World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Pakistan’s floods, partition and imperialist oppression

பாக்கிஸ்தானில் வெள்ளப் பெருக்குகள், பிரிவினை மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை

Keith Jones
30 August 2010

Back to screen version

கடந்த ஒரு மாதத்தில் பாக்கிஸ்தானின் நிலப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேலாக, கிட்டத்தட்ட அதன் விவசாய நிலங்களில் கிட்டத்தட்டக் கால் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதானது பெரிய மனிதாபிமான இடரைத் தோற்றுவித்துள்ளது. ஐ.நா. சபையின் 65 ஆண்டு கால வரலாற்றில் மிகப் பெரிய இடர் இது என்று ஐ.நா.அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இப்பொழுது இருபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலோ அல்லது அவர்களுடைய விளைபயிர்கள் மற்றும் கால்நடைகள் அழிந்ததாலோ ஏற்பட்டிருக்கிறது. எட்டு மில்லியன் பாக்கிஸ்தானியர்களுக்கு அவசரகால நிவாரணம் தேவைப்படுகிறது. அதில் கடந்த சில நாட்களில் தெற்கு சிந்த் பகுதியில் மட்டும் இருந்து இடம்பெயர்ந்துள்ள ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் அடங்குவர்.

உத்தியோகப்பூர்வ இறந்தோர் எண்ணிக்கை 1,600க்கு மேல் என்று உள்ளது. ஆனால் அனைவருமே இந்த எண்ணிக்கை வெள்ளநீர் வடிந்து, அழிவின் முழுப் பரப்பும் வெளிவருகையில் இன்னும் அதிகமாகும் என்று ஒப்புக் கொள்கின்றனர்.

ஐ.நா.வும் சர்வதேச உதவி அமைப்புக்களும் தீவிர கொலரா, நீரின்மூலம் வரும் பிற நோய்கள் மற்றும் பட்டினியினால் இறக்கும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர் என்று எச்சரித்துள்ளனர். ஏனெனில் அரசாங்கத் தலைமையிலான நிவாரண முயற்சி நல்ல குடிநீர், உணவு மற்றும் உறைவிடங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறு அளவிற்கு மேல் கொடுக்க முடியவில்லை.

இந்தப் பேரழிவு மிகப்பெரும் பரிமாணத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் போட்டிபோடும் தேசிய முதலாளித்துவங்கள், பிற்போக்குத்தன இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டியில் 1947 ல் உபகண்டம் பிரிவினைக்கு உட்பட்டு அரசுகளாக தோன்றியதிலிருந்தே ஈடுபடுபவை, வழக்கம்போல் தங்கள் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

இரு வாரங்களுக்கு மேல் பாக்கிஸ்தானை வெள்ளம் பாதித்த நிலையில்தான் இந்திய அரசாங்கம் இஸ்லாமாபாத்திற்கு ஒரு அற்ப $5 மில்லியன் உதவியை “பாக்கிஸ்தான் மக்களுடன் ஒற்றுமைக்கு” அடையாளம் என்ற பெயரில் அளிக்க முன்வந்தது.

இதன் பின் இந்த நன்கொடை பற்றி ஆராய பாக்கிஸ்தான் ஒரு வரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது. அதற்கு “இதிலுள்ள கூருணர்ச்சிகள் கவனிக்கப்பட வேண்டும்” என்ற காரணத்தைக் கூறியது. இந்தியப் பிரதம மந்திரி பாக்கிஸ்தானியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, வாஷங்டனில் இருந்து பொதுத் தூண்டுதல் வந்தபின்னர்தான் பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா முகமுத் குரேஷியைத் தங்கள் அரசாங்கம் புது டெல்லியின் உதவி அளிப்பை ஏற்கும் என அறிவிக்க வைத்தது.

பாக்கிஸ்தானின் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ள உழைக்கும் மக்களுக்கு இத்தகைய ஒரு சிறு கரண்டி அளவு உதவிக்குக்கூட இராஜதந்திர முறை தேவைப்பட்டது என்பது இந்தியாவிலோ, பாக்கிஸ்தானிலோ அதிக கருத்து தெரிவித்தல் வெளிப்படுத்தப்படவில்லை. நாடுகளுடைய செய்தி ஊடகங்களானது அரசியல்வாதிகளின் தேசியவாத மற்றும் வகுப்புவாதம் நிறைந்த கூற்றுக்களை எதிரொலித்து, மிகைப்படுத்திக் கூறும் வரலாற்றைக் கொண்டு, முக்கிய போட்டி நாட்டின் “மறைந்துள்ள கரங்களின் நடவடிக்கைகள்” குறித்து அனைத்து சமூக, அரசியல் பிரச்சினைகளையும் குறைகூறும் தன்மையை உடையவை ஆகும்.

இந்திய-பாக்கிஸ்தான் போட்டி மற்றும் பிரிவினை இரண்டுமே தற்போதைய பெரும் சோகத்தின் வேர்களில் உள்ளவை.

சமூகப் பொருளாதார, வரலாற்று மற்றும் கலாச்சார தர்க்கங்களை மீறி, உபகண்டத்தில் 1947ல் இந்தியாவில் இருந்து வெளியேறிய காலனித்துவ பிரபுக்களாலும், இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் முதலாளித்துவ அரசியல்வாதிகளாலும் ஒரு முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் பெரும்பாலான இந்துக்களைக் கொண்ட இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டது.

பிரிவினை மூலம் ஏற்படுத்தப்பட்ட செயற்கை எல்லைகளானது பகுத்தறிவார்ந்த முறையில் தெற்கு ஆசியாவின் உள்ளே நீர்களுக்கான வழிமுறைகளை ஏற்படுத்தி பாசனவசதி, மின் உற்பத்தி, வெள்ளப் பாதுகாப்பு ஆகியவற்றை அனைவருக்கும் கொடுப்பது சாத்தியமாக்க முடியவில்லை. உண்மையில் புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே முக்கிய பூசல்களில் நீரும் உள்ளது. 1960ம் ஆண்டு சிந்து நதி நீர் உடன்பாடு உலக வங்கியின் ஆதரவில் ஏற்பட்டும் இந்நிலை தொடர்கிறது.

பாக்கிஸ்தானைப் போலவே இந்தியாவிலும் ஆளும் உயரடுக்கு அடிப்படைப் பொதுக் கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யத் தவறியுள்ளது. அதன் முக்கிய ஆதாரங்களை போர் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றால் சூறையாடுகிறது. இதில் அணுவாயுதங்களும் அடங்கும். இந்தியாவும் பாக்கிஸ்தானும் மூன்று அறிவிக்கப்பட்ட போர்களில் ஈடுபட்டுள்ளன. குறைவான ஒரு தசாப்தத்திற்கு முன்பு நான்காவது போரின் விளிம்பில் நின்றன.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் பிரிவினை என்பது, ஆளும் உயரடுக்குகளால், “ஜனநாய இந்தியா”, “தெற்கு ஆசிய முஸ்லிம்களின் தேசிய நாடு” இவை வெளிப்படுவதற்கான “பிரசவ வேதனை” என்று நடத்தப்பட்டது. இது தெற்கு ஆசிய வெகுசனங்களின் நிலை குறித்து அவற்றின் பொருட்படுத்தா தன்மையைத்தான், இனம், மதம், சாதி ஆகியவை எப்படி இருந்தாலும், அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரிவினையின் உடனடி விளைவாக மிகப்பெரும் வகுப்புவாதக் குருதி கொட்டலாக இருந்தது. அதன் விளைவு இரண்டு மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று பலாத்காரமாக 14 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதில் விளைவாகியது. இது மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய வெகுஜன வெளியேற்றம் ஆகும்.

“விடுதலை” மற்றும் “சுதந்திரம்” இவற்றை பிரிவினை முதலாளித்துவ இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் வரையறுத்தது, வரையறை செய்கிறது. இது ஒரு பிறழ்ச்சி என்பதற்கு முற்றிலும் மாறாக, 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தெற்கு ஆசியாவை உலுக்கிய வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை அரசியலளவில் ஒடுக்கியதன் பெரும் குருதி கொட்டிய, உடனடியான வெளிப்பாட்டின் விளைவாகும்.

மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஒரு பிரிவினையின் நிரபராதியான பாதிக்கப்பட்டவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டதுடன், பிரிட்டிஷ் மற்றும் முஸ்லிம் லீக் இதை முன்னின்று நடத்தியதாகவும் கூறினார்கள். ஆனால் காங்கிரசின் முதலாளித்துவத் தலைவர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் மதசார்பற்ற இந்தியாவை அனைத்து உபகண்ட மக்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்னும் இலக்கைக் காட்டிக் கொடுத்தனர் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் தெற்கு ஆசியாவை கீழிருந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பொது வர்க்க நலனுக்கு உபகண்டத்தில் உள்ள வெகுஜன மக்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை செய்ய தகுதியற்றும், அதற்கு விரோதப் போக்கைக் கொண்டிருந்ததாலும்தான்.

மாறாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்தியாவில் தொழிலாள வர்க்க, விவசாயப் போராட்டங்கள் அலையென வந்தமையானது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்குள் வெளிப்படையாக இருந்த பிரிவுகள் காங்கிரஸ் தலைவர்களை தாங்கள் உடனடியாக காலனித்துவ நாட்டின் கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் சமூகப் புரட்சியைத் தவிர்க்க முடியும் என்று நம்ப வைத்தன.

சுதந்திரத்திற்குப் பின்னர், போட்டி ஆட்சிகள் வெகுசனங்களின் இழப்பில் முதலாளித்துவ ஆட்சிகளை ஸ்திரப்படுத்தின. இதையொட்டி விவசாயப் புரட்சி தடுக்கப்பட்டது, ஆட்சியாளர்களின் செல்வம் பாதுகாக்கப்பட்டது, தொழிலாளர் அமைதியின்மை அடக்கப்பட்டது.

ஆறு தசாப்தங்களுக்கு பின்னரும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் போட்டி முதலாளித்துவத்தினர், தெற்கு ஆசிய உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள கொழுந்துவிட்டு எரியும் எந்த ஜனநாயக, சமூகப் பிரச்சினையையும் தீர்க்கத் தங்கள் இயலாமையைத்தான் நிரூபித்துள்ளன. உலகின் வறியவர்களில் பாதிப் பேர் உபகண்டத்தில் வாழ்கின்றனர். உலகின் எப்பகுதியிலும் இந்த அளவிற்கு ஊட்டச்சத்து இல்லாத மக்கள் விகிதம் இல்லை. இந்தியா அல்லது பாக்கிஸ்தானின் அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்திற்கு மேல் கல்விக்கும் சுகாதாரப் பாதுகாப்பிற்கும் செலவிடுவதில்லை.

பிரிவினையின் பிற்போக்குத்தன தர்க்கத்தை ஒட்டியும், இந்திய-பாக்கிஸ்தானிய போட்டியை ஒட்டியும், உலகின் எந்தப் பகுதியும் இந்த அளவிற்கு பொருளாதாரத்தில் குறைவான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கவில்லை.

தெற்கு ஆசியாவில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வை அளிக்க இயலாத நிலையில், இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவங்கள் பெருகிய முறையில் வகுப்புவாதம், இனத் தேசியவாதம், சாதித்துவம் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெகுஜனங்களைப் பிரித்து வைத்துள்ளன.

பிரிவினை இப்பகுதியில் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு ஒரு கருவியாக இருந்தது, இருந்து வருகிறது. பாக்கிஸ்தானிய முதலாளித்துவமானது வாஷிங்டன் கொடுத்த அளிப்புகளை சோவியத் ஒன்றியத்துடன் எதிர்கொண்ட பனிப் போர்க்காலத்தில் “முன்னணி நாடாக” செயல்பட விரைவில் ஒப்புக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும், அமெரிக்கா பாக்கிஸ்தானில் இராணுவச் சர்வாதிகாரங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தியது. சமீபத்தில் ஜெனரல் பர்வேஸ் முஷரப்பின் ஆட்சிக்கும் அவ்வாறே செய்திருந்தது. ஆப்கானிய மற்றும் பாக்கிஸ்தான் மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளில் அமெரிக்காவானது பாக்கிஸ்தானின் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குடன் 1980 களில் பங்கு கொண்டு ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை அமைத்து அதற்கு ஆயுதமும் வழங்கியது.

இன்று, தன் மக்களின் உணர்வையும் மீறி, பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

பனிப்போர்க் காலத்தில் வாஷிங்டனில் இருந்து “சுதந்திரம்” என்பதை இந்திய முதலாளித்துவம் அதிகமாகக் காட்டிக் கொண்டது. ஆனால் உலக ஏகாதிபத்தியத்துடன் அதன் தாழ்ந்த உறவுத்தன்மையில் கூடுதலான தந்திர உத்திகளைச்செய்தல், இலாபம் அடைதல் என்பதற்கு மேல் ஒன்றும் கிடையாது. கடந்த தசாப்தத்தில், அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடுத்திருக்கையில், இந்திய முதலாளித்துவம் வாஷிங்டனுடன் “உலக மூலோபாய” பங்காளியாக தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

பனிப் போர்க்காலத்தில், அமெரிக்கா தன்னுடைய கொள்ளை நலன்களுக்காக இந்திய-பாக்கிஸ்தானிய மோதலை நீடிக்க வைத்தும் சூழ்ச்சியாக கையாண்டும் வந்தது. சமீபத்தில் இது புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையே உள்ள உறவு அழுத்தங்களைக் குறைக்க முற்பட்டுள்ளது. எனவேதான் புது டெல்லி கொடுத்த அற்பத் தொகையை ஏற்கும்படி இஸ்லாமாபாத் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இத்தகைய செயல்கள் அமெரிக்காவின் தற்போதைய மூலோபாய கணக்குகளை ஒட்டித்தான் உந்துதல் பெறுகின்றன. அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானுடைய ஆதரவு தேவை. எனவே இஸ்லாமாபாத் தன் துருப்புக்களை, கிழக்கே இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதை, பாக்கிஸ்தானுக்குள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரான எழுச்சி எதிர்ப்புக்களை அடக்கத் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

பாக்கிஸ்தானுக்கும் அதன் பின் இந்தியாவிற்கும் ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவைக் கொண்டுவரும் “சமாதான குழாய்” திட்டத்தை முறியடிக்க வாஷிங்டன் அனைத்து முயற்சிகளையும் செய்திருக்கிறது. ஏனெனில் இது ஈரானைப் பொருளாதார வகையில் தனிமைப்படுத்த முற்படும் அதன் பிரச்சாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும். இதேபோல் இந்திய-அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தம் தெற்கு ஆசியாவில் அணு ஆயுதப்போட்டியைத் தூண்டும் என்னும் பாக்கிஸ்தானின் எச்சரிக்கைகளையும் அமெரிக்கா புறக்கணித்தது. ஏனெனில் வாஷிங்டன் ஒரு மூலோபாயப் பங்காளியாக இந்தியா வருவதில் ஆர்வம் காட்டுவது, அது சீனாவிற்கு எதிர்ப் பலமாமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

விடுதலை கிடைத்து ஆறு தசாப்தங்கள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவங்களானது ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகளைச் சாதிக்க இயலவில்லை என்பதைத்தான் நிரூபித்துள்ளன—அதாவது நிலப்பிரபுத்துவ முறையை அகற்றுதல், சாதி அடக்கு முறையை அகற்றுதல், மதம், அரசு தனித்தனியே இயங்குதல், தேசிய ஐக்கியம், சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டுவருதல். இந்தக் கொழுந்துவிட்டு எரியும் பணிகள் நிரந்தரப் புரட்சி முன்னோக்கினால் தான் சாதிக்கப்பட முடியும்—அதாவது அனைத்துத் உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை தழுவிய தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் பாகமாக நடத்தப்படும்போது தான் சாதிக்கப்பட முடியும்.

தெற்கு ஆசியாவில் நிரந்தரப் புரட்சி முன்னோக்கின் முக்கிய கூறுபாடு 1947 பிரிவினையை கீழிருந்து தகர்ப்பது ஆகும்—அது தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச அரசுகள் நிறுவப்படுவதன் மூலம்தான் முடியும்.