WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
பிரான்சில் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்றனர்
Alex Lantier
22 October 2010
Use
this version to print | Send
feedback
எண்ணெய்த் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் மறியல்களையும் உடைப்பதற்கற்கான போலிஸ் நடவடிக்கை எல்லாம் பிரான்சின் எரிபொருள் பற்றாக்குறையை முடித்து விடவுமில்லை அல்லது தொழிலாளர்களும் மாணவர்களும் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஆழமான அவப்பெயர் சம்பாதித்த ஓய்வூதிய வெட்டுகளை எதிர்த்து நடத்தும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை குறைத்து விடவுமில்லை. பெருவாரியான மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தபோதும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு செல்லும் ஐரோப்பிய அரசாங்கங்களின் நடத்தைக்கு பெருகும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மிக அபிவிருத்தியுற்ற வெளிப்பாடு தான் பிரான்சின் வேலைநிறுத்த அலை ஆகும்.
எண்ணெய் துறை மறியல்கள் மீதான போலிஸ் தாக்குதல்களை எதிர்த்து பரந்த வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சங்கங்கள் மறுப்பதானது ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அரச வன்முறையில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்த அமைப்புகள் எந்த போராட்டத்தையும் வைக்காது. அதற்கு நேரெதிராய், தங்களது மவுனமான ஆதரவின் மூலம் சார்க்கோசி இன்னும் பெரிய போலிஸ் வன்முறையைக் கூட பிரயோகிக்கலாம் என்று அவருக்குத் தான் சமிக்ஞை அனுப்புகின்றன.
அரசாங்கம் வேலைநிறுத்தங்களை உடைப்பதை மவுனமாய் சங்கங்கள் பார்த்துக் கொண்டிருப்பது என்பது அபிவிருத்தியுறும் வெகுஜன இயக்கத்துடன் அவை குரோதப்பட்டிருப்பதன் மற்றும் அந்த இயக்கத்தை பலவீனப்படுத்தி இறுதியாய் தோற்கடிப்பதற்காக சார்க்கோசியுடன் சேர்ந்து வேலை செய்ய அவை தீர்மானம் கொண்டிருப்பதன் தெளிவுபட்ட வெளிப்பாடு ஆகும். இதில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற உத்தியோகபூர்வ “இடது” கட்சிகளும், அதேபோல் இந்த சங்கங்களுக்கு அரசியல் கவசம் அளித்து தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாக்க ஆளும் மேற்குடி மற்றும் அரசின் இந்த முகமைகளை வேண்டி நிற்க வலியுறுத்துகின்ற புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற “அதி இடது” என்பதாக அழைக்கப்படும் கட்சிகளும் அவற்றுக்கு ஆதரவளிக்கின்றன.
அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 6 ஆகிய இரு தினங்களில் நடத்துவதற்கான மேலும் இரண்டு ஒருநாள் தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே சங்கங்கள் ஒப்புதலளித்துள்ள ஒரே பெரிய நடவடிக்கைகள் ஆகும். இந்த “போராட்ட நடவடிக்கை தினங்கள்” எல்லாம் பயனளிக்கவில்லை என்பதை ஏற்கனவே தொழிலாளர்கள் பரவலாகக் கண்டிருக்கின்றனர். இன்னும் பார்த்தால், ஓய்வூதிய “சீர்திருத்த” மசோதாவின் இறுதி வடிவத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதலளிப்பதற்கு அடுத்த நாள் தான் முதலாவது ஆர்ப்பாட்டத்திற்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது, இந்த மசோதாவை இன்று செனட்டில் வாக்கெடுப்புக்கு கொண்டுவர அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது.
வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு போலிஸ் அடக்குமுறை தோல்வியுற்றிருக்கும் நிலைமைகளின் கீழ், வெகுஜன இயக்கத்தை நீரூற்றி அணைப்பதற்கும் அடக்குவதற்கும் முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் சார்க்கோசி தொழிற்சங்கங்களையும் மற்றும் “இடது” கட்சிகளையும் நேரடியாகச் சார்ந்திருக்கிறார். வெட்டுகள் மீதான எதிர்ப்பெல்லாம் ஒரு நம்பிக்கையற்ற முயற்சி தான் என்பதான கருத்தை ஏற்கனவே தொழிற்சங்க செய்தித்தொடர்பாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர். வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு ஏற்படக் கூடிய நிதி அழுத்தங்கள் பெருகுவதையும் மற்றும் அயற்சியையும் கைவிடும் மனநிலையையும் விதைப்பதற்காக எண்ணெய் மற்றும் போக்குவரத்துத் துறையிலான வேலைநிறுத்தங்களை சங்கங்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தியிருப்பதன் தாக்கத்தையும் வைத்து அவர்கள் கணக்குப் போடுகின்றனர்.
NPA போன்ற நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளால் ஒட்டவைக்கப்பட்டிருக்கும் இவர்கள், அரசாங்கம் தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை கைவிடுவதற்கோ அல்லது தீவிரமாக திருத்துவதற்கோ நெருக்குதலளிக்கப்பட முடியும் என்பதான அபத்தமான ஆபத்தான பிரமையை ஊக்குவிக்கின்றனர். இத்தனையும், என்ன நடந்தாலும் வெட்டுகள் திணிக்கப்படும் என்று சார்க்கோசி திரும்பத் திரும்ப அறிவித்து, தொழிலாளர்களுக்கு எதிராக அரச வன்முறையை அவர் பயன்படுத்தியதன் பின்னரும்.
கண்டனம் மட்டுமே அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றி விடாது, இதற்கு எதிரான வாதத்தை வைப்பவர்கள் உண்மையில் மெத்தனத்தையும் குழப்பத்தையுமே ஊக்குவிக்கின்றனர். அவர்கள் பிரான்சிலும் மற்றும் ஒவ்வொரு பிற பெரிய தொழிற்துறை நாட்டிலும் எந்த அடிப்படையில் இந்த சிக்கன நடவடிக்கைப் பாதை மேற்கொள்ளப்படுகிறது (1930களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக ஆழ்ந்த நெருக்கடி) என்பதை அலட்சியம் செய்யகிறார்கள்.
அதே சமயத்தில் சோசலிஸ்ட் கட்சி (பிரெஞ்சு முதலாளித்துவம் சோதனை செய்து நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி, 1990களில் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் சமூக வெட்டுக்களுக்கான வேலைத்திட்டத்திற்கு முன்முயற்சியெடுத்த கட்சி) தான் சார்க்கோசி மற்றும் கோலிசவாதிகளுக்கு உண்மையானதொரு மாற்றாக நிற்பதான ஒரு பொய்யையும் அவர்கள் ஊக்குவிக்கின்றனர். வேலைநிறுத்த இயக்கத்திற்கு மூட்டையைக் கட்டிவிட்டு வெகுஜன அதிருப்தியை 2012 ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு என்னும் முட்டுச் சந்திற்குள் திருப்பி விடுவதற்கே தொழிற்சங்கங்களும் அவர்களது “இடது” கூட்டாளிகளும் தலைப்படுகின்றனர்.
தொழிலாள வர்க்கம் புற நிலையாக ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசுக்கு எதிரான ஒரு சண்டையில் நிற்கிறது. அரசாங்கம் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டிவிட்டு வெளிப்படையாக வங்கிகள் மற்றும் நிதிப் பிரபுக்களின் கட்டளையேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு ஒட்டுமொத்த மக்களிடையே தீவிர ஆதரவு இருக்கிறது. வெட்டுகளுக்கு பெருவாரியான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு வேலைநிறுத்த இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆயினும் இந்த போராட்டம் அதிகாரத்திற்கான ஒரு அரசியல் போராட்டமாக, அதாவது சார்க்கோசி அரசாங்கத்தை கீழிறக்கி விட்டு அதனை ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்க்கிற வகையில், நனவுடன் நடத்தப்பட வேண்டும்.
தொழிற்சங்கங்களிடம் இருந்து முறித்துக் கொண்டு தொழிலாள வர்க்க போராட்டத்தின் புதிய, ஜனநாயக அமைப்புகளை ஸ்தாபிப்பது வெற்றிக்கான முதல் முன்நிபந்தனையாக இருக்கிறது. வேலைநிறுத்த இயக்கத்தை விரிவுபடுத்தவும், வேலையில் இருப்பவர்கள் இல்லாதவர்கள், தாய்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒருமைப்படுத்தவும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் தீவிர சமூக சக்திக்குப் பின்னால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தட்டுகள் அனைத்தையும் அணிதிரட்டவும் தொழிற்சங்கங்கள் மற்றும் நடப்பு “இடது” கட்சிகளிடம் இருந்து சுயாதீனப்பட்ட வகையில் போராட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க உலக சோசலிச வலைத் தளம் பிரான்சில் இருக்கும் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.
ஐரோப்பாவெங்கிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் என்னும் இதே மூலவளத்தில் இருந்து இதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களை எட்டுவதற்கு பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை குழுக்கள் ஒரு கருவியாக விளங்கும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரரீதியில் ஒன்றுபடுத்துவதன் மூலமாக ஒரு ஐரோப்பிய-அளவில் மற்றும் உலகளாவிய அடிப்படையில் மட்டுமே இந்த நெருக்கடி தீர்க்கப்பட முடியும். சார்க்கோசியை கீழிறக்குவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக போராட்ட நடவடிக்கைக் குழுக்கள் போராடும். வெகுஜன இயக்கம் அபிவிருத்தியுறுகையில், இந்த குழுக்கள் தொழிலாளர் கவுன்சில்களாக விரிவுபடுத்தப்பட முடியும், அவை தொழிலாள வர்க்க அரசியல் அதிகாரத்தின் அங்கங்களாய் மாறும்.
உற்பத்தி சக்திகள் மக்களின் நன்மைக்காக பட்டை தீட்டப்படுவதற்கும் மற்றும் விரிவாக்கப்படுவதற்கும், அத்துடன் பெருநிறுவன இலாபம் ஒரு சிறிய உயர்தட்டு கும்பலின் தனிநபர் செல்வத்தைப் பெருக்குவதற்கு அவை அடிபணிய வைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான புரட்சிகர சோசலிசக் கொள்கைகள் இந்த அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.
தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் என்பது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் ஆழமாய் பொதிந்திருக்கும் ஒன்றாகும். அடுத்த வருடம் வந்தால் சுமார் நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸின் முற்றுகையிடப்பட்ட தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து கம்யூனை உருவாக்கினர். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைத் தனது கையிலெடுத்தது வரலாற்றில் இதுவே முதன்முறை. ஜனாதிபதி அடோல்ப் தியர்ஸின் முதலாளித்துவ அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையைக் கையாண்டு இறுதியில் கம்யூனை உடைத்து நொருக்கியது.
ஆனால் கம்யூன் உதாரணம் அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சியில் ஒரு வெகுமுக்கியப் பாத்திரம் வகித்ததோடு இன்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறன்களுக்கு ஒரு சின்னமாக தனித்துவத்துடன் திகழ்கிறது. புரட்சிகரப் போராட்டத்தின் இத்தகைய பாரம்பரியங்களுக்குத்தான் எதிர்வரும் காலத்தில் ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் திரும்புவார்கள் |