சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India to conduct caste census

இந்தியா சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துகிறது

By Arun Kumar and Keith Jones
28 August 2010

Use this version to print | Send feedback

சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2011 இல் சாதிவாரியாக எடுப்பது என இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் தகுதி மற்றும் வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் துணைக் குழுவின் தலைவரும், நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 12ந் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பேசியபோது, சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரித்து துணைக்குழு முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். இருப்பினும், ``எப்படி, எவ்வாறு இதனை செய்து முடிப்பது'' என்பது குறித்து ஓரிரு வாரங்களில் முழு அமைச்சரவையும் கூடி இறுதி முடிவெடுக்கும்.

15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உடலடையாளங்களுடன் கூடிய (biometric) தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. ஆனால் சாதிவாரிக் கணக்கெடுப்புக்காக குரல் கொடுப்பவர்கள், ``நபர்களின் எண்ணிக்கை'' யைக் கணக்கில் கொண்டு மக்கள் தொகையை கணக்கிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட அனைத்து சாதிகளையும் கணக்கெடுத்து அவர்களின் சமூக-பொருளாதார விபரங்களை தயாரிப்பதா? அல்லது தாழ்த்தப்பட்டோர் (தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவோர்), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் என அரசின் இடஒதுக்கீடு (ஆக்கபூர்வ) திட்டப் பயனாளிகளை மட்டுமே கணக்கிடுவதா? என இந்திய அரசாங்கம் மற்றும் அரசியல் மேற்தட்டினரிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து `இந்து' வெளியிட்டுள்ள செய்தியில்,``1931க்குப் பின் முதன்முறையாக சாதிவாரியாக முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முகர்ஜியின் துணைக்குழு பரிந்துரைத்துள்ளது. சொந்த நிலமோ, படிப்பறிவோ இன்றி, சாதிப்பாகுபாட்டால் வஞ்சிக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாக ஒருகாலத்தில் கருதப்பட்ட பாரியாக்கள், சாமர்கள், மறர்கள் (Pariahs, Chamars, Mahars) மற்றும் சாதியால் உயர்வகுப்பினர் என பிற்போக்குத்தனமான முறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிராமணர்கள் என ஒவ்வொரு இந்தியரும், விருப்பமிருந்தால் கட்டாயப்படுத்தப்படாமல் தங்கள் சாதியை தெரிவிக்கவேண்டும்'' என்று கூறியுள்ளது.

(சாதி முறையின் கருத்து வடிவமாக பிராமணிய இந்து இலக்கிய நூல்களில் நான்கு சாதிகளின் படிநிலை வரிசைகள் சொல்லப்படுகின்றன. நடைமுறையில், இதற்கு மாறாக இந்திய சாதி முறையானது ஒரு விவசாய சமுதாயத்தில் அதனுடைய தொழிற் பங்கீட்டை வேராகக் கொண்டு பிராந்திய அடிப்படையான குலப்பிரிவில் உறவுகளை கொண்ட சாதிகளாக இயங்குகின்றன.)

எவ்வடிவில் இந்தியாவில் சாதிக் கணக்கெடுப்பு எடுத்தாலும், இறுதியில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு ஒரு பிற்போக்கான, இழிவான நடவடிக்கையே. இது இந்திய வாழ்க்கையையும் அரசியலையும் மேலும் சாதிமயமாக்கலுக்கான பங்களிப்பைச் செய்வதோடு, சாதிய வழியில் ஒடுக்கப்படும் மக்களையும் தொழிலாள வர்க்கத்தையும் பிளவுபடுத்த சேவை செய்வதோடு இந்திய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை இதன் மூலமாய் பலப்படுத்துகிறது.

ஐக்கிய ஜனதாதளம் (JD-U), சமாஜவாதி கட்சி ((SP), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) ஆகிய மூன்று எதிர்க்கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) எனப்படும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் கல்வி நிறுவனம் மற்றும் அனைத்து பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்கிவிட வேண்டும் என இக்கட்சிகளும், 1980களில் இருந்த அவர்களுடைய முன்னோடிக் கட்சிகளும் வலியுறுத்தின. (சுதந்திரம் அடைந்த உடனேயே, இந்தியாவின் காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கியது)

இறுதியில், இந்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீட்டை வழங்கியது. 1990களில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையும், இந்திய முதலாளித்துவத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகளையும் பணக்காரர்கள், பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை தாராளமாக வழங்குவதற்காக பொது மற்றும் சமூக சேவைகளை அகற்றுவதை நடைமுறைப்படுத்தியதும் ஒன்றுக்கொன்று எதிர்பாராமலோ, தற்செயலாகவோ நிகழ்ந்ததல்ல.

தற்போதுள்ள சமூக-பொருளாதார ஒழுங்கை ஏற்றுக்கொண்டிருப்பதையே இடஒதுக்கீடு வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ பொருளாதார அரசியல் ஆதிக்கத்திற்கு சாவால் விடுவதற்குப் பதிலாக, வேலைவாய்ப்பு மற்றும் ஏழ்மை ஆகியவற்றில் `உரிய பங்கை' உயர்சாதியினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் இந்திய முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கின்ற கடும் துயரை மற்றவர்களுக்கும் `சமமாக' பங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பாதிப்பு, ஊட்டச்சத்தின்மை, வெறுக்கத்தக்க ஏழ்மை வாழ்வு ஆகியவற்றால் மக்கள் தொகையில் 75 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில்தான் -அனைத்து சாதிப் பிரிவுகளும் உள்ள- கோடிக்கணக்கான மக்களுக்கு இவைகள் நடக்கின்றன.

இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களாக இருப்பதன் காரணமாக, 27 சதவிகித இடஒதுக்கீடு வேதனைதரும் வகையில் போதுமானதல்ல என்று ஐக்கிய ஜனதாதளம், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நெடுங்காலமாக வாதிட்டு வருகின்றன. அவர்கள் வழக்கமாக சனத்தொகை அளவில் 52 சதவிகிதம் இருப்பதாக மேற்கோள்காட்டுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 32.5 சதவிகித இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களாக இருப்பதாக இந்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் தேசிய மாதிரி ஆய்வு மதிப்பிடுகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை நபர் வாரியாக கணக்கிடுவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான அவர்களுடைய கோரிக்கை வலியுறுத்தலுக்கு கிடைத்த ஆயுதமாக இருக்கும் என ஐக்கிய ஜனதாதளம், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி அரசியல்வாதிகள் கணிப்பிடுகின்றனர்.

வருகின்ற கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாவிட்டால் ``எரிமலை வெடிக்கும்'' என ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு தங்கள் பலத்தையும் காட்டுவதுடன், அனைத்து சாதியினரிடையே பெருமை, நம்பிக்கையை ஏற்படுத்தும் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தும் தன் பங்குக்கு வாதிடுகிறார்.

543 உறுப்பினர்களை கொண்ட லோக் சபாவில் (இந்தியாவின் நாடாளுமன்றக் கீழவை) ஐக்கிய ஜனதாதளம், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றுக்கு 20-க்கும் குறைவான இடங்களே உள்ளன. பிற கட்சிகளும் சாதி அரசியல் நடத்தி, தேர்தல் நேரத்தில் சாதியரீதியிலான வேண்டுகோள்களை முன்வைப்பதாலும், `சாதிக் கூட்டணி' மூலம் தேர்தல் மூலோபாயங்கள் பின்னிப் பிணைத்திருப்பதாலும், இக்கட்சிகள் தங்கள் விருப்பத்தை வலியுறுத்த முடிகிறது.

அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கும்போது தங்களுக்கும் வேறு வழியில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ``பா.ஜ.க. இதை ஆதரிக்கும்போது, நாங்களும் அதை செயல்படுத்த வேண்டியதுதானே'' என்கிறார் அவர்.

ஸ்ராலினினிச பாராளுமன்றக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும், இப்பிரச்சனையில் முக்கிய பங்கு வகித்துள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பதாக இக்கட்சிகள் கடந்த மே மாதம் அறிவித்தபோதிலும், `சமூகநீதி'யை அளவிட இடஒதுக்கீடு தேவை என பல ஆண்டுகளாக இதை ஆதரித்து வருகின்றன.

இந்திய சனத்தொகைக்கு தேவையான சமூக நலத்திட்டக் கொள்கைகளை சிறப்பாக வழங்க சாதிவாரிக் கணக்கெடுப்பு சாத்தியமாக்கும் என அனேக இந்தியாவின் அரசியல் மேற்தட்டினரின் வலியுறுத்தலுடன் ஸ்ராலினிஸ்டுக்களும் கைகோர்த்துள்ளனர். உலக முதலாளித்துவத்துக்காக இந்தியா ஒரு முதலீட்டிற்கான காந்தமாகவும் மலிவுக் கூலி உற்பத்தியாளராகவும் உருவாக்கும் அதனுடைய நோக்கத்தை அடைவதில், இந்திய முதலாளித்துவத்தின் இந்த நிலைமைகளின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான நிதிகளின் ஒதுக்கீடுகள் இல்லாமலேயே இருக்கிறது.

அதே நேரத்தில், இந்து மேலாதிக்க RSS ம் மற்றும் அனேக பெரும் நிறுவனங்களும் உள்ளிட்ட சில வலதுசாரி அமைப்புகளும் முற்போக்குச் சாயம் பூசி சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பார்கள் என ஸ்ராலினிஸ்டுக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி கடும் சமத்துவமின்மை, வர்க்க அடக்குமுறை மற்றும் ஊடுருவியுள்ள சாதிப்பாகுபாடு ஆகியவற்றால் குணவியல்புபடுத்தப்படும் சமூக ஒழுங்கை நியாயப்படுத்தும் விதத்தில், இந்த சக்திகள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கான காரணங்களுக்காக வாதிடும் பிற்போக்கு மோசடிக்கான தகுதியை கொண்டிருக்கின்றன.

ஆனால் இது சாதிவாரி இடஒதுக்கீட்டை முற்போக்கானதாக மாற்றாததுடன், சமூக விடுதலைக்கான ஒரு கருவியும் ஆக்காது.

இடஒதுக்கீடு முறையானது தாழ்த்தப்பட்ட சாதியினரை சமூக-பொருளாதார ரீதியாக உயர்த்திவிட வேண்டும் என்ற அது சொல்லும் இலக்கை அடைவதில் தெளிவாய் தோற்றுவிட்டது. 1950ம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் அல்லது தலித்துகளுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டும் கூட இன்றுவரை பெருவாரியான தலித்துகள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட சாதிகள் கிராமங்களிலுள்ள கிணறுகள், நீராதாரங்களைக் கூட பயன்படுத்த அடிக்கடி மறுக்கப்படும் நிலை இருந்து வருகிறது. இதனை எதிர்த்தால் நிலச்சுவான்தார்கள்/மேல்சாதியினரின் வன்முறைக்கு இவர்கள் இலக்காகி விடுகின்றனர்.

தலித்துகள் மீதான வர்க்க அடக்குமுறை நீடித்துவரும் சூழ்நிலையிலும், இடஒதுக்கீடு முறையை தலைமுறை தலைமுறையாக கல்வி இடங்கள், பொதுத்துறை வேலைவாய்ப்புக்களில் ஒரு சிறிய குட்டி முதலாளித்துவ பிரிவினரே பலனடைந்து வருகின்றனர். இந்தத் தட்டிலிருந்து திடீரெனத் தோன்றிய ஒரு அரசியல் மேற்தட்டினர், தாங்களே தலித்துகளின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு கொள்ளையடிக்கும் இந்திய மூலதனத்தில் ஒரு பங்கை கோரி தனதாக்க அலைகின்றன.

தற்போதைய உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தலைவருமான மாயாவதி, இவ்வாறு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தட்டுக்களில் ஒருவர். தலித்துகளுக்கு அதிகாரமளிப்பது தனது சொத்து என வழக்கமாகக் கூறிவரும் இவர், அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் சார்புக் கொள்கைகளை ஆர்வத்துடன் செயல்படுத்தி வருகிறார். ``தலித்துகளின் பெருமையை'' நிலைநாட்டவும், தலித் தலைவர்களை கௌரவிக்கவும் சிலைகள் அமைக்கும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். ஆனால் பெருவாரியான நிலமற்ற தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு உதவ உறுதியான எந்த நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டதில்லை.

1980களில் நடத்தப்பட்ட ``இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசியலைத்'' தொடர்ந்து சாதிகளை குறைக்க இடஒதுக்கீடு உதவவில்லை. மாறாக, இந்தியாவில் அழிந்துபோகும் நிலையில் இருந்த, பிற்போக்குத்தனமான சாதிய முறை புத்துயிர் பெற்றது. முக்கியமாக விவசாயிகள் உறவுகளின் மேல் வரலாற்றுரீதியாக நிலைத்திருந்த சாதியானது முதலாளித்துவ வளர்ச்சியால் படிப்படியாய் அழிவுற்றிருந்தபோதும், இந்திய அதிகார வர்க்கத்தின் அரசியல் வஞ்சகத் திட்டத்தினால் சாதி அடையாளங்கள் மேலும் வலுவடையச் செய்யப்பட்டது.

ஏகாதிபத்திய கட்டுப்பாட்டு முறையின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் காலனித்துவ அரசினால் முன்னெடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டுமுறையானது ஒரு முற்போக்கான நடவடிக்கைக்கு அப்பாற்பட்டதாகும். இந்தியாவினுடைய பிரிட்டிஷ் பிரபுக்கள் தீண்டாமையை ஒருபோதும் ஒழிக்கவில்லை. சாதிக்கு ஏற்ப பத்துவருடத்திற்கு ஒருமுறை அவர்களுடைய கணக்கெடுப்பு இந்தியர்களை மேலிருந்து கீழ் வரை இந்தியாவின் சாதிகளை வரிசைப்படுத்துவதன் மூலம் உண்மையில் அவர்கள் சாதி அடையாளங்களை ஒழுங்குபடுத்தி வலிமைப்படுத்தினார்கள். தீண்டத்தகாதவர்களின் வேதனையை கண்டுகொள்ளாமல், பிரிட்டிஷார் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுமுறையை அறிமுகப்படுத்தினர்.

இந்திய ஆட்சியை வலிந்து ஏற்றுக்கொண்ட முதலாளித்துவ சுதந்திர இயக்கமான இந்திய தேசிய காங்கிரசானது நிலச்சுவாந்தர் முறையை வீழ்த்தி, உழுபவனுக்கே நிலங்களை தீவிரமாக பகிர்ந்தளிப்பதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையையும் தீண்டாமையின் வேரை அறுப்பதில் வெறுப்பைக் கொண்டிருந்தது.

அதற்கு பதிலாக, படித்த தாழ்த்தப்பட்ட சாதியினரின் மேற்தட்டினருக்கு சிறுசிறு சலுகைகளை அறிவித்தும், ஏழ்மையில் வாடும் தலித் மக்களை அடக்கியாளவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தி, அரசியல் சட்ட பாதுகாப்பை வழங்கியது. அரசியல் சாசனம் உருவாக காரணமாக இருந்தவரும், தீண்டத்தகாதவர்களின் தலைவருமாகிய டாக்டர் அம்பேத்கர், இடஒதுக்கீட்டை முனைப்புடன் செயல்படுத்தியபோது, இது தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்து சாதிக் கொடுமையால் தாழ்த்தப்பட்டோர் சாதிகளானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்துக்கு மாறிவிடாமல் பாதுகாக்க, தீண்டத்தகாதவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும்போது இந்து வலதுசாரிகளின் அனைத்து பிரிவினரின் ஆதரவையும் பெறவேண்டியுள்ளது. கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு மதச்சார்பின்மை நாடென கூறிக்கொள்ளும் இந்தியாவில் இன்றுவரை இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, ஜனநாயகம், சமத்துவம், சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கப்பாடுபடப் போவதாக இந்திய தேசிய காங்கிரஸ் கூறிக்கொண்டது. எதிர்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சாதிகளைப் பற்றிய விவரங்களை யாரும் தெரிவிக்க வேண்டியதில்லை என 1948ல் காங்கிரஸ் அரசு முடிவெடுத்து, அரசு விண்ணப்பங்கள், மனுக்கள் அனைத்திலும் சாதி என்ற வார்த்தை நீக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து அவர்களின் சமூக பொருளாதார நிலைமை குறித்த முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காகவும், அவர்கள் விரைந்த முன்னேற்றத்தை சமூக பொருளாதாரத்தில் உறுதி செய்து கொள்வதற்காக மட்டும் இதில் விதிவிலக்கு வழங்கப்பட்டது.

அறுபது ஆண்டுகளாகியும் தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை ``உயர்த்த'' முடியாமல் தோல்வியடைந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் மீண்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பை உயிர்ப்பித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார வல்லமை, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை குறித்து பெருமையடித்துக் கொள்கின்றனர். ஆனால் யதார்த்த நிலையானது, இந்தியாவின் ஆளும் வர்க்கம், உலகில் பெருவாரியான ஏழை மக்களைக் கொண்டுள்ள இந்நாட்டில் பற்றாக்குறையான இன்னும் முறையான பொதுக் கல்வி, சுகாதார முறை ஏதுமின்றி தவிக்கும் ஏழைகளின் நிலைக்குப் பொறுப்பாகும். இந்தியாவில் பற்றி எரியும் பிரச்சனைகளுக்கு எவ்வித முற்போக்கான தீர்வையும் கொடுக்கமுடியாமல் இருப்பதுடன், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் வகுப்புவாதம், சாதியம் மற்றும் அரச வன்முறை மூலம் ஒருபோதும் இல்லாத பெரும் தாக்குதலுக்கு திரும்பிவிட்டனர.