WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
பிரெஞ்சு வேலைநிறுத்த அலை: வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்
Joseph Kishore
19 October 2010
Use
this version to print | Send
feedback
ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக பிரான்சில் நடந்து வரும் வேலைநிறுத்தங்களும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் முதலாளித்துவ வர்க்கத்தால் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது நிகழ்த்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்பில் சர்வதேச தொழிலாள வர்க்கம் வர்க்கப் போராட்டத்தில் நுழையும் ஒரு புதிய கட்டத்தின் சமீபத்திய மற்றும் மிக அபிவிருத்தியுற்ற வெளிப்பாடுகளாகும். தொழிலாள வர்க்கம் பயனற்ற ஒரு சக்தி என்றும் வர்க்க போராட்டம் என்பது கடந்தகாலத்திற்குரிய மிச்சசொச்சம் என்றும் கூறும் அனைத்து கூற்றுகளுக்கும் இந்த நிகழ்வுகள் ஒரு உடைத்தெறியும் அடியைக் கொடுத்துள்ளன. முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான நவீன சமூகத்தின் அடிப்படைப் பிளவானது உலக முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று நிலைமுறிவு நிலைமைகளின் கீழ் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எவ்விதத்தில் பார்த்தாலும், ஓய்வூதிய வயதை உயர்த்தும் சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தங்கள் விரிவடைந்து செல்கின்றன. வாரத் தொடக்கத்தில், பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மேற்கொண்டதொரு வேலைநிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்தன. பாரவூர்தி ஓட்டுநர்களும் இணைந்ததை அடுத்து, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மந்தமானது. மாணவர் ஆர்ப்பாட்டங்களால் நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. செவ்வாயன்று பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்படுகின்றது, சென்ற வாரத்தில் இதே வகையான போராட்டங்களின் நாட்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தெருக்களில் இறக்கின.
வேலை நிறுத்த நடவடிக்கையின் விரிவாக்கம் என்பது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களின் மறியல்களை உடைப்பதற்கு கலகத் தடுப்பு போலிசாரை பயன்படுத்தியது உட்பட சார்க்கோசி அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பு ஆகும். போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் தமது சமூக சக்தியை பிரயோகிப்பதற்கும் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், வெகுஜன நடவடிக்கைகளை முடக்கத் தலைப்படும் தொழிற்சங்கங்களுடன் முன்னெப்போதையும் விட மிகவும் வெளிப்பட்டதொரு மோதலுக்கு அவர்களைக் கொண்டு வருகின்றன.
இந்த வேலைநிறுத்தங்களுக்கு பிரெஞ்சு மக்களின் பெருவாரியான ஆதரவு உள்ளது. 70 சதவீத மக்கள் வேலைநிறுத்தம் செய்வோருக்கு ஆதரவாய் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. 18-24 வயதான இளைஞரிடையே இந்த ஆதரவு 84 சதவீதம் வரை உயர்வாக உள்ளது. சார்க்கோசியின் புகழோ, இதற்கு நேரெதிர்வீதத்தில், பதிவுசெய்துவைக்க கூடியளவிற்கு குறைந்து போயுள்ளது.
பிரெஞ்சு நிகழ்வுகள் ஒரு உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். ஒவ்வொரு நாட்டிலும் பெருகி வரும் எதிர்ப்பு மனோநிலையின் ஒரு பாகமே இவை. ஐரோப்பாவில், இளவேனில் காலத்தில் ஏற்பட்ட கடன் நெருக்கடியைத் தொடர்ந்து கண்டம் முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிய முறையில் தீர்மானமான எதிர்ப்பு காணப்படுகிறது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் ஒருநாள் பொதுவேலை நிறுத்தங்களும் இதில் அடங்கும். இத்தாலியில் வார இறுதி சமயத்தில், நூறாயிரக்கணக்கான மக்கள் ரோமில் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து பேரணி நடத்தினர்.
தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட்டங்களுக்குள் மறுஎழுச்சி கொள்வதென்பது ஐரோப்பாவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களால் சீனா உலுக்கப்பட்டுள்ளது, கம்போடியா மற்றும் பங்களாதேஷில் ஜவுளித் தொழிலாளர்கள் பாரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தியாவில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போலிஸ் அடக்குமுறையையும் தாண்டி வேலைநிறுத்தம் செய்துள்ளனர். அமெரிக்காவில், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் (UAW) ஆகியவை தமக்குள் பேசிக் கொணரப்பட்டிருக்கும் மிருகத்தனமான சம்பள வெட்டுகளுக்கு எதிராக வாகனத் தொழிலாளர்களுக்குள் கிளர்ச்சி குமுறிக் கொண்டிருக்கின்றது.
ஆளும் வர்க்கம் பின்வாங்குவதாய் இல்லை. வெட்டுகள் முன்னெடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறி விடாப்படியாக இருப்பது தான் பரவும் வேலைநிறுத்தங்களுக்கு சார்க்கோசி அரசாங்கத்தின் பதிலிறுப்பாய் உள்ளது. சார்க்கோசிக்குப் பின்னால், இந்த வெட்டுகளை செயல்படுத்தாது போனால் பிரெஞ்சு கடன் மீதான கடனாளி தரநிலை மதிப்பீட்டு பிரச்சினைக்குள்ளாகும் என்று பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வங்கிகள் எச்சரித்துள்ளன. உலக அளவில், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கான மொத்த விலையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு நிதி மற்றும் பெருநிறுவன உயர் தட்டுகள் தீர்மானத்துடன் உள்ளன.
2008 செப்டம்பரில் நிகழ்ந்த நிதித்துறை பீதிக்குப் பின் உலகப் பொருளாதாரம் அமைதியான வழியில் மறுஸ்திரமுறாது என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவானது சமூக எழுச்சி மற்றும் புரட்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்குக் கட்டியம் கூறுகிறது.
தொழிலாள வர்க்கத்திற்கும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் அரசுக்குமான பகிரங்க மோதல் ஒவ்வொரு நாட்டிலும் அதிகாரம் குறித்த கேள்வியை முன்நிறுத்துகிறது. சமூகம் யாருடைய நலன்களுக்காக இயங்க வேண்டும்? உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமைகளாய் இருப்பதன் அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தொடர்ந்த ஆட்சி என்பது மக்கள் முன்னெப்போதையும் விட வறுமைக்குள்ளாவது, ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது, மற்றும் மிகப்பரந்த மிகக் குருதிதோய்ந்த இராணுவ ஊழித்தீ ஆகியவற்றையே குறித்து நிற்கிறது.
தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுத்து உலகப் பொருளாதாரத்தை சமூகத்தின் தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்து, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் செலுத்தும் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே இதற்கான மாற்று. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பிரச்சினை நீண்டதொலைவில் இருக்கும் எதிர்காலத்திற்கான ஒன்று அல்ல. உயிர்ப்புடனும் அவசியமான வகையிலும் வர்க்கப் போராட்டத்தின் புதிய கட்டத்தில் இருந்து அது எழுகிறது. பிரெஞ்சு தொழிலாளர்களின் கோரிக்கைகளும் சர்வதேசரீதியாக அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளும் வேறு எந்த வழியிலும் பூர்த்தி செய்யப்பட முடியாது.
பிரெஞ்சு தொழிலாளர்களின் நலன்களில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மிகப் பெரும் தடையாக இருப்பது பலவீனமாகவும் தனிமைப்பட்டும் இருக்கும் சார்க்கோசி அரசாங்கம் அல்ல. மாறாக தொழிற்சங்க தலைமையும் சோலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மற்ற பிற “இடது” நடுத்தர-வர்க்க அமைப்புகளில் இருக்கும் அதன் கூட்டாளிகளும் தான். இவையே எதிர்ப்பை முதலாளித்துவ கட்டமைமைப்புமுறை மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்குள்ளும் கட்டுப்படுத்தி வைக்க வேலை செய்கின்றன. அதிகாரத்துக்கான ஒரு அரசியல் போராட்டத்திற்கான பாதையை தடை செய்வதன் மூலம், இவை போராட்டத்தை சிதறடிப்பதற்கும் தொழிலாளர்களை விரக்தியுறச் செய்வதற்கும் இயங்குகின்றன.
பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியானாலும் சரி (இக்கட்சி தனது மிக சமீபத்திய அறிக்கையில் வேலைநிறுத்தங்களின் விளைவாக, “அரசாங்கம் சரணாகதி அடைய தள்ளப்படும்” என்று கூறிக் கொள்கிறது) ஜேர்மனியின் இடது கட்சி ஆனாலும் சரி கிரீஸில் SYRIZA அல்லது அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு ஆனாலும் சரி, இந்த அனைத்து போக்குகளின் நோக்கமும் ஒன்று தான்: அது தொழிலாளர்களை அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதில் இருந்தும், அவர்கள் தங்களது வலிமையைத் திரட்டி அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதில் இருந்தும் தடுப்பதுதான்.
பிரான்சில் போராட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால், அது தொழிற்சங்கங்களின் இறுக்கும் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு ஒரு சுயாதீனமான பாதையை எடுத்தாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளின் பரந்த ஒற்றுமைக்கும், அரசாங்கத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தொழிற்துறை மற்றும் அரசியல் அடிப்படையலான எதிர்ப்பிற்கு மாணவர்கள், இளைஞர்கள், தொழில்நிபுணர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நடுத்தர வர்க்க அடுக்குகள் செயலூக்கத்துடன் பங்குபெறுவதற்கும் போராட போராட்டத்திற்கான புதிய, ஜனநாயக அமைப்புகளான போராட்ட நடவடிக்கைக் குழுக்களை தொழிலாளர்கள் கட்ட வேண்டும். சார்க்கோசி அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து இறக்கி விட்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாளர் அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்ப்பதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்தை அபிவிருத்தி செய்ய போராட்ட நடவடிக்கைக் குழுக்கள் பரப்புரை செய்யும்.
தெளிவாக உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை கொண்டு இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய தலைமையைக் கட்டுவது தான் முக்கிய பிரச்சினை ஆகும். 72 வருடங்களுக்கு முன்பாக நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியது இன்று முழுவீச்சில் பொருந்துவதாய் இருக்கிறது: மனிதகுலத்தின் நெருக்கடி புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி தீர்க்கப்பட ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவது அவசியமாகும்.
|