WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
அரசியல் சீர்திருத்தம் பற்றிய பேச்சுக்களை சீனத் தலைமையின் கூட்டம் உதறுகிறது
By John Chan
26 October 2010
Use
this version to print | Send
feedback
சீனாவில் ஆளும் வட்டங்களில் ஒரு விவாதத்திற்கான அடையாளங்கள் இருந்தபோதிலும்கூட, அக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மையக் குழுக்கூட்டம் “அரசியல் சீர்திருத்தம்” பற்றி எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் அறிவிக்கவில்லை. அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை அது பற்றி விரிவாக ஏதும் கூறாமல் வெறும் ஒரு குறிப்பைத்தான் காட்டியுள்ளது; “அரசியல் மறுகட்டமைப்பிற்கான” முயற்சிகள் “தீவிரமாக, நிலையாக” மேற்கொள்ளப்படும் என்று மட்டும் கூறியுள்ளது.
இக்கூட்டத்தின் மிக முக்கியமான முடிவு துணை ஜனாதிபதி சி ஜின்பிங்கை கட்சியின் மத்திய இராணுவக் குழுவின் (Central Military Commission) துணைத் தலவராக தேர்ந்தெடுத்திருப்பது ஆகும். இது சீனாவில் ஜனாதிபதியாகவும், மத்திய இராணுவக் குழுவின் தலைமையை ஹு ஜின்டாவோவிடம் இருந்து எடுத்துக் கொள்வதற்கான தயாரிப்பு ஆகும். அவர் 2012ல் ஓய்வு பெற உள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அதன் பரந்த இராணுவ-பொலிஸ் அமைப்பில் முக்கியமாக தொடர்ந்து தன்னை இருத்திக் கொள்கிறது.
“அரசியல் சீர்திருத்தத்திற்கான” அழைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயாக உரிமைகளை அங்கீகாரம் செய்வதில் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை தன்னுடைய ஆதரவுத் தளமாக ஒருங்கிணைக்க விரும்பும் எழுச்சி பெற்று வரும் மத்தியதர வர்க்கங்களின் பிரிவுகளுக்குக் கூடுதல் அரசியல் ஈடுபாட்டை அனுமதிக்கும் வகையில் குறைந்தபட்ச மாறுதல்கள்தான் திட்டமிடப்பட்டுள்ளன.
உயர்தலைமைக் கூட்டத்திற்கு சற்று முன்னதாக, மறைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ சேதுங்கின் முன்னாள் செயலர் லி ருயி உட்பட கட்சியின் 23 மூத்த தலைவர்கள், மத்திய குழுவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினர். இதில் “பேச்சு மற்றும் செய்தி ஊடகத்திற்குச் சுதந்திரம்” ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் சீனாவின் தணிக்கை முறை “உலக ஜனநாயக வரலாற்றில் இழிந்த அடையாளம்” என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் வென் ஜியாபாவோ இந்த ஆண்டு “அரசியல் சீர்திருத்தத்திற்கு” பல அழைப்புக்கள் விடுத்துள்ளார். கடந்த மாதம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அவர் பயணித்திருந்தபோது, தன்னுடைய பரந்த திட்டங்களை அவர் கோடிட்டுக் காட்டினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி “படிப்படியாக ஜனநாயகத் தேர்தல் முறையை முன்னேற்றுவிக்கும்”, “சட்ட நிர்வாக முறையை முன்னேற்றுவிக்கும்” மற்றும் “செய்தி ஊடகம், பிற கட்சிகளின் கண்காணிப்பை ஏற்றல்” ஆகிய தேவைகளை கொண்டுள்ளது என்றார்.
அப்பேட்டியில் சீனா “ஒரு வல்லரசு இல்லை” என்று வென் வலியுறுத்தினார். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வறுமையில் உழல்கின்றனர் என்றும் வேலையின்மையைக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்க பொருளாதாரம் பெரிதும் வெளி உதவியைத்தான் நம்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சீன ஆளும் வட்டங்களிடையே இருந்த அச்சங்களை சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்கா யுவான் விரைவில் மறு மதிப்பீடு செய்யவேண்டும் என வலியுறுத்தக்கூடாது, அது பெரும் சமூக வெடிப்பிற்கு வகை செய்யும் என்றும் தெளிவுபடுத்தினார்.
ஏப்ரல் மாதம் மறைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹு யாவாபாங்கை புகழ்ந்து வெளியிட்ட கட்டுரை ஒன்றில் வென் அரசியல் சீர்திருத்தம் பற்றிய விவாதத்தை தொடக்கினார். அவருடன் இவர் 1985-86ல் இருந்து பணியாற்றியிருக்கிறார். 1970 களின் கடைசி ஆண்டுகளிலும் 1980களின் ஆரம்ப ஆண்டுகளிலும் ஹு சிந்தனைப்போக்கில் “தாராளவாதம்” வேண்டும், அதுதான் பெருந்தலைவரான டெங் ஜியாவோபிங்கின் சந்தை ஆதரவு சீர்திருத்தத்திற்கு துணை நிற்கும், மாவோவின் சோசலிச வார்த்தைஜாலங்களை அகற்றும் என்று வாதிட்டார்.
1987ல் ஹுவின் கொள்கை பல்கலைக்கழக மாணவர்களிடைய அமைதியின்மையை தூண்டி அவர்கள் ஜனநாயக உரிமைகளைக் கோரியபோது, டெங் அவரை பணிநீக்கம் செய்தார். ஏப்ரல் 1989ல் ஹு இறந்தது மாணவர்கள் மற்றும் தாராளவாதிகள் என்று பெய்ஜிங்கில் இருந்தவர்களுடைய பரந்த எதிர்ப்புக்களைத் தூண்டி, அவர்கள் “ஜனநாயக சீர்திருத்தம்” கோரினர்; இது அப்பொழுது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக இருந்த ஜாவோ ஜியாங்கின் ஒப்புதலையும் பெற்றது. சீனா முழுவதும் இருந்த நகர்ப்புறத் தொழிலாளர்கள் எதிர்ப்புக்களில் சேர்ந்து தங்களுடைய வர்க்கக் கோரிக்கைகளையும் முன்வைத்தபோது, டெங் ஜாவோவை அகற்றி ஜூன் 3-4 1989ல் டியானன்மன் சதுக்கத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்குமாறு இராணுவத்திற்கு உத்திரவிட்டார்.
இரு தசாப்தங்களுக்கும் மேலாக “ஜனநாயகச் சீர்திருத்தம்” பற்றிய விவாதம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வாத விடயம் ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினைச் சுற்றியுள்ளவர்கள் டியானன்மன் சதுக்கப் படுகொலைக்குப் பின் அதிகாரத்திற்கு வந்தவர்கள் எவ்வித ஜனநாயகச் சலுகைகளும் பரந்த சமூக அமைதியின்மையை வெள்ளமெனத் தோற்றுவித்துவிடும் என்று உடன்பட்டுள்ளனர். இந்த நிலைப்பாடுதான் ஜியாங்கின் கோஷமான “அமைதியின்மையை முளையிலேயே கிள்ளி எறி” என்பதில், அதாவது பொலிஸ்-அரசாங்க நடவடிக்கைகள் மூலம் தகர்த்துவிடு என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ஹு ஜின்டாவோ, டெங்கினால் ஜியாங்கிற்கு அடுத்து நியமிக்கப்பட்டவர், அடக்குமுறைக் கொள்கைகளுக்குத் தன் ஆதரவை அவர் திபெத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயலராள இருந்தபோது மார்ச் 1989ல் எதிர்ப்புக்களை மிருகத்தனமாக நசுக்குமாறு உத்தரவிட்ட விதத்தில் நிரூபித்தார். 2003ம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்குமுன், ஹு தான் “அரசியல் சீர்திருத்தம்” பற்றி விவாதத்திற்கு ஊக்கம் கொடுக்க இருப்பதாகக் கூறினார். ஆனால் பெருகிய சமூக அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள விதத்தில் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதில் தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்களைப் போலவே ஹுவும் இரக்கமற்று உள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு எழுச்சி பெறும் வர்க்க அழுத்தங்கள் பற்றிக் கவலை கொண்டுள்ளது உயர்குழுவில் புதிய ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டம் பற்றிய விவாதத்தில் வெளிப்பட்டது. உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான Xinhua பின்வருமாறு கூறியது: “செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பரந்துள்ள பெரும் இடைவெளி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அராங்கம் முகங்கொடுக்கும் கடுமையான சமூக உண்மையாகும். இது உலகின் அதிக மக்கள் நிறைந்த நாட்டில் சுமுகமான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.”
ஜனாதிபதி ஹு “அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி” என்னும் புதிய கோஷத்தை முன்வைத்தார்; இது வளமை பெருநிறுவன உயரடுக்கு, கட்சி அதிகாரத்துவத்தினருக்கும் அப்பால் பரவ வேண்டும் என்ற குறிப்பைக் காட்டுகிறது. “அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான” குரல் சீனாவிலும் மற்ற முதலாளித்துவ பொருளாதாரங்களில் கூறப்படுவது போல் போலித்தனமானதுதான். கடந்த இரு தசாப்தங்களாக சீனா உலகின் முக்கிய குறைவூதிய அரங்காக வெளிப்பட்டுள்ள நிலையில், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள சமூகப்பிளவு இன்னும் அதிகரித்துள்ளது.
“அரசியல் சீர்திருத்தம்” பற்றிய விவாதத்தைத் தொடக்க வேண்டும் என்னும் வென்னின் முயற்சி ஆதரவிற்கு ஒரு உறுதியான தளத்தைக் காண்பதில் ஆட்சிக்கு உள்ள கடின நிலையை பிரதிபலிக்கிறது. சோசலிச வார்த்தைப்பிரயோகங்களை கைவிட்டுவிட்டதால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெருகிய முறையில் பிற்போக்குத்தன தேசியவாத உணர்வை, குறிப்பாக ஜப்பானுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது. ஆனால் இந்த சிந்தனாவாத கருவிகூட ஆட்சிக்கே பின்விளைவு கொடுக்கும் அபாயத்தைக் கொடுக்கிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உயர்குழுக் கூட்டக் காலத்தில், பல நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்களிடையே எதிர்ப்புக்கள் வெடித்தன. பெய்ஜிங் ஜப்பானுக்கு எதிராக பூசலுக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடலின் கட்டுப்பாடு பற்றிய சமீபத்திய பூசலை ஒட்டி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதிகாரிகள் துணை இராணுவப் பொலிசை ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்குப் பயன்படுத்தினர். இது கோரிக்கைகள் எழுப்பப்பட்டன என்பதற்காக இல்லாமல், எந்தப் பிரச்சினை பற்றியும் எதிர்ப்புக்கள் மற்ற பிரச்சினைகளுக்கும் பாயக்கூடும், மக்களின் பல்வேறு தட்டுக்களுக்கும் சென்றுவிடக்கூடும் என்ற அச்சத்தால்.
ஹு யாவோபாங் பற்றி வென் எழுதிய கட்டுரைக்குப் பின்னர் பல தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் கார்த்தயாரிப்பு மற்றும் மின்னஞ்சல் ஆலைகளில் வெடித்தன. மே மாதம் போஷன் ஹோண்டா மாற்றுதல் ஆலையில் வேலைநிறுத்தத்துடன் இது தொடங்கியது. அதே நேரத்தில் ஷென்ஜனில் உள்ள மாபெரும் பாக்ஸ்கான் வளாகத்தில் பல இளம் தொழிலாளர்களின் தற்கொலைகள் நாட்டிலுள்ள தொழிலாளர் நடத்தப்படுவது பற்றிச் சீனாவிலும் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
தொழிலாளர்களிடையே அதிருப்தி என்பது சீன, சர்வதேச ஆளும் வட்டங்களிடையே சீனாவில் பல மில்லியன் கொண்ட தொழிலாளர் வர்க்கத்திடையே முழு அளவுக் கலகம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. குறைந்தபட்ச அரசியல் சீர்திருத்தம் என்பது சமூக அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் வழிவகையாகக் காணப்படுகிறது.
பைனான்சியல் டைம்ஸ் அக்டோபர் 13ம் தேதி தலையங்கத்தில் கூறியது: “சீனாவின் வியத்தகு பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை அரசியல் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டிருக்காது. ஆனால் இறுதியில், அரசியல் அடக்குமுறை எப்பொழுதும் செயல்படாது. அடக்குமுறை சமூக அதிருப்தியின் அடையாளங்களைப் போக்குமே ஒழிய அவை ஏற்பட்ட காரணங்களை அப்படியே விட்டுவிடும்.” செய்தித்தாள் சீன அரசாங்கம் “பெரும் சக்தி உடைய பெரிநிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின்” நடவடிக்கைககளைக் கட்டுப்படுத்தி “பரந்த அதிருப்தி கட்டுக்கடங்காமல் போகுமாறு” பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் போது Financial Times 1989 டியானன்மன் சதுக்க எதிர்ப்புக்களின் போது முன்னாள் பெய்ஜிங் தொழிலாளர்களின் தன்னாட்சிக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த ஹான் டோங்பாங்கை ஆதரித்துப் போற்றியது. ஹான் சீனத் தொழிலாளர் இயக்கம் “அரசியிலில் இருந்து அகன்று இருக்க வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்தார்; இதற்கு தொழிற்சங்க உரிமைகள் குறைந்த அளவில் தேவை என்றும், முதலாளித்துவ வடிவமைப்பிற்குள் “கூட்டுப்பேர உரிமையும்” வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசை சிறையில் இருக்கும் சீன எதிர்த்தரப்பாளர் லியு ஜியாபோவிற்கு கொடுக்கப்பட்டதற்கும் திமிர்த்தனமான உத்தியோகபூர்வ கண்டனம் கொடுக்கப்பட்டது. இது பெய்ஜிங்கிற்கு எவ்வித அரசியல் சீர்திருத்தங்களையும் செயல்படுத்தும் நோக்கம் இல்லை என்பதற்கான தெளிவான அடையாளம் ஆகும். சீன அதிகாரத்துவத்தின் மேலாதிக்கம் நிறைந்த பிரிவுகளைப் பொறுத்தவரை, பொலிஸ்-அரசாங்கக் கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டாலும், அது சீனத் தொழிலாள வர்க்கத்திடையே இயக்கத்தைக் கட்டவிழ்த்துவிடக்கூடும் என்ற கருத்து உள்ளது. தொழிலாள வர்க்கமோ இப்பொழுது 400 மில்லியன் எண்ணிக்கையாக உள்ளது.
சர்வாதிகார ஆட்சியின் வழிவகைகளை தக்கவைத்தல் என்றால் வர்க்கப் போராட்டம் வெடிக்கையில்-அது தவிர்க்க முடியாதது-அவை வெடிப்புத் தன்மை நிறைந்தவையாக இருக்கும் என்றுதான் பொருள். |