WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னோடியில்லாத விதத்தில் சமூகநல வெட்டுக்களை அறிவிக்கிறது
By Ann Talbot
21 October 2010
Use
this version to print | Send
feedback
கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் இலையுதிர்கால செலவின மதிப்பாய்வு பிரிட்டனில் இதுவரை காணப்படாத பொதுநலச் செலவு வெட்டுக்களின் மிருகத்தனமான அளவை அறிமுகப்படுத்தியுள்ளது. வரவு-செலவுத் திட்டத்திலிருந்து 83 பில்லியன் பவுண்டுகள், அதாவது 128 பில்லியன் டொலர் நிதி மறுக்கப்படுகையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பொதுத் துறை வேலைகளும் மற்றும் ஒரு அரை மில்லியன் தனியார் துறை வேலைகளும் இதன் விளைவாக இல்லாதொழிக்கப்படும்.
பொதுநல சேவைகளுக்கான செலவுகள் 18 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் என்ற விதத்தில் செலவு மதிப்பு ஆவணத்தில் பட்டியலிட்டுள்ளபடி குறைக்கப்படும். இவை ஏற்கனவே அவசரக்கால வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டப்பட்டவற்றைவிட மேலதிகமாக குறைக்கப்படுவது ஆகும்.
இராணுவம் 8 சதவிகித சராசரி வெட்டை செலவுகளில் எதிர்கொள்கிறது. முக்கிய திட்டங்கள் குறைக்கப்படுகின்றன அல்லது மூலோபாயப் பாதுகாப்பு மறு ஆய்வின்கீழ் ஒத்திவைக்கப்படுகின்றன.
இந்த வெட்டுக்கள் முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்துவந்த வெட்டுக்களை தவிர, தனியாக செய்யப்படுபவை. தேர்தலுக்கு முன்பே தேசிய சுகாதாரத் துறை தொழிற்கட்சியின் செலவுத் திட்டங்களின் கீழ் 20 பில்லியன் பவுண்டுகளைக் குறைக்கத் திட்டமிட்டிருந்தது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் பிரிட்டனின் £109 பில்லியன் பற்றாக்குறையை ($172 பில்லியன்) தீவிரமாகக் குறைப்பதற்கு கூட்டணி அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவிகிதம் என்றுள்ள நிலையில் இது பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு நாடுகளிலேயே (OECD) அதிக பற்றாக்குறையும், ஐரோப்பாவில் அயர்லாந்திற்கு பின்னர் இரண்டாவது உயர்ந்த பற்றாக்குறை ஆகும். பிரிட்டனின் மொத்த நிகரக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6 சதவிகிதம் அல்லது £952 பில்லியன் என்று செப்டம்பர் மாதம் இருந்தது. அரசாங்கம் கடந்த மாதம் மட்டும் £952 பில்லியன் கடன் வாங்கியது. இதுவரை செப்டம்பர் மாதத்தில் அரசாங்கம் இவ்வளவு அதிகக் கடனை வாங்கியதே இல்லை.
இவ்வளவு உயர்ந்த அளவுக் கடன்கள் அரசாங்கத்தை பைனான்ஸியல் டைம்ஸ் புனைபெயரிட்டுள்ள விதத்தில் கருவூலப் பத்திரங்களை விற்கும் பெரும் முதலீட்டாளர்களான “பத்திரக் கண்காணிப்பாளர்களின்” அழுத்தத்தில் பொதுச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கங்களை கட்டாயப்படுத்தும் விதத்தில் நிறுத்துகின்றன. கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகியவை அனைத்தும் இத்தகைய சந்தை அழுத்தத்தின் கீழ் வந்து அதை எதிர்கொள்ளும் விதத்தில் கடுமையான சிக்கனத் திட்டங்களை மேற்கொண்டன. பிரிட்டனின் சிக்கன நடவடிக்கைத் தொகுப்பு இவற்றில் எதையும்விட மிகவும் கடுமையாக விகிதாசாரத்தில் உள்ளது. ஆனால் பத்திரச் சந்தைகளும் ஸ்டெர்லிங்கும் புதன்கிழமை அறிவிப்பிற்கு பின்னர்தான் உறுதியாயின.
திட்டத்தின் பல பகுதிகள் முன்னரே கசியவிடப்பட்டிருந்தன. அதையொட்டி சந்தைகள் இந்த நடவடிக்கைகள் பற்றி வியப்பு அடையவில்லை. இத்தகைய செலவு வெட்டுக்கள் பற்றிய காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. வணிகர்கள் இப்பொழுது சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் அறிவித்துள்ள வெட்டுக்களின் விரைவுத்தன்மை பிரிட்டனில் மற்றொரு மந்தநிலையைத் தூண்டிவிடக்கூடும் என்று கவலை கொண்டுள்ளனர்.
அனைத்து அரசாங்கத் துறைகளிலும் சராசரி வெட்டுத் தரம் 19 சதவிகிதம் என்று உள்ளது. ஆனால் சில துறைகள் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களை முகங்கொடுக்கும்.
உள்துறை அமைச்சரகம் அதன் செவவை 23 சதவிகிதம் குறைக்கும். வெளியுறவு அலுவலகம் 24 சதவிகிதம் குறைக்கும். உள்ளூர் அதிகாரங்கள் தாங்கள் மைய அரசாங்கத்திடமிருந்து பெறும் நிதியில் 28 சதவிகிதத்தை காணும். பல்கலைக்கழகங்கள் 40% வெட்டுக்களை எதிர்கொள்ளும். அரசாங்கம் ஒரு மாணவருக்குத் தான் கொடுக்கும் தொகையில் £9,000 குறைத்துவிடும். கலாச்சாரம், செய்தி ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை 41% வெட்டுக்களைச் செயல்படுத்தும். சமூக வீடுகள் திட்டத்திற்கான வரவு-செலவுத் திட்டடம் 60% குறைக்கப்படும்.
வீடுகள் பிரிவு மோசமான பாதிப்பிற்கு உட்படும் துறைகளில் ஒன்றாகும். புதிய சமூக உதவி வீடுகளில் குடியிருப்பவர்கள் அதிக வாடகை கொடுக்க நேரிடும். இது சந்தைத் தரங்களை 80 சதவிகிதத்திற்கு உயர்த்திவிடும். இதைத்தவிர அவர்கள் குறுகிய கால வாடகை ஒப்பந்தத்தைத்தான் கொள்ளுவரே அன்றி இப்பொழுது வாடகைக்கு இருப்பவர்கள் பெறும் நீண்ட காலப் பாதுகாப்பைப் பெறமுடியாது. பாதிப்பிற்கு உட்படக்கூடிய குறைவூதியம் பெறும், வீடுகள் தேவைப்படும் மக்கள் தனியார் வாடகை வீடுகள் பிரிவை நாடும் கட்டாயத்திற்கு உட்படுவர் அல்லது வீடுகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவர். வீடுகள் நலன்களில் குறைப்பு என்று இதுவரை குறைந்த வருமானம் உடையவர்களை வாடகை வீடுகளில் இருக்கச் செய்த நிலை இல்லாமல் போய் பல குடியிருப்பவர்களையும் வெளியேற்றும் அச்சுறுத்தலைக் கொடுக்கும்.
ஊனமுற்றவர்களும் மிருகத்தனமான வெட்டுக்களை எதிர்கொள்வர். உடல் அல்லது உள நலமின்மையினால் வேலை செய்ய முடியாதவர்களுக்கு உதவியளிக்கும் Employment and Supprt Allowance திட்டம் இப்பொழுது ஓராண்டிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அதற்குப் பின் ஊனமுற்றவர்கள் உடல் திறனுள்ள வேலையற்றவர்கள் பெறும் விதிகளின்படி வேலைகளை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர். இப்பொழுது பல இடங்களுக்குச் செல்லுவதற்கு உதவிநிதிகளைப் பெறும் ஊனமுற்றவர்கள் அந்தச் சலுகையை குடியிருப்புப் பாதுகாப்பில் இருந்தால் இழந்துவிடுவர். பலரும் இதையொட்டி திறனுடன் தங்கள் வீடுகளிலேயே சிறையில் அடைபட்டுக் கிடப்பது போல் இருப்பர்.
இயலாதவர்களுக்குக் கொடுக்கப்படும் நலன்களில் மாறுதல்கள் மற்றும் ஓய்வூதியத் தகுதி வயது 65ல் இருந்து 66க்கு 2010க்குள் உயர்த்தப்பட இருப்பதிலிருந்து மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்பிற்கு உட்படுவர். உள்ளூர் அதிகாரங்களின் செலவின வெட்டுக்களினால் அனைத்து இயலாத மற்றும் மூத்த குடிமக்கள், நகரவை கொடுக்கும் போக்குவரத்து, பகல் நேர மையங்கள், வீடு வசதியுள்ள பாராமரிப்பு நிலைய பாதுகாப்பு போன்ற பணிகளை நம்பி இருப்பவர்கள், கடும் பாதிப்பிற்கு உட்படுவர்.
தன்னுடைய வெட்டுக்களின் தொகுப்பு “நியாயமாக இருக்கும்” சுமை சமூகத்தில் அனைத்துப் பிரிவினராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கும் என்று அராங்கம் கூறுகிறது. உண்மையில் நிதித்துறை கொடுத்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்து முதலில் கணக்கிட்டுப்பார்க்கும்போது அவை சமூகத்தின் மிக வறிய 10 சதவிகிதத்தினர் இந்த செலவின மதிப்பினால் பெரும் பாதிக்கப்படுவர் என்று தெரிய வருகிறது. வெட்டுக்களில் பெரும்பகுதி குறைந்த, நடுத்தர வருமானம் உடைய மக்களின் தோள்களில்தான் விழும். The Institute of Fiscal Studies இந்த செலவின ஆய்வை “பிற்போக்கானது”, ஏனெனில், சமூகத்திலுள்ள வறியவர்கள் என்று இருக்கும் பாதிக்கும் மேலானவர்கள் மீது தான் பெரும்பாலான சுமை விழும் என்று கூறியுள்ளனர்.
பள்ளிகளுக்கு 0.1 சதவிகிதம் நிதியில் கூடுதலாகக் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உபரி சில பள்ளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதுகூட மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதைப் பொறுத்து இருக்கும். அதிக பணம் என்று கூறப்படுபவற்றில் பெரும்பாலானவை கல்வி வரவு-செலவுத் திட்டத்தில் பிற இடங்களில் குறைப்புக்களால் வரும் சேமிப்புக்களில் இருந்து வரும்.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களிலிருந்து கிட்டத்தட்ட 40,000 ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை இழக்கக் கூடும். 16 வயது முதல் 19 வயது வரை இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் நிதிகள் வெட்டப்படும். அவர்கள் கல்விப் பராமரிப்புப் படியை இழப்பர். இது அவர்களுக்கு பள்ளி அல்லது தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கற்பதற்கு ஊக்கம் கொடுக்கும் வடிவமைப்பு கொண்டிருந்தது. இளைஞர்கள், சிறுவர்கள் என இரு பிரிவினருமே இளைஞர் குழுக்கள், நாடகத் திட்டங்கள், உளவியல், சமூக ஆதரவு அமைப்புக்களுக்குக் உள்ளூராட்சி சபைகள் கொடுத்து வந்த நிதிகளின் குறைப்புக்களால் பெரும் பாதிப்பிற்கு உட்படுவர்.
அரசாங்கத்தின் கொள்கைகள் 1920 களில் இருந்த கொள்கைகளுக்கு ஒப்பானது என்று செய்தியாளர்கள் கருதுகின்றனர். மற்றவர்கள் இரண்டாவது உலகப் போரின்போது பிரிட்டன் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்கத் திணறியபோது எடுத்த சிக்கன நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுள்ளனர். இரண்டுமே பொருந்தாதவை. ஏனெனில் 1945ல் தொழிற்கட்சி அரசாங்கம் நிதியச் சிக்கனத்தை சுமத்திய நேரத்திலேயே பொதுநல அரசாங்கத் திட்டங்களையும் தோற்றுவித்தது. இரண்டாவது உலகப் போருக்கு முந்தைய காலத்தில் தற்காலத்திய பொதுநல அரசாங்கம் போல் இருந்தது இல்லை.
நிதிமந்திரி ஓஸ்போரினின் செலவின ஆய்வு என்பது பிரிட்டனில் 20ம் நூற்றாண்டுக் காலம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட சமூக நலன்களை அகற்றும் அல்லது தகர்க்கும் முயற்சியாகும். அவர் அறிவித்துள்ள நடவடிக்கைகள் பொதுநலச் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டிராமல், பொதுநல அரசாங்கம் என்ற கருத்தையே அழிப்பதாக உள்ளன.
நிதிய நெருக்கடி கொடுத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி அரசாங்கம் காலக் கடிகாரத்தை பின்திசையில் திருப்பும் சமூகப் பொறியியலில் ஒரு முக்கிய செயலில்தான் ஈடுபட்டுள்ளது. செலவின மதிப்பின் நோக்கம் கடந்த மூன்று தசாப்தங்களாக வளர்ந்துள்ள பெரும் சமத்துவமற்ற தரங்களை உறுதியாக அப்படியே இருத்தி, அமைப்புமயப்படுத்துவதாக உள்ளது. இப்பொழுது பிரிட்டனையும் உலகம் முழுவதையும் மேலாதிக்கத்தில் கொண்டுள்ள நிதியப் பிரபுத்துவத்தின் பொருளாதார, சமூக நலன்களைத்தான் இது வெளிப்படுத்தியுள்ளது.
செலவு மதிப்பீட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அளவு வரலாற்றளவில் முன்னோடியில்லாத தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால், தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இதற்கு கொடுக்கும் விடையிறுப்பும் அவ்வாறுதான் இருக்கிறது என்று கூறவேண்டும். நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே தொழிற்சங்கம் அமைத்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 500 முதல் 2,000 பேர்தான் கலந்து கொண்டனர். இன்னும் இதே போன்ற அதிக பரபரப்பு இல்லாத ஆர்ப்பாட்டங்கள்தான் நாடெங்கிலும் வரவிருக்கும் வாரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற்கட்சித் தலைவரான எட் மிலிபண்ட் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளக்கூட இல்லை. ஆனால் கலந்து கொள்ளுவதாக உறுதியளித்திருந்தார். தொழிற்கட்சிச் செய்தித் தொடர்பாளர்கள் பொதுநலச் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்திற்கு எதிர்கட்சி ஆதரவு கொடுக்கிறது என்று வலியுறுத்தியுள்ளனர். நிழல் நிதி மந்திரி ஆலன் ஜோன்சன் Disability Living Allowance கீழ் ஊனமுற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நலன்கள் மறுக்கப்படுவதை ஏற்றுள்ளார். மேலும் வறிய தொழிலாளர் குடும்பங்களுக்கு குழந்தைகள் வரிச்சலுகைகள் £2.4 பில்லியன் அகற்றப்படுவதற்கும் ஆதரவு கொடுத்துள்ளார்.
முன்னாள் தொழிற்கட்சி நிதிமந்திரியான ஆலிஸ்டர் டார்லிங் ஏற்கனவே 1980களில் மார்கரெட் தாட்சர் செய்திருந்த பொதுநலச் செலவுக் குறைப்புகளை விட ஆழ்ந்த வெட்டுக்கள் கொண்டுவரும் உறுதி கொண்டிருந்தார். தொழிற்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதுவும் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் குறைந்த பட்சம் 20 சதவிகித வெட்டுக்களைச் செய்திருக்கும்.
1920 சிக்கன நடவடிக்கைகள் இறுதியில் 1926 பொது வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்து, பிரிட்டனில் ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியபோது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கைத் தரங்களின் மீதான கூட்டணி அரசாங்கத்தின் தாக்குதல்களால் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தன.
மார்கரெட் தாட்சரின் கீழ் சுகாதார, சமூகப் பாதுகாப்பு மந்திரியாக இருந்த பௌலர் பிரபு, பின்னர் வேலைத்துறை மந்திரியாகவும் இருந்தவர், தொழிற்சங்க அமைதியின்மை பற்றி எச்சரித்திருந்தார்: அதாவது “ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள், தொழில்துறை நடவடிக்கைகள் ஆகியவை நிறைந்த கொந்தளிப்பான காலத்தை எதிர்நோக்குகிறோம்” என்றார். ஆனால் தொழிற்சங்கங்கள் அத்தகைய அச்சுறுத்தல்கள் எதையும் கொடுக்கவில்லை.
வங்கிகளுக்குப் பிணை எடுப்பு செய்ததால் ஏற்பட்ட செலவுகள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஒரு தசாப்தமாக நடக்கும் போரினால் ஏற்பட்ட செலவுகளால் நிகழ்ந்துள்ள வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை சரிசெய்யப்பட வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக் காட்டவில்லை. அத்தகைய குறைப்புக்கள் விரைவில் ஏற்பட்டால் அவை ஒரு மந்த நிலையை உருவாக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு.
செலவின மதிப்பீட்டிற்கு எதிர்ப்பு, தொழிற்கட்சி மூலமோ தொழிற்சங்கங்கள் மூலமோ வராது. வர்க்கப் போராட்டத்தை அடக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு கொண்டிருக்கும் அமைப்புக்களுக்கு எதிராக ஒரு புத்தெழுச்சி ஏற்படுவதின் மூலம்தான் எதிர்ப்புக்கள் நடத்தப்பட முடியும். |