சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the struggle against Sarkozy’s cuts

பிரான்ஸ்: சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திலுள்ள அரசியல் கேள்விகள்

Alex Lantier
14 October 2010

Use this version to print | Send feedback

பிரான்சில் அக்டோபர் 12ம் திகதி நடவடிக்கை தினம் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த எதிர்ப்பை உயர்த்திக் காட்டியுள்ளது. இதில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதுத் தகுதி 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டதும் உள்ளடங்கியுள்ளது. மற்றொரு நடவடிக்கை தினம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் வேலைநிறுத்தத்தினால் விரைவில் பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டிற்குள்ளான நிலையிலும் வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வெகுஜன ஆதரவு தொடர்கிறது. கருத்துக் கணிப்புக்களின்படி மக்களில் 61 சதவிகிதத்தினர் தொடர்ச்சியான வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

பொதுமக்கள் கருத்து மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதும் அப்பட்டமான இகழ்வுணர்வை காட்டும் விதத்தில் அரசாங்கம் தொடர்ந்து செயற்படுகிறது. பாசிச வகையில் ரோமாக்களை இலக்கு வைத்தல், ஆப்கானிய போரில் பங்கு பெறுதல் ஆகிய சார்க்கோசியின் நடவடிக்கைகளைப் போல், ஓய்வூதிய வெட்டுக்களும் பெரும் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும், பாராளுமன்றத்தில் விரைந்து இயற்றப்பட்டன. “இறுதி வரை” தான் வெட்டுக்களைக் கைவிடுவதாக இல்லை என்றும் பின்வாங்குவதில்லை என்றும் சார்க்கோசி தெளிவுபடுத்தியுள்ளார்.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு, அவை பெயரளவு “இடது” அல்லது வலது என்றாலும் கொள்கைகள் குறித்து ஆணையிடும் வங்கிகளின் கோரிக்கைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளுக்கும் இடையே சமரசத்திற்கு இடமில்லாத மோதல் தான் அரசியல் வாழ்வின் முக்கிய கூறுபாடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாங்கள் இறக்கும் வரை அற்ப ஊதியங்களுக்காக உழைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை தொழிலாளர்கள் வெறுக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிரெஞ்சு அரசாங்கமும் இந்த ஓய்வூதிய வெட்டுக்களானது பெருநிறுவன இலாபம், போட்டித்தன்மை ஆகியவற்றை அதிகரித்து, பிணை எடுப்புச் செலவினங்களை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் தொடர்ச்சியான திட்டங்களின் ஒரு பகுதிதான் என்று தெளிவாக்கிவிட்டன.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இரு ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு அரசியல் இருப்புநிலைக் குறிப்பு வரையப்பட வேண்டும். வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைக் கொடுத்த பின்னர், ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் சமூகநல வெட்டுக்கள், ஆலை மூடல்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றை கட்டாயமாகத் திணித்துள்ளன. மக்கள் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றிற்கு குறைவு ஏதும் இல்லை. ஆயினும்கூட ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கள் விருப்பத்தை சுமத்த முடிந்துள்ளது.

இதற்கு காரணம் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த “இடது” கட்சிகளின் துரோகமாகும். தொழிலாள வர்க்கத்தின் உறுதியான போராட்ட வளர்ச்சிக்கு முதலாவது முன்நிபந்தனை இந்த அமைப்புக்களில் இருந்து முறித்துக் கொள்வதாகும்.

சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் போதுமான அளவில் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றினால் சார்க்கோசி அவருடைய வெட்டுக்களை திருத்துவார் என்ற நம்பிக்கையை தெரிவிக்கின்றன. பிரான்சிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு இத்தகைய முன்னோக்கு —கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் இன்னும் பல இடங்களைப் போலவே— ஒரு முட்டுச் சந்து என்று தான் இதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடும்போதே, தொழிற்சங்கங்கள் சார்க்கோசியுடன் சமூகநல வெட்டுக்களின் விதிமுறைகள் குறித்துப் பேச்சுக்களை நடத்துகின்றன. “இடது” கட்சிகளைப் பொறுத்தவரை, அவை அனைத்தும் “போராட்டத்தில் ஐக்கியத்தை” சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அதுவோ ஒரு முழு வணிகச் சார்புடைய கட்சி ஆகும். இக்கட்சியின் 2012 ஜனாதிபதி வேட்பாளராக அநேகமாக டொமினிக் ஸ்ட்ராஸ் கான் இருப்பார். இவர்தான் இப்பொழுது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஆவார். கடந்த வாரம் சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டவராவார்.

தொழிலாள வர்க்கத்திற்கும் இந்த திவாலாகி விட்ட “இடது” ஸ்தாபனங்களுக்கும் இடையே அரசியல் மோதல் ஒன்று உருவாகிக் கொண்டு வருகிறது.

தங்கள் வேலைநிறுத்தங்களை விரிவாக்குகையில், பிரெஞ்சு தொழிலாளர்கள் இரும்புத் தளைபோன்ற, பெயரளவில் நடக்கும் ஒரு நாள் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் முறித்துக் கொள்ள முற்படுகின்றனர். இதன்மூலம் தான் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. இப்பொழுது நடக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தமானது தொழிலாளர்களிடம் பாரிய சமூக சக்தி உண்டு என்பதைக் காட்டியுள்ளது. வங்கியாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் சக்தியைக் காட்ட இன்னும் அதிகமான தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

இது தொழிலாளர்களை தொழிற்சங்கங்களுடன் உடனடி மோதலுக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சி சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. இந்த இளம் எழுச்சியை வலுப்படுத்துவதுடன், மேலும் விரிவடையச் செய்து அதற்கு ஒரு புதிய அமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய அரசியல் முன்னோக்கு ஆகியவற்றை அளிப்பது அவசியமாக இருக்கிறது.

தங்கள் பணி இடங்களில் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் உருவாக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் பரிந்துரைக்கிறது. இக்குழுக்களின் நோக்கம் முதலாளிகளுக்கும் அரசிற்கும் எதிராக ஒர் ஒருங்கிணைந்த தொழில்துறை அரசியல் போராட்டத்தை நடத்துவதாக இருக்க வேண்டும்.

வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு வெகுஜன ஆதரவுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் மக்களின் ஏனைய தட்டுக்களின் மத்தியில் அரசியல் கிளர்ச்சி பெருகியுள்ள நிலையில், நடவடிக்கைக் குழுவின் மைய அரசியல் பணி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பை மேற்கொள்ளுதல் ஆகும். அத்தகைய வேலைநிறுத்தத்தின் நோக்கம் சார்க்கோசியின் அரசாங்கத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும்.

மக்களின் சமூக மற்றும் அரசியல் தேவைகளானது தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் உறுதியைக் கொண்ட போராட்டத்தின் மூலம் ஒரு அரசாங்கம் வெளிப்படுவதின் மூலம் தான் தீர்க்கப்பட முடியும். அந்த வேலைத்திட்டத்தில் பெரும் செல்வந்தர்களின் தனியார் செல்வங்களை பறிமுதல் செய்தல், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கி அவைகள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொது சேவைகளாக மாற்றப்படல் வேண்டும்.

நிதியப் பிரபுத்துவமானது வர்க்கப் போரை மையப்படுத்திய முறையில் நடத்துகிறது. இதில் அரசாங்கங்கள், வங்கிகள், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்று அரச எல்லைகளை தாண்டிய ஒத்துழைப்புடன் சமூகநலச் செலவு வெட்டுக்கள், ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவைகளை தயாரித்து செயற்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கிடையே கசப்பான மோதல்கள் இருந்தாலும், அனைத்து தேசிய ஆளும் வர்க்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் ஐக்கியப்பட்டு நிற்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச வடிவம் பெறாவிடின் அவை தவிர்க்க முடியாமல் தோற்கடிக்கப்படும். பிரான்சில் சார்க்கோசியின் கொள்கைகள் அடிப்படையில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க முழுவதிலுமுள்ள அரசாங்கங்களின் சிக்கனக் கொள்கைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல. பிரான்சின் தொழிலாளர்கள் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்திற்கு சர்வதேச வர்க்க ஒற்றுமைக்கான அழைப்பு உலகெங்கிலும் பெரும் ஆதரவைப் பெறும்.

எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை பாதுகாத்தலுக்கான போராட்டம் என்பது தேசியவாதம் மற்றும் குடியேறியோருக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். அரசாங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சமூக எதிர்ப்பை தேசியவாத வழிவகைகள் மூலம் ஒரு நாட்டின் தொழிலாளர்களை மற்ற நாடுகளிலிருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராகத் திருப்பி குழிபறிக்கும் வேலையை உறுதியாக நிராகரிக்கப்படவேண்டும்.

தொழிற்சங்கங்கள் என்னும் மடிந்த சுமையைத் தூக்கி எறிந்து, ஐரோப்பா மற்றும் உலக அளவில் சோசலிச அமைப்பு மாற்றத்திற்கும் ஒரு தொழிலாள வர்க்க அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒரு அரசியல் போராட்ட வழியை தயாரிக்க பிரான்சிலுள்ள தொழிலாளர்கள் சார்க்கோசியின் வெட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை விரிவுபடுத்தி, ஆழப்படுத்துவதற்கு நடவடிக்கை குழுக்களை அமைக்குக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுகிறது.