World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Corporations, UAW continue campaign against Indianapolis GM workers

இந்தியானாபொலிஸ் GM தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை பெருநிறுவனங்கள் மற்றும் UAW தொடர்கின்றன

By Jerry White and Andre Damon
31 August 2010

Back to screen version

ஞாயிறன்று நோர்மனுக்கும் GM இன் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என்ற ஒரு சிறு குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகளுடன், ஜெனரல் மோட்டார்ஸ், ஐக்கியக் கார்த் தொழிலாளர் சங்கம் (UAW) மற்றும் முதலீட்டாளர் ஜஸ்டின் நோர்மன் ஆகியோர் இந்தியனாபொலிஸ் உலோகம் பொருத்தும் ஆலையின் தொழிலாளர்களை 50 சதவிகிதம் ஊதியக் குறைப்பு செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

34 வயதுடைய முன்னாள் பங்குத் தரகரான நோர்மன், தான் ஆலையை வாங்குவது என்பதற்கு முன்னிபந்தனையாக தொழிலாளர்கள் மணித்திலாயத்திற்கான ஊதியத்தை 29 டாலர் என்பதில் இருந்து 15.50 டாலர் என்று குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஆலையை GM அடுத்த ஆண்டு மூட உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி தொழிலாளர்கள் UAW உடைய சர்வதேச நிர்வாகிகளை தங்கள் உள்ளூர் சங்கக் கூட்டத்தில் இருந்து சலுகைகளை ஒப்புக் கொண்டதற்காகவும், நோர்மனுடன் பேச்சுக்கள் கூடாது என்ற தங்கள் வாக்குகளை மீறியதற்காகவும் கூக்குரல் எழுப்பி விரட்டி அடித்திருந்தனர்.

தொழிலாளர்களின் கலகமானது UAW, பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தை பாதுகாப்பு உணர்வில் இருந்து அதிர்ச்சிக்குத் தள்ளியது. நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்களின் கவனத்தையும் பரிவுணர்வையும் பரந்த அளவில் ஈர்த்தது. அப்பொழுது முதல் தொழிலாளர்களுக்கு எதிராக சக்திகள் திரண்டு மற்றொரு வாக்கெடுப்பின்மூலம் ஒரு திட்டத்தைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் புதிய குழுவை அமைத்துள்ளன.

UAW மற்றும் நோர்மன், உள்ளூர் செய்தி ஊடக ஆதரவுடன் “சத்தமிடும் ஒரு சிறுபான்மைதான்” உடன்பாட்டை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த ஆலையைத் தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லாத எதிர்ப்பாளர்களால் “மிரட்டப்படுவதாகவும்” அவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் ஊதியங்களையும் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள பிற GM ஆலைகளுக்கு மாற விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

உண்மையில் அனைத்து மிரட்டல்களும் பெருநிறுவனங்களால்தான் நடத்தப்படுகின்றன. அவை மற்றொரு ஆலை மூடல் என்னும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி தொழிலாளர்களை மிக வறிய ஊதிய அளவுகளை ஏற்கும் கட்டாயத்திற்கு தள்ளுகின்றனர். ஞாயிறன்று செய்தியாளர்களிடம் நோர்மன் மற்ற GM ஆலைகளுக்கு, கார்த் தயாரிப்பு உலோக பொருத்தல்களுக்கு பயன்படுத்தப்படும் முதல் கருவித் தொகுப்புக்கள் அனுப்பப்பட்டுவிட்டன என்று கூறினார். ஆனால் புதிய வாக்கெடுப்பு “அதிக நாள் பிடிக்காது, ஏனெனில் நாம் எதிர்கொள்ள இருக்கும் ஆலைமூடல் திட்டம் அருகில் வந்துவிடும்” என்றார்.

UAW உதவியுடன் நோர்மன் மற்ற பழைய தொழிலாளர்கள், ஓய்வை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் $15.50 ஊதியம் என்பது 44% சதவிகித உயர்வு என உள்ள தற்காலிக ஊழியர்களின் ஆதரவைப் பெற முயல்கிறார். இந்தியானாபொலிஸில் உள்ள உயர்ந்த வேலையின்மை விகிதங்களைப் பயன்படுத்தி—இங்கு உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத்தை எட்டுகிறது, உண்மையில் அது இன்னும் அதிகமாக இருக்கும்—அவர் தான் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்க உள்ளதாகவும் இன்னும் அதிக வேலைகளை வருங்காலத்தில் தோற்றுவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு நடந்த கூட்டமானதும் நோர்மனுடைய ஊதியக் குறைப்புத் திட்டத்திற்கு எவ்வளவு குறைந்த ஆதரவு உள்ளது என்பதற்கான குறிப்பு ஆகும். தொழிலாளர்களை கூட்டத்திற்கு வருவதற்கு இயன்ற ஊழல் முயற்சிகள் அனைத்தையும் அமைப்பாளர்கள் செய்தனர். இக்கூட்டம் லூக்காஸ் ஒயில் அரங்கம், இந்தியானாபொலிஸ் கோல்ட்ஸ் கால்பந்தாட்டக் குழுவின் இடத்தில் நடைபெற்றது. தொழிலாளர்களும் அவர்கள் குடும்பங்களும் விளையாட்டுத் திடலில் கூட்டத்திற்கு முன்னும் பின்னும் நடக்க அழைக்கப்பட்டனர். இலவச தீன்பண்டங்கள், பழங்கள், வறுவல்கள் மற்ற உணவுப் பொருட்களும் அளிக்கப்பட்டன. ஆயினும் கூட மாநாட்டு அரங்கில் 1,500 பேருக்குப் போடப்பட்ட இருக்கைகளில் பெரும்பாலானவை காலியாகத்தான் இருந்தன.

பின்னர் நோர்மன் 50 கார்த் தொழிலாளர்கள் மட்டுமே வந்திருந்தாலும், “மிக அதிக தொழிலாளர்கள்” வந்ததற்குப் பாராட்டுத் தெரிவித்தார், ஆலையில் முழு நேரமாக 660 தொழிலாளர்கள் உள்ளனர்.

சிறிய எண்ணிக்கை இருந்தபோதிலும், நோர்மன் செய்தியாளர்களிடம் “ஒரு வாக்கெடுப்புத் தேவை என்ற உறுதி குழுவிடம் உள்ளதாகவும், தங்கள் குரல் கேட்கப்பட ஒரு ஜனநாயக வழிவகை வேண்டும் என்று விரும்பியதாகவும், அதையொட்டி அவர்கள் தங்கள் விதியையும், வருங்காலத்தையும் நிர்ணயிக்க முடியும்” என்றார். “ஒரு வாக்கெடுப்பு வரும் வரை நாங்கள் தொடர்வோம், ஊழியர்களுக்கு நாங்கள் காட்டும் மரியாதை அது” என்றும் கூறினார்.

தொழிலாளர்களின் ஜனநாயக விருப்பத்திற்கு இகழ்வுணர்வைத் தவிர வேறு எதையும் பெருநிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் காட்டவில்லை. கடந்த மே மாதம் ஆலையில் தொழிலாளர்கள் 384-22 என்ற வாக்குகளினால், ஒப்பந்தம் மறுபடி பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படையாக UAW நோர்மனுடன் மேலும் பேச்சுக்களை நடத்த தடுத்தது. மாறாக UAW Inernational and Region 3 அதிகாரிகள் நோர்மனுடனும் GM உடனும் தொழிலளார்களுக்கு எதிரான வகையில் பேச்சுக்களை தொடர்ந்தனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு குறிப்பிட்ட பாராட்டைக் கொடுக்கும் வகையில், “UAW உடன் நாங்கள் உண்மையில் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளோம்” என்றும் “அவர்களுடன் ஒரு திட்டத்தை கொண்டுவர கடுமையாக இணைந்து உழைத்துள்ளோம்” என்றும் நோர்மன் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தைப் பெற உயர்ந்த வேலையின்மை விகிதத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது பற்றி குறிப்பிட்ட நோர்மன், “நாம் உற்பத்தித் துறையில் ஒரு தனிச் சிறப்பான நேரத்தில் உள்ளோம் என்று வலுவாக நம்புகிறேன். இது ஒரு வாய்ப்பு—அனைவரும் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்—ஆனால் உற்பத்தி அலைகளுக்கு நல்ல வருங்காலம் உறுதியாக உள்ளது.” ஒரு மணி நேரத்திற்கு 15.50 டாலர் ஊதியம் என்பது “வாழ்க்கைத்தர ஊதியம்” என்றார். மீண்டும் “இது ஒரு பெரிய வாய்ப்பு” யாருக்கு என்று கூறாமல் பழையபடி கூறினார்.

உலக சோசலிச வலைத் தளம் கடந்த ஆண்டு எவ்வளவு இலாபம் அவர் ஈட்டினார் என்று கேட்போது, அவர் அதற்கு விடை கொடுக்க மறுத்து, நகர்ந்து விட்டார்.

திரைக்குப் பின்னால், UAW மற்றொரு வாக்கெடுப்பிற்கு முனைந்து சதி செய்கிறது. உள்ளூர் தொழிற்சங்க உறுப்பினர்களின் முடிவை பொருட்படுத்தவில்லை என்று அம்பலப்படுத்தப்பட்ட பின்னர்—UAW வின் விதிகளே தேசிய அதிகாரிகள் உள்ளூர் சங்க அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்தம் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடாது என்று உள்ளன—சர்வதேசத் தலைவரான பாப் கிங், பகுதி 3ன் இயக்குனர் மாரிஸ் டேவிசன் மற்றும் பிறரும் “ஒரு சட்டபூர்வ”, “விதிமுறைகளுக்குப் பொருத்தமான” காரணத்தை இயற்றி உள்ளூர் சங்க அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சலுகைகளை ஏற்க கட்டாயப்படுத்துகின்றனர்.

கூட்டம் முடிந்தவுடன் நோர்மனுடன் உடன்பாடு வேண்டும் என்று வாதிடும் க்ளென் ஷீக்ஸ் கூறிய கருத்துக்களில் இது தெளிவாக்கப்பட்டது. அதே போல் உள்ளூர் 23 ன் “ஆதாரப் பிரதிநிதியாலும்” தெளிவாக்கப்பட்டது. தன்னுடைய பங்கு “நிறுவனம் மற்றும் சங்கத்திற்கு துணை நிற்றல் ஆகும்” என்று ஷீக்ஸ் கூறினார்.

உடன்பாட்டிற்கு ஆதரவாக “மௌனமான பெரும்பனான்மை” உண்டு என்னும் நோர்மனுடைய கருத்தை தான் பகிர்ந்து கொள்வதாக ஷீக்ஸ் கூறினார். ஆனால் அவர்கள் “கூக்கூரலிடும் சிறுபான்மையினரால்” மிரட்டப்படுகின்றனர். பிந்தையவர்கள் “பேட்டையின் மிரட்டுபவர்கள்”, எக்காரணமும் இன்றி ஆலை மூடப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று உள்ளூர் சங்க அதிகாரி கூறினார்.

“நாம் வாக்கெடுப்பை நடத்தலாம், ஆனால் முறையான வழிப்படி செல்ல வேண்டும்” என்று அவர் கூறினார். UAW க்கு என்று விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு, முறையான வழிவகை பின்பற்றப்பட்டால், வாக்குச் சீட்டுக்கள் கொடுக்கப்படுவது உட்பட, “மிரட்டல் தவிர்க்கப்பட முடியும்” என்றார். “வாக்கெடுப்பு உறுதியாக வரும் என்று நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.

அடுத்த நடவடிக்கை என்ன என்று உள்ளூர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஷீக்ஸ் தொடர்ந்து கூறியது: “நம் நடவடிக்கைகள் அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும். ஒரு புதிய இயக்குனர் பாப் கிங்கை நாம் கொண்டுள்ளோம். அவர் ஒரு சிறப்பு வாக்கெடுப்பு வேண்டும் என்று கூறட்டும்…தன்னுடைய முத்திரையைப் பதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு; பின் அது வட்டார இயக்குனர் மோ டேவிசனுக்குச் செல்லும். டேவிசன் எங்கள் தலைவர் க்ரெக் க்ளார்க், நம் தலைவர் ரே கென்னடி, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் உடன்பட்டால், நாம் வாக்கெடுப்பு நடத்தலாம்.” இது இரு வாரங்களில் முடியும் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையில் மாநில, உள்ளூர் அரசிசயல்வாதிகள், இந்தியானாவின் குடியரசுக் கட்சி கவர்னர் மிட்ச் டேனியல்ஸில் இருந்து இந்தியானாபோலிஸ் ஜனநாயக காங்கிரஸ் உறுப்பினர் ஆண்ட்ரே கார்சன் வரை உள்ளூர் 23 க்கு மறு வாக்கு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு அறிக்கையை வினியோகித்தனர்; அதில் UAW, GM, Norman ஆகிய “மூவழிச் சதி” பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டு, முன்முயற்சியை அவர்கள் கைகளில் விட்டுவிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்துண்டுப்பிரசுரம் உயர்மட்ட, குறைந்த பணிமூப்பு ஒற்றுமை, தற்காலிக, முழுநேரத் தொழிலாளர்களிடையே ஒற்றுமை ஆகியவை ஊதியக் குறைப்புக்கள், ஆலை மூடல்கள் இவற்றிற்கு எதிரான பொதுப்போராட்டத்தின் அடிப்படையில் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“ஆலையை மூட அனுமதிப்பது ஒரு மாற்றீடு ஆகாது. அது நகரத்தையும், பகுதியையும் இன்னும் பேரழிவிற்கு உட்படுத்தும், ஊதியங்களயும் வரவுள்ள தலைமுறையின் நிலைமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், மற்றும் நாடெங்கிலும் உள்ள ஆலைகள் பின்பற்ற ஒரு முன்னோடிச் செயல் ஆகிவிடும்” என்று அறிக்கை கூறியுள்ளது.

“உண்மையான மாற்றீடு ஆலையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் ஊதியக்குறைப்பு, ஆலை மூடல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு ஐக்கியப்படுத்த வேண்டும். இது இப்பொழுது தயாரிக்கப்பட வேண்டும், செயல் குழு அனைத்துத் தொழிலாளர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்—அது UAW வில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும். அதுதான் ஆலை ஆக்கிரமிப்பிற்கு தயார் செய்யும், இந்தியானாபொலிஸ், இந்தியானா மற்றும் நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் அணிதிரட்டும்.”

15 ஆண்டுகள் அனுபவமுடைய ஒரு கார்த் தொழிலாளி ஒப்பந்தத்திற்கு அவரின் எதிர்ப்பு இருந்தபோதும், நோர்மன் திட்டத்தை கேட்க வந்திருந்தார். அவர் WSWS இடம், “மணிக்கு 15.50 டாலர் ஊதியத்தில் அடிப்படைத் தேவைகளை நான் பூர்த்தி செய்ய முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன் நான் கார்த் தொழிலாளியாக தொடங்கிய போது மணிக்கு 12.50 டாலர் பெற்றேன்; அப்பொழுது எல்லாம் இப்பொழுதைவிட விலைகள் பாதியாக இருந்தன.”

“இங்குள்ளவர்களில் பலர் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், ஓய்வு பெற விரும்புகின்றனர்; எனவே அவர்கள் ஒப்பந்தத்தை பரிசீலிக்கின்றனர். ஆனால் இப்பொழுது வரும் தொழிலாளி என்ன ஆவது? அவரைக் கொண்டுவருவது யார்? தன்னை மட்டும் நினைத்து இதை அவர் செய்கிறாரா? நாம் அடுத்த தலைமுறைக்காகவும் போராட வேண்டும்.

“இது இந்த ஆலையைவிட பெரிய பிரச்சினை. இது ஒரு தேசியப் பிரச்சினை. இந்த ஆலை மூடப்பட்டால், அடுத்து என்ன?’ என்றார் அவர்.