World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government seeks European backing for its anti-Roma policy

பிரெஞ்சு அரசாங்கம் தன்னுடைய ரோமா-எதிர்ப்புக் கொள்கைக்கு ஐரோப்பாவின் ஆதரவை நாடுகிறது

By Stefan Steinberg
31 August 2010

Back to screen version

ரோமா சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை வளைத்துப் பிடித்து நாடுகடத்தும் தன்னுடைய இனவெறிக் கொள்கைக்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தியோகபூர்வ ஐரோப்பிய நிறுவனங்களிடமிருந்து ஆதரவைத் தேட முற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (Hôtel Matignon) ல் நடந்த தூதர்கள் கூட்டத்தில், பிரெஞ்சுப் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் தான் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோவுடன் பேசியுள்ளதாகவும், ரோமா பிரச்சினை பற்றி “ஒரு செயல்முறைக் கூட்டத்தை” நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார். இக்கூட்டம் வரவிருக்கும் நாட்களில் நடைபெறவுள்ளது. நாட்டின் ரோமா எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தொடர்புடைய பிரெஞ்சு மந்திரிகள் மற்றும் முக்கிய ஐரோப்பிய ஆணையர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

ஐரோப்பிய ஆணையர்களுடனான பிய்யோன் திட்டமிட்டுள்ள கூட்டத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதி பாரிஸில் ஒரு கூட்டம் நடக்கும். பிரெஞ்சு அரசாங்கம் ஐந்து முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம்,ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தை அக்கூட்டத்திற்கு அழைத்துள்ளது.

பாரிஸ் கூட்டத்தில், பெல்ஜிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அதன் அரசியல் தஞ்சத்திற்கான மந்திரி கலந்து கொள்வார். தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறு மாத காலச் சுழற்சித் தலைமையை பெல்ஜியம் கொண்டுள்ளது. பிரெஞ்சு ரோமாக்கள் நாடுகடத்தப்பட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு நாடுகளான ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகியவை பாரிஸ் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகடத்தும் கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதைத் தவிர, பிரெஞ்சுக் குழு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உரிமைகள் உடைய உறுப்பினர் என்னும் ருமேனியாவின் முயற்சிக்கும் சவால் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸின் ஐரோப்பிய ஒன்றிய விவகார மந்திரி பியர் லெல்லூஷ் சமீபத்தில் செய்தி ஊடகத்திடம் “ரோமா பிரச்சினை ஷெங்கன் அங்கத்துவத்திற்கு ஒரு நிபந்தனையாக இருக்க வேண்டும்” என்றார். ருமேனியாவும் அண்டை நாடான பல்கேரியாவும் 2011ல் ஷெங்கன் 1985 உடன்பாட்டில் சேர உள்ளன. அந்த உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடுகளை அகற்றியிருந்தது.

ரோமா மக்களின் மேல் துன்புறுத்தும் நடவடிக்கைக்கான பிரெஞ்சுத் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஆதரவை தேடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதோடு, நாடுகடத்தல்களும் தீவிரமடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை, பிரெஞ்சு குடியேற்றத்துறை மந்திரி எரிக் பெசோன் அரசாங்கமானது ரோமா மக்களை ருமேனியா மற்றும் பல்கேரியாவிற்கு நாடுகடத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டுக்கொண்டுள்ளது என்று அறிவித்து, கிட்டத்தட்ட 8,000 பேர் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும் குறிப்பிட்டார். ஒரு நாளைக்குப் பின்னர் மற்றும் 284 ரோமா மக்கள் பாரிஸ், லியோன் விமான நிலையங்களில் இருந்து ருமேனியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெளியேற்றப்பட்டவர்களில் பலர் “சுய விருப்பத்துடன்” திரும்பினர் என்று பெசோன் அறிவித்துள்ள நிலையில், AFP செய்தி நிறுவனம், “பொலிஸ் எங்களை இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கோரினர்: ஒன்று நாங்கள் இப்பொழுது சுய விருப்பத்துடன் செல்ல வேண்டும், அல்லது பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவோம்” என ஒரு 20 வயது ரோமா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய இனவாத பிரச்சாரத்திற்கு ஐரோப்பிய ஆணையத்தின் ஆதரவில் நம்பிக்கை வைக்கலாம் என்று பிரெஞ்சு அரசாங்கம் கருத ஒவ்வொரு காரணமும் உண்டு. கடந்த ஆண்டு ரோமா மக்களை ஐரோப்பாவில் மிகவும் துன்புறுத்தலுக்கு உட்பட்டுள்ள ஒற்றை சிறுபான்மைப் பிரிவு என்று ஒரு ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை தகவல் கொடுத்துள்ளது என்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய அமைப்புக்கள் அவர்கள் நிலைமையை மாற்ற சிறு அக்கறை கூட காட்டவில்லை.

பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அதிக ஆதரவுக் குரல், இத்தாலிய உள்துறை மந்திரி ரோபர்டோ மரோனியிடமிருந்து ஆகும். இவர் ஏராளமானவர்களை பிரான்ஸ் நாடுகடத்துவது குறித்துப் பாராட்டி, பாரிஸ் உச்சிமாநாட்டில் ரோமாக்களை இயல்பாகவே நாடுகடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் தரவேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார். மரோனியின் கருத்துக்களை அடுத்து, சில விமர்சன ரீதியான செய்தி ஊடகப்பிரிவுகள் பாரிஸ் கூட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக “ரோமா-எதிர்ப்பு உச்சிமாநாடு” என்று பெயரிட்டுள்ளன.

நாடுகடத்துவதற்கு இலக்கு கொள்ளப்பட வேண்டிய பிரிவுகள் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுவதற்கு மரோனி இக்கூட்டத்தைப் பயன்படுத்த உள்ளார். மரோனி கருத்துப்படி, “ஏதேனும் கூறவேண்டும் என்றால், ஒருபடி இன்னும் அதிகமாகச் செல்ல வேண்டும்”, “ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் தங்களை நிதிய அளவில் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களை கட்டாயமாக நாடுகடத்த வேண்டும்”. முன்பு ஒரு செய்தித்தாளிடம் பாரிஸ் “இத்தாலியைப் போல்தான் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிய அரசாங்கம் அதன் ரோமா மக்கள் நாடுகடத்துவதைத் தொடங்கியது. ஒரு சில ரோமாக்களின் குற்ற நடவடிக்கைகள் இத்தாலிய செய்தி ஊடகத்தில் பரபரப்புடன் வந்ததை அடுத்து இத்தாலிய அரசாங்கம் ஒரு தீய பிரச்சாரத்தைத் தொடங்கியது. மே 2008ல் வலதுசாரிப் பிரிவினை இயக்கமான Northern League ன் முக்கிய உறுப்பினரான மரோனி, “அனைத்து ரோமனி முகாம்களும் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும், வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் இல்லாவிடின் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் 60 பேர் கொண்ட கும்பல் ஒன்று நாபிள்ஸில் ஒரு ரோமா முகாமை மோலோடோவ் குண்டுகளுடன் தாக்கியது. இத்தாக்குதல் மரோனியால் நியாயப்படுத்தப்பட்டது. “நாடோடிகள் குழந்தைகளைத் திருடினால், அல்லது ருமேனியர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், இதுதான் நடக்கும்” என்று எச்சரித்தார்.

அதே மாதம், பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின் அரசாங்கம் அவசரகால பிரகடனத்தை அறிவித்தது. பெனிடோ முசோலினியின் பாசிச ஆட்சிக்காலத்தில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஒரு சட்டத்தின் கீழ் இவர் அசாதரண நடவடிக்கைகள் பலவற்றைத் தொடர்ந்து எடுத்தார். இதில் அனைத்துப் பாதிக்கப்பட்ட நபர்கள், குழந்தைகள் உட்பட, புகைப்படம் எடுக்கப்பட்டனர், அவர்கள் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

ரோமா இன்னும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக—பெர்லுஸ்கோனி அப்பொழுது “தீமை பயக்கும் இராணுவம்” என்று விளக்கினார்—பாதுகாப்பு ரோந்துகள் உள்ளூர் சமூகங்களில் நிறுவப்பட்டன. உள்துறை மந்திரி மரோனி பின் அடிப்படை மாற்றங்களை இத்தாலியக் குடியேற்றச் சட்டத்தில் அறிமுகப்படுத்தத் தொடங்கினார். உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வசிப்பது குற்றமாக்கப்பட்டதுடன், வசிக்கும் விசாக்களுடன் ஒரு புள்ளிமுறையும் இணைக்கப்பட்டது.

பாரிஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கும் மற்ற நாடுகள் ரோமாக்களை நாடுகடத்தும் தத்தம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் அவை பிரெஞ்சு, இத்தாலிய அரசாங்கள் செயல்கள் போல் செய்தி ஊடகக் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. ஜேர்மனி 12,000 ரோமாக்களை கொசோவோவிற்கு அனுப்பத் தயார் செய்கிறது. இது ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் பிரிஸ்டினா ஆட்சிக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த உடன்பாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6,000 குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள், ஜேர்மனியில் பிறந்தவர்கள் அல்லது வளர்ந்தவர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள். அவர்களுக்கு சேர்பியன் அல்லது அல்பானிய மொழி தெரியாது. அல்லது கொசோவோவில் பெரும் நலன்கள் அற்றுத்தான் இருப்பார்கள்.

நாடுகடத்தல்களும், ரோமா மக்களுக்கு எதிரான வெறுப்புத் தாக்குதல்களும் வட அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் தொடர்ச்சியான ஐரோப்பிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன. டென்மார்க்கில் கோபன்ஹேகனின் நகரசபை இந்த மாதம் அரசாங்க உதவியை நகரத்தின் ஒரு குடியிருப்பில் உள்ள சில நூறு ரோமாக்களை நாடுகடத்த நாடியுள்ளது. அருகிலுள்ள பெல்ஜியத்தில் 700 மக்களைக் கொண்ட வாகனங்கள் குறுகிய காலத்திற்கு பிரெஞ்சு மொழி பேசும் வாலோனியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அருகிலே உள்ள பிளாண்டர்ஸில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டவர்களாவர்.

ஒவ்வொரு நிகழ்விலும் ஐரோப்பா முழுவதும் உள்ள வலதுசாரி அரசாங்கங்கள் பரந்த கட்சிகளின் ஒருமித்த உணர்வின் ஆதரவுடன் இந்த கொள்கைகளை செயல்படுத்த முடிகிறது. இதில் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் முக்கிய பிரிவுகளும் அடங்கும்.

ஐரோப்பிய அரசியல் நிறுவனங்கள் இந்த துன்புறுத்தும் அலைக்கு எதிராகக் குறுக்கிட மறுத்துவிட்டன. ஐரோப்பிய ஆணையத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, சமீபத்திய ரோமாக்களுக்கு எதிரான பிரெஞ்சுப் பிரச்சாரத்தில், ஒரு செய்தித் தொடர்பாளரால் விளக்கப்பட்டது. அவர் ஜூலை இறுதியில் தங்கள் நாடுகளில் உள்ள ரோமா சமூகங்கள் பற்றிய கொள்கையை தனி நாடுகள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.

“ஐரோப்பிய ஆணையம் என்னும் முறையில் ரோமா மக்களின் தனிப்பட்ட விவகாரங்கள் பற்றித் தீர்ப்புக் கூற நாங்கள் இங்கு கூடவில்லை. ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு அதிகாரமும், அதன் முடிவை எடுக்க வேண்டும்.” என்று நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ நியூமன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் முன்வைத்த ஒரே நிபந்தனை தங்கள் செயல்களில் ஒரு “விகிதாசாரத்தை” அரசாங்கங்கள் காட்ட வேண்டும் என்ற ஆலோசனைதான்.

ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் ரோமா மக்களைத் துன்புறுத்தி விரட்டுவது, ஐரோப்பிய ஆணையத்தின் உடந்தையுடன், தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் ஒரு தீய, முழு நனவுடன் கூடிய முயற்சி ஆகும். அவர்கள் கண்டம் முழுவதும் ஆழ்ந்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் சமூக விளைவுகளுக்கு பலிகடா ஆக்கப்படுகின்றனர். இது முஸ்லிம்கள் இன்னும் பிற சிறுபான்மையினர் இன்னும் பரந்த சமூகப் பிரிவுகளுக்கு எதிராகத் தூண்டப்படும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியுடன் பிணைக்கப்படுகிறது. இதுதான் மரோனியின் உறுதிமொழியான “ஒரு படி மேலே செல்லுவோம்” என்பதின் முக்கியத்துவம், “தங்களை நிதி வகையில் நிலைநிறுத்தமுடியாதவர்கள்” அனைவரையும் நாடுகடத்துவோம் என்று கூறும் துன்புறுத்தும் பிரச்சாரத்தின் விரிவாக்கம் ஆகும்.