WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச ஜூரிகள் சபையின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது
By Sampath Perera
7 October 2010
Use
this version to print | Send
feedback
சர்வதேச ஜூரிகள் சபை (International Commission of Jurists -ICJ) கடந்த மாதக் கடைசியில் வெளியிட்ட அறிக்கை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டிருத்திருக்கின்றது.
2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியைத் தொடர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த ஒட்டுமொத்த மக்களையும் -அரை மில்லியனுக்கும் மேலான, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை- நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அடைத்து வைத்தது. இந்த வெகுஜன தடுப்பு முகாம்களில் இருந்த இளைஞர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை என்பனவற்றால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
"புலிச் சந்தேக நபர்களாக" குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், இராணுவத்திடம் நேரடியாக சரணடைந்த மற்றவர்களுடன் சேர்த்து மேலதிக விசாரணைக்காகவும் மற்றும் புனர்வாழ்வு என்ற பெயரிலும் இரகசிய சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கானவர்கள், நாட்டின் கொடுமையான அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய தடுப்பு நிலையங்கள் சித்திரவதையைப் பயன்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெறுவதில் பேர்போனவை.
"சட்டப்பூர்வமான வரையறைகளுக்கு அப்பால்: புலி சந்தேக நபர்கள் என்ற பெயரில் இலங்கையில் வெகுஜன தடுத்து வைப்பு" என்று தலைப்பிட்டிருந்த சர்வதேச ஜூரிகள் சபை (ஐ.சி.ஜே.) அறிக்கை, கவனமாக எழுதப்பட்டிருந்ததோடு "சரியான நடவடிக்கைகளை" எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. எவ்வாறு இருப்பினும், "சரணடைந்தவர்கள்" மற்றும் "புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களது" அடிப்படை ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு மீறுவது, சர்வதேச சட்டத்தை அடிப்படையில் மீறுவதாகும் என்பதை அது தெளிவாக்கியுள்ளது.
அறிக்கையின்படி குறைந்தபட்சம் கடந்த வருடம் டிசம்பர் வரை புலி சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடந்தது. பல எண்ணிக்கையான கைதிகளைப் பற்றி உறுதியாத் தெரியவில்லை என இந்த அறிக்கை சுட்டிக் காட்டுவதோடு தெளிவான முரண்பாடுகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கடந்த நவம்பரில், இலங்கையின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம், 10,992 பேர் "சரணடைந்ததாக" அறிவித்திருந்தார். பின்னர் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அந்த எண்ணிக்கையை 10,732 பேர் என்று அறிவித்திருந்தார். ஆனால் கடந்த பெப்ரவரியில், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறினார். இந்த எண்ணிக்கைகள் கணக்கிடப்படவில்லை.
ஐ.சி.ஜே. 12,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அவர்களில் 1,300 பேர் தீவிர புலி அங்கத்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு, குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்கிறார்கள். குறைந்தபட்சம் 8,000 வரையானவர்கள் இன்னமும் "புனர்வாழ்வுக்காக" குறைந்தது டசின்கணக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் சுமார் 3,000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளின் உண்மையான நிலமைகள் தெரிவில்லை மற்றும் அவர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவுக்கு (ஐ.சி.ஆர்.சி) கூட சில தடுப்பு முகாம்களுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஒரு சிறைக்கும் செல்வதற்கு ஐ.சி.ஜே. க்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. கிடைத்த சிறிய தகவல்களின் அடிப்படையில், அந்தச் சூழ்நிலை மிகவும் கடுமையானதும், உடல்நலத்துக்கு ஒவ்வாததுமாகும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளே வழங்கப்படுகின்றன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கைதிகள் அரசாங்க படைகளிடம் சரணடைந்தனர் என்ற அரசாங்கத்தின் கூற்றை ஐ.சி.ஜே. சவால் செய்வதோடு, இடம்பெற்ற சரணடைவுகளின் சுயவிருப்பத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. புலிகளுடன் அற்ப தொடர்பே இருந்திருந்தாலும், பின்னால் வரும் அழுத்தங்களை தவிர்ப்பதற்காக, தங்கள் பிள்ளைகளைச் "சரணடைவதற்கு" பல பெற்றோர்கள் ஊக்குவித்தனர் என்று அந்த அறிக்கை ஐநா அறிக்கையொன்றை மேற்கோள் காட்டுகின்றது. புலிகளின் "கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் கட்டாய உழைப்பு என்ற கொள்கையின்" விளைவாக, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பொது மக்கள் புலிகளுடன் ஏதாவதொரு தொடர்பை கொண்டிருக்க நேர்ந்தது என ஐ.சி.ஜே. குறிப்பிடுகின்றது.
ஆயிரக் கணக்கான மக்கள் எந்தவிதமான விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்துவதற்காக தொடரும் அவசரகால நிலைமை மற்றும் பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாடும் உதவுகின்றன. கடந்த 2005ல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அவசரகால நிலமைகளைத் தொடர்ந்ததுடன், 2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதன் விதிகளை மேலும் வலிமைப்படுத்தினார். யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னரும் அவசரகால நிலை இன்னும் வலிமையாக இருக்கிறது.
அவசரகாலச் சட்டங்கள், "குற்றம் செய்திருக்கலாம் என நம்பப்படும் ஒருவரை" ஒரு தவிர்ப்பு நடவடிக்கையாக ஒரு வருடத்துக்கும் மேல் தடுத்து வைக்க பாதுகாப்பு படைகளுக்கு அனுமதியளிக்கின்றன. அந்த அறிக்கை, சட்டங்களின் கொடூர தன்மைகளை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது: "இத்தகைய தடுத்து வைத்தல்களைப் பற்றி நீதவான்களுக்கு அறிவிக்கவேண்டி இருக்கும் அதே வேளை, அவற்றின் விதிகள் நீதித்துறை மீளாய்வுகளை உள்ளடக்காமல், இத்தகைய எல்லா தடுத்து வைத்தல்களும் சட்டபூர்வமானவை என்று பிரகடனம் செய்வதோடு, சட்டமா அதிபரின் ஒப்புதல் இன்றி பிணையில் விடும் அதிகாரத்தை நீதிபதிக்கு வழங்க மறுக்கின்றது."
இந்த வருட மே மாதத்தில் தடுத்து வைப்பதற்கான காலம் 3 மாதங்களுக்கு குறைக்கப்பட்டது மட்டுமே இந்த அவசரகாலச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். இத்தகைய அவசரகாலச் சட்டங்களின் கீழ் சுமார் 8,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, "உலகிலேயே எங்குமில்லாதளவு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான வெகுஜன தடுத்து வைப்பாக" இருக்கக் கூடும் என அந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது.
அவசரகால விதிகளுக்கு புறம்பாகவும், ஒருவரை எந்தவிதமான விசாரணையும் இன்றி 18 மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்துக்கு அனுமதி வழங்குகிறது. இராணுவம் மற்றும் பொலிஸ், "சட்டவிரோதமான நடவடிக்கைகளில்" தொடர்பு வைத்துள்ளார் என்ற சாதாரண சந்தேகத்தின் அடிப்படையில் பொது மக்களை கைது செய்வதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன. இந்தச் சட்டம், ஒரு செயலுக்கும் சந்தேகிக்கப்படுபவருக்கும் இடையிலான தொடர்பு மிகச் சிறியதாக இருந்தாலும் அல்லது மிகத் தொலைவானதாக இருந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல், மற்றும் செயலில் பங்கெடுப்பதற்கு கைதிக்கு எண்ணம் இருந்ததா அல்லது சம்பவம் பற்றி அவருக்கு தெரிந்திருந்ததா என்பதைக் கூட கருதாமல் ஆட்களை கைது செய்வதற்கு வழிவகுக்கின்றது என ஐ.சி.ஜே. தெரிவிக்கின்றது.
"இராணுவம் 'சரணடைந்தவர்கள்' ஒருமுறை பதிவு செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்படுவர் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், மாறாக, சரணடைந்தவர்கள் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது. எல்லா கைதிகளும் சரணடைதல் பற்றிய ஆவணத்தில் கையெழுத்து இட்டார்களா என்பது தெளிவில்லை. ஆவணங்களில் கையெழுத்து வைத்திருந்தாலும், அது சிங்களத்தில் இருப்பதால் அதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. கைதிகள் தமிழ் பேசுவவர்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சிங்களம் வாசிக்க முடியாது.
எதேச்சதிகாரமான கைதுகள் "வழமையானதாக மாறியுள்ளதோடு பரந்தளவிலான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன் சாதாரண குற்றவியல் சட்ட முறைமையை கீழறுப்தாகவும் உள்ளது" என அந்த அறிக்கை கண்டுள்ளது. அது "அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கதவாத எதிர்ப்பு விதிகள்... சர்வதேச சட்டங்களை அலட்சியம் செய்பவையாகவும் மற்றும் கைதிகளுக்கு சட்ட இருட்டடிப்பு செய்பவையாகவும் உள்ளன" என தெரிவிக்கின்றது.
இலங்கைக்கான "பொருத்தமான சட்ட அரசாங்கமாக" சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் உள்ளதோடு அரசாங்கம் மனித உரிமைகளை மீறுகின்றது. அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை மற்றும் அதன் தேர்வு செய்யப்பட்ட ஒழுங்குகளை அலட்சியம் செய்துள்ளது, என ஐ.சி.ஜே. வாதிக்கின்றது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ரோம சட்டவிதிகளை மேற்கோள் காட்டும் இந்த அறிக்கை, "சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறி, சிறை வைத்தல் மற்றும் சரீர சுதந்திரத்தை பறிப்பதும்" "எந்தவொரு பொது ஜனத்துக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்ட பரந்த அல்லது திட்டமிட்ட தாக்குதலின் பாகமாக" இழைக்கப்படும் போது, அது "மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்துக்கு" சமமானதாகும், என தெரிவிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை ஜனநாய உரிமகைள் மீதான திட்டமிட்ட துஷ்பிரயோகம் பற்றிய ஒரு நோக்கின் அதிகாரபூர்வமான விவரத்தை இந்த அறிக்கை வழங்குகின்றது. தனது அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்த விதத்தையும் மற்றும் அதன் யுத்தக் குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகவும், தொடரும் சர்வதேச விமர்சனங்களை திசைதிருப்புவதற்காகவும், இராஜபக்ஷவால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனப்படுவதின் வெட்கங்கெட்ட பண்புகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஐ.சி.ஜே. யின் அறிக்கையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. பொருளாதார அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, "சாதாரண குற்றவாளிகளைப் போல் புலி சந்தேக நபர்களை நடத்த முடியாது" என பி.பி.சி.க்கு தெரிவித்தார். "இன்னமும் பெருமளவாக இருக்கின்ற ஏனையவர்களைப் பற்றி கைதிகள் தகவல்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் பற்றி மேலும் தகவல்களை கறந்து எடுப்பதற்கு அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இந்த "விளக்கங்கள்" புலி சந்தேக நபர்கள் "புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்ற உத்தியோகபூர்வ பிரச்சாரத்துடன் முரண்படுவதோடு, இராஜபக்ஷ அரசாங்கம் அதன் விசாரணை மற்றும் சித்திரவதை ஆட்சியை தொடர இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. "பயங்கரவாதத்துக்கு எதிரான போரை" முன்னெடுக்கும் சாக்குப் போக்கில், பாதுகாப்புப் படைகள் முன்னைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பெரும் தொகையான நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்களை ஸ்தாபித்துவருகின்றன. இரகசிய சிறைச்சாலைகளில் எதேச்சதிகராமாக தடுத்துவைக்கும் முறைமை ஒரு தேவையான அங்கமாக இருக்கின்றது. |