WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka: SEP meeting in Jaffna on anniversary of Trotsky’s assassination
இலங்கை: சோ.ச.க. யாழ்ப்பாணத்தில் ட்ரொட்ஸ்கி படுகொலையின் நினைவுக் கூட்டத்தை நடத்தியது
By our reporters
2 October 2010
Back to
screen version
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பும், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 70வது ஆண்டு நிறைவைக் நினைவு கூர்வதற்காக செப்டெம்பர் 26 அன்று யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றை நடத்தியது. இக் கூட்டத்தில் பெருமளவானோர் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், குடும்ப பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 90 பேர் பங்குபற்றினர். சிலர் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறையிலிருந்தும் நீண்ட நேரம் பிரயாணம் செய்து கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
சோ.ச.க. யாழ்குடாநாட்டின் பல இடங்களிலிலும் தீவுப் பகுதியிலும், யாழ் நகரம் உட்பட சுண்ணாகம், நெல்லியடி, காரைநகர், ஊர்காவற்துறை போன்ற தீவுப் பகுதிகளிலும், அதே போல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் கூட்டத்திற்காக பிரச்சாரம் செய்தது. மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், கால் நூற்றாண்டு காலமாக உள்நாட்டு யுத்தத்திற்கு உட்பட்டிருந்த வடமாகாணம் முழுவதும் தொடர்ந்தும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உள்ளது.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோ.ச.க. அங்கத்தவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் தொந்தரவுக்கு ஆளானார்கள். குழுவினர் பல தடைவைகள் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல தள்ளப்பட்டதுடன் பல மணிநேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய தனிப்பட்ட விபரங்கள், பெயர்கள் உட்பட, முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலைமைகள், தீவின் வடக்கு- கிழக்கு மாகாண மக்களை "விடுவித்துக்" கொண்டதாக அரசாங்கம் கூறும் பொய்யை அம்பலப்படுத்துகின்றன.
சோ.ச.க. யின் நீண்டகால உறுப்பினர் பி. சம்பந்தன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் அண்மையில் உயிரிழந்த சோ.ச.க யின் அங்கத்தவரும், முன்னணி மார்க்சிச இலக்கிய திறனாய்வாளராக நன்கு பிரசித்தி பெற்ற தோழி பியசீலியி விஜேகுணசிங்கவின் நினைவாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலிக்காக அழைப்பு விடுத்தார்.
சம்பந்தன் தனது அறிமுக உரையில், "ட்ரொட்ஸ்கி உலக சோசலிச புரட்சி மூலோபாயத்திற்காக போராடினார். இன்று ஆழமடைந்துவரும் உலகப் பொருளளாதார நெருக்கடியின் மத்தியில், அனைத்துலக தொழிலாள வர்க்கத்திற்கு வழிகாட்டியாக இருப்பது இந்த மூலோபாயம் மாத்திரமே என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 1914ல் முதலாம் உலக யுத்தம் வெடித்தபோது, சகல தேசியவாத வேலைத் திட்டங்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டது," எனக் கூறினார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியன நீண்டகாலத்திற்கு முன்பே தமது ஏகாபத்தியத்திய-விரோத பாசாங்கை கைவிட்டுவிட்டன என சம்பத்தன் விளக்கினார். புலிகளின் தோல்வி அது போராடிய இனவாத வேலைத்திட்டத்தின் விளைவாகும், என அவர் தெரிவித்தார்.
"கொழும்பு அரசாங்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக சிங்களம் பேசும் தொழிலாளர்களது அல்லது உலகத் தொழிலாளர்களது அதரவுக்கு புலிகள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவையே பெற முயற்சித்தனர். ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், தமது முதலாளித்துவ நலன்களின் காரணமாக, பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது. தொழிலாள வர்க்கத்தால் மாத்திரமே, விவசாயிகளுக்கும் தலைமை தாங்குவதன் மூலம், சோசலிசப் புரட்சியின் ஒருபாகமாக ஜனநாயக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும்"
"லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் நினைவாண்டில், நிரந்தரப் புரட்சி கோட்பாடும் தெற்காசிய சமூக நெருக்கடியும்" என்ற தலைப்பில் பிரதான பிரதான விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் நிகழ்த்தினார்.
"சோசலிச சமத்துவக் கட்சியாகிய நாம், லியோன் ட்ரொட்ஸ்கியினால் விபரிக்கப்பட்ட உலக சோசலிச முன்னோக்கை அடிப்படையக கொண்டுள்ளோம். அவர், உலக சோசலிசப் புரட்சிக்காக தேசிய மற்றும் இன பேதங்களை கடந்து உலகத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த 1938ல் நான்காம் அகிலத்தை அமைத்தார்", என கூறி டயஸ் உரையை ஆரம்பித்தார்.
70 வருடங்களுக்கு முன்பு ஸ்ராலினின் கொலையாளியினால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். அது அந்நூற்றாண்டின் அரசியல் குற்றமாகும். லெனினுடன் ரஷ்யப் புரட்சிக்கு கூட்டுத்தலைமை தாங்கிய ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினாலும் அவரது கையாட்களினாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்தை தொடர்வதற்காக நான்காம் அகிலத்தை அமைத்தார்.
குறிப்பாக இன்று ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ட்ரொட்ஸ்கியும் அவர் போராடிய வேலைத்திட்டமும் பொருத்தமானதாகும். இதனால்தான் பலதரப்பட்ட கல்விமான்கள், புதிய பரம்பரையான இளம் வயதினர் மத்தியில் ட்ரொட்ஸ்கியை இழிவுபடுத்தியும், அவதூறாகவும் அண்மையில் எழுதினார்கள், என்று அவர் விளக்கினார். "ட்ரொட்ஸ்கி முக்கியத்துவம் அற்றவராய் இருப்பராயின் அவர்கள் ஏன் அவரைப்பற்றி புத்தகங்கள், கட்டுரைகள் எழுதுவதற்கு அவ்வளவு தூரம் சிரமப்படுகின்றார்கள்?" என டயஸ் கேள்வி எழுப்பினார். இந்த பொய் புனைதல்களையும், சேறு பூசுல்களையும் மறுத்து பதிலளித்த, தோழர் டேவிட் நோர்த்தின் "ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க" என்ற நூலை வாசிக்குமாறு கூட்டத்தில் உள்ளோரை அவர் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நிலமையை விளக்குகையில் டயஸ் பின்வருமாறு கூறினார்: "2008 செப்டெம்பரில் இருந்து முழு முதலாளித்துவ அமைப்பும் அதிகரிக்கின்ற ஆழமான பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்காவிலும், சர்வதேச ரீதியிலும் நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்கள் உட்பட ராட்சத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பொறிந்துபோயின. அரசாங்கங்கள் பூகோள நிதி அமைப்புக்கு முண்டுகொடுப்பதற்காக ட்ரில்லியன் கணக்கான டொலர்களை பிணை எடுப்பதற்காக வழங்கின. இப்போது இத்தகைய பிணையெடுப்புக்களுக்கு விலைகொடுக்க தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றன. அதே சமயம், மில்லியன் கணக்காண தொழிலாள வர்க்கத்தினரும் ஏழைகளும் இத்த நடவடிக்கைகளை எதிர்த்து போராட உலகம் பூராவும் வீதியில் இறங்குகின்றார்கள்.
இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற கட்சிகளோ அல்லது தொழிற் சங்கங்களோ இதற்கு எந்தவித தீர்வையும் வைத்திருக்கவில்லை என பேச்சாளர் கூறினார். "தொழிற் சங்கங்கள் முதலாளி வர்க்கத்தின் கருவிகளாக மாறியுள்ளன. அமெரிக்காவில் இந்தியானபொலிஸ்சில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற் சாலையில் செயற்படும் ஐக்கிய மோட்டார் தொழிலாளர் சங்கம், உரிமையாளருடன் இணைந்து தொழிலாளர்களின் சம்பளத்தை மணித்தியாலத்திற்கு 29 டொலரிலிருந்து 14 டொலராக வெட்டுவதற்கு சமரசம் செய்துள்ளது. தொழிலாளளர்கள் தொழிற்சங்கத்தை நேரடியாக எதிர்த்துள்ளதுடன், போராட்டமொன்றை தொடங்கினார்கள். அந்தப் போராட்டம் தொடர்ந்தும் உலக ரீதியாக தொழிலாளர்களின் ஆதரவை பெறுகின்றது. பூகோள மூலதனத்திற்கு எதிராக போராடுவதற்கு எமக்கு உலக சோசலிச மூலோபாயம் ஒன்று அவசியமாகும்."
சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது, ஜனநாயக உரிமைகளுடன் பொருந்தாது என டயஸ் தெளிவுபடுத்தினார். இதனால்தான் உலகரீதியாக ஒவ்வொரு அரசாங்கமும் பொலிஸ் அரச முறைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன. எதேச்சதிகார ஆட்சியை நோக்கிய இத்தகைய மாற்றங்களுக்கு இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த வெளிப்பாடாகும்.
1905ல் முதலில் விபரிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு பற்றி டயஸ் தெளிவுபடுத்தினார். முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம், ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவு செய்வதற்கு இயல்பிலேயே இலாயக்கற்றது. அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாள வர்க்கம் விவசாயிகளுக்கு தலைமை தாங்கி ஆட்சியை கைப்பற்றுவதன் மூலமே ஜனநாயக பணிகளை நிறைவு செய்ய முடியும். 1917 ரஷயப் புரட்சியின் வெற்றிக்கு நிரந்தரப் புரட்சி கோட்பாடே வழிவகுத்தது.
1939 ஆண்டில் ட்ரொட்ஸ்கி, நிரந்தரப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு இந்திய தொழிலாளர்களுக்கு எழுதிய பகிரங்க கடிதத்திலிருந்து டயஸ் மேற்கோள் காட்டினார். தொழிலாளர்கள் மகாத்மா காந்தியிலும் இந்திய முதலாளித்துவத்திலும் தங்கியிருக்காமல், தனது சொந்த புரட்சிகர சக்தியிலும் விவசாயிகளுக்கு தலைமை தாங்கும் ஆற்றலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என அந்த பகிரங்க கடிதத்தில் தெளிவு படுத்தப்பட்டிருந்தது.
ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கினால் கவரப்பட்ட இந்திய மற்றும் இலங்கை இளம் புத்தீஜீவிக் குழுவினரால், 1942ல் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக, இந்திய போல்ஸ்விக் லெனிஸ்ட் கட்சியை (பி.எல்.பீ.ஐ.) அமைத்ததில் இருந்து இந்திய உபகண்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தைப் பற்றி டயஸ் சுருக்கமாக தெளிவுபடுத்தினார்.
இலங்கையில் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடினார்கள். அவர்கள் 1948ல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்ற வெட்கக்கேடான சுதந்திரத்தை நிராகரித்ததுடன், தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறித்த பிரஜா உரிமை சட்டத்தையும் எதிர்த்தனர். 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை அகற்றிய சட்டத்தை சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கட்சிகள் நிறைவேற்றின.
பி.எல்.பீ.ஜ. 1950ல் லங்கா சமசமாஜக் கட்சியுடன் கரைக்கப்பட்டது. லங்கா சமசமாசக் கட்சியின் சீரழிவின் அரசியல் பாடங்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு மாத்திரமின்றி, ஆசியத்தொழிலாள வர்க்கத்திற்கும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கும் மிகவும் முக்கயத்துவம் வாய்ந்ததாகும். 1964ல் சமசமாஜக் கட்சி தலைவர்கள் சிறீமா பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்துடன் இணைந்து ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காட்டிக் கொடுத்ததாலேயே, இலங்கை முதலாளித்துவத்தின் இனவாத அரசியல் மேலோங்குவதற்கு வழிகிடைத்ததுடன், இறுதியாக 1983ல் அது உள்நாட்டு யுத்தமாகவும் வெடித்தது.
"நாம் இன்று உலகப் புரட்சி சகாப்தத்திற்குள் நுழைகின்றோம்", என டயஸ் கூறினார். ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் வர்க்கப் போராட்டங்கள் அபிவிருத்தியடைவதை அவர் சுட்டிக் காட்டினார். விரைவாக வளர்ச்சியடைந்து வரும் சீனா மற்றும் இந்தியாவில், லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்திற்குள் தள்ளப்படுகின்றனர். "இவை இலங்கையில் நெருங்கிக்கொண்டிருக்கும் வெகுஜனப் போராட்டங்களின் அறிகுறிகளாகும்," என அவர் மேலும் கூறினார்.
"இராஜபக்சவின் ஒடுக்குமுறை ஆட்சி பற்றி நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமானது சோசலிசத்திற்காக போராடப் போகும் ஒரு கட்சியை அவசியமாக்கியுள்ளது", என டயஸ் கூறினார். உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக சிறீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான சுலோகத்தை சோ.ச.க அபிவிருத்தி செய்கின்றது. சோ.ச.க. யுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு சபையில் இருந்தவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
விரிவுரையை தொடர்ந்து, நேரடியாக கேள்வி, பதில் நிகழ்வு நடைபெற்றது. ஏன் ஸ்ராலின் ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கு கட்டளையிட்டார் என கூட்டத்தில் இருத்த ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டயஸ், இரண்டாம் உலக யுத்தம் வெடித்தபோது, ஸ்ராலின் ட்ரொட்ஸ்கியை ஒரு அச்சுறுத்தலாக கருதினார். ட்ரொட்ஸ்கி உலக சோசலிசப் புரட்சியின் சின்னமாக விளங்கினார். முன்னேறிய நாடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் புரட்சி வெற்றி அடையுமாக இருந்தால், ஸ்ராலின் மொஸ்கோவில் தனது அதிகாரத்தவ இயந்திரத்தை பாதுகாக்க முடியாமல் போயிருக்கும். ஸ்ராலினின் எதிர்காலம் உலகப் சோசலிசப் புரட்சியின் தோல்வியுடன் பிணைந்திருந்தது. ட்ரொட்ஸ்கியின் எதிர்காலம் உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியுடன் கட்டுண்டிருந்தது.
கூட்டம் முடிவடைந்த பின்னரும் கலந்துரையாடல் தொடர்ந்தது. கூட்டத்தில் பங்குபற்றிய பல இளைஞர்கள் ட்ரொட்ஸ்கியை பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் மேலும் கேள்விகளைக் கேட்க டயஸை சூழ்ந்து கொண்டனர். ஏனயவர்கள் மார்சிச இலக்கியங்களை வாங்குவதற்காக இலக்கிய மேசையை சூழ்த்து கொண்டதோடு சோ.ச.க. அங்கத்தவர்களுடனும் பேசினார்கள்.
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய சாந்தன், "நான் படிக்கும் போது மாக்சிசம் பற்றியும் லெனின் சம்பந்தமாகவும் அறிந்திருந்தேன். ஆனால் இப்போதுதான் ட்ரொட்ஸ்கி பற்றி அறிந்து கொண்டேன். தேசியவாத வேலைத்திட்டத்தின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதையும் இக் கூட்டத்தின் மூலம் புரிந்து கொண்டேன்," என்றார். 1983-2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இராணுவம் மக்களைக் கொன்று குவித்த அதே சமயம், புலிகள் சாதாராண மக்களின் தலைவிதி பற்றி அக்கறை செலுத்தவில்லை, என அவர் கூறினார்.
ஒரு மின் இணைப்பாளர் கூறியதாவது: "இந்தக் கூட்டத்தில் ட்ரொஸ்கியை பற்றி முதன் முதல் அறிந்து கொண்டேன். புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது ஏன், ஏனைய தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருப்பது ஏன் என்பதை இக்கூட்டத்தின் மூலம் விளங்கிக் கொண்டேன். சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் நான் தெரிந்துகொண்டேன். நான் சோ.ச.க. யில் இணையத் தயாராக உள்ளேன்." |