World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Afghan peace talks and the “war on terror”

ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தையும் “பயங்கரவாதத்தின் மீதான போரும்”

Keith Jones
25 October 2010

Back to screen version

மூத்த தலிபான் தலைவர்களுக்கும் ஹமித் கர்சாயின் ஆப்கன் அரசாங்கத்திற்கும் (ஒன்பது-ஆண்டு-காலமாக கிளர்ச்சிக்கு எதிரான போரின் மூலம் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் காப்பாற்றி வருகிற ஆட்சி) பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து வருவதாக இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் கூறினர். காபூலுக்கு வரும் தலிபான் தலைவர்கள் பாதுகாப்புடன் நடத்தப்படுவதற்கும், குறைந்தபட்சம் ஒரு கிளர்ச்சித் தலைவருக்கேனும் வான்வழிப் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்து தருவதற்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உறுதியளித்திருப்பதாக, ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு எந்திரத்திடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

வெகுவிரைவிலேயே, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து அந்நியப் படைகளுக்கான அமெரிக்க தளபதியான ஜெனரல் டேவிட் பெட்ரேஸ், மற்றும் நேட்டோ செயலாளரான ஜெனரல் ஆண்ட்ரெஸ் போக் ரஸ்முசென் ஆகியோர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் தலைவர்கள் இணைவதில் தங்களின் பாத்திரம் குறித்து பகிரங்கமாய் பேசினர். வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டதன்படி, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தலிபான் நிர்வாகிகளின் பெயர்களை டைம்ஸ் வெளியிடவில்லை. ஆயினும் குறைந்தது குவெட்டா சுராவின் (Quetta Shura ) மூன்று தலைவர்களும் பெஷாவர் சுராவின் (Peshawar Shura) ஒரு தலைவரும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கலில் இருக்கும் கர்சாய் ஆட்சி, தலிபான் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு குழுக்களின் பிரிவுகளோடு சவுதி அரேபியாவை மத்தியஸ்தராய் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த 2008 முதலே முயற்சித்து வருகிறது. இப்போது அமெரிக்காவே இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைக் குறிக்கிறது, அத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ தலையீடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான இன்னுமொரு அடையாளமாகும் இது.

ஒபாமா நிர்வாகம் ஆப்கான் போரை தடாலடியாய் விரிவுபடுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை 100,000க்கும் அதிகமான எண்ணிக்கைக்கு அதாவது மும்மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கைக்கு உயர்த்தி, அங்கிருக்கும் வெளிநாட்டு துருப்புகளின் மொத்த எண்ணிக்கையை 150,000க்கும் அதிகமான எண்ணிக்கைக்கு கொண்டுவந்திருக்கிறது. அத்துடன் பாகிஸ்தான் தனது பஷ்தூன் பேசும் எல்லைப் பகுதிகளில் பெரும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமெரிக்கா நிர்ப்பந்தித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க நேட்டோ படைகள் கிளர்ச்சியை நிறுத்துவதற்கே முடியவில்லை எனும்போது தோற்கடிப்பதைக் குறித்து கூறத் தேவையில்லை. அடக்குமுறை செய்யும் கர்சாயின் ஊழல் அரசாங்கம் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகர மையங்களைப் பராமரிக்க பாரிய அமெரிக்க-நேட்டோ ஆயுதசக்தியை சார்ந்திருக்கும் ஒரு காலனித்துவ கைப்பாவை ஆட்சியாகவே ஆப்கான் மக்களால் தூற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நேட்டோ நாடுகளில் வெகுஜனக் கருத்து என்பது கூர்மையாக போருக்கு எதிராக திரும்பியிருக்கிறது, அத்துடன் நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் தங்களது துருப்புகளை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கின்றன அல்லது திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.

ஆப்கான் சமூகத்தில் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் சேதாரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்குத் தான் அமெரிக்க ஆளும் உயர்தட்டும் அதன் இராணுவமும் தீர்மானத்துடன் உள்ளன. ஆனால், அமெரிக்காவின் பூகோள-அரசியல் மற்றும் இராணுவ சக்தியின் பெருமளவை ஆப்கானிஸ்தானில் நடத்தும் போருக்கு உறுதியளிப்பது, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட பிற சவால்களுக்கு முகம் கொடுக்கையில் அமெரிக்காவை பலவீனப்படுத்துவதாய் அமெரிக்காவில் ஒரு கவலை பெருகி வருகிறது. இதற்காகத் தான், தலிபானின் ஒரு பிரிவினருடன் பேசி, அவர்கள் கிளர்ச்சியைக் கைவிடுவதாக இருந்தால் அவர்களுக்கு மறுஅமைவு செய்யப்பட்ட ஆனாலும் அமெரிக்க ஆதிக்கத்துடனேயான ஒரு ஆட்சியில் ஒரு பாத்திரத்தை அளிக்கிற வகையில் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிகிறதா என்று காண்பதில் ஏற்பட்டிருக்கிறது இந்த ஆர்வம்.

முதலில், இந்த புதிய உத்தி போருக்கு ஒட்டுமொத்தமாய் வெளியில் கூறப்படும் காரணத்திற்கு நிச்சயமாக குழிபறிக்கிறது. “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” மிக முக்கியமானது என்று கூறித் தான் ஆப்கானிஸ்தான் போர்தொடுப்பையும் ஆக்கிரமிப்பையும் ஒட்டுமொத்த அமெரிக்க ஸ்தாபனமும் ஊக்குவித்திருக்கின்றன, நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. தலிபான்களை நசுக்கியெறிவதன் மூலம் தான் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட முடியும், அல்லது அப்படித் தான் அந்த கதை செல்கிறது. ஆனால் இப்போது, மத்திய ஆசியாவில் அமெரிக்க நலன்களுக்கு மேலான சேவையளிக்கும் வகையில், தலிபான்களின் பிரிவுகள் திடீரென மேலே கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இதுகாறும் நில்லாமல் நிறுத்தாமல் இஸ்லாமிய வெறியர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூறி வந்திருப்போருடன் அமெரிக்காவும் அதன் ஆப்கான் வாடிக்கையாளர்களும் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியம் எதனையும் தான் நிராகரிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் ABC தொலைக்காட்சியின் “குட் மார்னிங் அமெரிக்கா” நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

”உங்கள் நண்பர்களுடன் நீங்கள் போர் நிறுத்தம் செய்வதில்லையா” என்றார் ஹிலாரி. “2001ல் பின் லேடனை ஒப்படைக்க மறுத்த தலிபான் தலைமை” அமெரிக்காவுடன் ஒருபோதும் சமரசத்திற்கு வர வாய்ப்பிருப்பதாய் தான் கருதவில்லை என்ற போதிலும், “போரின் வரலாற்றில் விந்தையான பல நடந்திருக்கின்றன” என்று அவர் மேலும் கூறிக்கொண்டார். உண்மை என்னவென்றால், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது ஈராக்கின் மீது சாட்டப்பட்ட “பேரழிவு ஆயுதங்கள்” குற்றச்சாட்டைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டையாடும் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஒரு சாக்கு, பிரச்சார சூது. இதுவரை முழுமையான விளக்கத்திற்கு வராத செப்டம்பர் 11, 2001 தாக்குதல் சம்பவங்களை அமெரிக்காவின் பூகோள-அரசியல்-இராணுவ மூலோபாயத்தில் வெகுகாலமாகத் திட்டமிடப்பட்டு வந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் கெட்டியாகப் பற்றிக் கொண்டது. உலகின் பிரதான எண்ணெய் ஏற்றுமதிப் பிராந்தியங்களின் மீது ஒரு கிடுக்கிப் பிடியை சாதித்து, அதன்மூலம் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையிலான வரலாற்று வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர் நடத்தப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின் மூலம், மத்திய கிழக்குக்கு அடுத்த படியாக பெருமளவு ஏற்றுமதி எண்ணெய் கையிருப்பைக் கொண்டிருக்கும் மத்திய ஆசியாவில் ஒரு மூலோபாய முகப்புத் தளத்தைப் பராமரிப்பதே அமெரிக்காவின் நோக்கம். மேலும், ஆப்கானிஸ்தானானது சீனா மற்றும் ஈரானுடன் எல்லை நாடாக உள்ளது, ரஷ்யாவுக்கு நெருக்கமான நாடாக அமைந்திருக்கிறது, இந்த மூன்று நாடுகளின் நோக்கங்களுமே நெடுங்காலமாய் அமெரிக்காவினால் சந்தேகத்துடனும் குரோதத்துடனுமே பார்க்கப்பட்டு வந்துள்ளன. தலிபான்கள் மற்றும் தலிபான்களுக்கு நெருக்கமான ஹெக்மத்யார்கள் தலைமையிலானவை போன்ற போராளிக் குழுக்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதில், அமெரிக்கா பழைய பரிச்சயங்களைப் புதுப்பிக்கிறது. தலிபான் தலைவர்களாயினும் சரி, இன்னும் பார்த்தால், ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட அல்கெய்தா தலைவர்களானாலும் சரி அமெரிக்க கூட்டாளிகளாகவும் 1980களில் இஸ்லாமிய அடிப்படைவாத முஜாகிதீன்கள் நடத்திய “சோவியத்-விரோத”ப் போரில் சிஐஏ இன் “சொத்துகளாகவும்” இருந்தவர்கள் தான்.

இந்த போரானது, அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராய் இருந்த ஸ்பிக்னியு பிரெசெசின்ஸ்கி தம்பட்டமடித்துக் கொண்டதைப் போல, 1970களின் பிற்பகுதியில் அமெரிக்காவால் உரம் போடப்பட்டதாகும். சோவியத்தை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தூண்ட, ஒரு வியட்நாம்-வகை கெரில்லா யுத்தத்திற்குள் அதனைச் சிக்கவைக்க, இந்த மத்திய ஆசிய நாட்டை பனிப் போர் கொலைக் களமாக மாற்ற, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத்-ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு தூபமிட்டது. சோவியத் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவானது மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிக்குக் முட்டுக்கட்டைகளாய் தனது முன்னாள் முஜாகிதீன் கூட்டாளிகள் சிலரைக் கண்டது, அதன்பின் அது ஆப்கானிஸ்தானில் தனது காலனியாதிக்கத் திட்டத்தைத் தொடக்கியது.

ஆப்கான் போரை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சொல்லும் இரண்டாவது சாக்கும், அதாவது அவை ஜனநாயகத்திற்காகப் போராடுகின்றன என்பதும், ஒரு இற்றுப் போன ஒன்றாகும். கர்சாய் அரசாங்கம் ஊழலடைந்த கட்டப்பஞ்சாயத்து தலைவர்களின் ஆட்சியாக உள்ளது, இவர்களில் பலரும் தீவிரமான இஸ்லாமிய அடிப்படைவாதிகள். சென்ற ஆண்டின் ஆப்கன் ஜனாதிபதி தேர்தலில் போல, இந்த செப்டம்பரின் நாடாளுமன்றத் தேர்தல்களும் பெரிய அளவிலான வாக்குச் சாவடி மோசடிகளையும் மற்ற ஜனநாயக-விரோத நடைமுறைகளையும் (கர்சாய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இடைஞ்சலாய் கருதப்படும் வேட்பாளர்களை தன்னிச்சையாய் நீக்குவது உட்பட) கண்ணுற்றது.

தலிபான் தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமைதிப் பேச்ச்சுவார்த்தைகளை நடத்துகிறது என்கிற உண்மையானது அமெரிக்க தந்திரோபாயத்திலான ஒரு நகர்வைக் குறிப்பிடுகிறது. ஆயினும் அமெரிக்காவின் மிருகத்தனமான நோக்கங்கள் குறித்து யாருக்கும் எந்த பிரமையும் அவசியமில்லை. ”படையெழுச்சி”க்கு (அமெரிக்க தலைமையிலான படைகளால் இப்போது செலுத்தப்படும் வன்முறையிலான பாரிய அதிகரிப்பு) துணைசெய்யும் ஒன்றாக இந்த பேச்சுவார்த்தைகள் பார்க்கப்படுகின்றன. ஜூலை மாதத்தில் ஜெனரல் பெட்ரேஸ் ஆப்கான் நடவடிக்கைகளுக்கான தலைமையை எடுத்துக் கொண்ட பின், வான்வழித் தாக்குதல்களின் எண்ணிக்கை மும்மடங்கிற்கும் அதிகமாகி செப்டம்பரில் 700ஐத் தொட்டிருக்கிறது. அத்துடன் சிறப்புப் படைகளின் கொலைப் படைகள் ஒரு நாளைக்கு 10 தாக்குதல்களை நடத்துவதாகத் தெரிகிறது.

இதேபோன்றதொரு மூலோபாயத்தையே பெட்ரேஸ் ஈராக்கிலும் செயல்படுத்தியிருந்தார், அதாவது அமெரிக்க இராணுவம் கிளர்ச்சிக் குழுக்களிடையே அதிகப்பட்ச மரணத்தையும் சேதத்தையும் ஏற்படுத்துவதற்கு நோக்கம் கொண்டு செயல்பட அதே சமயத்தில் ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் இடையே அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பவர்களுக்கு அரசியல் மற்றும் நிதிரீதியாக சலுகைகளை வழங்குவதன் மூலம் அந்த எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்கு முனைவது. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே மாதத்தில் தொடங்கிய சமயத்தில் இருந்தே ஆப்கான் போர் ஒரு குற்றவியல் வியாபாரமாகவே இருந்துவந்துள்ளது. ஒபாமா நிர்வாகம் பாரிய அளவில் போரை விரிவுபடுத்தியிருக்கிறது என்பது இராணுவவாதம், தாயகத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், நிதி உயரடுக்கின் சொத்தை பாதுகாப்பதற்கு அரசைக் கொள்ளையடிப்பது, மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல் ஆகிய அமெரிக்க ஆளும் உயர்தட்டின் பிற்போக்கான உந்துதலை ஆழப்படுத்துவது என்னும் அதன் அடிப்படைப் பாத்திரத்திற்கு சாட்சியாக உள்ளது.