இன்னும் பல CIA யினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கில், சித்திரவதை மற்றும் அசாதாரண கடத்தலுக்கு பாதுகாப்புக் கொடுத்ததைத் தவிர, நிர்வாகம் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் உள்நாட்டு உளவு வேலைகளுக்கு எதிராக வந்த ஒரு வழக்கிலும் இதேபோல் தலையிட்டுள்ளது. கடத்தல் வழக்கைப் போலவே, நிர்வாகம் வழக்கு நீட்டிக்கப்படுவது “அரச இரகசியங்கள்” சமரசத்திற்கு உட்படுத்திவிடும் என்று வாதிட்டுள்ளது. சட்டவிரோத மின்னணுக் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ள அமெரிக்கர்களிடம் இருந்து இது இரகசியமாக வைக்கப்பட வேண்டும் போலும்.
இதேபோன்ற விதத்தில், ஒபாமா நிர்வாகம் தலைமை நீதிமன்றத்தை அணுகி, இகழ்வுற்ற அபு கிரைப் சிறை இன்னும் மற்ற அமெரிக்க நிலையங்களில் சித்திரவதை, தவறான பயன்பாடுகள் பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அகற்ற முற்பட்டது. ஆரம்பத்தில் ஒபாமா நிர்வாகம் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைத் தான் எதிர்க்காது என்று கூறி வந்தது. ஆனால் இராணுவ உயரதிகாரிகளின் எதிர்ப்பை அடுத்து அது இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டது.
கடந்த ஆண்டு மே மாதம், முன்னாள் அமெரிக்கத் தளபதி ஆன்டோனியோ தகுபா, அபு கிரைப் பற்றி இராணுவ விசாரணை நடத்தியவர் பிரிட்டிஷ் நாளேடான Telegraph இடம் மறைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் “சித்திரவதை, தவறான பயன்பாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் ஒவ்வொரு வித அகௌரவச் செயலையும்” சித்தரித்தன என்றார்.
இக்கொடுமைகளை எதிர்த்த சட்ட சவால்கள், சான்றுகள் ஆகியவற்றை மறைக்கையில், ஒபாமா நிர்வாகமானது நடவடிக்கைகள் தன்னுடையவை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. சித்திரவதை, அசாதாரண கடத்தல்கள், அமெரிக்க மக்கள் மீது சட்டவிரோத உளவு இன்னும் பிற குற்றங்களை உத்தரவிட்டு நடத்தியவர்கள் குற்றச்சாட்டில் இருந்து முழு விலக்கு பெறுவர் என்றும் அவர்கள் அத்தகைய செயல்களை எந்த அச்சமும் இன்றித் தொடரலாம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் “அரச இரகசியங்கள்” என்னும் சலுகையை ஆக்கிரோஷமாக செலுத்துகையில் ஒபாமா நிர்வாகம் புஷ்ஷின் கீழ் நிறுவப்பட்ட ஒரு பொலிஸ்-அரச சர்வாதிகாரத்தை தொடர்ந்து கட்டமைக்க சாரம் போடுவதைத் தொடர்ந்து வருகிறது.
1950 களில் இருந்து பல நிர்வாகங்களாலும் இச்சலுகை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தனிப்பட்ட சாட்சிகளை அணுகமுடியாத அல்லது குறிப்பான “இரகசிய” ஆவணங்களை கடந்த காலத்தில் நசுக்குவதற்கு இம்முறை பயன்படுத்தப்பட்டது. புஷ்ஷின் கீழும், இப்பொழுது ஒபாமாவின் கீழும் இது முழு வழக்குகளையும் விசாரணைக்கு உட்படுத்தமலேயே இருக்கப் பயன்படுகிறது. இதன் விளைவு நிர்வாகப் பிரிவு, நீதித்துறைக்கு தன் மீதுள்ள குற்றங்களுக்குப் பொறுப்புவிக்கும் உண்மையான அதிகாரத்தை மறுக்க முடிகிறது. ஒரு சுயாதீன பரிசீலனை அரச இரகசியங்களை அம்பலப்படுத்தி தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து கொடுக்கும் என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது.
ஒபாமாவின் வெள்ளை மாளிகைக் கூற்றுக்களுக்கு அடிபணிகையில், ஒன்பதாம் சுழற்சி நீதிமன்றம் அடிப்படையில் “தேசியப் பாதுகாப்பு” அல்லது “பயங்கர வாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் நடத்தப்படும் குற்றங்களுக்கு அரசாங்கத்தை பொறுப்புக் கூற விரும்பும் எவருக்கும் நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டுள்ளன என்பதைத்தான் அடிப்படையில் கூறியுள்ளது.
இந்த இழிந்த கொள்கையை நிலைநிறுத்துவது, அமெரிக்க நீதித்துறையின் சுயாதீனத்தை, சிலியின் பினோசே அல்லது ஜேர்மனியின் ஹிட்லர் காலத்திய நீதிமன்றங்கள் கொண்டிருந்த தரத்திற்கு குறைத்துவிடும்.
கடந்த காலக் குற்றங்களை மறைப்பதற்கு இந்தச் சட்ட போர்ச் செயலை ஒபாமா நிர்வாகம் தொடர்கிறது என்பது மட்டும் இல்லாமல், தன்னுடைய சட்ட விரோத செயல்களுக்கும் பாதுகாப்பை பெறுவதற்குத் தொடர்கிறது. இந்த நிர்வாகம் புஷ்ஷின் வெள்ளை மாளிகையை விட தனக்கே சர்வாதிகார அதிகாரங்களை எடுத்துக் கொள்வதில் மிக அதிகதூரம் சென்றுள்ளது. நிரூபிக்கப்படாத, பயங்கரவாதத்துடன் பிணைப்பு என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்க குடிமகன் ஒருவரை படுகொலைக்கு இலக்காக ஆக்கும் உரிமையைக் கோருகிறது. வேறுவிதமாகக் கூறினால், தான் விரும்பினால் அமெரிக்க ஜனாதிபதி எந்தக் குடிமகனை கொலை செய்யவும் உத்தரவிடலாம்—இதையொட்டி அவர் குறிப்பிடப்படாத, அதிக அளவு நிரூபிக்கப்படாத குற்றத்தைச் செய்கிறார்.
கலிபோர்னியாவில் மேல்முறையீட்டு மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு அமெரிக்க ஜனநாயக முறையின் ஆழ்ந்த இழிசரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முதலாளித்துவ நெருக்கடியின் அழுத்தத்தில் , இரு காலனியப் போர்கள் மற்றும் தடையற்ற முறையில் சமூச் சமத்துவின்மை வளர்கையில் நடைபெறுகிறது. அமெரிக்க ஸ்தாபனத்தில் ஒவ்வொரு நிறுவன அமைப்பும்—வெள்ளை மாளிகை, நீதித்துறை, காங்கிரஸ், இரு பெரும் கட்சிகள், பெருநிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகம்—பொறுத்துக்கொள்ள முடியாத போர்க் குற்றங்களில் உட்குறிப்பாக உள்ளன என்பதை மீண்டும் தெளிவாக்குகிறது.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் அறநெறி ஆரோக்கிய பாதுகாப்பு இரண்டிற்கும் இக்குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படுவது முக்கியமாகும். அவ்வாறு செய்யப்படவில்லை என்றால் “பயங்கரவாதத்தின் மீதான” போரில் கையாளப்படும் வழிவகைகள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்காக உள்நாட்டில் செயற்படுத்தப்படும் என்ற ஆபத்து பெருகுகிறது.
இந்த உத்தரவுகளை பிறப்பித்தவர்கள், செயல்படுத்தியவர்கள், இக்குற்றங்களை மூடிமறைப்பவர்கள் ஆகியோரை பொறுப்புக் கூறவைப்பது தொழிலாள வர்க்கம் எடுத்துக் கொள்ளும் பணியாக இருக்க வேண்டும். அது சோசலிசத்திற்கான போராட்டத்தில் அதன் வெகுஜன சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். |