WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
அமைதிக்கான நோபல் விருது: அரசியல் வெறுப்புணர்ச்சியின் மற்றொரு நடவடிக்கை
John Chan
12 October 2010
Use
this version to print | Send
feedback
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சீன அதிருப்தியாளர் லியூ ஷியாபோவிற்கு கடந்த வெள்ளியன்று அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் சார்பாக சீனாவில் "மனித உரிமைகள்" பிரச்சினையைத் தூண்டிவிட வடிவமைக்கப்பட்ட ஓர் உயர் அரசியல் முடிவாக இருந்தது.
"அரசியல் சீர்திருத்தம் பொருளாதார விரிவாக்கத்திற்கு இணையாக இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு ஆணின், பெண்ணின் மற்றும் குழந்தையின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையே இது நமக்கு நினைவுபடுத்துகிறது," என்ற அறிவிப்பின் மூலம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உடனடியாக இந்த விருதளிப்பு விஷயத்தை லியூவின் விடுதலைக்கு அழைப்புவிடுப்பதற்குப் பயன்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்க ஜனாதிபதி நவ-காலனிய யுத்தத்தைத் நடத்திக்கொண்டிருந்த போதினும் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் விருதின் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் விருது லியூவிற்கு வழங்கப்பட்டது. இது "அமைதி" அல்லது "ஜனநாயகம்" எதனோடும் தொடர்புபட்டதல்ல.
ஜனாதிபதி புஷ்ஷின்கீழ் ஏற்பட்ட பதற்றங்களுக்குப் பின்னர், ஐரோப்பிய மேற்தட்டுகள் வாஷிங்டன் உடனான உறவுகளைப் புதுப்பிப்பதற்கான ஓர் அறிகுறியாகவே 2009இன் விருது இருந்தது. அவ்வாறே, செலாவணி மறுமதிப்பீட்டில் இருந்து சீன பகுதிகளுக்கு அருகிலுள்ள கடலில் அமெரிக்காவின் யுத்த கப்பல்களுக்கு அவசியமான அதன் "கடல் போக்குவரத்து மீதான சுதந்திரம்" வரையிலான பெய்ஜிங் உடனான பல்வேறு பிரச்சினைகளில் ஒபாமாவின் அழுத்தத்திற்கு ஐரோப்பாவின் ஆதரவையே 2010விருது எடுத்துக்காட்டுகிறது.
எதிர்பார்த்தபடியே சீன ஆட்சி அதன் கோபத்தை வெளிப்படுத்தியது. சீன சட்டவிதிகளை மீறியதற்காக சீன நீதியரசர்களால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை கௌரவப்படுத்தியமைக்காக, அமைதிக்கான நோர்வேயின் நோபல் விருது பரிந்துரை குழுவின் தேர்ந்தெடுப்பை ஒரு "கீழ்தரமான" செயல் என்று அது கண்டனம் தெரிவித்து. சீன அதிகாரிகள் ஆக்ரோஷத்தோடு கூச்சலிட்டதுடன், சீனா-நார்வே இடையிலான உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தனர்.
"Charter 08" உரிமைகள் பிரச்சாரத்தைத் தொடங்கியற்காக லியூ கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். “கிளர்ச்சிக்குத் தூண்டிய" குற்றத்திற்காக ஜனவரியில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஒரு சமூக வெடிப்பு ஏற்படக்கூடியதை முன்னுணர்ந்து, முன்னெச்சரிக்கையாக வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகள் வரம்புக்கு உட்படுத்தப்பட்டன என்று சீன ஆளும் மேற்தட்டின் ஓர் அடுக்கிற்குச் சார்பாக அவர் பேசுகிறார். “போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன. இவை பேரழிவிற்கான ஒரு பயங்கர முரண்பாட்டின் சாத்தியக்கூறை அதிகரித்துவிட்டிருக்கின்றன" என்று அவருடைய Charter 08 எச்சரித்தது. லியூவைச் சிறையில் அடைத்திருப்பது தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக திருப்பிவிடப்பட்டதல்ல. மாறாக, தொழிலாளர் வர்க்கத்தின் பாய்ந்து வரும் நீண்ட பரந்த அரசியல் எதிர்ப்பிற்கு எதிராக அணை கதவுகளை மூடுவதற்காகவே செய்யப்பட்டது.
மத்திய வர்க்க அதிருப்தியாளர்களின் உரிமைகளை மட்டுமில்லாமல், மாறாக நூறு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்கும் ஒரு பொலிஸ் அரசாகவே சீனா இருக்கிறது என்ற உண்மையையே இவை அனைத்தும் அடிக்கோடிடுகின்றன. எவ்வாறிருப்பினும், லியூ ஷியாபோவை மறைவிடத்திலிருந்து இழுத்துவருவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, சீனாவில் ஜனநாயகத்தைப் பேணி வளர்ப்பதற்காக அல்ல. மாறாக, வளர்ந்துவரும் ஒரு பொருளாதார போட்டியாளருக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் நலன்களைக் அதிகப்படுத்துவதற்காகவே ஆகும்.
1989இல் தியானன்மென் சதுக்க சம்பவத்திற்கு மேற்கத்திய சக்திகள் காட்டிய பிரதிபலிப்புகளை மட்டுமே ஒருவர் நினைவுகூர வேண்டியுள்ளது. தாராளவாத அறிவுஜீவிகள் மத்தியில் முன்னனி பிரமுகராக இருந்த லியூவினால் துவக்கிவிடப்பட்ட மாணவர் போராட்டங்களில், தொழிலாளர்களும் இணைந்து தங்களின் சொந்த வர்க்க கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னர், அவர்கள் இராணுவத்தினராலும், டாங்கிகளாலும் நசுக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கானவர்கள் அதில் கொல்லப்பட்டார்கள். பெய்ஜிங்கிலும், சீனா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களும், தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
இறந்தவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்த அமெரிக்காவும், ஐரோப்பிய சக்திகளும் சீனாவின் மீது ஓர் அடையாள ஆயுத தடையாணை (a token arms embargo) விதித்தன. பின்னர், அதே ஆண்டின் இறுதியில் “மனித உரிமைகள்" பற்றி சீனாவின் முகத்தில் அறையப்பட்ட மற்றோர் இராஜாங்கரீதியிலான அடியாக, அமைதிக்கான நோபல் விருது பரிந்துரைக் குழு 1989ஆம் ஆண்டு நோபல் விருதை தலாய்லாமாவிற்கு வழங்கியது.
எவ்வாறிருப்பினும், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்பட்ட உண்மையான முடிவு, சீனாவிற்குள் உள்பாய்ந்த நூறுபில்லியன் கணக்கான அன்னிய முதலீட்டில் வெளிப்பட்டது. ஜனநாயக உரிமைகள் குறித்து சிறிதும் கவலைப்படாத முதலீட்டாளர்கள், தங்களின் சொத்திற்கும், இலாபத்திற்கும் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்தால் ஏற்படும் எவ்வித அச்சுறுத்தலையும் ஒடுக்க சீன ஆட்சி எல்லாவித கருவிகளையும் பயன்படுத்தும் என்பதற்கான ஓர் உத்தரவாதமாக அந்த படுகொலையை எடுத்துக் கொண்டார்கள்.
"உலகின் மலிவுக்கூலி தொழிலாளர் பட்டறையாக" மாறிய பின்னர், கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனா ஒரு பெரும் பொருளாதார வளர்ச்சியின் கீழ் சென்றுள்ளது. 1989இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் 10வது இடத்தில் இருந்த அந்நாடு இவ்வாண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. சார்புரீதியில் அமெரிக்காவின் வீழ்ச்சியை வெளிச்சமிட்டு காட்டிய 2007-08இல் வெடித்த உலக நிதி நெருக்கடி, சீனாவின் சவாலுக்கு எவ்வாறு பிரதிபலிப்பைக் காட்டுவது என்ற விவாதத்தையும் வாஷிங்டனில் தீவிரப்படுத்தியது.
லியூவிற்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கி இருப்பது, பெய்ஜிங்கிடமிருந்து பொருளாதார சலுகைகளைக் கோரவும் (குறிப்பாக யானின் மறுமதிப்பீட்டின் மீது), ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்ரோஷமான பிரச்சாரத்தின் சித்தாந்த உட்கூறுகளுக்கு ஓர் உந்துதலை அளிக்கிறது. உலக அரங்கில் பர்மா மற்றும் சூடான் போன்ற ஒடுக்கப்பட்ட ஆட்சிகளுக்கு சீனா அளித்துவரும் ஆதரவை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக, சீனாவில் நடக்கும் "மனித உரிமைகள்மீறல்" வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எடுத்துக்காட்டாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான அடக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்புகள் மீது ஓர் இராஜாங்கரீதியிலான மௌனம் காக்கப்படுகிறது.
குறைமதிப்புக்குட்பட்டிருக்கும் சீன யானின்மீது அதிகரித்து வரும் ஒரு "செலாவணி யுத்த" அபாயத்திற்கு இடையில், இந்த அமைதிக்கான நோபல் விருது அறிவிப்பு வெளியானது. 'சீனா அதன் செலாவணியில் அநியாயமாக தில்லுமுல்லு செய்வதற்காக அதன்மீது அபராதங்களை விதிக்க வேண்டும்' என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு சட்டவரைவு கொண்டு வரப்பட்டது. கடந்த வாரயிறுதியில் நடந்த சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில், அமெரிக்க கருவூல செயலாளர் திமோதி கீத்னர், “கணிசமாக குறைமதிப்பு செலாவணிகளைக் கொண்டிருக்கும் நாடுகள்- அதாவது சீனா- இன்னும் அதிகமாக உள்நாட்டு நுகர்வை அதிகரித்து, சர்வதேச வளர்ச்சியை மறுசமச்சீராக்கம் செய்ய வேண்டும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு முழுவதும், ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க மூலோபாயத்தை தீவிரமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. பெய்ஜிங்கிலிருந்து போராட்டங்கள் இருந்தபோதினும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒபாமா வேண்டுமென்றே தலாய்லாமாவைச் சந்தித்தாதுடன், தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்கப்பட்டன. இதன் விளைவாக பெய்ஜிங்கிற்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான உயர்-மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ஜூலையில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN) ஒரு மாநாட்டில், தென்சீன கடலில் ஆசியான் உறுப்புநாடுகளுக்கு சீனாவுடன் இருக்கும் பிராந்திய பிரச்சினைகளில் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்தார். மிக சமீபத்தில், கிழக்குசீன கடலில் பிரச்சினைக்குரிய தீவுகளின்மீது சீனாவுடன் எழுந்த ஜப்பானின் இராஜாங்கரீதியிலான பிரச்சினையில் அதற்கு மறைமுகமாக அமெரிக்கா ஆதரவளித்தது.
லியூவின் நோபல் விருதை ஒபாமா நிர்வாகம் இத்தகைய பரந்த பொருளாதார மற்றும் மூலோபாய பிரச்சினைகளோடு வெளிப்படையாக இணைக்காத நிலையில், அமெரிக்க ஊடகங்களும் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. கடந்த வெள்ளியன்று வெளியான ஒரு தலையங்கத்தில், லியூவைக் கைது செய்ததற்காக சீன "வெட்கப்பட வேண்டும்" என்று அறிவித்து, நியூயோர்க் டைம்ஸ் இராணுவத்திற்குப் பின்வரும் அழைப்பை விடுத்தது: “பெய்ஜிங் இந்நாட்களில் செலாவணி, வர்த்தகம், தெற்குசீன கடல் மற்றும் ஏனைய பல பிரச்சினைகளைச் சுற்றி அதன் பெரும் பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. பல அரசாங்கங்களும், நிறுவனங்களும் அதனிடமிருந்து தப்ப முடியாமல் நடுங்கி கொண்டிருக்கின்றன. 'உலக சக்தியாக உருவாவதற்கு அச்சுறுத்தல் ஒரு மூலோபாயம் அல்ல' என்பதை சீனாவின் தலைமையிலிருக்கும் எவரேனும் சுட்டிக்காட்ட வேண்டும்."
"சீன அச்சுறுத்தல்" எனப்படும் சீனாவின் பின்விளைவுகளை பற்றி கவனத்திற்கெடுக்காத நிலைப்பாட்டை மையமாக கொண்டு, ஆசியாவைச் சுற்றியும், சர்வதேச அளவிலும் அமெரிக்கா அதன் பலத்தைப் பரப்ப ஆதரவைக் கோரி வருகிறது. இந்த சித்தாந்த பிரச்சாரத்திற்கு துணைபோவதன் மூலமாக, நோபல் விருதைப் பரிந்துரைத்திருக்கும் குழு "அமைதியை" முன்னெடுக்கவில்லை, மாறாக இறுதி விளைவாக ஒரு யுத்தத்தை உருவாக்கக்கூடிய செலாவணி மற்றும் வர்த்தக யுத்தங்களுக்குரிய உந்துதல்களைத் தூண்டிவிடவே இது உதவியிருக்கிறது.
|