World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Japan-China tensions over disputed islets unresolved

பிரச்சினைக்குரிய தீவுகள் மீதான ஜப்பான்-சீனா பதட்டங்கள் தீர்க்கப்படவில்லை

By John Chan
11 October 2010

Back to screen version

புரூசெல்ஸில் நடந்த ஆசிய-ஐரோப்பிய கூட்டத்தினூடாக (Asia-Europe Meeting) கடந்த வாரம் உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்து பேசிய ஜப்பானிய பிரதம மந்திரி நொயொடோ கனும், சீன அதிபர் வென் ஜியாபொவும் ஒரு சீன மீன்பிடி கப்பலின் தளபதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல வார பதட்டங்களை தணியச் செய்ய ஒப்புக் கொண்டார்கள். இருந்தபோதினும், இந்த பேச்சுவார்த்தையில் மோதலுக்கு இட்டுச் சென்ற அடிமட்ட பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

கிழக்கு சீனக்கடலில் பிரச்சினைக்குரிய தியோயு தீவுகளுக்கு (இது ஜப்பானிய மொழியில் சென்காகூ என்றழைக்கப்படுகிறது) அருகில் ஒரு சீன மீன்பிடி கப்பலுடன் இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 7இல் இராஜாங்கரீதியான கோபம் மேலெழுந்தது. 'உடனடியாக மீன்பிடி கப்பலின் தளபதியை விடுதலை செய்ய வேண்டும்' என்று கோரிய சீனா, உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்புகளை துண்டித்துக் கொண்டு, “எதிர் முறைமைகள்” எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து, உளவு பார்த்த குற்றங்களின் பேரில் சீனாவில் நான்கு ஜப்பானிய குடிமக்கள் கைது செய்யப்பட்டார்கள். ஜப்பானுக்கு அனுப்பப்படும் அரிய நிலத்தடி மூலப்பொருட்களை (rare earths) தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பெய்ஜிங் வெளிப்படையாகவே உத்தரவிட்டது.

செப்டம்பர் 24இல் கைது செய்யப்பட்ட தளபதியை விடுவித்து, ஜப்பான் பின்வாங்கியது, ஆனால் பூசல் தொடர்ந்து கொண்டிருந்தது. டோக்கியோ வருத்தம் தெரிவித்து, நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பெய்ஜிங் கோரியது. அதேசமயம் அதன் வாகனங்களை சேதப்படுத்தியமைக்காக சீனா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஜப்பான் முறையிட்டது. கடந்த திங்களன்று கன்னும், வென்னும் சந்தித்து கொண்ட பின்னர், இரண்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்த ஒருமனதாக ஒப்புக்கொண்டன. இந்த மாதம் வியட்நாமில் நடக்கவிருக்கும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும், நவம்பரில் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும்.

“அந்த குறிப்பிட்ட சம்பவம் முடிந்துவிட்டது,” என்று ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு மக்கள்தொடர்பு அதிகாரி அறிவித்தார். தியோயு தீவுகளுக்கு அருகில் ஜப்பானிய கடற்படை கப்பல்களுடன் குறைந்தபட்சம் இரண்டு மோதல்களில் ஈடுபட்ட, இரண்டு சீன ரோந்து கப்பல்கள் கடந்த புதனன்று அப்பகுதியிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டன. உளவுபார்த்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த நான்கு ஜப்பானிய குடிமக்களில் கடைசி நபரை சனியன்று சீன அதிகாரிகள் விடுவித்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்த பிரச்சினை விரைவிலேயே மீண்டும் எழக்கூடும். ‘வருத்தம் தெரிவிக்க வேண்டும்; நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை வெளிப்படையாக கிடப்பில் போடப்பட்டிருந்தாலும், தீர்க்கப்படாமலேயே தான் இருக்கின்றன. அவர்களின் சந்திப்பின் போது, கன் மற்றும் வென் தியோயு (சென்காகூ) மீதான அவர்களின் பிராந்திய முறையீடுகளை எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரிய நிலத்தடி மூலப்பொருட்களின் சீன ஏற்றுமதி மீதான வெடிப்புமிக்க பிரச்சினை பதட்டங்களைத் தூண்டிவிடத் தொடங்கி இருக்கிறது. மின்னணுவியல், உலோக பாகங்கள் உட்பட உயர்-தொழில்நுடப் உற்பத்திக்கு மிக முக்கியமான இந்த அரிய நிலத்தடி மூலப்பொருட்கள் தற்போது பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் பிரத்யேகமாக எடுக்கப்பட்டு, தூய்மையாக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடைகளை விதித்தது.

‘சீனாவின் அரிய நிலத்தடி மூலப்பொருட்களின் ஏற்றுமதி இன்னும் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை’ என்று கடந்த செவ்வாயன்று தெரிவித்த ஜப்பானிய வர்த்தக மந்திரி அகிஹிரோ ஒஹாடா, “இந்த நிலையை சீனா தீர்க்க வேண்டும் என்று அரசாங்கம் வலுவாக வலியுறுத்தும்” என்று தெரிவித்தார். இதற்கிடையில், இந்த மூலப்பொருட்களைச் சீனாவிற்கு வெளியிலிருந்து பெற, ஜப்பானிய பெருநிறுவனங்களின் நிதியுதவியுடன் டோக்கியோ ஏற்கனவே “rare earth strategy” என்பதை திட்டமிட்டது. மங்கோலியாவிலிருந்து அரிய நிலத்தடி மூலப்பொருட்களைத் தோண்டி எடுப்பது குறித்து பேச, அக்டோபர் 2இல், கன் மங்கோலிய பிரதம மந்திரி சுக்பாதர் பட்போல்டைச் சந்தித்தார்.

“அரிய நிலத்தடி மூலப்பொருட்களைப் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக சீனா உபயோகிக்காது” என்று ஐரோப்பிய அரசியல் மற்றும் வியாபார தலைவர்களிடம் வென் புதனன்று தெரிவித்தார். இருந்தபோதினும், அவர் மேலும் கூறியதாவது: “அரிய நிலத்தடி மூலப்பொருட்களின் நிலையான அபிவிருத்தியைத் தான் நாங்கள் முன்னெடுக்கிறோம். அது தேசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமில்லாமல், சர்வதேச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கூட அவசியமாகும்.” ஆகவே அதன் உற்பத்தியைக் “கட்டுப்படுத்துவதும், நிர்வகிப்பதும்” அவசியமானது என்று வலியுறுத்தினார். ஜப்பானுக்கான ஏற்றுமதி எந்த அளவிற்கு பழையநிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது இன்றுவரை தெளிவாக இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த வாரயிறுதி கூட்டத்தில் 'யானின் மறுமதிப்பீடு கோரிக்கை' உட்பட—பல்வேறு பிரச்சினைகள் மீதான அமெரிக்கா மற்றும் சீனாவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு இடையில் ஜப்பானுடனான சீனாவின் பிரச்சினையைத் தற்காலிகமாக தணிப்பது என்பதும் நடைபெற்றது. சீனா-ஜப்பான் மோதலில் ஒரு தீர்மானத்திற்கு வர வாஷிங்டன் வெளிப்படையாகவே கேட்டு கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையின்படி எந்தவொரு இராணுவ மோதல் நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை விவகார செயலாளர் ஹிலாரி கிளிண்டன் டோக்கியோவிற்குக் குறிப்பிட்டுக் காட்டினார்.

சீனா அதன் எல்லையோர பிரச்சினைகளில் ஜப்பானுடன் மட்டுமில்லாமல் தெற்கு சீன கடலில் முறையீடுகளைக் கொண்டிருக்கும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் ஒரு பிராந்திய அறுச்சுறுத்தலாக சீனாவை வரைந்து காட்ட தியோயு தீவுகளின் விஷயத்தை அமெரிக்க ஊடகங்கள் பயன்படுத்தி இருக்கின்றன. சீனாவைக் காரணங்காட்டி அப்பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை வலுப்படுத்துவது தான் இதனடியில் இருக்கும் நோக்கமாகும்.

கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் குர்ட் கேம்ப்பெல்லை வாஷிங்டன் கடந்த வாரம் டோக்கியோவிற்கு அனுப்பியது. சீனாவுடன் இராஜாங்கரீதியிலான மோதலை கன் கையாண்டவிதம் குறித்து பாராட்டிய பின்னர், “இரண்டு நாடுகளுமே கடற்போக்குவரத்து மீதான சுதந்திரம் (freedom of navigation), பெருங்கடல்கள் மீதான சுதந்திரத்தை (freedom of the oceans) அதிகளவில் சார்ந்திருப்பதால்" அமெரிக்கா-ஜப்பான் கூட்டுறவை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை கேம்ப்பெல் வலியுறுத்தினார். “கடற்போக்குவரத்து மீதான சுதந்திரம்" என்ற பதாகையின்கீழ், சீன எல்லையோர கடல்பகுதிகளில் அமெரிக்க கடற்படை இராணுவ பயிற்சிகளையும், ரோந்துகளையும் அதிகரித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த பிரச்சினை கன்னின் ஜப்பானிய ஜனநாயக கட்சி (Democratic Party of Japan) தலைமையிலான அரசாங்கத்திற்கு ஓர் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், கட்சியில் செல்வாக்கை பிரித்தெடுத்திருந்த இச்சிரோ ஒஜாவாவிடமிருந்து DPJ தலைமையிலான ஒரு சவாலை கன் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒஜாவா, வாஷிங்டனைச் சாராமல் பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக ஒரு வெளியுறவு கொள்கையை அறுவுறுத்தினார். பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமாகவே இருக்கின்ற நேரத்தில், சீனாவின் ஏற்றமதி சந்தைகளையும், மலிவுக்கூலி தளத்தையும் வலுவாக சார்ந்திருக்கும் ஜப்பானிய வியாபார பிரிவுகளுடன் ஒஜாவா பேசி இருந்தார்.

ஒகினாவா (Okinawa) தீவிலிருந்து பிரச்சினைக்குரிய அமெரிக்காவின் கடற்தளத்தை வெளியேற்றுவதை உறுதி செய்ய வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அழைப்புவிடுத்ததன் மூலமாக ஒஜாவா பொதுமக்களின் ஆதரவை கேட்டுக்கொண்டார். 'அந்த தளம் பாதுகாப்பாக வெளியேற்றப்படும்' என்ற ஒரு தேர்தல் வாக்குறுதியை ஜப்பானிய அரசாங்கம் புறக்கணித்ததால், அது ஒகினாவாவில் பெரும் போராட்டங்களைத் தூண்டிவிட்டது. மேலும் ஜூனில் பிரதம மந்திரியாக இருந்த யுகியோ ஹடோயாமாவின் இராஜினாமாவிற்கும் அது இட்டுச் சென்றது. ஹடோயாமாவிற்கு மாற்றாக வந்த கன், அந்த தளம் ஒகினாவாவிலேயே இருக்கும் என்பதற்கு மீண்டும் உத்திரவாதம் அளித்தார். அத்துடன் வாஷிங்டனான நெருக்கமான உறவுகளை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுள்ளார்.

மறுதேர்தலில் ஒஜாவாவிற்கு எதிராக பிரதமமந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் அவர் பேசிய முதல் கொள்கை உரையில், கன் எச்சரித்ததாவது: "சீனா மறைமுகமாக பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் இந்திய பெருங்கடலில் இருந்து கிழக்கு சீன கடல் வரையில் கடல்சார் இராணுவ நடவடிக்கைகளையும் அதிகரித்து வருகிறது." "நம்முடைய நாட்டை சுற்றி இப்பிராந்தியங்களில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை மற்றும் ஸ்திரமின்மையைச்" சமாளிக்க ஒரு ஆக்கபூர்வமான இராணுவக் கொள்கையை அரசாங்கம் கைகொள்ள வேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்தார்.

சீன மீன்பிடி கப்பல் தளபதியை விடுதலை செய்ததன்மூலம், சீனாவிடம் அடிபணிந்தமைக்காக எதிர்கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சியிடமிருந்தும் (LDP), ஊடகங்களிடமிருந்தும், DPJ உள்ளேயே கூட கன் இப்போது விமர்சனங்களை முகங்கொடுத்து வருகிறார். வென் உடனான கன்னின் சந்திப்பை மற்றொரு இராஜாங்கரீதியான தோல்வியாகவும், பலவீனத்தின் வெளிப்பாடாகவும் கூறி அதை LDP கடுமையாக சாடியது. சென்காகூ பிரச்சினையில் சீனாவிற்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிப்பதற்காக, DPJஇன் முன்னாள் உள்துறை விவகார மந்திரி ஹராகுசி கஜூஹிரோ 33 சட்ட ஆலோசகர்கள் கொண்ட ஓர் இருகட்சி குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரயிறுதியில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த தீவுகளைப் "பார்வையிட்டார்கள்".

கன்னின் செல்வாக்கு வேகமாக வீழ்ந்து வருவதை எடுத்துக்காட்டி முக்கிய ஜப்பானிய செய்தித்தாள்கள் கடந்தவாரம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. கன்னின் அரசாங்கத்திற்கு கடந்தமாதம் 64 சதவீதம் இருந்த ஆதரவு வெறும் 49 சதவீதமாக சரிந்திருப்பதாக Mainichi Shimbun வெளியிட்டது. டோக்கியோவிலும், ஏனைய நகரங்களிலும் பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பங்குபெற்ற சீன-எதிர்ப்பு பேரணிகளை வலதுசாரி தேசியவாத குழுக்கள் நடத்திக்காட்டின.

ஓர் அரசியல் நிதிஒதுக்கீட்டு மோசடியில் ஒஜாவாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னெடுக்கலாம் என்றவொரு நீதிமன்ற குழுவின் பரிந்துரையால் DPJக்குள்ளேயே உட்பூசல் வலுத்து வருகிறது. DPJஇல் இருந்தும், பாராளுமன்றத்திலிருந்தும் ஒஜாவா இராஜினாமா செய்ய வேண்டும் என்று LDPஇல் இருந்து வரும் அழுத்தம் மற்றும் ஊடகங்களில் நிலவும் அழுத்தங்களுக்கு இடையில், ஆளும் கட்சிக்குள் ஒரு பிளவை கன் முகங்கொடுக்கக்கூடும். ஒஜாவா இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டால், ஒஜாவாவின் ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் இறங்கி கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்று Yomuri Shimbun குறிப்பிட்டது.

அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையில் கூர்மைப்பட்டிருக்கும் பதட்டங்களால் உருவாக்கப்பட்ட, ஜப்பானிய ஆளும் வட்டாரங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆழமான பிளவுகளின் ஓர் அறிகுறி தான் இந்த மோசடி. இப்பிராந்தியம் முழுவதும் இருக்கும் நாடுகளைப் போலவே, ஜப்பானும் அமெரிக்காவுடனான அதன் நீண்டகால மூலோபாய சார்பிற்கு எதிராக, தற்போது அதன் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனாவுடனான அதன் பொருளாதார நல்லிணக்கத்தை சமப்படுத்துவதற்கான முயற்சிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது மீண்டும் ஒரு பனிப்போருக்குத் திரும்புவதற்கே வகைச்செய்யும்.