WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முறிக்க முயற்சி எடுக்கிறார்
By Alex Lantier
21 October 2010
Use
this version to print | Send
feedback
தன்னுடைய அரசாங்கத்தின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவுகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் முறியடிக்க உள்ளதாக நேற்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கூறினார். இதற்காக கலகத் தடுப்புப் பிரிவு பொலிசையும், இராணுவ சிவில் சேவை பிரிவுகளையும் மறியல்களை தகர்ப்பதற்கும் எண்ணெய்க் கிடங்கு ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதற்கும் அனுப்பியுள்ளார். தொழிலாளர்களும் மாணவர்களும் ஒரு வாரத்திற்கும் மேலாக பரந்த வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர்; அதே நேரத்தில் செனட்டின் இது பற்றிய விவாதம் “சீர்திருத்த” சட்டத்தின் ஓய்வூதிய விதிகள் பற்றியது, தொடர்கிறது. சட்டவரைவின் மீது இறுதி வாக்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கன நடவடிக்கைகளுக்குப் பரந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பெரும் ஆதரவு இருந்த போதிலும் அவற்றை மீறி தன்னுடைய வெட்டுத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த விழைகிறது. இதுவரை 6 ஒருநாள் தேசிய எதிர்ப்புக்கள் செப்டம்பர் 7 முதல் நடைபெற்றுள்ளன; மற்றும் பல தொழில்துறை பிரிவுகளில், துறைமுகங்கள், எண்ணெய்க் கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள், பார வண்டிப் பிரிவுகள் உட்பட வேலைநிறுத்தங்கள் தொடர்வதால் நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் விளைந்துள்ளன.
ஆயினும்கூட, பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் தேசிய சட்டமன்றத்தில் கூறினார்: “இன்னும் சில நாட்களில் சீர்திருத்தம் குடியரசின் சட்டமாகிவிடும்… தற்பொழுதையச் சீர்திருத்தம் ஒரு வலது அல்லது இடதுசாரி நடவடிக்கை அல்ல, பொது அறிவை ஒட்டி நிகழ்வது.”
நேற்றுக் காலை மந்திரிசபைக்கூட்டம் முடிந்தபின், சார்க்கோசி அறிக்கை ஒன்றை விடுத்தார்; அதில் “கிடங்குகள் அனைத்தும்” முற்றுகைகளுக்கு உட்பட்டிருப்பது முறிக்கப்பட வேண்டும் என்று தான் பொலிசுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், “இயல்பு நிலை மீண்டும் விரைவில் நிறுவப்படுவதற்கு” அதுதான் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். “வினியோகப் பிரச்சினைகள் சில கிடங்குகளைப் பாதித்துள்ளன” என்று குறிப்பிட்ட சார்க்கோசி, “நாட்டை முடக்க முற்படும் ஒழுங்கீனங்களை” கண்டித்தார். அன்றே அவரைப் பற்றிய ஏற்காத தரமதிப்புக்கள் மிக அதிகமாக 69% என்று உயர்ந்தன.
அக்டோபர் 19-20 இரவன்று கலகத் தடுப்புப் பொலிசார் மேற்கு பிரான்ஸில் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள மூன்று எண்ணெய்க் கிடங்குகளில் அவற்றை முறித்தனர். அப்பகுதி கடுமையாக பெட்ரோலியத் தட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. Donges, Le Mans, La Rochelle ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளைப் பொலிசார் தாக்கினர்.
உள்துறை மந்திரி Brice Hortefeux பொலிஸ் படைகள் “தேவைப்படும் அளவிற்கு சுத்திகரிப்பு ஆலைகளின் தடைகளை அகற்றுவர்” என்றார். ஆனால் விசைத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி Jean-Louis Borloo எரிபொருள் தட்டுப்பாடுகள் இன்னும் பரவிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரான்ஸின் 12,311 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 4,000 த்தில் இருப்புக்கள் இல்லை என்று போர்லூ கூறினார். இன்று தேசிய சட்டமன்றத்தில் அவர் 3,190 நிலையங்கள்தான் “தற்காலிகமாக இருப்புக்கள் இன்றி” உள்ளன, 1,700 நிலையங்களில் டிசல் அல்லது பெட்ரோல் கிடைக்கவில்லை என்றார். பஸ் நிறுவனங்களின் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் தங்கள் செயற்பாடுகளைச் சனிக்கிழமையில் இருந்து குறைக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
அரசாங்க அச்சுறுத்தல்கள் தொழிலாளர்களை மிரட்டிவிடவில்லை. நேற்று விசைத்துறையிலும் வேலைநிறுத்தங்கள் பரவின, பிரான்ஸின் அனைத்து 12 சுத்திகர நிலையங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன; இதைத்தவிர நாட்டின் இரு மிகப் பெரிய மெதேன் இறுதிநிலையங்கள், Fos-Gonkin, Montoir-de-Bretagne ஆகியவற்றில் இருப்பவையும் மூடியுள்ளன. Electricite de France என்னும் அரசாங்க மின்சார நிறுவனத்தில் வேலைநிறுத்தம் செய்துள்ளவர்கள் மின் உற்பத்தியை 2,000 மெகாவாட்டுக்கள் குறைத்துள்ளனர்; பொது மின் அளிப்பு, மற்றும் சார்க்கோசியின் UMP அதிகாரம் கொண்டுள்ள முனிசிபல் அலுவகங்கள், இன்னும் வட்டார பொலிஸ் தலைமையகங்களுக்கு செல்லும் மின்விசையையும் நிறுத்தி விட்டனர்.
வேலைநிறுத்தம் போக்குவர்த்துத் துறையிலும் தொடர்ந்துள்ளது; டஜன் கணக்கான நெடுஞ்சாலை தடுப்புக்கள் பற்றியும் இரயில்வேக்கள், விமான நிலையங்களில் வேலைநிறுத்தங்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்துள்ளன. SNCF தேசிய இரயில் முறை மூன்றில் ஒரு பங்கு உயர் வேக இரயில்கள் ஓடவில்லை என்று கூறியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் Roissy, Orly என்று பாரிசைச் சுற்றியுள்ள விமான நிலையங்களுக்குச் செல்லும் பாதைகளை தடுப்பிற்கு உட்படுத்தி விட்டனர்; இதைத்தவிர Toulouse, Nantes, Clemont-Ferrand ஆகியவற்றில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன.
உணவு விடுதிகள், சிறார் பாதுகாப்பு நிலையங்கள், குப்பை அகற்றும் தொழிலாளர்கள் உட்பட பல முனிசிபல் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்; குறிப்பான தெற்கு பிரான்ஸில் இது நீடிக்கிறது. மார்செயில், நகரவை அதிகாரிகள் இராணுவ சிவில் சேவை பிரிவுகளை, வெள்ளைச் சீருடை அணிந்து குப்பைகளைச் சேகரிக்கத் திரட்டியுள்ளனர்.
Agence France-Presse கொடுத்துள்ள தகவல்கள்படி, மார்செய் மக்கள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். ஒருவர் கூறினார்: “அரசாங்கத்தின் குழப்பத்தை அகற்ற இராணுவத்தை அழைப்பது என்பது கொடுமையானது”. மற்றொருவர் இது “இயக்கத்தை முறியடிக்க ஒரு வழிவகை” என்றார்.
600 உயர்நிலைப்பள்ளிகள் புதனன்று முற்றுகைக்கு உட்பட்டன என்று மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன; இவற்றைத் தவிர 6 பல்கலைக் கழகங்களும் முற்றுகையில் உள்ளன. நான்கு பல்கலைக்கழகங்கள் (Rennes-2, Lyon-2, Montpellier-3 and Toulouse-2) அவற்றின் நிர்வாகங்களால் பாதுகாப்புக் காரணம் கூறப்பட்டு மூடப்பட்டுவிட்டன.
உள்துறை மந்திரி Hortefeux நேற்று லியோனுக்குப் பயணித்தார்; அங்கு பொலிசார் திங்களன்று நகரத்தின் பெரும் பரபரப்பான இடங்களில் 1,300 இளைஞர்களுடன் (பொலிஸ் மதிப்பீடு) மோதியிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “உடைப்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், குண்டுவீசுபவர்கள்” என்று அவர் கண்டித்து, “பிரான்ஸ் அமைதியான முறையில் இயங்க வேண்டும் என்று கருதும் நேர்மையானவர்களுக்குத்தான் உரியது” என்றார்.
லியோன் நகர அதிகாரிகள் நிலத்தடி மற்றும் முனிசிபல் போக்குவரத்து இணையங்களை மூடிவிட்டனர்; இது புறநகர் மாணவர்கள் நகரத்திற்குள் வந்து Hortefeux பயணத்தை எதிர்க்காமல் இருப்பதற்கான உத்தியாகும். ஆயினும்கூட பரபரப்பான பகுதிகளில் இருந்து இளைஞர்கள் Hortefeux ஐ “இனவெறியாளர்”, “பாசிஸ்ட்”, “உனக்கு இங்கு நல்வரவு இல்லை” என்றெல்லாம் கோஷமிட்டனர். மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர்.
லியோனின் சோசலிஸ்ட் கட்சியை சார்ந்த மேயரான Gérard Collomb, Hortefeux பொலிஸ் நடவடிக்கைகள் குறித்து அவருடன் விவாதிக்காததற்காக குறைகூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரும் முனிசிபல் பொலிசும் அரசாங்கத்திற்கு கொடுத்துள்ள ஆதரவைப் பற்றி அவர் வலியுறுத்தி, “உள்துறை மந்திர லியோனுக்கு வரும் முடிவு எடுத்துள்ளார்; அது நெருக்கடி பற்றிய கூட்டத்திற்கு என்று நான் நினைத்தேன். இதை ஒரு பொது உறவு நடவடிக்கையாக அவர் மாற்ற முடிவெடுத்தது வருந்தத் தக்கது.” என்றார்.
தான் ஒரு தீவிர அரசியல் சவாலை எதிர்கொள்ளுகிறோம் என்று பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்குள் பெருகும் உணர்வை ஒட்டி அரசாங்கத்தில் பெருகிய அடகற்குமுறைப் பயன்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கருத்துக் கணிப்பு நிறுவனம் CSA ஐச் சேர்ந்த Jerome Ste.Marie நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டுமே கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருக்கும் நிலைமையில் நாம் உள்ளோம்; ஏதேனும் தீவிரமாக நடந்துவிட்டால் இது தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்து அரசாங்கத்திற்குப் பேரழிவில் முடியும்.”
கட்டுரையாளர் Michel Noblecourt நேற்று Le Monde இல் எழுதினார்: “[ஆர்ப்பாட்டக்காரர்களின்] திட்டத்தில் களைப்பு என்பது இல்லை … நெருக்கடியில் இருந்து வெளியேறுவது கடினம் ஆகும்.” தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னாகவே அக்டோபர் 19 நடவடிக்கை தினத்தை வெட்டுக்கள் இயற்றப்படுவதற்கும் முன்பு “கௌரவத்திற்காக நடத்தப்படும் கடைசி வீரப் போராட்டம்” என்று கூறியுள்ளனர். ஆனால் இத்திட்டங்கள் “முற்போக்குத்தனத்தால்” தகர்க்கப்பட்டுவிட்டன, அதாவது, “உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் சுத்திகர ஆலைகளில் தொழில்துறை நடவடிக்கைகள் எதிர்பாராமல் திரண்டு வந்ததால்.” என்றும் கூறினார்.
Noblecourt அறிக்கை அப்பட்டமாக ஆளும் வர்க்கத்தின் கணக்கீடுகளை முன்வைக்கின்றது. தொழிற்சங்கங்கள் பொது எதிர்ப்பை ஒரு நாள் எதிர்ப்புக்கள், தனிமைப் படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் இவற்றுடன் வரம்பிற்கு உட்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த பிரான்ஸின் அரசியல் நடைமுறை தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் போராளித்தன உறுதியான எதிர்ப்புக்களின் தன்மையினால் வியப்படைந்துள்ளனர்; அதேபோல் பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொழில்துறை நடவடிக்கையின் பாதிப்பு பற்றியும் வியப்படைந்துள்ளனர்.
“வேலை நிறுத்தங்களுக்கு படிப்படியாக பொது ஆதரவைக் குறைத்துவிடும்” என்று தான் நினைக்கும் காரணங்களைப் பட்டியலிட்டு அவர் முடித்துள்ளார். இவற்றுள் தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தங்களுக்கு எதிராகப் பேசுவது, அடுத்த வார Toussaint விடுமுறை நாட்கள் போது பெட்ரோலியத் தட்டுப்பாடு பற்றி மகிழ்ச்சியற்ற நிலை, பள்ளிமாணவர்கள் எதிர்ப்புக்களின்போது வெளிவந்த வன்முறை பற்றி மக்கள் பீதி ஆகியவை அடங்கும்.
சார்க்கோசியின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக விரைந்து வெளிப்பட்டு வரும் வேலைநிறுத்தங்களின் மையப்பிரச்சினை ஆக்கிரமிப்புக்களை முறிப்பதற்கும் மறியல்களைத் தாக்குவதற்கும் பொலிசார் பயன்படுத்தப்படுவதை தொழிற்சங்கங்கள் நிராகரிக்க மறுப்பதுதான். இது அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்துவதுடன் வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை பலவீனப்படுத்துகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை, குறிப்பாக எண்ணெய்த்துறை தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, பாதிப்பாளர்களாகச் செய்யும் இடரை ஏற்படுத்தும்.
அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் வேலைநிறுத்த இயக்கத்தை விரிவாக்க தொழிற்சங்கங்கள் மறுப்பதற்குக் காரணம் அது ஒரு பொது வேலைநிறுத்த வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும், அதையொட்டி அதிகாரம் பற்றிய வினா எழும்—சார்க்கோசியை வீழ்த்த அவருக்குப் பதிலாக சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கம் அமைத்தல் என்பதாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் அரசு மற்றும் அரசு எதன் நலனுக்காக ஆட்சிபுரிகிறதோ அந்த பெருநிறுவன-நிதி உயரடுக்கிற்கு எவ்விதச் சவாலையும் முற்றிலும் எதிர்க்கிறது.
இதையொட்டி தொழிற்சங்கத் தலைமை உத்தியோகபூர்வ “இடதில்” தன் கூட்டாளிகளை—சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை- மற்றும் “தீவிர இடது” எனப்படுபவற்றையும் —முக்கியமாக பப்லோவாத முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி NPA— தன்னுடைய காட்டிக் கொடுப்பை மூடிமறைப்பதற்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கருவியின் பிடியில் இருந்து விடுபடுவதை தடுக்கவும் நம்பியுள்ளது.
தொழிற்சங்கத் தலைமையின் துரோகப் பங்கு நேற்று Donges எண்ணெய்க்கிடங்கில் கலகத் தடுப்புப் பிரிவு பொலிஸ் ஆக்கிரமிப்பாளர்களை நடத்திய விதம் பற்றி வந்துள்ள தகவல்கள் மூலம் தெரிய வருகிறது; அங்கு தொழிற்சங்கங்கள் குறுக்கிட்டு பொலிசார் மீண்டும் ஆலையை எடுத்துக் கொள்ள உதவின.
CFDT உறுப்பினர் எரிக் கிறிஸ்டல் Journal du Dumanche இடம் கூறினார்: “அதிகாலை 3.30 மணியளவில், SFDM, French Corporation of Donges-Metz ல் இருந்து தொழிலாளர்கள் எங்களுக்கு ஆதரவாக [ஆக்கிரமிப்பில்] சேர்ந்து கொண்டனர். ஆனால் அதிகாலை 4.30 மணி அளவில், பொலிஸ் படைகள் எங்களை அகற்றுவதற்கு வந்தனர். அந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள் மோதல்கள் இல்லாமல் தடுப்பதற்கு தலையிட்டன. நாங்கள் பின்வாங்கிப் பொலிசார் மீண்டும் ஆலையை எடுக்கட்டும் என்று கூறிவிட்டனர். அந்த இடத்தில் நாங்கள் 400, 500 பேர் இருந்தோம்.”
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஆலையைக் காக்க வந்துவிட்டனர்; ஏனெனில் முந்தைய மாலையில் ஆன்லைனில் வந்த தகவல்கள் Donges ல் தொழிலாளர்களுக்கு எதிராகப் பொலிஸ் வரும் என்று கூறியிருந்தன.
Nantes-Indymedia விடம் ஒரு தொழிலாளர் கூறிய கருத்து: “ஏன் RG [உளவுத்துறைகளின் பொதுத் தகவல்] ஒரு பொலிஸ் நடவடிக்கை பற்றி தொழிற்சங்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை…. இந்த நிகழ்வு எங்களுக்கு பிரெஞ்சுத் தொழிற்சங்கத்தின் பெரும் வறிய நிலையை ஆலோசிக்க வைத்துள்ளது; இது வரலாற்றளவில் சார்க்கோசியின் பிற்போக்குத்தன, புதிய பாசிசத் திட்டங்களுக்கு செயல்படுத்தக்கூடிய மாற்றிட்டு முறைகளைத் தயாரிக்க இயலாத தொழிற்சங்கங்களின் தன்மையையும் காட்டுகிறது. அதேபோல் ஓய்வூதியங்களை பாதுகாக்க இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களில் பெரும் சிறப்பு வாய்ந்த திரட்டை செயற்பாட்டு ஒற்றுமையாகக் கொண்டுவர முடியாத இயல்பையும் காட்டுகிறது.”
மற்றொருவர் “தொழிற்சங்கத்தின் தலைமைகளிடையே முற்றிலும் தயாராக இல்லை என்ற உணர்வு இருந்தது, (கீழ் மட்டங்களிலும் அப்படித்தான்)—போராட்டத்தில் ஈடுபட்டுளவளர்களை அதிகம் நம்ப வேண்டாம் என்ற உணர்வு இருந்தது.” என்று கூறினார். “இம்மாதிரி நேரங்களில்தான் நமக்கு “ஒரு தீவிர இடது” இல்லாத வெற்றிடம் தெரிகிறது.” என்று சேர்த்துக் கொண்டார்.
தொழிற்சங்கங்களும் “இடதும்” பெருகிய முறையில் தொழிலாளர்கள் ஒரு வருங்கால சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுவதற்குக் காத்திருக்க வேண்டும் என்ற கருத்தை வளர்க்கின்றன. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தலைவர் பேர்னார்ட் தீபோ குறைப்புக்கள் இயற்றப்பட்டுள்ளது ஒரு பெரிய அரசியப் பிரச்சினை என்று தான் கருதவில்லை என்றார். “ஒரு சட்ட வரைவு இயற்றப்பட்டால், அது ஒன்றும் உலகம் முடிந்து விட்டது என்று பொருளல்ல”. அவர் மேலும் கூறியது: “ஒரு சட்டம் கொண்டுவருவதை மற்றொரு சட்டத்தால் அகற்றிவிட முடியும்.”
இந்த அறிக்கை, வேலைநிறுத்தங்கள் அநியாயமாக விற்கப்பட இருப்பதைத்தான் முன்னிழலிட்டுக் காட்டுகிறது. பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளுடைய பழைய வரலாறு தெளிவாக்கியுள்ளதுபோல், சோசலிஸ்ட் கட்சி ஒன்றும் 2012ல் அதிகாரத்திற்குத் திரும்பி வந்தாலும் சார்க்கோசியின் வெட்டுக்களில் மாற்றத்தைக் கணிசமாகக் கொண்டு வராது.
சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு பற்றி வினவப்பட்டதற்கு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் ஒலிவியே பெசன்ஸநோ Le Monde இடம் கூறினார்: “இடது அரசியல் சார்புடைய இரு முக்கியக் கட்சிகள் உள்ளன: அவற்றுள் ஒன்று சந்தைப் பொருளாதாரத்தை ஏற்கிறது, மற்றொன்று அதில் இருந்து தப்ப விழைகிறது. இந்த இரு சார்புகளுமே ஒரே அரசாங்கத்திற்குள் இயைந்து செயல்பட முடியாது; ஆனால் எங்கள் சக்திகள் வலதிற்கான போக்கை எதிர்க்க, ஓய்வூதியப் போராட்டத்தில் நடப்பது போல், முடியும்.”
பெசன்ஸநோவின் அறிக்கை அபத்தங்களின் தொகுப்பு ஆகும். “இடது சார்பையும் கொண்டு” தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தையும் ஏற்க இயலாது. இதை பெசன்ஸநோ தடையற்ற சந்தைக்கு ஆதரவு கொடுக்கும் சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரு கூட்டு வைத்துக் கொள்வதற்குத்தான் கூறுகிறார். NPA ஓய்வூதியக் குறைப்புக்களை எதிர்ப்பதற்கு தன் சக்திகளை சோசலிஸ்ட் கட்சியுடன் இணைக்கும் என்னும் கூற்றைப் பொறுத்தவரை, இதன் பொருள் சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகளான Lyon Mayor Collomb போன்றோர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிசை உபயோகிப்போர், சார்க்கோசி அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க சுயாதீன அணிதிரள்வை எதிர்ப்போர் பற்றி குறை ஏதும் கூறக்கூடாது என்பதாகும்.
உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் மற்றும் தற்போதைய கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை ஒழுங்கமைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தின் மூலம் சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவப் போராடுமாறு வலியுறுத்துகிறது. |