WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஐரோப்பிய வேலைநிறுத்த அலையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவும்
Barry Grey
20 October 2010
Use
this version to print | Send
feedback
ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்க போராட்டங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் என்னும் முகப்புத் தோரணத்திற்குப் பின்னாலிருக்கும் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் - அது கன்சர்வேடிவ் அரசாங்கமாயினும் சரி அல்லது ஓரளவுக்கு “இடது” ஆயினும் சரி - பெருவாரியான மக்களின் பாரிய எதிர்ப்பை முழுமையாய் அலட்சியப்படுத்தி விட்டு வேலைகள் மற்றும் ஊதியங்களை வெட்டுகின்றன, சமூக வேலைத்திட்ட செலவினங்களைக் குறைக்கின்றன.
தேர்தல்கள், நாடாளுமன்ற விவாதங்கள் எல்லாம் கொள்கைகளில் எந்த தாக்கத்தையும் கொண்டிருப்பதில்லை. நிதி உயரடுக்கின் கட்டளையேற்று செயல்படும் அரசு, பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான வங்கியாளர்களின் நலன்களின் பொருட்டு வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரங்களை கிழித்துப் போடுகிறது. பண முதலைகளும், பெருநிறுவன நிர்வாகிகளும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பெரும் சமூக துயரங்களை ஊதியங்களை வெட்டுவதற்கும் தொழிலாள வர்க்க சுரண்டலை அதிகப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டு இச்சுரண்டலின் மூலம் முன்னை விடவும் அதிகமாகப் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களை தடுத்து வைக்க தொழிற்சங்கங்களின் பிரயத்தனங்களும் போதாமல் முதலாளித்துவ வர்க்கத்தின் திட்டங்களை சவால் செய்யக் கூடிய போராட்டங்கள் வெடிக்கின்ற இடங்களில், மிகப் பிரதானமாக பிரான்ஸ் மற்றும் கிரீஸில், வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உடைப்பதற்கு அரசு தனது அடக்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றது. பிரான்சில், பெட்ரோல் பணிமனைகளில் தொழிலாளர்களின் மறியல்களை உடைக்கவும், ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கும் சார்க்கோசி அரசாங்கம் கலகத் தடுப்பு போலிசாரைக் களமிறக்கி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருக்கிறது.
கிரீஸில், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தேர்தலில் வென்ற சமூக ஜனநாயகக் கட்சியின் PASOK அரசாங்கம் ஆகஸ்ட் மாதத்தில் பார ஊர்தி வேலைநிறுத்தத்தை உடைக்க இராணுவத்தை நிறுத்தியது. சென்ற வாரத்தில் இதே அரசாங்கம் தான், பாரிய வேலை இழப்புகளைக் கண்டித்து அக்ரோபோலிஸில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய கலாச்சார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலிசாரையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியது.
இந்த தாக்குதல்களை எல்லாம் கடந்து, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகி வருகிறது. பிரான்சில் இப்போது நடந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலை சர்வதேச வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தின் மிக அபிவிருத்தியுற்ற வெளிப்பாடு ஆகும். இது வரலாற்றில் பதியத்தக்க அளவுகளில் உலக அரசியல் சூழ்நிலையிலான ஒரு நகர்வைக் குறிக்கிறது. தொழிலாள வர்க்கம் மீண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான யுத்தத்தில் நுழைகிறது.
பிரான்சில் வேலைநிறுத்த இயக்கம் பரவியிருப்பதையும், கிரீஸில் ஒரு வேலைநிறுத்தம் வெடித்து நாட்டின் இரயில்வே அமைப்பையே முடக்கியிருப்பதையும், ரோமில் பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டித்து நூறாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதையும் சமீப நாட்கள் கண்டிருக்கின்றன.
ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்தில் ஒருநாள் வேலைநிறுத்தங்களும் பாரிய ஆர்ப்பாட்டங்களும் நடந்தேறி இருக்கின்றன, ரோமானியாவில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, சீனாவில் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் மற்றும் இந்தியா, கம்போடியா மற்றும் பங்களாதேஷிலும் தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களும் நடந்துள்ளன.
பிரிட்டனில், கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் வரலாறு கண்டிராத அளவுக்கு 83 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கான வெட்டுகளைத் திணிக்கிறது, இதன் பொருள் குறைந்தபட்சம் பொதுத் துறையில் 500,000 வேலைகளும் தனியார் துறையில் இன்னுமொரு 500,000 வேலைகளும் போகும் என்பது.
அரசாங்க-பெருநிறுவனத் தாக்குதல்களை எதிர்க்க பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர், ஆனால் இந்த தருணம் வரை தொழிற்சங்கங்களின் துரோகம் தான் அவற்றை நடக்க விடாது செய்துள்ளது, இந்த தொழிற்சங்கங்கள் எந்த தீவிரமான வேலைநிறுத்த நடவடிக்கையையோ அல்லது சமூக அணிதிரட்டலையோ எதிர்க்கின்றன. லண்டன் சுரங்க ரயில் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்தையும் பாரிய வேலையிழப்புகளையும் எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர், அது அரசாங்கத்தை வேலைநிறுத்த-தடுப்பு சட்டத்தை வரைய கொண்டுசென்றுள்ளது. பிபிசி மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களோ அழைப்பு விடுக்க மறுத்துள்ளனர்.
அமெரிக்காவில், புஷ்ஷின் பெருநிறுவன-ஆதரவு, இராணுவவாதக் கொள்கைகளுக்கு உழைக்கும் மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஏற்பட்டிருந்த தீவிர வெறுப்பிற்கு விண்ணப்பம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ஒபாமா, சீரான வலது-சாரி, தொழிலாளர்-விரோத கொள்கைகளை மேற்கொண்டு தனதுக்கு வாக்களித்த மில்லியன்கணக்கான மக்களின் பிரமைகளை நொருக்கிக் கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகையும் ஜனநாயகக் கட்சியும் எந்த வகையிலும் தங்களை பெருநிறுவன-நிதி உயர் தட்டினரிடம் இருந்து தள்ளி நிறுத்திக் கொள்ள முடியாதிருப்பது கடந்த வாரத்தில், அதாவது நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க வெறும் இருவாரங்களுக்கு மட்டுமே முந்தையதொரு காலத்தில், நிர்வாகத்தின் செயல்பாடுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
வளைகுடா எண்ணெய் அகழ்வுக்கு இருந்த தன்விருப்பத் தடையை நிர்வாகம் அகற்றி விட்டது, சமூக பாதுகாப்பு பெறுவோருக்கு வாழ்க்கை செலவின அதிகரிப்புத் தொகை ஏதும் இல்லை என்று அறிவித்து விட்டது, அத்துடன் வீட்டு ஏலங்களுக்கு தடை விதிப்பதற்கான அழைப்புகளை நிராகரித்து விட்டது.
அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பானது ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் முன்னெடுக்கும் ஆரம்ப நிலை கிளர்ச்சியில் வெளிப்பாடு காண்கிறது. சென்ற ஆண்டில் இத்தொழிற்சங்கம், வாகனத் தயாரிப்பு முதலாளிகள் மற்றும் ஒபாமா நிர்வாகம் ஆகிய முத்தரப்பும் பேசிக் கொண்டுவந்த ஏற்பாடான, புதிதாக வேலையிலமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதிய வெட்டு என்பதை இத்துறைக்கான புதிய அடிப்படை நிர்ணயமாக மாற்ற இச்சங்கம் தலைப்படுகிறது.
மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் காட்டும் அலட்சியம் செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான பிரெஞ்சு நிகழ்வுகள் குறித்த ஒரு தலையங்கத்தில் சுருக்கமாய் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான சார்க்கோசியின் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே பரந்த ஆதரவு இருப்பதை “தாராளவாத” ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் முக்கிய அங்கம் ஒப்புக் கொண்டது. “பரவலான அசவுகரியங்களும் பொருளாதார இழப்புகளும் இருந்தபோதிலும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவே பொதுமக்களின் உணர்வு இருந்து வருகிறது” என்று அது எழுதியது. (பிரெஞ்சு கருத்துக்கணிப்புகள் வேலைநிறுத்தம் செய்பவர்களை 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரிப்பதைக் காட்டுகின்றன).
இந்த நிலையும் கூட ”இந்த வாரத்தில் ஓய்வு வயது சீர்திருத்த மசோதாவுக்கு பிரான்சு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்” என்று வலியுறுத்துவதில் இருந்து டைம்ஸ் நாளிதழை தடுத்து வைக்க முடியவில்லை. அது மேலும் கூறுகிறது, “வயது 62 ஆக உயர்த்தப்பட்ட பின்னரும் கூட, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாக இன்னும் பல வலிமிகுந்த திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதாய் இருக்கும்.”
உலகெங்கிலுமான நூறு மில்லியன்கணக்கான மக்களின் அனுபவத்தில் இருந்து எழுவது என்னவென்றால், முதலாளித்துவ அமைப்புமுறை அவர்களது அடிப்படைத் தேவைகளுக்கு இணக்கமற்றதாய் உள்ளது என்பதே. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையின் மீது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் செலுத்தும் சர்வாதிகாரத்தை மறைக்கும் இலையாக இருப்பதற்கு சற்று கூடுதலான ஒன்றாகத் தான் இருக்கிறது என்பதை வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அரசியல் முடிவுகள் வரையப்பட்டாக வேண்டும். வேலைகள், கண்ணியமான வாழ்க்கைத் தரங்கள், வீட்டுவசதி, கல்வி, ஆரோக்கியம் மற்றும் அனைத்து பிற சமூக உரிமைகளுக்குமான போராட்டம் என்பது முதலாளித்துவ அரசுக்கு எதிரானதொரு அரசியல் போராட்டம் ஆகும். இது அரசினை இடது பக்கமாய் தள்ளுவது குறித்த, அதனைச் சீர்திருத்துவது குறித்த, அல்லது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை இன்னொன்றைக் கொண்டு இடம்பெயர்ப்பது குறித்த பிரச்சினை அல்ல, மாறாக அதனை உழைக்கும் வெகுஜனங்களை புரட்சிகரரீதியாக அணிதிரட்டுவதன் மூலமாக உற்பத்தி சாதனங்கள் சமூக உடைமைகளாயிருத்தல் மற்றும் தொழிலாளர்’ ஜனநாயகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு தொழிலாளர்’ அரசைக் கொண்டு இடம்பெயர்ப்பது குறித்த பிரச்சினையாகும்.
தொழிலாளர்’ அதிகாரத்திற்கான போராட்டமானது முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டங்களில் இருந்து உயிர்ப்புடனும் தவிர்க்கவியலாமலும் எழுகிறது. இது, தொழிலாள வர்க்கத்தை நடப்பு அரசியல் கட்டமைப்புமுறைடன் கட்டிப் போட்டு அதனை அதிகாரத்திற்கான சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுப்பதில் இருந்து தடுக்க தலைப்படுகின்ற தொழிற்சங்கங்கள், உத்தியோகபூர்வ “இடது” கட்சிகள் மற்றும் பிரான்சில் இருக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற பல்வேறு நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராய், நனவான முறையில் நடத்தப்பட வேண்டும்.
மேலும் இந்த போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம் ஆகும். ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் எதிர்கொள்வது ஒரே தாக்குதல்களைத் தான், அவர்கள் போரிடுவது ஒரே எதிரியுடன் தான். பல்வேறு நாடுகளது ஆளும் உயர்தட்டினரிடையேயான மோதல்கள் எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும், நெருக்கடியின் முழு விலையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். சர்வதேச நிதி மூலதனம் தொழிலாளர்கள் மீது ஒரு ஒருங்கிணைப்பான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களது போராட்டங்களை தேச எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதன் மூலமும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதன் மூலமும் தொழிலாளர்கள் எதிர்த்துப் போராட வேண்டும். |