WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
பேர்லினில் கூட்டம் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் 70 ஆம் ஆண்டை நினைவுகூருகின்றது
By our correspondents
21 October 2010
Use
this version to print | Send
feedback
லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 70 ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் ஞாயிறன்று பேர்லினில் நடந்த ஒரு கூட்டத்தில் சுமார் 200 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit-PSG), மெஹ்ரிங் பப்ளிகேஷன்ஸ் மற்றும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (ISSE) ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நான்கு நாள் கூட்டங்களின் வெற்றிகரமான நிறைவுநாள் நிகழ்வாக இது நடந்தது.
வியாழனன்று சுமார் 350 பேர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அமெரிக்க வரலாற்றாசிரியரான அலெக்சாண்டர் ரபினோவிட்ச் உரையாற்றினார், பின் தனது “அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள்: பெட்ரோகிராடில் போல்ஷிவிக் ஆட்சியின் முதலாம் ஆண்டு” புத்தகம் குறித்த ஒரு விவாதத்திற்கும் அவர் அழைத்துச் சென்றார். (பார்க்கவும்: பேர்லினில் பேராசிரியர் ரபினோவிட்ச்சின் உரைக்குக் கிட்டிய பெரும் வரவேற்பு). வெள்ளியன்று ரபினோவிட்ச் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் தனது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை மத்திய பேர்லினில் உள்ள யுனிபுக் புத்தக கடையில் திரளான பார்வையாளர்களிடையே அறிமுகப்படுத்தினார். சனிக்கிழமையன்று நகரின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ரபினோவிட்ச் ஒரு கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார். இந்த நான்கு கூட்டங்களிலுமே பார்வையாளர் பங்கேற்பு அதிகமாய் இருந்தது, சில சந்தர்ப்பங்களில் அரங்கு நிரம்பி நிற்பதற்கு மட்டுமே இடமிருந்தது. கடந்த 80 ஆண்டுகளின் மிகப்பெரிய முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியின் பின்புலத்தில் அக்டோபர் புரட்சி மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகள் மீது ஆர்வம் பெருகி வருவதையே இந்த வரவேற்பு வெளிப்படுத்துகிறது.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக ஞாயிறு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பீட்டர் சுவார்ட்ஸ், ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இன்றும் மிக முக்கியமான அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராய் ட்ரொட்ஸ்கி திகழ்கிறார் என்பதை வலியுறுத்தினார். முக்கியமாக முதலாளித்துவத்தின் சர்வதேச தன்மை குறித்த அவரது புரிதல் தான் அவரை சிறப்பாக சமகாலத்திற்கு பொருத்தமானவராக இருத்தியிருக்கிறது. சுவார்ட்ஸ் மேலும் கூறினார்: “ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, சர்வதேசியவாதம் என்பது வெறுமனே வெற்று வார்த்தைகள் அல்ல. அவரது சிந்தனை சர்வதேச ஒற்றுமைக்கும் நாடுகளுக்கு இடையிலான ஒத்திசைவிற்கும் அழைப்பு விடும் மனமார்ந்த அழைப்பிற்கும் மிக அதிகமான ஒன்றாகும். நவீன பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் சர்வதேசியத் தன்மை தான் அவரது சமூகப் பகுப்பாய்வுக்கும் அவரது அரசியல் வேலைத்திட்டத்திற்கும் துவக்கப் புள்ளியாக அமைந்தது. உலகப் பொருளாதாரம் என்பது வெறுமனே அதன் தேசியப் பகுதிகளின் கூட்டுமொத்தம் அல்ல என்று அவர் எழுதினார். இது, நவீன சகாப்தத்தின் அனைத்து தேசிய சந்தைகளின் மீதும் மேலாதிக்கம் செலுத்துவதாய் இருக்கிற சர்வதேச உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட பரந்த சுயாதீனமான யதார்த்தம் ஆகும். இந்த ஆரம்பப் புள்ளியில் இருந்து, ’பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை என்பது இந்த சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து தான் தோற்றம்பெற முடியுமே தவிர அதற்கு எதிர்மாறான திசையில் அல்ல’ என்று அவர் முடிவுக்கு வந்தார்.
“ட்ரொட்ஸ்கியின் நாளில் இருந்ததை விடவும் இன்று தகவல்தொடர்பும், போக்குவரத்தும், வர்த்தகமும், நிதிப் பரிவர்த்தனைகளும் மற்றும் உற்பத்தியும் மிகக் கூடுதலான ஒரு சர்வதேச வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றன. மில்லியன்கணக்கான மக்களுக்கு, எந்த மட்டத்திற்கு அவர்களது வாழ்க்கை உலகப் பொருளாதாரத்தையும் சர்வதேச நிதிச் சந்தைகளின் அராஜகவாதத்தையும் சார்ந்திருக்கிறது என்பதை, சர்வதேச நிதியும் பொருளாதார நெருக்கடியும் தெளிவுபடுத்தியிருக்கின்றன” என்று சுவார்ட்ஸ் வலியுறுத்தினார்.
”நவீன உற்பத்தியானது உலகெங்குமான மக்களை ஒரு சமூக மொத்தத்தில் ஒன்றாய் இணைக்கிறது. ஆயினும் இந்த நிகழ்வுப்போக்கானது உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பது மற்றும் தேசிய அரசுகளின் போட்டி ஆகியவற்றுடன் இணக்கமற்றதாக்குகின்றது. 1938 இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கை அன்று எப்படி இருந்ததோ அதே அளவு இன்றும் பொருந்துவதாய் இருக்கிறது: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், எதிர்வரும் வரலாற்றுக் காலகட்டத்தில் எந்த மாற்றமுமின்றி, ஒரு பெரும் பேரழிவு மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.”
அதன்பின் சுவார்ட்ஸ் கூட்டத்தில் பிரதான உரையாற்றவிருந்த டேவிட் நோர்த்தை அறிமுகம் செய்தார். நோர்த்தின் சமீபத்திய புத்தகமான “லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாத்து” (In Defense of Leon Trotsky) என்கிற புத்தகம் சமீபத்தில் ஜேர்மன் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நோர்த்தின் முழுக் கருத்துகளையும் “லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய எழுபது ஆண்டுகள்” கட்டுரையில் நீங்கள் காணலாம்.
தனது உரைக்குப் பின் பார்வையாளர்களிடம் இருந்தான பல்வேறு கேள்விகளுக்கு நோர்த் பதிலளித்தார். ஸ்ராலின் மற்றும் ட்ரொட்ஸ்கிக்கு இடையிலான மோதல், அமெரிக்காவில் சோசலிச சமத்துவ கட்சியின் அரசியல் முன்னோக்கு, மற்றும் சமூக சமத்துவம் என்பதன் பொருள் ஆகியவை தொடர்பான கேள்விகளும் இதில் அடங்கும்.
|