World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Marseille bosses call for army, police to break dockers’ strike

கப்பல்துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவம் மற்றும்பொலிஸ் தலையீட்டிற்கு மார்சேய் முதலாளிகள் அழைப்புவிடுகின்றனர்

By Antoine Lerougetel
12 October 2010

Back to screen version

முதலாளிகள் கூட்டமைப்பு ஒன்றியத்தின் தலைவரான ஜோன் லூக் சௌவன் ஞாயிறன்று இராணுவமும் பொலிசும் தெற்கு பிரான்ஸில் மார்சேயிக்கு அருகிலுள்ள பொ-லவேராத் (Fos-Lavéra) துறைமுக எண்ணெய் முனையப் பகுதிகளில் கிரேன் இயக்கும் தொழிலாளர்களின் முற்றுகையை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.

திங்களன்று பிரான்ஸ் 3 பிராந்தியத் தொலைக் காட்சியில் வந்துள்ள செய்தியாளர் மாநாட்டுத் தகவலில், பிரெஞ்சு முதலாளிகளின் முக்கிய அமைப்பான மெடப்பின் (Medef- Movement of French Enterprises, the main French employers’ organisation) பிராந்தியக் கிளைத் தலைவரான சௌவன் அறிவித்தார்: “சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புக்கள் குறுக்கிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.”

இக்கட்டுரையை எழுதுகையில், சௌவனின் ஆத்திமூட்டும் தன்மை நிறைந்த அறிக்கை அதிகம் வெளியிடப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருப்பதும் துறைமுகத் தொழிலாளர் தொகுப்பைப் பெரிதும் கட்டுப்படுத்துவதுமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) பொது அறிக்கை எதையும் இது குறித்து வெளியிடவில்லை.

சௌவினின் அறிக்கைகள் நிலைமையைச் சோதிப்பது போல், எந்த அளவிற்கு அரசியல் ஸ்தாபனத்தின் பல பிரிவுகள்—தொழிற்சங்கங்கள், செய்தி ஊடகம், குட்டி முதலாளித்துவக் கட்சிகள் அதவது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை—தொழிலாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்பது போலுள்ளன. ஆளும் வர்க்கம் அத்தகைய மூலோபாயங்களுக்கு இறங்குவது என்பது அனைத்து தொழிலாளர்களுக்கும் தீவிர எச்சரிக்கை ஆகும்.

ஐரோப்பா முழுவதும் இருக்கும் போக்கின் ஒரு பகுதிதான் இது. ஏற்கனவே கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் பார வண்டி சாரதிகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்திய ஆகஸ்ட் மாதப் போராட்டத்தை முறியடிக்க இராணுவத்தை பயன்படுத்தியது. தொழிற்சங்கங்ளும் குட்டி முதலாளித்துவ முன்னாள் இடது கட்சிகளும் பாப்பாண்ட்ரூவிற்கு நிபந்தனையற்று சரணடைந்தன. கிரேக்க பார வண்டி சாரதிகளின் தொழிற்சங்கத் தலைவர் ஜோர்ஜியோஸ் ஜார்ட்ஜடோஸ் பின்னர் ஆல்டர் தொலைக்காட்சி நிலையத்திடம் “நாங்கள் இப்பொழுது கிரேக்க அரசின் சிப்பாய்கள், எங்களுக்கு வரவுள்ள உத்தரவிற்காக காத்திருக்கிறோம்.” என்றார்.

ஸ்பெயினின் ஜோசே லூயி சபாதேரோவின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மாட்ரிட்டில் மெட்ரோ தொழிலாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின வேலைநிறுத்தங்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த இருப்பதாக அச்சுறுத்தியிருந்தது.

சௌவினுடைய அறிவிப்புக்கள் ஆளும் வர்க்கம் அதே போன்ற உத்திகளை செல்வம் படைத்த ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தும் என்பதற்கான அடையாளம் ஆகும். சௌவன், மார்சேயில் முதலாளிகள் அடங்கிய பிரச்சாரக் குழுவை, “என்னுடைய துறைமுகத்தில் இருந்து நகர்க” என்ற பெயரில் தொடக்கி வைத்துள்ளார். இக்குழு வணிக ஏடான லே எக்கோவில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் “உலகில் மிகச் சிறந்த வேலை” யை துறைமுகத் தொழிலாளர்கள் கொண்டிருப்பதான விதத்தில் துறைமுகத் தொழிலாளர்களைக் கேலி செய்து போடப்பட்டுள்ளது.

பொ-லவேரா கப்பல்துறைமுகப் பகுதியிலுள்ள 224 தொழிலாளர்கள் செப்டம்பர் 27 முதல் இப்பொழுது பொதுத்துறை மார்சேய் துறைமுக வளாகத்தில் இருக்கும் கப்பல்துறைமுகப் பகுதிப் பணிகளுக்கு ஒரு தனியான நிறுவனம்தோற்றுவிப்பதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இது தனியார் மயமாக்குதலில் முதல் படியாகும்.

மார்சேய் துறைமுகத் தொழிலாளர்களில் எஞ்சி இருப்பவர்கள் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் துறைமுகத்தில் நடக்கும் சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர்.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நடத்தும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை, வெகுஜன இயக்கங்களின் ஒரு பகுதிதான் இது. இவ்வெட்டுக்கள் ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை 60ல் இருந்து 62க்கு உயர்த்தும். அதே போல் நிதிய அபராதங்கள் இல்லாமல் ஓய்வூதிய உரிமைகள் பெறுவது 65ல் இருந்து 67 ஆக உயர்த்தப்படும்.

துறைமுக வேலைநிறுத்தம் சக்தி வாய்ந்த பாதிப்பைக் கொடுத்து, கோர்சிகாவிற்கும் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்கும் எண்ணெய் வினியோகத்தில் தடைகளை ஏற்படுத்தி, மேற்கு மத்தியதரைக் கடல் பகுதியில் பெரும்பாலான கப்பல்வழி வணிகத்தையும் நிறுத்தியுள்ளது. மத்தியதரைக்கடல் பகுதி பெட்ரோல் வியாபாரிகள் “ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் தங்கள் நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களை நிறைவேற்ற அரும்பாடு படுகின்றனர்” என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

வேலைநிறுத்தத்தின் சக்தி வாய்ந்த பாதிப்பினால் பெரும் திகைப்பு அடைந்த நிலையில், சமூக எதிர்ப்பு எழுச்சி ஏற்படுமோ என்ற அச்சத்திலும், கிரேன் இயக்குவோர்கள் மீது இழிந்த தாக்குதலைத் தொடங்கி, தாங்கள் வாங்கும் உயர் ஊதியத்திற்கு ஏற்ப அவர்கள் அதிகப் பணி புரிவதில்லை என்று சௌவன் கூறியுள்ளார். 55 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்னும் அவர்கள் தொடர்ந்த கோரிக்கை வலியுறுத்தலை அவர் கண்டித்துள்ளார். உண்மையில் கருத்துக் கணிப்புக்கள் பிரெஞ்சு மக்களில் 65 விகித ஓய்வூதிய பாதுகாப்பிற்கான தொழில்துறை நடவடிக்கைக்கு ஆதரவு கொடுப்பதைக் காட்டியுள்ளன.

அரசையும் முதலாளிகளையும் சவால் விடும் அளவிற்குத் தொழிலாளர்கள் வந்துள்ளது குறித்து தன்னுடைய இகழ்வை சௌவன் வலியுறுத்தியுள்ளார்: அதாவது “CGT துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் Pascal Galéoté, மார்சேய், புரோவென்ஸ், மற்றும் லியோன், விரைவில் அல்சாஸ் மாநிலங்களிலுள்ள மக்கள் அனைவரையும் பணையமாக வைத்துள்ள நிலையின் ஒரு பகுதியாக இந்த எண்ணெய் குறித்த சச்சரவைக் கொண்டுள்ளார். அரசை கட்டாயப்படுத்த அவர் முயல்கிறார்”.