WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா: பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டத்தை அரசாங்கம் நசுக்க முற்படுகிறது
By Arun Kumar and Nanda Kumar
25 October 2010
Use
this version to print | Send
feedback
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் மாநில அரசாங்கம் உலகின் மிகப்பெரும் மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஒரு வேலைநிறுத்தத்தை கைது நடவடிக்கைகள் மற்றும் மிரட்டல் இரண்டையும் பயன்படுத்தி நசுக்க முனைகிறது. போலிஸ் அடக்குமுறையையும் தாண்டி ஸ்ரீபெரும்புதூர் தொழில்நகரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செப்டம்பர் 21 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தொழிற்சாலையின் 7,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, சுகாதார நல உதவிகள் அதிகரிப்பு மற்றும் ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைச் (மார்க்சிஸ்டு) சேர்ந்த தொழிலாளர் சங்கம் (FITS) என்னும் தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றைக் கோருகின்றனர்.
பாக்ஸ்கான் நிர்வாகமோ தமிழக மாநில அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டுமான பெருமளவு கைது நடவடிக்கைகள் உட்பட்ட போலிஸ் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மாநில அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நடத்தப்படுகிறது, இக்கட்சி மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திலும் இடம்பெற்றுள்ளது.
பாக்ஸ்கான் போன்ற முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்பை உத்தரவாதமளிப்பதற்கு அரசாங்கம், நீதித்துறை மற்றும் போலிஸ் மூன்றும் சேர்ந்து செயல்படுகின்றன.
அக்டோபர் 9 அன்று, தொடர்ந்த போலிஸ் தாக்குதல்களையும் மீறி, வேலைநிறுத்தத்தை தொடர்ந்து வரும் பல நூறு பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போலிசால் கைது செய்யப்பட்டனர். முன்னணியில் இருந்தவர்களாய் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 319 தொழிலாளர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பின் வேலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். சிபிஎம் கட்சியைச் சேர்ந்த இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) நிர்வாகிகள் இருவரும் இவர்களில் இடம்பெற்றிருந்தனர்.
எஞ்சிய சில நூறு தொழிலாளர்கள் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சுமார் 200 பெண் தொழிலாளர்கள் அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மறுத்த அத்தொழிலாளர்கள் தங்களைக் கைது செய்யக் கோரினர். அவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டு அவர்கள் போலிஸ் வாகனத்தில் இருந்து கீழிறக்கி விடப்பட்டனர்.
நான்கு நாட்கள் சிறைச்சாலையில் இருந்த பிறகு, அக்டோபர் 13 அன்று 307 தொழிலாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 10 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு தொழிற்சங்க தலைவர்களின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 22 அன்று நிபந்தனை பிணையில் அந்த 10 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு சிஐடியு நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினந்தோறும் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டும்.
கைது செய்யப்பட்ட அனைவருமே ’நிறுவனச் சொத்துகளுக்கு சேதாரம் விளைவித்தது, போலிஸ் உத்தரவுகளை மீறியது மற்றும் போலிசாரை தங்களது கடமையாற்ற விடாமல் தடுத்தது’ ஆகிய இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். இந்த ஒட்டுமொத்த வேட்டையாடலின் நோக்கம், இப்போது இரண்டாவது மாதத்தை எட்டியிருக்கும் வேலைநிறுத்தத்தை உடைப்பது என்பது தான். அதே சமயத்தில், மோசமாக நடத்துவது, அவமதிப்பு செய்வது மற்றும் மிரட்டுவது ஆகியவற்றின் மூலம் இதுபோன்ற வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வருங்காலத்தில் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் விரும்புகிறது.
அக்டோபர் 10 அன்று, அதாவது ஏராளமானோர் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த தினம், 3,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே ‘தர்ணா’ போராட்டமும் அவர்கள் நடத்தி வருகின்றனர். பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு உள்ளோ அதனைச் சுற்றியோ எந்த ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதில் இருந்து போலிஸ் தொழிலாளர்களை தடுக்கிறது.
பாக்ஸ்கான் தொழிலாளர்கள் மாதத்திற்கு 4,800 ரூபாய் (106 அமெரிக்க டாலர்) ஊதியம் பெறுகின்றனர். அடிப்படை சம்பளமாக 10,000 ரூபாய் (221 அமெரிக்க டாலர்) மற்றும் கூடுதல் கொடுப்பனவுகள் ஆகியவற்றுடன் மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டை இத்தொழிலாளர்கள் கோருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொலைதூரக் கிராமங்களில் இருக்கும் சில தொழிலாளர்களை பாக்ஸ்கான் நிர்வாகம் தொடர்பு கொண்டு அவர்களை வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தம் செய்துள்ளது. ஆயினும், அவர்களில் அநேகமானோர் அந்த உத்தரவை ஏற்கவில்லை. இப்போது தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் மூலம் கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பாதியும், நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பணிந்த தொழிலாளர்கள் கொஞ்சமும் கொண்டு தொழிற்சாலை இயங்குகிறது. ஆயினும், ஒரு சில நூறு தொழிலாளர்கள் மட்டுமே இப்போது தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 6,000 ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களில் பரந்த பெரும்பான்மையினரும் வேலைநிறுத்தத்தில் இணைந்திருக்கிறார்கள். பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காக தீர்மானத்துடனும் போர்க்குணத்துடனும் போராடும் நிலையில், ஸ்ராலினிய தொழிற்சங்கத்தின் பாத்திரமோ பல்வேறு பிற்போக்கான முதலாளித்துவக் கட்சிகளுடனான தங்களது சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதாய் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் அரசியல்ரீதியான அணிதிரட்டலைத் தடுக்க சங்கங்கள் வேலை செய்கின்றன. “அரசாங்கத்தின் அடக்குமுறை மனப்பான்மையை”யும் “திமுக அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும்” கண்டனம் செய்யவும் கைது செய்யப்பட்டிருக்கும் தலைவர்கள் மற்றும் பாக்ஸ்கான் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய”க் கோரியும் CITU மற்றும் CP மாநில அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் அக்டோபர் 21 அன்று நடத்தப்பட்டன, மாநிலத்தின் மற்ற எதிர்க் கட்சிகளுடன் (இந்த கட்சிகளும் திமுக போன்றே தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளவையே) சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
மேற்கு வங்கம், கேரளா, மற்றும் திரிபுராவில் சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலமாக ஸ்ராலினிஸ்டுகள் பெரு வணிக நலன்களுக்கான தங்களது சொந்த உறுதிப்பாட்டைக் காட்டியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கடும் எதிரியான அதிமுக (நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகிய மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பிற்போக்குக் கட்சிகளுக்கு இடையே ஸ்ராலினிய சிபிஎம் கட்சி மாறி மாறி கூட்டணி அமைத்து வந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் தொழிலாளர் வர்க்க விரோத சாதனைகளை அறிந்திருந்தும் ”மக்கள் பிரச்சினைகளில்” “இணைந்து போராட” சிபிஎம் ஜெயலலிதாவை அணுகியிருக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில், 2003 ஆம் ஆண்டில், ஊதிய உயர்வு மற்றும் நல உதவிகள் கோரி வேலைநிறுத்தம் செய்த நூறாயிரக்கணக்கான மாநில ஊழியர்களை அவர் வேலைநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ல் வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அஇஅதிமுக உடன் தேர்தல் கூட்டணிக்கு சிபிஎம் முனைந்து கொண்டிருக்கிறது.
“நிறுவனம் மற்றும் அதில் வேலை பார்க்கும் 7,400 தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு” பாக்ஸ்கான் விவகாரத்தில் “உரியவகையில் தலையிட்டு நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அக்டோபர் 19 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் தபான் சென் கடிதம் அனுப்பினார். அதாவது, எந்த அரசாங்கம் பாக்ஸ்கான் தொழிலாளர்களின் மீது குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டியிருக்கிறதோ அந்த அரசாங்கத்தின் முதலமைச்சரிடம் நிறுவனத்தின் நலன் கருதி தலையிடுமாறு தொழிற்சங்கத் தலைவர் விண்ணப்பம் செய்கிறார்.
தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத்தையும் அவற்றில் சேர்வதற்கான தொழிலாளர்களின் உரிமைகளையும் கட்டாயமாக்குகிற சட்டத்தை வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மனாபன் தன் பங்கிற்கு திமுக அரசாங்கத்திடம் ஒரு விண்ணப்பம் செய்திருக்கிறார். உண்மையில், திமுக ஆதரவு சங்கம் உள்ளிட்ட போட்டித் தொழிற்சங்கங்களுடன் அதன் மோதல்கள் குறித்தது தான் சிஐடியுவின் பிரதானக் கவலையே இருக்கிறது.
ஆளும் வர்க்கத்தின் கட்சிகளை, மாநில அளவில் திமுக போன்ற கட்சிகளானாலும் சரி அல்லது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போன்றவையானாலும் சரி, அவற்றிற்கு நெருக்குதல் அளித்து தொழிலாளர் வர்க்கத்திற்கு சில சலுகைகளைப் பெற முடியும் என்கிற ஆபத்தான பிரமையை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கங்கள் வேலைசெய்கின்றன. இதன்மூலம் அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான அரசியல் போராட்டத்தையும் அடக்குவதற்கு அவை வேலை செய்கின்றன.
இந்தியாவின் தற்போதைய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலை பிரான்சு, சீனா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தொழிலாளர் வர்க்க போராட்டங்கள் பெற்றுள்ள எழுச்சியுடன் ஒரேசமயத்தில் நிகழ்கிறது. வர்க்க போராட்டத்தின் மறுஎழுச்சி ஒரு சர்வதேசத் தன்மையைப் பெற்றிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் இடையில் சமரசமற்ற மோதல் நிலவுவதைக் காண்கின்றனர். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையின் மீது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் செலுத்தும் சர்வாதிகாரத்தை மறைக்கும் இலையாக இருப்பதற்கும் சற்று கூடுதலான ஒன்றாகத் தான் இருக்கிறது என்பதை வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி அம்பலப்படுத்துகிறது. வேலைகள், கண்ணியமான வாழ்க்கைத் தரங்கள், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அனைத்து பிற சமூக உரிமைகளுக்கான போராட்டமும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாகும். இது அரசை இடது நோக்கி நகர்த்துகிற, அதனைச் சீர்திருத்துகிற, அல்லது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை இன்னொரு முதலாளித்துவ அரசைக் கொண்டு இடம்பெயர்க்கிற பிரச்சினை அல்ல, மாறாக அதனை வெகுஜனங்களை புரட்சிகரரீதியாக அணிதிரட்டுவதன் மூலமாக உற்பத்தி சாதனங்களை சமூக உடைமையாக்க பொறுப்பு கொண்ட ஒரு அரசாங்கத்தைக் கொண்டு இடம் பெயர்க்கும் பிரச்சினையாகும்.
|