WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
முக்கிய ஜேர்மனிய அரசியல்வாதிகள் திலோ சராசின்னின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை எடுத்துக் கொள்கின்றனர்
By Justus Leicht and Peter Schwarz
15 October 2010
Use
this version to print | Send
feedback
ஜேர்மனியின் இரு முக்கிய பழைமைவாத கட்சிகளான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), மற்றும் பவேரியத் தளத்தைக் கொண்ட கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) ஆகியவை சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) திலோ சராஸின் சமீபத்தில் வெளியிட்ட ஜேர்மனி தன்னையே அழித்துக் கொள்கிறது என்ற நூலில் ஆரம்பித்த முஸ்லிம்கள் எதிர்ப்பு பிரச்சாரங்களை தாங்களும் மேற்கொண்டுள்ளன. முக்கியமான பழைமைவாதக் கட்சி தலைவர்கள், CDU, CSU தலைவர்களான சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஹொர்ஸ்ட் ஸீஹோபர் ஆகியோரும் முஸ்லிம் நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களை அவதூறாகப் பேசுவதுடன் அடிப்படை உரிமைகளான சிந்தனை மற்றும் சமய வழிபாட்டு உரிமைகளையும் சவாலுக்கு அழைத்துள்ளனர்.
இச்சமீபத்திய இஸ்லாமிய-எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு அரங்கு ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்டியான் வொல்பினால் (CDU) கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அக்டோபர் 3ம் தேதி ஜேர்மனிய மறு ஒற்றுமையின் 20 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விழாவில் பேசியபோது ஒருமைப்பாட்டுப் பிரச்சினை பற்றி நீண்ட நேரம் பேசினார்; இது சராஸினின் விவாதத்தின்போது அவர் மௌனமாக உள்ளார் என்ற செய்தி ஊடகத்தின் கடும் குறைகூறலுக்குப் பின்னர் பேசப்பட்டது.
வொல்ப் அனைவரையும் திருப்திப்படுத்த முயன்றார். ஒருபுறம் அவர் “நம் கிறிஸ்துவ-யூத வரலாறு” பற்றி உறுதிப்படுத்தி “பல்கலாச்சார நப்பாசைகளுக்குக்கு” எதிராகச் சாடினார்; இவை “நீண்ட காலத்திற்கு அரசாங்க உதவியை நம்பியிருத்தல், குற்ற விகிதங்கள், ஆழ்ந்த ஆண்பால் உயர்கருத்து, கல்வி வாய்ப்புக்களைப் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் ஒழுங்காகச் செயல்படாத நிலை ஆகியவற்றில் இருந்து வரும் பிரச்சினைகளை” தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றார். மறுபுறமோ அவர் கலாச்சார வேற்றுமையின் தேவை ஏற்றுக்கொண்டு, “உலகெங்கிலும் இருந்து நம்மை நாடி வருபவர்கள் அனைவரிடமும் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என'' பேசினார்.
ஜேர்மனியராக இருப்பது என்பது ஒரு “கடவுச்சீட்டு, ஒரு குடும்பவரலாறு, சமய நம்பிக்கை” இவற்றுடன் மட்டுப்படுத்தப்படுத்தப்படக்கூடாது. கிறிஸ்துவ சமயமும் யூத சமயமும் சந்தேகத்திற்கிடமின்றி ஜேர்மனியைச் சேர்ந்தவை; ஆனால் “அதேவேளை இஸ்லாமும் ஜேர்மனியைச் சேர்ந்ததுதான்” என்றார் வொல்ப்.
இந்தக் கடைசிச் சொற்றடருக்கு உடனடியாக CDU மற்றும் அதன் சகோதரிக்கட்சி CSU இரண்டிடம் இருந்தும் எதிர்ப்புப் புயல் கிளம்பியது. அது ஒரு உண்மையை மட்டுமே உறுதியாகக் கூறியிருந்தது, அதாவது உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி 4 மில்லியன் முஸ்லிம்கள் ஜேர்மனியில் வசிக்கின்றனர், பலரும் ஒரு ஜேர்மனிய கடவுச்சீட்டு வைத்துள்ளனர் என்பதே அது.
கூட்டாட்சி உள்துறை மந்திரி தோமஸ் டி மைசியர் (CDU) இஸ்லாமிற்கு கிறிஸ்துவ-யூத சமயங்கள், கலாச்சார கருத்துக்கு ஒப்ப அந்தஸ்து அளிக்கும் வொல்பின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். CSUவின் பிரதிநிதி நோர்பெர்ட் கைஸ், “கிறிஸ்துவ மேலை நாடுகள் தொடர்ந்து கிறிஸ்துவ நாடுகளாக இருக்க வேண்டும் என்று நாம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று அறிவித்தார். CDU/CSU பாராளுமன்றப் பிரிவின் தலைவர் வொல்க்கர் கௌடா அறிவித்தார்: “நம் கிறிஸ்துவ-யூத மரபைத் தளமாகக் கொண்ட ஜேர்மனிய அரசியலமைப்பு (அடிப்படைச் சட்டம்) மாற்றியமைக்கப்பட முடியாது. குறிப்பாக ஷாரியாவைப் பிரதிபலித்து மகளிரை அடக்கிவைப்பதையும் பிரதிபலிக்கும் இஸ்லாமால் மாற்றியமைக்கப்பட முடியாது.”
ஹம்பேர்க்கின் கத்தோலிக்க குருவான ஹான்ஸ்-ஜோஹன் ஜாஷ்கே, இதே கருத்தை Bild பத்திரிகையில் கூறும்போது ''ஜேர்மனி அதன் கிறிஸ்துவப் பண்பாடு மற்றும் மரபில் சிறப்புப் பெற்றது என்றும் “நாம் அந்த மதிப்புகளை சரணடையவிட வேண்டியதில்லை என்பதற்காக நான் போராடத்தயார்” என்றும் செய்தித்தாளிடம் கூறினார்.
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பேசுகையில் கிறிஸ்துவ-யூத மரபின் “உறுதிப்படுத்தும் வலிமை” பற்றியும், அது எவ்வாறு பல நூற்றாண்டுகள், ஏன் ஆயிரமாண்டுகள் தொன்மை வாய்ந்தவை” என்றும் கூறினார். “ஜேர்மனியில் இஸ்லாமை வரவேற்கிறோம். ஆனால் நம் அடிப்படை மதிப்புக்களுக்குத் தான் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தால்தான்” என்றார். மேலும் ஜேர்மனியில் இஸ்லாம் ஷாரியா சட்டத்தின் வழியில் உள்ளது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இல்லை, “கௌரவக் கொலைகளில்” அதன் மிகத் தீவிர வடிவத்தை காட்டுகின்றது என்ற உணர்வுதான் உள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
முழு விவாதத்திற்கும் பின்னர் ஒரு இறுதிப் படிவம் பவேரியப் பிரதமரும் CSU வின் தலைவருமான ஹொர்ஸ்ட் ஸீஹோவரால் கொடுக்கப்பட்டது; வார இறுதியில் முஸ்லிம்கள் குடியேறுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார். Focus இதழிடம் “துருக்கி, அரபு நாடுகள் போன்ற மற்ற கலாச்சாரங்களில் இருந்து குடியேறுபவர்கள் கூடுதலான பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர். நமக்கு ஒன்றும் மற்ற கலாச்சாரங்களில் இருந்து மேலதிக குடியேறுபவர்கள் இங்கு தேவை இல்லை” என்று முடித்தார்.
இக்கருத்துக்கள் நேரடியாக முஸ்லிம் நம்பிக்கை உடைய குடியேறியவர்களுக்கு எதிராக ஜேர்மனிய அரசியல் நடமுறையில் முக்கிய தலைவர்களால் வழிநடத்தப்பட்டன. இவை பல விதங்களிலும் ஒரு அவமதிப்பு ஆகும். ஒரே நேரத்தில் இவை வரலாற்றை முழுமையாகச் சிதைப்பதுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு இகழ்வுணர்வையும் காட்டுகின்றன. மேலும் நயமற்ற, மனிதத் தன்மை அற்ற கருத்துக்களையும் தழுவுகின்றன.
கௌடரின் கருத்தான அடிப்படைச் சட்டம் கிறிஸ்துவ-யூத மரபுகளைத் தளமாகக் கொண்டது என்பது உண்மைக்கு மாறானது என்பது மட்டுமல்லாமல், அரசியலமைப்பில் இயற்றப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் ஆகும். அரசியலமைப்பின் நான்காம் விதி “சமய நம்பிக்கை, மனச்சாட்சியின்படி நிற்கும் சுதந்திரம், எந்த சமய தத்துவ வழியைப் பின்பற்றும் சுதந்திரம் ஆகியவற்றை அறிவித்துள்ளது. இதையொட்டி எந்தச் சமயமும் பாகுபட்டிற்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் எதுவும் மற்றவற்றைவிட அதிகச் சலுகைகள் காட்டப்படக்கூடாது என்றும் உள்ளது. இந்தக் கருத்துத்தான் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 1965 வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது: “அனைத்துக் குடிமக்களையும் காப்பதாக அது சிந்தைப்போக்கு சமயக் கருத்துக்களில் நடுநிலை கொண்டிருந்தால்தான்” முடியும் என்றும் அரசாங்கம் “குறிப்பிட்ட நம்பிக்கைகளுக்கு சிறப்புச் சலுகைகளைக் கொடுக்கக் கூடாது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு மாறான விதத்தில், இந்தக் கோட்பாடும் தேவாலயங்களும் அரசாங்கமும் பிரிந்து இருக்க வேண்டும் என்பது எப்பொழும் தொடர்ந்து ஜேர்மனியில் பின்பற்றப்படவே இல்லை. முக்கிய கிறிஸ்துவ தேவாலயங்கள் ஜேர்மனியில் சலுகைகளைத் தொடர்ந்து பெறுகின்றன; அரசாங்கம் தேவாலயங்களுக்காக வரி விதிக்கிறது. அரசாங்கம் நடத்தும் பள்ளிகளில் சமயப் பாடங்கள் எடுக்கும் உரிமைகள் திருச்சபைகளுக்கு உண்டு. அதேபோல் மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள், மதப்பள்ளிகளிலும் இன்னும் பல பொது நிறுவனங்களிலும் தேவாலயங்களின் கட்டுப்பாடு உண்டு.
ஆனால் இப்பொழுது கௌடர் அடிப்படைச் சட்டம் முற்றிலும் கிறிஸ்துவ மரபின் விள்வு என்று கூறும்போது, அவர் பின்னோக்கித்தான் செல்கிறார். அடிப்படைச் சட்டத்தில் இயற்றப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஒன்றும் கிறிஸ்துவ மரபுகளைச் சேர்ந்தவை அல்ல, மாறாக அறிவு ஒளி சான்ற காலத்தைச் சேர்ந்தவை. அதுதான் சமயத்தின் செல்வாக்கிற்கும் சமயத்திற்கும் எதிராகப் பெரிதும் போராடி முன்னேறியது. இன்று கத்தோலிக்க திருச்சபை குறிப்பாக அரசியல் பிற்போக்குத்தனத்தின் கோட்டையாக இருபாலருக்கும் சமய உரிமைப் பிரச்சினை, கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கையாளர்களுக்குச் சம உரிமை இன்னும் பல ஜனநாயக கோட்பாட்டுப் பிரச்சினைகளில் உள்ளது
யூத மரபைப் பொறுத்தவரை 70 ஆண்டுகளுக்கு முன்புதான் ஜேர்மனிய அரசாங்கம் உலக வரலாற்றில் யூதர்களுக்கு எதிரான மிக முறையான அழித்தலை ஏற்பாடு செய்திருந்தது. இப்பின்னணியில் ஜேர்மனி “கிறிஸ்துவ-யூத மரபில்” உள்ளதாக உறுதிகூறப்படுவது, இஸ்லாம் மீது தாக்குதலை நடத்துவதை நியாப்படுத்துவதற்காக என்பது, வெறுப்பு மனப்பான்மையின் உயர்கட்டத்தைத்தான் பிரதிபலிக்கிறது.
Süddeutsche Zeitung பத்திரிகையில் ஜேர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய குழுவின் பொதுச் செயலாளரான ஸ்டீபன் கிராமர் கூறினார்: “எப்பொழுதாவது ஞாயிறு உரையின்போதுதான் பொதுவாக அரசியல் வாதிகள் “யூதர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்துவர்: இப்பொழுது கிறிஸ்துவ-யூத ஜேர்மனியின் அஸ்திவாரம் என்பதை கற்பனை செய்யமுடியாத ஆவேசத்துடன கூறுகின்றனர்.” இது “துரதிருஷ்டவசமானது, இஸ்லாமிற்கு எதிராக ஜேர்மனியில் யூதத்தை போர்முனைக்கு இழுக்கும் வெளிப்படையான முயற்சி” என்றும் அவர் எழுதியுள்ளார்.
இஸ்லாமை ஷாரியா சட்டம் மற்றும் கௌரவக் கொலைகளுடன் சமமாகக் காட்டும் முயற்சி இதேபோல் நேர்மையற்றது ஆகும். கத்தோலிக்க மதத்தை சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பிசாசுகளை விரட்டுதல் இவற்றுடன் பிணைப்பதற்கும் ஒருவர் முயலலாம். இவை இரண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ளவை; ஆனால் ஒவ்வொரு கத்தோலிக்கரையும் குழந்தையின் உரிமைகளை மீறுபவர் என்று நினைப்பதோ, ஆவிவிரட்டுபவர் என்று கருதுவதோ முழு சமய சமூகத்திற்கும் எதிரான அவதூறு என்பதைத்தான் பிரதிபலிக்கும். இதைத்தான் மேர்க்கெலும் கௌடரும் அவர்கள் இஸ்லாமியத்தை ஷாரிய சட்டம், கௌரவக் கொலைகளுடன் சமன்படுத்துகையில் கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் ஜேர்மனிய சமூகத்தில் ஒருங்கிணைக்க விருப்பம் இல்லாமல் உள்ளனர் என்று கூறப்படுவது, மேர்க்கெல் மற்றும் கௌடரால் உயர்த்திக்காட்டப்படுவது, சமூக ஜனநாயக கட்சித் (SPD) தலைவர் சிக்மார் காப்பிரயேலால் சுட்டிக்காட்டப்படுவதும் ஒரு கற்பனை ஆகும். உள்துறை மந்திரி தோமஸ் டி மைசியர் குடியேறுபவர்களில் 10 முதல் 15 சதவிகிதம் வரை ஒருங்கிணைய மறுக்கின்றனர் என்று கூறியுள்ளார். Süddeutsche Zeitung நிருபர் ஒருவர் முற்றிலும் மாறுபட்ட முடிவிற்கு வருகிறார். டுயிஸ்பேர்க் நகரில் குடியேறியுள்ள சமூகங்களைப் பற்றிய ஆய்வு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அவர் “நம்மிடையே இணைய விருப்பமில்லாதவர்கள் ஒரு சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்குதான்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த நிருபர் நகரத்தில் முக்கியமாக துருக்கிய குடியேற்றச் சமூகத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் பேசினார்; அவர் ஒருங்கிணைப்பு மற்றும் மொழிவகுப்புக்கள் கூடுதலான மக்களுடன் நன்கு நடைபெறுகின்றன என்றும் உண்மையில் சேர வேண்டும் என்பவர்களுக்கு அங்கு இடமில்லாத நிலை கூட உள்ளது என்றும் உறுதிப்படுத்தினர்'' என்று நிருபர் எழுதியுள்ளார்
அரசியல்வாதிகள் உரத்த குரலில் குடியேறுபவர்கள் ஜேர்மனிய மொழியைக் கற்க வேண்டும் என்று கோருகையில், குடியேறுவோர், அகதிகள் பற்றிய கூட்டாட்சி அலுவலகம்(BAMF) ஜூலை மாதம் பரந்த அளவில் அத்தகைய பாடத்திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. அப்பொழுது முதல் மொழிப் பாடங்கள் அதிகாரிகள் நிர்ணயிக்கும் குடியேறுபவர்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகின்றன. தன்னார்வத்துடன் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் .நீண்ட காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர் அல்லது 110 யூரோக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்னணி அரசியல்வாதிகள் ஜேர்மனி வெளிநாட்டவரால் மூழ்கடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தைப் பரப்புகையில், துருக்கியில் இருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை சில காலமாகக் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை. துருக்கிக்கு திரும்பும் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அங்கு இருந்து வருபவர்களின் எண்ணிக்கையை விட 2006ல் அதிகமாயிற்று; இப்போக்கு அப்பொழுது முதல் தொடர்கிறது. கடந்த ஆண்டு துருக்கிக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை ஜேர்மனிக்கு வருபவர்களின் எண்ணிக்கயை விட 8.334 அதிகமாக இருந்தது.
ஜேர்மனிய ஒருமைப்பாடு என்னும் விவாதம் முஸ்லிம் குடியேறுபவர்களை பலிகடாக்களாக்கும் இழிந்த பிரச்சாரம்தான்: இது சமூகம் முழுவதற்கும் எதிராக சமூகத் தாக்குதல்கள் வரும் பெருகிய அலையைத் தடுப்பதற்குத் திசைதிருப்பும் முயற்சி ஆகும். ஒரு புதிய தீவிர வலதுசாரிக் கட்சியைத் தோற்றுவிக்கத் தளத்தை அமைக்கும் பிரச்சாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க கூறுபாட்டைப் பிரதிபலிக்கிறது.
தற்போதைய பிரச்சாரம் ஜேர்மனி மறு ஐக்கியம் அடைந்தது, அதையொட்டி வேலையின்மை பெருகியதைத் தொடர்ந்து பழைமைவாத கட்சிகள் சமூக ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து இதேபோன்ற பிரச்சாரத்தை நடத்தியதைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. Süddeutsche Zeitung இல் ஹெரிபெர்ட் ப்ரான்டில் “தஞ்சம்”, “தஞ்சம் கோருபவர்” என்ற சொற்களுக்குப் பதிலாக “இஸ்லாம்”, “முஸ்லிம்” என்ற சொற்களைக் போட்டால், தற்பொழுதைய சராஸினின் கருத்து பற்றிய விவாதம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவாதம் பழையபடி நடைபெறுவது போல் தோன்றும் என்று கூறியுள்ளார்.
அப்பொழுது CDU-CSU மற்றும் SPD ஆகியவற்றின் முன்னணி அரசியல்வாதிகள் தஞ்சம் கோருவோருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தி தீவிர இனவெறியைத் தூண்டினர். பேர்லின் CDUவின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் கிளவுஸ் லண்டோவ்ஸ்கி தஞ்சம் நாடுபவர்களை “தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள், ஏமாற்றுபவர்கள், கத்தியால் குத்துபவர்கள்” என்று குறிப்பிட்டார்; அதுவும் வரிப்பணம் செலுத்துபவர் செலவில் இதைச் செய்கின்றனர் என்றார். இப்பிரச்சாரத்தால் ஊக்கம் பெற்ற புதிய நாஜிக்கள் சோலிங்கன், மோல்ன் நகரங்களில் துருக்கியக் குடும்பங்களுக்கு எதிராக தீ வைக்கும் தாக்குதல்களை நடத்தினர்; இதில் பல இறப்புக்கள் ஏற்பட்டன.
முக்கிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தற்பொழுது நடத்தப்படும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரமும் இதே போன்ற பாதையைத்தான் பின்பற்றுகிறது. |