World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Strikes continue as French government defends pension cuts

பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக்களை பாதுகாக்கையில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன

By Alex Lantier
15 October 2010

Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக அக்டோபர் 12 தேசிய நடவடிக்கை தினத்தைத் தொடர்ந்து நேற்றும் பிரான்சில் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தன. வேலைநிறுத்தம் செய்யும் துறைமுக, கப்பல்கட்டும் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் உயர்பள்ளி மாணவர்களும் சேர்ந்து கொண்டனர். வேலைநிறுத்தம் செய்யும் உயர்பள்ளி மாணவர்களை பல நகரங்களில் பொலிசார் தாக்கினர். பிரான்ஸ் முழுவதும் பல இடங்களிலும் பெட்ரோல் பொருட்களிற்கான பற்றாக்குறை பற்றித் தகவல்கள் வந்துள்ளன.

ஓய்வூதியம் முழுமையாகப் பெறுவதற்கு 65ல் இருந்து 67க்கு வயது வரம்பை உயர்த்தியது, குறைந்தபட்ச வயது வரம்பு ஓய்வு பெற 60ல் இருந்து 62க்கு உயர்த்தியது ஆகிய சீர்திருத்தங்களில் இருந்து தான் பின்வாங்குவதாக இல்லை என்று சார்க்கோசி தெளிவுபடுத்திவிட்டார். இது அரசாங்கத்தை மருத்துவக் காரணம் அல்லது பணிநீக்கத்தின் காரணமாக கட்டாயமாக ஓய்வு பெறக்கூடிய பல தொழிலாளர்கள் மீது கணிசமான அபராதம் விதிக்க அனுமதிக்கும். சில மதிப்பீடுகளின்படி, இதையொட்டி அரசாங்கம் ஓய்வூதியச் செலவினத்தில் குறைந்தது 15 சதவிகித வெட்டுக்களைப் பெறும்.

அக்டோபர் 13 காபினெட் கூட்டம் ஒன்றில், சார்க்கோசி ஆத்திரமூட்டல் கொடுக்கும் விதத்தில் “என்னுடைய பதவிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை வெட்டுக்களைச் செய்வேன்” என்று உறுதியளித்தார்.

போர்தோவிற்கு அருகே Laser Mégajoule ஆலைக்கு வருகை தந்த சார்க்கோசி, இளைஞர்களின் எதிர்ப்புக்களை அலட்சியம் செய்யவில்லை என்றும் அத்தகைய எதிர்ப்புக்கள் பல்கலைக்கழக “சீர்திருத்தங்களை” நிறுத்திவிடவில்லை என்றும் குறிப்பிட்டார். “மூன்று ஆண்டுகளில் பிரெஞ்சுப் பல்கலைக்கழக முறை தன்னியல்பாக, மிகச் சிறப்பாக சுயாதீனத்தை நோக்கி எவ்வித பரபரப்பூட்டும் அல்லது சிந்தனைப் பூசல் இன்றி வளரமுடியும் என்று எவர் நினைத்திருக்க முடியும்?” என்றார். மேலும் சார்க்கோசியின் கருத்துப்படி “ஒரு சில வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர், நம் பல்கலைக்கழக முறை சோதனையில் வெற்றிபெற்றுத் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது” என்று அவர் கருத்துக் கூறினார்.

சார்க்கோசி ஜனநாயக விரோத முறையில் தன்னுடைய சீர்திருத்தத்தை, இளைஞர்களின் எதிர்ப்பை மட்டுமன்றி பெரும்பாலான மக்களின் எதிர்ப்பையும் மீறி சுமத்திக் கொண்டிருக்கிறார். CSA கருத்துக் கணிப்புக்கள் மக்களில் 69 சதவிகிதம் பேர் ஓய்வூதிய நடவடிக்கைக்கு எதிரான வேலை நிறுத்தங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்றும், மக்களில் 54 சதவிகிதத்தினர் அரசாங்கம் திரும்பப் பெறாவிடின் பொது வேலைநிறுத்தம் ஒன்றை தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் விரும்புவதைக் காட்டுகின்றன.

BVA கருத்துக் கணிப்பாளர் Gaël Sliman AFP இடம் “ஒரு நேரடிப் போராட்டமாக இருந்தால் மக்கள் கருத்து இதற்கு நீண்ட காலத்திற்கு ஆதரவு கொடுக்கும் என்பது தெளிவு, உறுதியானது” என்றார். வெட்டுக்களுக்கு “முறையாக விரோதப் போக்கு” காட்டாத பலரும் “ஒரு சமூகப் போராட்டத்திற்கு பரிவுணர்வு” காட்டுவர் என்றும் அவர் கூறினார்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் எதிர்ப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும், வெட்டுக்கள் செயல்பட அனுமதிக்கும், அவை 2007-08 ஓய்வூதிய வெட்டுக்கான ஆர்ப்பாட்டங்களின் போதும், 2009ல் வங்கிகள் பிணை எடுப்பிற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் போதும் செய்தது போல் தான் இருக்கும் என்றுதான் சார்க்கோசி தெளிவாக எதிர்பார்க்கிறார். ஆனால் வெட்டுக்களுக்கு எதிராகத் தொழில்துறை நடவடிக்கை எடுக்கக் கோரும் தொழிலாளர்கள் பெருகிய முறையில் தொழிற்சங்கங்களின் செயலற்ற தன்மையினால் ஏமாற்றத் திகைப்படைந்துள்ளனர்.

குளிர் காலத்திலும் வசந்த காலத்திலும் சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய தொழிற்சங்கங்கள் ஒய்வூதியக் குறைப்பிற்கு எதிராக தீவிர போராட்டத்தை ஒழுங்கமைக்க மறுக்கின்றன. CGT தொழிற்சங்கத்தின் செயலாளர் பேர்னார்ட் திபோ சமீபத்தில் பொது வேலைநிறுத்தத்திற்கான முறையீடுகளை “அருவமான தன்மையுடையது”, “புதிரானது” என்று தாக்கிப் பேசினார்.

ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றி கேட்கப்பட்டதற்கு CGT அதிகாரிகளையும் முக்கிய பெருநிறுவன மனித வள மேலாளர்களையும் ஒன்றாகச் சேர்க்கும் அமைப்பான Dialogues Association உடைய தலைவர் Jean-Dominique Simonpoli, “நாம் அது பற்றி பேசுகிறோம், ஆனால் அதைச் செய்ய ஒருவரும் முன்வரவில்லை” என்றார்.

வெட்டுக்களுக்கு எதிரான வேலை நிறுத்தமானது வெகுஜன கோரிக்கைகளுக்கு ஒரு சலுகையாக, பிரான்சின் தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் கூட்டுக் கூட்டம் ஒன்று நேற்று அக்டோபர் 19ம் திகதி மற்றொரு நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது ஏற்கனவே நாளைக்கு ஒரு நாள் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. CFDT தலைவர் பிரான்சுவா செரக் “மக்கள் எங்களைத் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுமாறு கேட்கிறார்கள்” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால் பெருகிய முறையில் அதிக தொழிலாளர்கள் இத்தகைய ஒருநாள் நடவடிக்கைகள் சார்க்கோசியின் வெட்டுக்களை நிறுத்திவிடவில்லை என்பதை உணர்ந்துள்ளனர். ஒரு தொழிற்சங்கவாதி அக்டோபர் 12 நடவடிக்கை தினத்தன்று கூறியது போல் தொழிலாளர்கள் “தெருக்களில் வெறுமே அலைவது பற்றி வெறுத்துப் போய்விட்டனர்” என்றார்.

எனவே தொழிற்சங்கங்கள் ஒரு சில குறிப்பிட்ட மூலோபாயத் தொழில்துறை பிரிவுகளை வேலைநிறுத்தம் செய்ய அனுமதித்துள்ளன. அதே நேரத்தில் வெட்டுக்களுக்கு எதிராக பரந்த தொழில்துறை நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதில்லை. SNCF தேசிய இரயில்வேயில் பெரும்பாலான தொழிலாளர் கூட்டங்கள் வேலை நிறுத்தங்களைத் தொடர வேண்டும் என்று முடிவெடுத்தன. செய்தி ஊடக எண்ணிக்கையின்படி 10 விரைவு வேக இரயில்களில் (TGV) 4, பாரிஸ் பிராந்திய இரயில்களில் 50 சதவிகிதமும், TGV அல்லாத நீண்டதூர இரயில்களில் 40 சதவிகிதமும் ஓடிக்கொண்டிருந்தன.

வேலைநிறுத்தங்களானது துறைமுகங்கள், எண்ணெய் சேமிப்புப் பகுதிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றையும் பாதித்துள்ளன. கப்பலை இழுக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்திருப்பதால் அனைத்துக் கப்பல்களும் துறைமுகத்தில் நிறுத்தப்படுவது —டாங்கர்கள், மொத்தப் பொருள்கள் கொண்டுவரும் கப்பல்கள், கன்டெயினர் போக்குவரத்து ஆகியவை— பிரெஞ்சுத் துறைமுகங்களை செயலற்றதாக்கிவிட்டது.

பிரான்சின் பெருநிலப் பகுதியிலிருக்கும் 12 சுத்திகரிப்பு நிலையங்களில் 11 வேலைநிறுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பாக மூலோபாயப் பகுதியான Fos-Lavéra எண்ணெய்ப் பகுதி என்னும் மார்செய் தெற்குத் துறைமுக நகரத்தில், பிரான்ஸ் முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் பற்றாக்குறை பற்றித் தகவல்கள் வந்துள்ளன. இவை கோர்சிக்காவிலும் தெற்கு பிரான்சிலும் விரிவடைந்துள்ளன. ஆனால் நாடு முழுவதும் நகரங்களில், குறிப்பாக நாந்த், அமியான் மற்றும் பாரிஸ் உட்பட பாதிப்பு உள்ளது. பல பெட்ரோல் நிலையங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இது Fos, Bassens மற்றும் Le Havre நிலையங்களிலிருந்து விநியோகத்தைத் தடுத்துவிட்டது.

நேற்று முக்கிய சில்லறை வியாபாரங்களான Carrefour, Casino, Cora, Auchan ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் UIP (Union of Petrol Importers) என்னும் அமைப்பின் அதிகாரி Alexandre de Benoist என்பவர் “இருப்புக்கள் வற்றிவிட்ட நிலையில் எங்கள் நிலையங்கள் மூடப்படும் என்ற கவலையில் உள்ளோம்” என்றார். சாரதிகள் பீதியில் அதிகம் வாங்குவதால், தேவை 50 சதவிகிதம் அதிகரித்துவிட்டது என்றும் 20 Minuetes பத்திரிகையிடம் அவர் கூறினார்.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் அடுத்த வாரம் இன்னும் தீவிர பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு இருக்கும் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

LCI இடம் போக்குவரத்து துணை மந்திரி Dominique Bussereau கூறினார்: “சுற்றுச் சூழல் மந்திரி Jean-Louis Borloo மற்றும் பிரதம மந்திரி பிரான்சுவா பியோன், குடியரசு ஜனாதிபதியின் உதவியாளர்கள் ஆகியோருடன் நிலைமை பற்றி விவாதித்துள்ளோம்” என்றார். சாரதிகள் பீதியில் வாங்காவிட்டால் பிரான்சில் ஒரு மாதத்திற்குத் தேவையான இருப்புக்கள் உள்ளன என்றார். எப்படி பிரான்சின் மூலோபாய பெட்ரோல் இருப்பு வேலைநிறுத்தத்தை முறியடிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்கின்றனர்.

வேலைநிறுத்தம் இப்பொழுது சுவிட்சலாந்திலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோகத்தையும் வெட்டி, அதையொட்டி ஜேர்மனியிலும் தட்டுப்பாடுகளுக்கு வழிசெய்துள்ளது. ஆனால் சர்வதேச எரிசக்தி அமைப்பு அதிகாரி Aad Van Bohemen கருத்துப்படி பதில் கச்சா எண்ணெய் டிரான்ஸ் ஆல்பைன் குழாய்த் திட்டத்தின் மூலம் இத்தாலிய நகரமான Trieste ஜேர்மனியின் Karslruhe உடன் இணைத்து செலுத்தப்படுகிறது என்று தெரிகிறது. இது பிரான்சிற்கு எண்ணெயை ஐரோப்பிய மேற்கு கடலோரப் பகுதி முழுவதில் இருந்தும் கொடுக்க அனுமதிக்கும் என்றும், அரசாங்கம் வேலைநிறுத்தத்தைச் சமாளிக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட கவலை உயர்பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அலையென அதிகரித்து இருப்பது ஆகும். நேற்று பிரான்சின் மொத்த 4,302 உயர்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 900 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இவற்றுள் 550 ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்தன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் முழுவதும் நடைபெற்றன. துலூசில் 10,000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர், ரென்னில் 8,000, போர்தோவில் 7,000, பிரெஸ்ட்டில் 5,000, ரெம்மில் 4,000, ஓர்லென்சில் மற்றும் தூர் இல் தலா 2,000 மற்றும் Caen 1,000 மாணவர்கள் பங்கு கொண்டனர்.

கருத்துக் கணிப்பாளர்கள் இளைஞர்களின் நீடித்த பெரும் எதிர்ப்புக்கள் அரசியல் சூழ்நிலையை மாற்றக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான பொது வேலைநிறுத்தம் பற்றிய கோரிக்கைகள் பிரெஞ்சு இளைஞர்களிடையே குறிப்பாக செல்வாக்கைக் கொண்டுள்ளது. 25-34 வயதுகளில் இருப்பவர்களில் 68 சதவிகிதம் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

Via Voice ன் பகுப்பாய்வாளர் François Miquet-Marty, Le Monde இடம் கூறினார். “நீடித்த சமூக எதிர்ப்பிற்கு பொது மக்கள் ஆதரவை எது கொடுக்கும் என்பதுதான் வினா. போராட்டத்தில் இளைஞர்கள் நுழைதல் என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நீடித்த முறிவைத் தூண்டக்கூடும்.”

அரசானது மிருகத்தனமாக இளைஞர் எதிர்ப்புக்களை இலக்கு கொண்டுள்ளது. பாரிஸ் பகுதியில் கிட்டத்தட்ட 30 உயர்நிலைப் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் இருந்தபோது, பொலிசார் பாரிஸ் புறநகரில் இரு உயர்நிலைப் பள்ளிகளைத் தாக்கினர். செயின்ட் டெனிஸிலுள்ள Paul-Eluard உயர்நிலைப்பள்ளி மற்றும் Montreuil உள்ள Jean-Jaurès உயர்நிலைப்பள்ளி. Seine-Saint-Denis பள்ளியின் ஆய்வாளர் டானியல் அவுர்லோ அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்காது என்று அச்சுறுத்தினார்: “நம் மாணவர்கள் பள்ளிகளை ஆக்கிரமிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. சில ஆக்கிரமிப்புக்கள் நகர்ப்புற கலகங்களாக மாறும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.”

Montreuil ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவர் பொலிசார் அவரை ஒரு ரப்பர் தோட்டாவால் முகத்தைத் தாக்கியபின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொலிசார் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறினர். அவர் குறைந்த காயம்தான் பெற்றார் என்று தொடக்கத்தில் பொலிசார் கூறினாலும், அவருடைய முகத்தில் மூன்று பெரும் எலும்பு முறிவுகள் உள்ளன, ஒரு கண்ணை இழக்கலாம் என்ற தகவல்கள் வந்துள்ளன. மாணவர் குறித்துப் பொலிசிடம் புகார் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

CRS பொலிஸ் கலகப் பிரிவுப் படை ஆனது Canal+TV நிருபர் Thierry Vincent அவருடைய செய்தியாளர் அடையாள அட்டையைக் காட்டியபோது அவரை அடித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் தான் அமைதியாகக் கலந்து கொண்டிருப்பதையும் பொலிசாரிடம் அவர் கூறினார். இது பாரிசில் அக்டோபர் 12 ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நடந்தது.

முக்கிய வணிகக் கூட்டமைப்பான Medef (Movement of French Enterprises) உடைய பாரிஸ் தலைமையகத்திற்கு முன்பும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு வணிகக் குழு வரும் வரை அவர்கள் காத்திருந்தும், அங்கு அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. ஒரு ட்விட்டர் தகவல் விளக்கியது: “தொழிற்சங்கங்கள் போதும் என்று ஆகிவிட்டது. நாங்கள் காலை 5.30ல் இருந்து இங்குள்ளோம்.”

பல்கலைக்கழக மாணவர்களும் சீர்திருத்தங்களை எதிர்ப்பதற்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் சேரலாம் என்ற அடையாளங்கள் உள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் Rennes-2 பல்கலைக்கழகத்தை “பாதுகாப்புக் காரணத்திற்காக” மூடிவிட்டனர். ஆக்கிரமிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியும் உள்ளது. Le Monde உடைய தகவல்படி பாரிசில் உள்ள Jussieu பல்கலைக்கழக மாணவர்கள் பொது மன்றத்தில் கூடி, நூற்றுக்கணக்கான Jussieu மாணவர்கள் பாரிசை சுற்றி நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்.