WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஈராக்கில் நீதித்துறை மூலமான கொலையை தாரிக் அசீஸ் எதிர்கொள்கிறார்.
Bill Van Auken
28 October 2010
Use
this version to print | Send
feedback
முன்னாள் ஈராக்கிய வெளியுறவு மந்திரி தாரிக் அசீஸுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது பாக்தாத்தில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசியல் பழி வாங்கும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கை என்பதோடு, 2003 படையெடுப்பு தொடங்கியதில் இருந்து வாஷிங்டன் செய்துள்ள ஏராளமான போர்க்குற்றங்களில் மற்றும் ஒன்று ஆகும்.
பல தசாப்தங்கள் உலக அரங்கில் ஈராக்கின் முக்கிய இராஜதந்திர பிரதிநிதியாக இருந்த அசிஸ் 2003ல் தானே முன்வந்த அமெரிக்க இராணுவத்திடம் சரண்டைந்தார். தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்களுடன் இராஜதந்திர உறவுகளும் அடங்கியிருந்த தன்னுடைய நீண்டகால சர்வதேசப் புகழ் தன்னை காப்பாற்றும் என்று அசிஸ் நம்பியிருந்தார்.
மாறாக, இந்த நோய்வாய்ப்பட்டிருக்கும் 74 வயதுக்காரர் ஏழாண்டுகளுக்கும் மேலாக தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள Camp Cropper சிறை அதிகாரிகளாலும், இன்னும் சமீபத்தில் ஈராக்கிய பாதுகாப்புப் படைகளாலும். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் அசிஸை கடந்த ஜூலை மாதம் ஈராக்கிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தபோது தன்னுடைய வக்கீலிடம் அவர் “அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பது உறுதி.” எனக் கூறினார்.
முன்னதாக, அசிஸ், ஈராக் மீது அமெரிக்க-ஐக்கிய நாடுகள் பொருளாதார முற்றுகை இருந்தபோது விலைகள் நிர்ணயம் செய்த வணிகர்களை தூக்கிலிட்டார், நாட்டின் வடக்கே குர்திஸ் எதிர்ப்பை அடக்குவதிலும் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மொத்தமாக 22 ஆண்டு சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இச்சிறைத் தண்டனை நடைமுறையில் ஆயுட்காலத் தண்டனைக்கு ஒப்பாகும்; ஏனெனில் அசிஸ் மோசமான உடல்நிலையில் உள்ளார். சிறையில் இருந்தபோது பாரிச வாயுக்கள், நுரையீரல் வாதிகளால் அவதியுற்று, கடந்த ஜனவரி மாதம் மூளை இரத்தக்கட்டிக்காக அறுவை சிகிச்சையும் பெற்றார்.
சமீபத்திய முடிவின்படி, முன்னாள் வெளியுறவு மந்திரி 1980 களில் டாவா கட்சி உட்பட ஷியைட் இஸ்லாமியர்களின்மீது பாத்திஸ்ட் ஆட்சி நடத்திய தாக்குதலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியான ஈரானிய ஆதரவு கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதில் அசிஸ் மற்றும் சதாம் ஹுசைன் இருவரையும் படுகொலை செய்ய நடத்திய முயற்சிகளும் அடங்கும். அந்நேரத்தில் வாஷிங்டன் சதாம் ஹுசைனை ஈரானியப் புரட்சி அரபு உலகத்தில் ஷியா மக்களிடையே பரவாமல் தடுப்பதற்கு ஒரு ஆதாரம் என்று ஆதரவு கொடுத்து வந்தது நினைவு கொள்ளப்பட வேண்டும்.
இந்தத் தண்டனைகளை அளித்த நீதிமன்றம் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கூட்டணி இடைக்கால அதிகாரம் வெளியிட்ட ஆணை ஒன்றின்கீழ் தோற்றுவிக்கப்பட்டது; அமெரிக்கப் படையெடுப்பு அகற்றியிருந்த பாத்திஸ்ட் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்மீது வழக்கு விசாரிக்க அது நிறுவப்பட்டது. இதில் பணிபுரிபவர்கள் பாக்தாத்தில் இருந்த அமெரிக்க தூதரகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பளம் பெறுபவர்கள். தொடக்கத்தில் இருந்தே இந்த கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றம் “வெற்றி பெற்றவர்களின் நீதி” என்னும் மூர்க்கமான வழிவகைகளைத்தான் பின்பற்றி வந்தது.
அசிஸின் மரண ஆணையில் கையெழுத்திடப்போவது ஒருவேளை ஈராக்கின் இடைப்பொறுப்பு பிரதம மந்திரியாக இருக்கும் நூர்-அல்-மாலிக்காக இருக்கலாம். இவர்தான் டாவா கட்சியின் முக்கிய புள்ளி ஆவார். தண்டனை பிறப்பித்த நீதிபதி மஹ்முத் சலே அல்-ஹாசன் மாலிகியின் ஷிடைட் அரசியல்முகாமான State of Law Coalition இல் உறுப்பினர் ஆவார்.
எந்தவித சட்டபூர்வ வக்கீலும் இல்லாமலேயே அசிஸ் தன் பல வழக்குகளையும் எதிர்கொண்டார்; ஏனெனில் அவரை பாதுகாக்க முன்வந்த வக்கீல்கள் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சியுடன் தொடர்பு கொண்ட ஷியைட் போராளிகளால் மரண அச்சுறுத்தலுக்கு உட்பட்டனர்.
அடிப்படையில் அவர் சதாம் ஹுசைனின் இரகசியப் பொலிசின் குற்றங்களுக்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் ஈராக் அரசாங்கத்தின் முக்கிய தூதர் என்ற நிலையில் இவர் இருந்தார். பாத்திய ஆட்சியின் செயற்பாடுகள் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் இந்தத் தர்க்கத்தை ஏற்கவில்லை. அசிஸ் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்படுத்திய உள்வட்டத்தின் உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அவ்வட்டத்தில் பொதுவாக ஹுசைனின் திக்ரிட் பி்ன்னணியை கொண்ட இனவழியினர்தான் இருந்தனர்.
சமய அடிப்படையைக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அசிஸ் மரண தண்டனை பெற்றுள்ளது சிறிய விந்தையல்ல. 1936ல் ஒரு வறிய கிறிஸ்துவ குடும்பத்தில் வடக்கு ஈராக்கில் பிறந்த அசிஸ் தேசிய அரசியலில் தன்னுடைய 20ம் வயதில் நுழைந்து, பிரிட்டிஷ் ஆதரவு கொண்டிருந்த முடியாட்சியை அகற்றப் போராடினார். அவருடைய தலைமுறையில் இருந்த பல அரேபிய இளைஞர்களைப் போலவே இவரும் தேசியப் புரட்சிதான் இந்த பிராந்தியத்தை காலனித்துவ முறை மரபியத்தில் இருந்தும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூட்சியால் இப்பகுதிகளில் அதிகமாக இருந்த இன-சமயப் பிளவுகளையும் விடுவிக்கும் என்று கருதினார்.
அவருடைய விசாரணையை மேற்பார்வையிட்ட ஈராக்கிய அரசியல் சக்திகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தூண்டுதலால் நடந்த பாரிய குழுவாத அடிப்படையலான குருதி சிந்துதலில் தொடர்புடைய போராளிகளுடன் பிணைந்துள்ளனர். ஈராக்கிலுள்ள கிறிஸ்துவ மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர்; பிறவியில் கிறிஸ்துவராக இருந்த அசிஸ் போன்றவர்கள் தற்பொழுதைய ஆட்சியில் முக்கிய பதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு சுத்தமாகக் கிடையாது.
ஆனால் இன்னும் அடிப்படையில் இந்த நீதிமன்றமும் ஆட்சியுமே அமெரிக்கா நடத்திய ஒரு குற்றம்சார்ந்த போர் மற்றும் ஆக்கிரமிப்பினால் தோற்றுவிக்கப்பட்டவைதான். மரணதண்டனை வாஷிங்டனின் ஆணைமூலம் வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அசிஸுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை “ஏற்கமுடியாதது” என்றும், வத்திக்கானும் பல ஐரோப்பிய அரசாங்கங்களும் கருணை காட்டுமாறு அழைப்புவிடுத்தும், ஒபாமா நிர்வாகம் குற்றம் சார்ந்த மௌனத்தைத்தான் கடைப்பிடிக்கிறது.
தாரிக் அசிஸ் நீதித்துறைமூலம் நசுக்கப்படுவதில் உள்ள வெளிப்படையான வினா இதுதான். ஈராக்கிய மக்களுக்கு எதிராக குற்றங்களுக்காக எவரையும் விசாரணை செய்வதற்கு வாஷிங்டனுக்கும் அதன் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களுக்கும் என்ன தகுதி உள்ளது?
சிறைப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் கார்டியனிடம் அவர் அளித்த ஒரே ஒரு பேட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாரிக் அசீஸே கூறியபடி, “நாங்கள் அனைவரும் அமெரிக்கா, பிரிட்டனால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் நாட்டை அவர்கள் கொன்றுவிட்டனர்.”
கடந்த ஏழரை ஆண்டுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஈராக்கியச் சமூகத்தை அழித்திவிட்டது; ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலாக கொல்லப்பட்டனர், நான்கு மில்லியனுக்கும் மேலானவர்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர், இன்னும் பல மில்லியன்கள் இன்னும் பட்டினி, வேலையின்மை ஆகியவற்றில் இருப்பதுடன் மிக அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்கின்றனர்.
புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தில் இருக்கும் இக்குற்றங்களைப் புரிந்தவர்கள் எந்தவிதப் பொறுப்பிற்கு உட்படாமல் இருப்பது ஒரு குற்றம் மட்டுமில்லாமல் இழிநிலையும் ஆகும்.
அவசரம் அவசரமாக மரண தண்டனை அளிப்பட்டுள்ள விதத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் (பொதுவாக அத்தகைய தண்டனை வரவுள்ளது என்பது பற்றி 30 நாள் அவகாசம் இருக்கும்) அசிஸின் வக்கீல்கள் இது அரசியல் உந்துதல் பெற்றது என்றனர். நீதிமன்றம் மாலிகியின் சார்பிலும் வாஷிங்டனில் உள்ள அவருடைய புரவலர்கள் சார்பிலும் செயல்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளன்னர். கடந்த வாரம் வெளியிட்ட கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இரகசிய ஆவணங்கள் பொதுமக்களைப் படுகொலை மற்றும் முறையான சித்திரவதைகள் கைப்பாவை ஈராக்கிய அரசாங்கப் பாதுகாப்புப் படைகளை அமெரிக்காவின் உட்குறிப்பான ஒப்புதலுடன் செய்தமை அம்பலாமாகியுள்ளதால் வந்துள்ள மக்கள் கருத்தைத் திசை திருப்ப முயல்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அசிஸுக்கு மரணதண்டனை கொடுத்த அவசர நீதிமன்றம் அமெரிக்க கொள்கைகளின் கருவியாகச் செயல்பட்டுள்ளது. அமெரிக்கப் பயிற்சி பெற்றிருந்த வுல்ப் படைப்பிரிவும் இப்படித்தான் நடந்து கொண்டது; விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளபடி, அப்பிரிவிடம் அமெரிக்க இராணுவம் கைதிகளை அனுப்பி வைத்தது. அதையொட்டி அவர்கள் அதிக மின்சக்தி அதிர்ச்சிகள் இன்னும் பிற நுட்பமான காட்டுமிராண்டி வழிவகைகளால் சித்திரவதை செய்யப்பட்டனர், பல நேரம் கொல்லவும் பட்டனர்.
முன்னாள் ஈராக்கிய வெளியுறவு மந்திரி இறக்க வேண்டும் என்பதற்கு வாஷிங்டன் தன் சொந்த காரணங்களைக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் ஆளும் வட்டங்களுள் நிர்வாகம் தயாரித்த போலிக் காரணங்கள் பற்றி இவர் உயர்ந்த அளவில் மறுப்புத் தெரிவித்தது குறித்து கசப்பு உணர்வுடையவர்கள் இன்னமும் உள்ளனர்-அதாவது “பேரழிவு ஆயுதங்கள்”, அல் குவேடாவுடன் தொடர்பு என்று அமெரிக்கப் படையெடுப்பிற்குக் கூறப்பட்ட போலிக் காரணங்கள்.
இன்னும் அடிப்படையில், அசிஸின் நீண்டகால இராஜதந்திர வாழ்வு அவரை ஈராக்கைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த சான்றுகளை அம்பலப்படுத்தக்கூடிய சிறப்பு நிலையில் இருத்துகிறது. இவர்தான் 1983ல் முதல் முதலில் ரேகன் நிர்வாகத்தால் சதாம் ஹுசைனுக்கு ஈரான்-ஈராக் போரின்போது அமெரிக்க ஆதரவைக் கொடுக்க வந்த சிறப்புத் தூதராக இருந்த டோனால்ட் ரம்ஸ்பெல்டை (பின்னர் புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரி 2003 படையடுப்புக் காலத்தில்) வரவேற்றவர்.
வாஷிங்டனுக்கும் பாக்தாத்திற்கும் முதல் வளைகுடாப்போருக்கு முந்தைய காலத்தில் நடந்த இராஜதந்திர தந்திரோபாயங்களின் மையமாக இருந்தார். அப்பொழுது பாக்தாத்தில் அமெரிக்கத் தூதராக இருந்த ஏப்ரில் கிளாஸ்பை 1990ல் குவைத் மீதான ஈராக் படையெடுப்பிற்கு பச்சை விளக்கு காட்டினார். இது பின்னர் பாரிசீக வளைகுடாவில் பாரிய அமெரிக்கக் ஆக்கிரமிப்பிற்கு வழி வகுத்தது.
இவரால் வாஷிங்டன் எப்படி முறையாக ஈராக்கில் “பேரழிவு ஆயுதங்கள் இல்லை” என்பதை நிராகரித்தது என்பதற்கான சான்றுகளையும் மற்றும் 2003 இல் துவங்கிய போரை தடுக்கும் முயற்சிகளை வாஷிங்டன் நாசப்படுத்தியது என்றும் அம்பலப்படுத்த முடியும்.
அமெரிக்க ஆளும் உயரடுக்கு தாரிக் அசீஸிடம் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க ஈராக்கிய உறவுகளில் இருந்த இரகசியங்கள் அவருடனேயே கல்லறைக்குச் செல்லட்டும் என்ற இழிந்த கருத்து உண்டு. தங்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் நடந்தால் சிறப்புச் சாட்சியாக வரக்கூடிய நபரை ஏன் உயிருடன் விட்டு வைக்க வேண்டும்?
இக்காரணத்தினால்தான் சர்வதேச தொழிலாள வர்க்கம் தாரிக் அசிஸ் மரண தண்டனையை எதிர்த்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று போராட வேண்டும். ஈராக்கில் இடர்ப்படும் மக்களுக்கான நீதி, சட்ட விரோத ஆக்கிரமிப்புப் போரை தொடக்கியதற்கும் அதனால் வந்த கணக்கிலடங்காக் குற்றங்களுக்குப் பொறுப்பு கொண்டவர்கள் மீது குற்ற விசாரணை நடத்துவதின் மூலம்தான் வரும்.
|