WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஓய்வூதியங்களைப் பாதுகாப்பதற்கு பிரான்ஸில் மில்லியன் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்
By Antoine Lerougetel and Pierre Mabout
9 September 2010
Use
this version to print | Send
feedback
பாரிஸ் பதாகை வாசகங்கள்- “விவசாய அமைச்சரகப் பணியாளர்கள். சமூகப் பிற்போக்குத்தனத்தை நிறுத்துக. நாம் நம் பிற தெரிவுகளைச் செய்ய வேண்டும்”
செவ்வாயன்று 200 சிறு நகரங்ககளிலும் பெருநகரங்களிலும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் தொழிலாளர்களும் பிரான்ஸ் முழுவதிலும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி சுமத்தும் ஓய்வுதியக் குறைப்புக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அணிவகுப்புக்கள், ஆர்ப்பாட்டங்களுடன் இணைந்த விதத்தில் பொதுத்துறை ஊழியர்கள் இரண்டு மில்லியனுக்கும் மேலானவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினார்கள். அவர்களுடன் பல தனியார் துறைத் தொழிலாளர்களும் பங்கு பெற்றனர்.
இந்த மாபெரும் “நடவடிக்கை தினம்”, தொழிற்சங்கக் கூட்டுமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது சனிக்கிழமை சார்க்கோசியின் ஏராளமான ரோமாக்களை நாடு கடத்தியது மற்றும் சட்டம்-ஒழுங்குத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இது நடந்தது. அதில் நாடு முழுவதும்100,000 மக்கள் பங்கு பெற்றனர்.
செவ்வாய்க்கிழமை எதிர்ப்புக்கள் சார்க்கோசியின் ஓய்வூதியச் “சீர்திருத்தங்களுக்கு” எதிராக இதுவரை நடைபெற்றவற்றில் மிகப் பெரியது ஆகும். ஜூன் மாதம் நடந்ததில் இருந்த அதிக பங்கு பெற்றவர்களைவிட 40% சதவிகிதம் இதில் அதிகமாகும் என்று பொலிஸ் மற்றும் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். நடவடிக்கை தினம் பாராளுமன்றத்தில் ஓய்வூதிய மசோதா மீது விவாதம் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மற்றொரு பாரிஸ் பதாகையிலுள்ள வாசகங்கள்: “செல்வத்தையும் வேலைகளையும் பகிர்ந்து கொள். சட்டத்தைத் திரும்பப் பெறு. சிறந்த வாழ்வு, நீண்ட கால வாழ்வு.”
தொழிற்சங்க மதிப்பீடுகளின்படி 270,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிஸில் பங்குபற்றினர். இது ஜூன் மாதத்தைவிட இரு மடங்கு ஆகும். மார்சேயில் 20 0,000 மக்கள் கலந்து கொண்டனர், Rennes ல் 48,000 தொழிலாளர்கள் திரண்டனர். Toulouse ல் 110,000 மக்கள் தெருக்களுக்கு வந்தனர். Lyon ல் 35,000 பேர் வந்தனர். Bordeaux ஆர்ப்பாட்டக்காரர்கள் 100,000 என்று இருந்தனர்.
துவக்கப் பள்ளி ஆசிரியர்களில் 60%, இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களில் 55% என்று கிட்டத்தட்ட அரை மில்லியன் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக FSU எனப்படும் முக்கிய ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. அரசாங்கத் தொழிலாளர்களில் 25 சதவிகிதத்தினருக்கும் மேலாகவும், பாரிஸ் RATP மெட்ரோ மற்றும் பஸ் தொழிலாளர்களில் 22 சதவிகிதத்தினர், அஞ்சல்துறையில் கிட்டத்தட்ட 40%, பிரான்ஸின் டெலிகாமின் மொத்த 100,000 தொழிலாளர்களில் 38% என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸில் மாணவர்களின் பதாகையின் வாசகங்கள்: “இன்றைய மாணவர்கள்—நாளைய ஓய்வூதியம் பெறுபவர்கள். ஓய்வு பெறுதல் 60 வயது என்பதைக் பாதுகாக்கவும்.”
EDF தேசிய மின்சார நிறுவனத்தில் 21% மேலானவர்கள் வேலைநிறுத்தம் செய்து 8,000 மெகாவாட்டுக்கள் இழப்பை ஏற்படுத்தினர். பாரிஸ் பகுதியில் போக்குவரத்து முடங்கியது, 152 கிலோ மீட்டர்கள் போக்குவரத்து நெரிசல்களை இது ஏற்படுத்தியது.
பயணிகள் விமான அதிகார அமைப்பு பாரிஸ் பகுதிகளுக்கு 25% பணிகளை ரத்து செய்தது. பிரான்ஸின் ஆறு அரசாங்க எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த உற்பத்தியைத்தான் செய்ய முடிந்தது. வங்கிகள், தனியார் தொழில்துறைகளில் பாதிப்பிற்கு உட்பட்டவற்றில், Rhodia, Renault, Peugeot-Citroen, Saint Gobain, Alcate, Airbus, Total Oil ஆகியவை அடங்கியிருந்தன.
நடவடிக்கை தினத்திற்கு 73% பிரெஞ்சு மக்கள் ஆதரவு கொடுத்ததாக கருத்துக் கணிப்புக்கள் காட்டியுள்ளன.
தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்திற்கான உறுதி, தயார் நிலை ஆகியவற்றிற்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் கோழைத்தனம் மற்றும் துரோகத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டுத் தன்மையை ஏராளமான மக்கள் பங்கு பெற்றது இன்னும் அப்பட்டமாகக் காட்டியது. ஸ்ராலினிசத் தொடர்புடைய CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFDT என்னும் சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உடைய பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பும் நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் பிற “தீவிர இடது” என்று அழைக்கப்படும் அமைப்புக்களின் ஆதரவும் இருந்தது.
நீஸில் தீயணைக்கும் படையினர் ஆர்ப்பாட்டத்தில்
தொழிலாளர்களின் போராளித்தன ஆற்றலை சிதற அடிக்கவும், எதிர்ப்பை நைந்துபோகச் செய்யவும் பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை பல முறை நடத்துகின்றன. அதே நேரத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் சார்க்கோசியுடன் தங்கள் அடிபணியும் விதிகளுக்காகப் பேச்சு வார்த்தைகளும் நடத்துகின்றனர். மற்றொரு காட்டிக் கொடுப்பிற்கு தொழிற்சங்கங்கள் தயாரிப்பு நடத்துகின்றன என்பது தொழில்துறை நடவடிக்கை ஒருநாள் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்துவதில் அடையாளம் காணப்படுகிறது (இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என முற்பட்டிருந்தனர்); அரசாங்கத்துடன் பேச்சுக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுவதிலும் இது வெளியாகிறது.
ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய போலித் தோற்றத்தை தொழிற்சங்கங்கள் வளர்க்கின்றன—இதில் ஓய்வூதியம் இரு ஆண்டுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அடங்கும். மேலும் சமூக நலக் குறைப்புக்கள் பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் நிறுத்தப்படலாம் என்ற கருத்தையும் வளர்க்கின்றன. ஆனால் சார்க்கோசியோ “சீர்திருத்தச் சட்டத்தை” இயற்ற தெளிவான பெரும்பான்மையைக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் சீற்றத்தை 2010 சோசலிஸ்ட் கட்சியின் 2012 தேர்தல் விழைவுகளின் பால் திருப்ப முயல்கின்றன.
இவை தொழிலாளர்களிடைய பெரும் அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன. கருத்துக் கணிப்பின்படி விடையளித்தவர்களில் 65% எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை என்று கருதுவதாகவும், 48% 2012ல் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும் “இடது [சோசலிஸ்ட் கட்சி] சார்க்கோசியின் சீர்திருத்தங்கள் எதையும் அகற்றாது” என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
தொழிற்சங்க உத்தரவுகளை மீறி, பிக்கார்டியில் இரயில்வேத் தொழிலாளர்கள் புதனன்றும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். CGT யின் பெர்னார்ட் திபோவும், CFDT யின் Chereque ம், அரசாங்கத்திடம் இருந்து விடையிறுப்பு வரும் வரை நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். நடவடிக்கை தினத்திற்குப் பிறகு சார்க்கோசி அரசாங்கம் 60ல் இருந்த 62 என ஓய்வூதிய வயதை உயர்த்துவதில் பின்வாங்காது என்று உறுதிபடுத்திய பின்னும் உள்ள நிலையாகும்.
புதனன்று குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் ஓய்வூதியச் சட்டத்தில் ஏற்படுத்தப்படவில்லை என்று சார்க்கோசி அறிவித்தும், தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 23ம் தேதி மற்றொரு நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
திங்களன்று ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகரான Henri Guaino தொழிற்சங்க்களை ஓய்வூதியச் “சீர்திருத்தங்களில்” சில சிறிய கூறுபாடுகள் பற்றிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்திருந்தார். அரசாங்கம் “இம்முறை தொனியை மாற்றுகிறது” என்ற கூற்றுடன் இதை எதிர்கொண்டார்.
France 2 TV யில் செவ்வாயன்று பேசிய Chereque புதனன்று தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசுவதற்கு முன் சலுகைகள் பற்றி விரைவில் விடையிறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது எதிர்ப்பு இயக்கத்தின் தீவிரத்தை குறைப்பதற்கு ஒரு போலிக் காரணம் ஆகும். எதிர்ப்பிற்குப் பிந்தைய நடவடிக்கை பற்றி விவாதிக்க மறுத்த அவர் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் இல்லை என்று திபோ போல் உறுதியாகக் கூறிவிட்டார். மேலும் சனி அல்லது ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார்.
சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே ஓய்வூதியச் சட்டத்தின் தலைமைப் பிரச்சாரகர் எரிக் வெர்த் மீது தாக்குதல்களை நடத்துவதில்லை. அவருடைய பெயர் ஆளும் UMP க்காக சட்டவிரோத அரசியல் நிதியைத் திரட்டியது பற்றிய குற்றச்சாட்டுச் சகதியில் அமிழ்ந்துள்ளது. சார்க்கோசியுடைய பெயரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பில்லியனர் லிலியன் பெத்தன்கூரிடம் இருந்து வரிச் சலுகைகளுக்காக பல மில்லியன் யூரோக்களை விட்டுக் கொடுத்ததற்கு நிதி வாங்கியிருந்தனர். தொழிற்சங்கங்கள் “பெரும் கௌரவத்துடன்” நடந்து கொண்டிருப்பதற்கு வெர்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் ஜனாதிபதி சார்க்கோசியின் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒரு இளம் பெண் உலக சோசலிச வலைத்தளத்திடம், “போராட வேண்டும் என்று விரும்பும் மக்கள் கூறுவதைத் தொழிற்சங்கங்கள் பின்பற்றாது. அவற்றிற்கு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் துரோகிகள். கடந்த ஆண்டு ஆலைகளில் பல வேலைநிறுத்தங்கள் இருந்தன. ஆனால் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை. தொழற்சங்கங்கள், அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. தீவிர இடது என்பது உண்மையில் இல்லை.
“மேலும், 1930 களில் இனவெறி, தீவிர வலதுக் கட்சிகள் வளர்ச்சி என்பவை இருந்தது போல் ஆபத்து மீண்டும் வரக்கூடும். இவற்றிற்குத்தான் மிக அதிக ஊடக ஆதரவு கிடைத்துள்ளது. இது பிற்போக்குத்தனம் ஆகும்.”
அமியானில் WSWS தொழில்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ஜூலியனையும் அவருடைய நண்பர் ஒரு கலாச்சார மையத்தில் வேலை செய்யும் செலீனையும் பேட்டி கண்டது.
செலீன் கூறினார்: “இப்பொழுது ஒரு ஆறுமாத கால ஒப்பந்தத்தில் ஒரு வேலை பெற்றுள்ளேன். எனக்கு 28 வயதாகிறது. 10 ஆண்டுகளாக எனக்கு தற்காலிக மற்றும் பகுதி நேர வேலைகள்தான் கிடைத்து வந்துள்ளன. என்னுடைய பெற்றோர்கள் அவர்கள் எலும்புகள் முறியும் வரை உழைக்க நேரிடும். ஏனெனில் அவர்களுக்கு மூன்று வேலை கிடைக்காத குழந்தைகள் உள்ளனர்.”
ஜூலியன் கூறினார்: “பல தகுதி பெற்ற இளவயதினர் ஏராளமானவர்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர். அதே நேரத்தில் பள்ளியில் என்னுடன் வேலைபார்க்கும் சக ஊழியர்கள், ஓய்வூதிய வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் இளவயதினருடன் இணைந்து போக முடியவில்லை” அவர்கள் முழு ஓய்வூதியம் பெற்று ஓய்வு பெற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ரோமா மக்களை அரசாங்கம் துன்புறத்தல், அரசாங்கத்தின் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் அதன் சமூகக் கொள்கைகளின் தர்க்கரீதியான விரிவாக்கம்தான் என்று ஜூலியன் காண்கிறார்.குடியேறுபவர்களின் உரிமைகளுக்கு எதிரான சார்க்கோசியன் பிரச்சாரம் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் “ஒரு உடைப்பு” என்றும் பெர்லுஸ்கோனி வழிப் பக்கம் செல்லுதல் என்றும் இவர் காண்கிறார். “சார்க்கோசி ஒரு பாசிஸ்ட் என்று கூறமுடியாது. ஆனால் இது உளைச்சலைக் கொடுக்கிறது” என்றார் அவர்
அமியானில் டன்லப் டயர் ஆலையில் இயந்திர இயக்குனராக இருக்கும் சுல்லிவன் சுகாதாரம் அற்ற, தூசிபடிந்த நிலைமைகள், உடல்ரீதியான களைப்புத் தரும் பணி ஆலையில் இருப்பது பற்றிப் பேசினார். டன்லப்பிற்கும் CGT க்கும் இடையே ஒரு உடன்பாடு பற்றி அவர் குறிப்பாக கசப்புணர்வு கொண்டுள்ளார். இது தொழிலாளர்களின் பணி ஒழுங்கைத் தீவிரப்படுத்தியுள்ளது. “CGT எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பத்து ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் எந்தப் போராட்டங்களிலும் வெற்றி பெறவில்லை. சார்க்கோசியைப் போல்தான் சோசலிஸ்ட் கட்சியும் நடந்து கொள்ளும் என்றுதான் நான் நினைக்கிறேன். அது முன்பு அதிகாரத்தில் இருந்தபோது செய்ததைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. அது செல்வந்தர்களுக்குத்தான் பணி புரிகிறது.” |