WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
நாணயப் போர்களின் உலக விளைவுகள் குறித்து சீனப் பிரதமர் எச்சரிக்கை விடுக்கிறார்
By John Chan
22 October 2010
Use
this version to print | Send
feedback
இந்த மாதம் முன்னதாக பிரஸ்ஸல்ஸில் ஆற்றிய உரை ஒன்றில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஐரோப்பிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு சீன நாணயம் முக்கிய மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற ஒபாமா பிரச்சாரத்தில் சேர்க்க வேண்டாம் என்று முறையிட்டார். அத்தகைய நாணய மாற்றம் பல சீன ஏற்றுமதியாளர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடும் என்று சுட்டிக்காட்டிய அவர், “சீனா அதனுடைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது உலகிற்குப் பேரழிவைத் தரும்” என்று எச்சரித்தார்.
சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, சீனா மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து 9.6 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்தது. இது இரண்டாவது காலாண்டு வளரச்சியான 10.3 சதவிகிதத்தை விடச் சற்றே குறைவாகும். ஆனால் வென் கூறியுள்ள கருத்துக்கள் சீன முதலாளித்துவத்தின் அதிக வலுவற்ற தன்மையைக் காட்டுவதுடன் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள தீவிர சமூக அழுத்தங்களையும் சுட்டிக் காட்டுகின்றன.
பல ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 2 முதல் 3 வரையிலான இலாப சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளன. “சிலர் கோரியுள்ளபடி யுவான் 20 முதல் 40 சதவிகிதம் வரை மதிப்புக் கூட்டப்பட்டால், ஏராளமான சீன ஏற்றுமதி நிறுவனங்கள் திவாலாகிவிடும், தொழிலாளர்கள் வேலைகளை இழந்துவிடுவர், இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் கிராமப் புறத்திற்குச் செல்ல நேரிடும். இவை அனைத்தும் சமூகமானது உறுதியான தன்மையில் நீடிக்க இடரைக் கொடுத்துவிடும்” என்று வென் விளக்கினார்.
“சீனப் பொருளாதாரத்தின் அத்தகைய நெருக்கடியிலிருந்து உலகம் ஒருபோதும் நன்மை அடையாது.” என வென் தொடர்ந்து கூறினார். “2009ல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பங்களிப்புக் கொடுத்துள்ளது. பல நிறுவனங்களுக்கும் இது பெரிய சந்தையாக இருப்பதற்கான திறனையும் கொண்டுள்ளது. மீண்டும் எங்கள் தொழில்துறை மற்றும் வர்த்தகச் சமூகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்: அதாவது சீன யுவான் கூடுதல் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று சீனாவிற்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்.”
வென்னுடைய கருத்துக்கள் அச்சுறுத்தல் என்பதை விட எச்சரிக்கை எனலாம். சீன ஆட்சியானது பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைப்பாட்டை நன்கு அறியும். அதே போல் தான் அமர்ந்துள்ள இடத்தின் கீழ் சமூக நேர வெடிகுண்டு இருப்பதையும் நன்கு அறியும். சீனப் பொருளாதாரம் வலுவற்ற தன்மையின் வேர்களிலிருப்பது அது உலகத்தின் முக்கிய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக பெரும் உலக நிறுவனங்களுக்குக் கொண்டுள்ள பங்குதான்.
சீன ஏற்றுமதியாளர்கள் ஒரு குறுகிய இலாப எதிர்பார்ப்பில் தான் செயல்படுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய பொருட்களின் விலைகள் வெளிநாட்டு பெருநிறுவன வாடிக்கையாளர்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் தேவைகளைப் பிற குறைவூதிய நாடுகளான வியட்நாம் போன்றவற்றிற்கு எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அநேகமாக ஒவ்வொரு சீனத் தொழிலிலும் ஏற்கனவே பரந்த முறையில் கூடுதல் திறனுள்ளது. இதையொட்டி நிறுவனங்களிடையே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பெரும் போட்டி உள்ளது. இந்நிறுவனங்கள் அதிக பொருட்களின் விலைகள் மற்றும் பெருகும் ஊதியங்கள் ஆகியவற்றால் பிழிந்து எடுக்கப்படுகின்றன.
சீன நிறுவனங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மை சூரிய ஒளி மின்கலத் தொழிற்துறையில் நன்கு சித்தரிக்கப்படுகிறது. இது உலக மொத்த உற்பத்தியில் 37 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளதோடு 300,000 தொழிலாளர்கள் தொகுப்பையும் கொண்டதாகும். சூரிய ஒளி மின்கல ஏற்றுமதிகள் 2005-2009 காலப்பகுதியில் 10 மடங்கு அதிகமாக ஆண்டிற்கு $15 பில்லியன் என ஆயின. உலகின் 10 மிகப் பெரிய சூரிய ஒளி மின்கல நிறுவனங்களின் தாயகமாக சீனாவே உள்ளது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களின் பின்புலத்தில், சீன நிறுவனங்கள் இன்னும் குறை முடிவு உற்பத்தி பொருள் இணைப்புக்களைச் செய்யும் நிறுவனங்களாகவும், இறக்குமதி செய்யப்படும் கருவிகளையும், உதிரிப்பாகங்களையுமே இவைகள் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2009 இல் நிதிய நெருக்கடிக்கு இடையே 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்றமதிக் கட்டளைகள் இல்லாததால் உற்பத்தியை நிறுத்தி வைத்தன அல்லது மூடிவிட்டன. 70 நிறுவனங்கள் தான் வாடிக்கையான செயற்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஃபொக்ஸ்கான் நடத்தும் பெரும் அடிமை உழைப்பு ஆலைகள் மற்றொரு உதாரணம் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஆலைகளில் பெரும் புகழ்படைத்த ஆப்பிள், டெல் மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுக்காக மின்னணுப் பொருட்களை இணைப் பொருட்களாகச் செய்ய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் இராணுவ வகையிலான அடக்குமுறை பணிநிலைமைகளும் இந்த ஆண்டு பொக்ஸ்கானில் இளந் தொழிலாளர்கள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்ததால் உயர்த்திக் காட்டப்பட்டன.
பரந்த உற்பத்தி அளவு இருந்தபோதிலும்கூட, பொக்ஸ்கான் மற்றும் ஏனைய மின்னணு உற்பத்திச் சேவைத்துறை (EMS) நிறுவனங்கள் மிகக் குறைந்த இலாப விகிதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி ஒரு பொருளின் மதிப்பு அமெரிக்க டொலர் 10 என்று இருந்தால், EMS உற்பத்தியாளர் நிகர இலாபமாக ஒரு சில சென்டுக்களைத்தான் பெறுவார்கள். பெரும்பாலான இலாபப் பாய்ச்சல்களானது வடிவமைப்பு நிகழ்முறை பரிசோதனை, உதிரிப்பாகங்களை பெறுதல், போக்குவரத்து, உலக சந்தைப்படுத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தான் செல்லுகின்றன.
பொக்ஸ்கானின் 2010 முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் 3.3 சதவிகிதம் என்று இருந்தது. இந்த ஆண்டு யுவான் மறுமதிப்பீடூ 2-3 சதவிகிதமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது நிறுவனத்தின் ஆண்டு இலாபத்தை அழித்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. EMS நிறுவனங்களிடையே சராசரி இலாப விகிதம் 2006ல் 6.2 சதவிகிதத்திலிருந்து 2007ல் 3 சதவிகிதம் என்று குறைந்து, தற்பொழுது அதில் தான் நீடிக்கிறது.
குறைந்த இலாபங்களும், கெடுபிடி நிலை ஏற்றுமதி நிலையும் சீனாவின் உற்பத்தி முறையில் இருந்து, உயர்த்தப்பட்ட மற்றும் உறுதியற்ற வீட்டுச் சந்தையானது ஊகத்திற்கு மாறுவதற்கு, மூலதனத்திற்கு உந்துதல் கொடுத்துள்ளது. இலாப விகிதம் 2-3 சதவிகிதம் என்று இருக்கும் பெரும் உள்நாட்டு வீட்டு உபயோகக் கருவிகள் துறையும் முன்னணியில் உள்ளது.
அரசாங்கம் நடத்தும் Economic Inofrmation நாளேடு கடந்த மாதம் எச்சரித்தது: “வீட்டு உபயோகக் கருவிகள் துறையின் நகரும் மூலதனத்தின் பெரும்பகுதி இப்பொழுது சொத்துக்கள் சந்தைக்குப் பாய்வதால், வீட்டு உபயோகக் கருவிகள் தொழில்துறையில் மறு முதலீடு என்பது கணிசமாகக் குறைந்து, மொத்த தொழில்துறையின் கரைதல் பெரிதும் வலுவிழந்துவிடும். உலக நிதிய நெருக்கடி போன்ற கொந்தளிப்பு வந்தால், இந்த நிறுவனங்கள் பெரும் பணப்பாய்வுச் சோதனையை எதிர்கொள்ளும். அதையொட்டி முன்பு பணம் கொடுத்த சொத்துச் சந்தை முதலீடு என்பது ஒரு “நச்சாக” மாறி, முக்கிய வீட்டு உபயோகக் கருவிகள் வணிகத்தைத் தடைக்கு உட்படுத்தும்.”
சீனப் பொருளாதார வல்லுனர் டீ வூ பெய்ஜிங்கின் நாணயக் கொள்கைக்குப் பின்னேயுள்ள தன்மைகளை அக்டோபர் 8 வோல் ஸ்ட்ரீட்டில் சுருக்கமாகக் கொடுத்துள்ளார்: “ஆம், ஒரு வலுவான யுவான் சீனப் பொருளாதாரத்திற்கு உதவும், அது அதிக தொழிலாளர் நலன் என்று இல்லாமல் மூலதன நலனைக் கொண்டிருக்கும். அது சீனாவை சர்வதேசப் பொருளாதார உணவுச் சங்கிலியில் உயர்த்தும். ஆனால் சீனா பெரும் வேலை நாடுவோர் நிறைந்துள்ள நிலைமையை ஈர்த்துக் கொள்ளுவதற்கு தொழிலாளர் அதிகம் இருக்கும் உற்பத்தி முறையை விடச் சிறந்த மாதிரியைக் காணவில்லை.”
அரசியல் ஆபத்துக்களையும் வூ உயர்த்திக் காட்டியுள்ளார்: “சீன அரசாங்கத்தின் மிக முக்கியமான கட்டாயம் சுமுகமான சமூகத்தைக் கட்டமைப்பது ஆகும். ஒரு சீனர் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் அவர் அதிகாரத்திற்கு சவால் விடுவது அபூர்வம்தான். சீன அரசாங்கம் இந்த முக்கியக் கருத்தைப் பாதுகாக்கக் கொண்டுள்ள உறுதிப்பாடு குறித்து எவரும் குறைமதிப்பிட வேண்டாம்.” வேறுவிதமாகக் கூறினால், ஏராளமான சீன நிறுவனங்கள் திவாலாகி வேலையின்மை உயர்ந்தால், தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவர்.
2008 கடைசியிலும், 2009 முதற் பகுதியிலும் 20 மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏற்றுமதித் தொழில்களில் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். பெய்ஜிங் தன் பொருளாதாரத்தை குறைந்த கடனை அரசாங்க வங்கிகளிலிருந்து கொடுத்ததின் மூலம்தான் உறுதிப்படுத்த முடிந்தது. அதைப்போல் பாரிய உள்கட்டுமான கட்டமைப்புத் திட்டங்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் அது அமெரிக்க டாலருக்கு எதிராக யுவான் ஒப்புமையில் குறைந்த மதிப்புடையதை உத்தரவாதப் படுத்துவதற்கும் தலையிட்டது. அது சீன ஏற்றுமதிகளுக்கு உதவியது.
இந்த நடவடிக்கைகள் சீனப் பொருளாதாரத்தை 10 சதவிகிதமளவு வளரச் செய்துள்ளன. ஆனால் பெய்ஜிங் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்துள்ளன. சீனாவிற்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரம், நாணய மறுமதிப்பில், பல துறைகளில் இரு சக்திகளுக்கும் இடையே உள்ள பெருகிய போட்டியின் ஒரு பகுதிதான். சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை அமெரிக்காவின் உலக நிலைப்பாட்டிற்கு ஒரு சவாலாக அமெரிக்கா நோக்குகிறது. சீனாவை “நாணய முறையை சாதுரியமாக கையாளும் நாடு” என்று முத்திரையிடுவதாக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. இது பதிலடி நடவடிக்கைகளுக்கு வகை செய்யும்.
சீனாவின் $585 பில்லியன் பெரும் ஊக்கப் பொதியானது தொழில்துறையின் அதிகத் திறனை இன்னும் கூடுதலாக்கி ஏற்றுமதி செய்வதற்கான அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது—அதுவும் எல்லா முக்கியப் பொருளாதாரங்களும் அதையே செய்து கொண்டிருக்கும் நேரத்தில். பெய்ஜிங்கின் “சீனப் பொருட்களை வாங்குக” என்னும் கொள்கையானது எழுச்சி பெற்றுவரும் சீன நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் பொருள்களைப் பெறுவதற்கான கொள்கை, சில வெளிநாட்டு சர்வதேச நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அவை மரபார்ந்த முறையில் சீனாவிற்கு எதிராக காப்புவரிக் கொள்கையை எதிர்த்தவை, இப்பொழுதோ காப்புவரி தேவை முகாமிற்குச் செல்லத் தள்ளப்படுகின்றன.
வங்கிகளுக்குக் கடன் கொடுப்பதை அரசாங்கம் விரிவாக்கியுள்ளமையானது சொத்துச் சந்தையில் பெரும் ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது. வீட்டுச் சந்தைக் குமிழி வெடித்தால், அது நாட்டின் வங்கி மற்றும் நிதியத் துறைகளிலும் எதிரொலிக்கும். கடந்த வாரம் Fitch Ratings இன்படி உள்ளூர் அரசாங்க முதலீடுகள் சொத்துச் சந்தைகளில் நடந்துள்ளவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், சீனாவின் பொதுக் கடன் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32 முதல் 47 சதவிகிதத்தில் உள்ளது. China Security Journal கடந்த வாரம் உள்ளூர் அரசாங்கக் கடன்களில் பாக்கி நிற்கும் $1.15 டிரில்லியன் பணத்தில் 26 சதவிகிதம் அறவிடமுடியாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளது.
சீனாவில் ஊகம் என்பது வாஷிங்டனின் “பணப் புழக்கம் எளிதாக்கப்படும்” கொள்கையினால் எரியூட்டப்படுகிறது. அதுதான் சீனா போன்ற எழுச்சியடைந்துவரும் சந்தைகளில் அமெரிக்க டாலர்களை வெள்ளமாகப் பாயவைக்கிறது. சீனாவின் மக்கள் வங்கியின் கருத்துப்படி 120 பில்லியன் யுவான் (அமெரிக்க $18 பில்லியன்) செப்டம்பர் மாதம் “சூடான பணமாக” (hot money-capital which is frequently transferred between financial institutions in an attempt to maximize interest or capital gain) நாட்டில் பாய்ந்தது—இது ஆகஸ்ட் மாத எண்ணிக்கையை விட இருமடங்கு ஆகும்.
ஆனால் பெய்ஜிங்கின் முக்கிய அச்சம் எந்தப் பொருளாதாரச் சரிவும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையைத் தூண்டும் என்பதாகும். ஏற்கனவே மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலைநிறுத்தங்கள் அதிக ஊதியங்களைக் கோரி கார்த் தொழிலும், மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் நடைபெற்றன. இத்தொழிற்துறை நடவடிக்கை ஒப்புமையில் சிறு அளவிலிருந்து பொருளாதாரத் தேவைகளுடன் வரம்பு கட்டிக் கொண்டது. சீனாவின் 400 மில்லியன் தொழிலாளர்கள் மீண்டும் தொழில்துறை, அரசியல் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால், அதன்பின் வென் எச்சரித்துள்ளதுபோல், அதிர்ச்சி அலை உலக முதலாளித்துவ முறை முழுவதும் உணரப்படும். |