WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The dangers of mounting US-China rivalry
குவிந்துவரும் அமெரிக்க-சீனப் பகைமையின் ஆபத்து
Peter Symonds
12 August 2010
Back to
screen version
ஒபாமா நிர்வாகம், கடந்த மாதத்தில் சீனா தொடர்பான அதன் எதிர்த்து நிற்கும் நிலைப்பாட்டை புதுப்பித்து உக்கிரமாக்கியுள்ளது. ஈரானுக்கு எதிரான ஒரு புதிய சுற்று ஐ.நா. கட்டுப்பாடுகளை திணிக்க பெய்ஜிங்கின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டன் முயற்சித்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு குறுகியகால இடைவெளியை விட்டிருந்ததன் பின்னர், அமெரிக்கா கிழக்கு மற்றும் தெற்காசியாவில் முன்னெடுத்த தொடர்ச்சியான படையெடுப்பு நகர்வுகளில், சீனாவுடன் வேண்டுமென்றே பதட்ட நிலைமைக்கு எரியூட்டியது.
ஜூலை 23, தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்பின் (ASEAN - ஏசியன்) பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்கு சீனக் கடல் தொடர்பாக வியட்னாம் மற்றும் ஏசியன் நாடுகளுக்குள்ள பிராந்திய முரண்பாட்டில், ஆத்திரமூட்டும் விதத்தில் வியட்னாம் மற்றும் ஏசியன் நாடுகளுடன் சேர்ந்துகொண்டார். தென் சீனக் கடலை தனது "பிரதான நலன்களில்" ஒன்றாக கருதுவதாக மார்ச் மாதம் இரு சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு பெய்ஜிங் கூறியிருந்தது. இருப்பினும் இந்தத் தகவலை அலட்சியம் செய்த கிளின்டன், சீனா உரிமை கோரும் கடற் பகுதிக்குள் "தடையின்றி நுழைய வழி" வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நடவடிக்கை, "ஏறத்தாழ சீனா மீதான தாக்குதல்" என சீன வெளியுறுவு அமைச்சர் யங் ஜிசி விவரித்தார்.
சில நாட்களின் பின்னர், சீனா எதிர்த்த போதிலும் ஜப்பான் கடலில் அமெரிக்கா தென்கொரியாவுடன் சேர்ந்து பெரும் கடற்படை பயிற்சி ஒன்றைத் தொடங்கியது. மார்ச் மாதம் தென் கொரிய கடற்படை கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்ததாக கூறி, அதன் பேரில் பதிலிறுப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்த பயிற்சிகளில், பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் உட்பட 20 தென்கொரிய மற்றும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈடுபட்டன. இப்போது, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு மிகவும் நெருக்கமாக மஞ்சல் கடலில் இந்த ஆண்டு கடைப் பகுதியில் தென் கொரியாவுடன் இன்னுமொரு கடற்படை பயிற்சி இடம்பெறும் என பென்டகன் அறிவித்துள்ளது.
கடந்த வாரம், வியட்னாமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவரும் அணு உடன்படிக்கையின் விபரங்களை ஒபாமா நிர்வாகம் கசியவிட்டது. இந்த உடன்படிக்கை ஹானொய்க்கு அமெரிக்க அணு உலை தொழில்நுற்பத்தை விற்பனை செய்ய வழி வகுக்கும். தென் சீனக் கடல் சம்பந்தமாக வியட்னாம் அரசாங்கத்தை ஏற்கனவே ஆதரித்துள்ள நிலையில், இந்த அணு உடன்படிக்கையானது சீனாவுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மூலோபாய அணிதிரள்வுக்கு இன்னுமொரு அறிகுறியாகும். முன்னறிவிக்கக் கூடியவாறு பெய்ஜிங்கை ஆத்திரமூட்டும் இந்த நகர்வை, "தற்போதைய சர்வதேச ஒழுங்கை சவால் செய்யும்" வாஷிங்டனின் "இரட்டை நிலைப்பாடு" என பெய்ஜிங் குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்தகைய பதட்ட நிலைமைகளுக்கு பின்னால் இருப்பது, சக்திகளின் பூகோள சமநிலையிலான மாற்றங்களேயாகும். இந்த ஆண்டு அமெரிக்காவுக்குப் பின்னலும் ஜப்பானுக்கு முன்னுமாக உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஆகியுள்ள, சீனாவின் இரண்டு தசாப்தகால துரிதமான பொருளாதார வளர்ச்சி, ஆசியாவிலும் உலகைச் சுற்றியும் உறவுகளுக்கு இடைஞ்சல் கொடுக்கின்றது. அமெரிக்கா, எரிசக்தி வளம் மிக்க பிராந்தியங்களான மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிக்கு தனது இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதன் மூலமும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா ஊடாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை கூட்டணிகளையும் பங்காளிகளையும் விரிவுபடுத்துவதன் ஊடாக சீனாவை எதிர்ப்பதன் மூலமும் தனது சொந்த வரலாற்று ரீதியான பொருளாதார பின்னடைவுக்கு பதிலிறுக்கின்றது.
2007-08ல் வெடித்த பூகோள பொருளாதார நெருக்கடி, இரு சக்திகளுக்கும் இடையில் பகைமையை பெருமளவு உக்கிரமாக்கியுள்ளது. ஆரம்பத்தில், நிதி உருகு நிலையையின் ஆபத்தை எதிர்கொண்ட ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங்கிடம் உதவிகளைப் பெற முயற்சித்தது. உலகின் மிகப்பெரும் கடன்கார நாடான அமெரிக்கா, சீனாவில் இருந்து உள்ளே பெருக்கெடுக்கும் நிதியிலேயே கனமாகத் தங்கியிருந்தது. ஆனால், நிதி கொந்தளிப்பு தற்காலிகமாக தணிந்த நிலையில், சீன நாணயத்தை மீள் மதிப்புச் செய்வது, வர்த்தக மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் உட்பட ஒரு தொகை விவகாரங்களில் பெய்ஜிங்கை வாஷிங்டன் நெருக்கத் தொடங்கியது. அதே சமயம், அது ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குள் செயலூக்கத்துடன் தலையிடத் தெடங்கிவிட்டது.
கடந்த ஜூலையில், தாய்லாந்தில் நடந்த ஏசியன் மாநாட்டில், அமெரிக்கா "ஆசியாவிற்கு மீண்டும் வந்துள்ளது" என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிளின்டன் தெளிவாகக் கூறிப்பிட்டார். இது ஆசியவை அலட்சியம் செய்துவிட்டதாக முன்னைய புஷ் நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை சுட்டிக்காட்டுவதாகும். புதிய இராஜதந்திர முயற்சிகள் பற்றி சமிக்ஞை செய்த கிளின்டன், "சீனாவின் அயலவர்களில் ஒரு தொகையினர் [அதன் எழுச்சி பற்றி] கவலை வெளியிட்டுள்ளனர், எனவே, கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள ஒரு தொகை நாடுகளுடன் எமது உறவுகளை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்," என நிருபர்களிடம் கூறினார்.
"ஆசியாவில் அமெரிக்க பலத்துக்கு சீனாவின் சவால்" என்ற தலைப்பில், சிக்காகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரான ஜோன் மியர்ஷெய்மெர், ஆகஸ்ட் 4 சிட்னியில் நடத்திய விரிவுரையொன்றில், அதிகரித்துவரும் அமெரிக்க-சீன சச்சரவின் ஆபத்தான உள்ளர்த்தங்களை சுட்டிக்காட்டினார். ஒரு கூர்மதியுள்ள மற்றும் புலனுணர்வுள்ள வெளியுறவு கொள்கை ஆய்வாளராக சிட்னி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு பற்றிய கற்கைகளுக்கான நிலையத்தால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டிருந்த மியர்ஷெய்மெர், ஆசியாவிலும் மற்றும் விரிவாக உலகத்திலும் சமாதானத்துக்கான வாய்ப்புகள் பற்றிய ஒரு மங்கலான சித்திரத்தை வரைந்தார். மாணவர்கள், வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளாலும் நிறைந்துபோயிருந்த மண்டபத்தில் உரையாற்றிய அவர், சீனாவின் திகைப்பூட்டும் பொருளாதார விரிவாக்கத்தின் விளைவாக, அது ஒரு பிராந்திய சக்தியாக வருவதற்கு முயற்சிப்பதோடு வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா போன்ற மேற்கு கோளப் பகுதியில், அதன் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா பயன்படுத்தும் அதே ஈவிரக்கமற்ற வழிமுறைகளை பயன்படுத்தி, சீனா ஆசியாவில் இருந்து தனது சாத்தியமான பகைவர்களை வெளியேற்றும், என தெரிவித்தார்.
"சீனாவின் எழுச்சி பற்றி ஆஸ்திரேலியர்கள் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அது யுத்தத்துக்கான கனிசமான மூல வாய்ப்புகளுடன் சீனா மற்றும் அமெரிக்காவுடன் உக்கிரமான பாதுகாப்பு போட்டிகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, ரஷ்யா, வியட்னாம், மற்றும் ஆம் ஆஸ்திரேலியா உட்பட அநேகமான சீனாவின் அயல் நாடுகள், சீனாவின் பலத்தை குறைப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்துகொள்ளும். சுருக்கமாக கூறினார், சீனாவால் சமாதானமான முறையில் எழுச்சி பெற முடியாது," என மியர்ஷெய்மெர் பிரகடனம் செய்தார்.
மியர்ஷெய்மெர், முரண்பாடுகளை தவிர்ப்பதில் சமாதான முயற்சிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற எந்தவொரு நல்லெண்ண வகிபாகத்தையும் நிராகரித்தார். தவிர்க்க முடியாமல், ஒரு நாடு இராணுவ அபிவிருத்தியை தற்காப்பு கருதி செய்யும் போது, அதன் பகைமை நாடுகள் அதை ஆக்கிரமிப்புக்கான ஆபத்தான இயலுமையாக நோக்குகின்றன. சீன தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டில், நாட்டின் பூகோள நலன்களை காப்பதற்கு அதன் இராணுவ படைகளை விரிவாக்குவதற்கு அது முற்றிலும் விவேகமாக உள்ளது, என அவர் விளக்கினார். சீனத் தலைவர்கள், "அது [அமெரிக்கா] ஒரு யுத்தத்தை விரும்பும் ஆபத்தான நாடு என மொத்தத்தில் நிச்சயமாக முடிவு செய்வர். அனைத்துக்கும் மேலக, குளிர் யுத்தம் முடிவடைந்து 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 3 வருடத்திலும் 2 வருடங்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய யுத்தத்துக்கு வெளிப்படையாக முனைந்துகொண்டுள்ளதை நினைவில்கொள்ள வேண்டும்," என அண்மைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு மியர்ஷெய்மெர் அறிவித்தார்.
உலகின் பிரமாண்டமான மலிவு உழைப்புக் களமாக சீனவின் பொருளாதாரம் வளர்ந்ததானது, பூகோளத்தின் சகல மூலைகளில் இருந்தும் அதன் மூலப் பொருள் இறக்குமதியை பரந்தளவில் விரிவாக்குவதை அவசியமாக்கியது. அதற்கு இன்றியமையாத எண்ணெய் மற்றும் எரிவாயுவில் அரைபங்கிற்கும் மேல் பெருமளவில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காக, இந்து சமுத்திரம் ஊடாக தென் சீனக் கடலுக்கான அதன் கடற் பாதையை தக்கவைத்துக்கொள்ள ஆழ்கடல் கடற்படையை உருவாக்க சீனா உறுதிகொண்டுள்ளது. அதே போல், அது நடப்பதை தடுக்க உறுதிகொண்டுள்ள அமெரிக்காவும், தனது சொந்த கடற்படை மேலாதிக்கத்தை பேணுவதற்கு உறுதிகொண்டுள்ளது.
சீனாவுக்கான பிரதான கனிப்பொருள் ஏற்றுமதியாளர் என்ற தனது பொருளாதார நலன்களுக்கும், அமெரிக்காவுடனான தனது நீண்டகால இராணுவ கூட்டணிக்கும் இடையில் சமநிலையை வைத்துக்கொள்ள இதுவரை முயற்சித்துவரும் ஆஸ்திரேலியா, தவிர்க்க முடியாமல் அமெரிக்க-சீன மோதலுக்குள் சிக்கிக்கொள்ளும் என மியர்ஷெய்மெர் விளக்கினார். இந்து சமுத்திரத்தில் இருந்து தென் சீனக் கடலைக் கடப்பதற்கு சீனக் கப்பல் போக்குவரத்துக்கு மூன்று தேர்வுகளே உள்ளன: அவை, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளியான சிங்கப்பூரின் கட்டுப்பாட்டில் விளைபயனுள்ள வகையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை, அல்லது, வடக்கு ஆஸ்திரேலியாவுக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் நீரிணைகளான லொம்பொக் மற்றும் சுன்டா நீரிணைகளில் இந்தோனேஷியா தீவுக் கூட்டத்தின் ஊடாக செல்வதாகும், என அவர் கூறினார். "தனது கடற் பாதைகளுக்கு ஆஸ்திரேலியா விடுக்கும் அச்சுறுத்தல்களை தணிக்க சீனா எடுக்கும் முயற்சிகள்... நிச்சயமாக சீனாவை கட்டுப்படுத்த வாஷிங்டனுடன் நெருக்கமாக செயற்பட கன்பராவைத் தள்ளும்."
தனது சொந்த முடிவுகள் "வெளிப்படையாக பின்னிலையில் இருப்பதை" கான்பதாக மியர்ஷெய்மெர் நேர்மையாக ஏற்றுக்கொண்டுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போதிருந்து சீனாவின் இரு தசாப்தகால வளர்ச்சியின் தாக்கம் பற்றி அவர் பேசியிருந்தாலும் கூட, இங்கு உடனடி விளைவுகள் உள்ளன. அமெரிக்கா தனது நலன்களை முன்னெடுப்பதற்காக தனது பகைவர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளை -குறிப்பாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில்- மேற்கொள்ள விரும்புவதை கடந்த இருபது ஆண்டுகள் பூராவும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. பென்டகனின் முழு மூலோபாய நோக்கும், அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை சவால் செய்யக்கூடிய எந்தவொரு சக்தியும் --நண்பனானாலும் சரி எதிரியானாலும் சரி-- தோன்றுவதை தடுப்பதை முதல் நிலையில் கொண்டுள்ளது. ஆசியாவில் ஒபாமா நிர்வாகத்தின் அண்மைய அடியெடுப்புகள், சீனாவின் பிராந்திய செல்வாக்கை எதிர்ப்பதன் மூலம் அதன் எழுச்சியை துல்லியமாக முன்கூட்டியே தடுப்பதையும் அதன் இராணுவ விரிவாக்கத்துக்கு பெரும் முட்டுக்கட்டைகளை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்ட அதன் மூலோபாயத்தின் பாகமாக உள்ளன.
அமெரிக்க-சீன மோதல்கள் குறிப்பிடத்தக்க வரலாற்று சமாந்தரங்களைக் கொண்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், ஆற்றல் வாய்ந்த முதலாளித்துவ சக்தியாக ஜேர்மனி தோன்றியமை, ஏகாதிபத்திய பிரிட்டன் மற்றும் ஏனயை பெரும் வல்லரசுகளுடன் ஆழமான போட்டிக்கும் பகைமைக்கும் எண்ணெய் வார்த்தது. அது அழிவுகரமான இரண்டு உலக யுத்தங்களை விளைவாக்கியது. 1930களிலும் 40களிலும் ஜப்பானின் எழுச்சியும் சந்தைகள் மற்றும் மூலப் பொருட்களுக்கான அதன் தேவையும், அதை அமெரிக்காவுடனும் மற்றும் ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவடைந்துவரும் நலன்களுடனும் மோதலுக்குக் கொண்டுவந்து விட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 1941ல் இரண்டாம் உலக யுத்தத்தின் பசுபிக் வரையான விரிவாக்கம், ஜப்பானை மண்டியிட வைக்க அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க திணித்த எண்ணெய் தடையினால் வெடித்ததே ஆகும். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இருந்து, பெய்ஜிங் விழிப்புடன் இருப்பது போல், தற்போதைய மற்றும் சாத்தியமான பகைவர்களுக்கு எரிசக்தி விநியோகத்தை தடுப்பதற்கான தனது இயலுமையை பேணிக் காக்க அமெரிக்க இராணுவம் முயற்சித்தது.
பூகோள முதலாளித்துவம் 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியினுள் மூழ்கியுள்ள நிலையில் சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் மூலோபாய நிலைகள் சம்பந்தமாக பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியினால் தலைநீட்டும் ஆபத்து, மீண்டுமொரு முறை அழிவுகரமான உலக மோதல்கள் ஏற்படும் --இம்முறை அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளுக்கிடையில்-- அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தகைய யுத்தத்தை நிறுத்தும் இயலுமை கொண்ட ஒரேயொரு சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும். உலகை தேசிய அரசுகளாக ஒவ்வாத முறையில் பிரித்து வைத்திருக்கும் இலாப அமைப்புமுறையை தூக்கி வீசி, அதற்கு மாறாக ஜனநாயக முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட, பகுத்தறிவுக்கு ஏற்றவாறு விவேகமாக உலகப் பொருளாதாரத்தை பதிலீடு செய்வதற்கு உலகம் பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலகம் பூராவும் உள்ள அதன் பகுதிகளும் அபிவிருத்தி செய்யும் சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கு இதுவேயாகும்.
|