World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Differences widen at IMF meeting

சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் கருத்துமோதல்கள் விரிவடைகின்றன

By Nick Beams
11 October 2010

Back to screen version

சனியன்று வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டுக் கூட்டத்தில், முக்கிய முதலாளித்துவ சக்திகள் இடையே நாணய மற்றும் வர்த்தக மோதல்கள் அதிகரித்துகொண்டு செல்லும் நிலையில் ஒரு பலவீனமடையும் உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு குறித்த அச்சங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆயினும் ஒரு தீர்வை நோக்கி முன்செல்லவும் இக்கூட்டம் தவறியது. உண்மையில், முக்கியமான சக்திகளுக்கு இடையே, அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே, கருத்துமோதல்கள் விரிந்து கொண்டே செல்வதையே இக்கூட்டம் வெளிப்படுத்தியது.

பைனான்சியல் டைம்ஸ் இன்று இவ்வாறு குறிப்பிட்டது: “அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான விரோதம் பதுங்குகுழிப் போர் போன்ற ஒன்றாக அதிகரித்து விட்டிருக்கிறது.”

முக்கிய தொழிற்துறை நாடுகளில் குறைந்த வளர்ச்சியின் காரணமாக விளையும் உலகளாவிய வேலைவாய்ப்பின்மை மோசமடையும் நிலை அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதோடு போருக்கும் கூட இட்டுச் செல்லலாம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக-இயக்குநரான டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் இக்கூட்ட சமயத்தில் எச்சரித்தார்.

அவர் கூறினார்: “இந்த நெருக்கடி சமயத்தில் உலகப் பொருளாதாரமானது சுமார் 30 மில்லியன் வேலைகளை இழந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாய், வரும் தசாப்தங்களில், 450 மில்லியன் பேர் உழைப்பு சந்தையில் களமிறங்க இருக்கிறார்கள். எனவே நாம் உண்மையிலேயே ஒரு தலைமுறையைத் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.”

”உங்களுக்கு வேலை போகும்போது, உங்களது ஆரோக்கியமும் மோசமடைகிறது. உங்களுக்கு வேலை போகும்போது, உங்களது பிள்ளைகளின் கல்வியும் மோசமடைகிறது. உங்களுக்கு வேலை போகும்போது சமூக ஸ்திரத்தன்மையும் மோசமடைகிறது, ஜனநாயகத்திற்கு இன்னும் சொல்லப் போனால் அமைதிக்கே கூட ஒரு அச்சுறுத்தல் உருவாகி விடுகிறது.”

பிரதிநிதிகளிடம் நேரடியாகப் பேசிய ஸ்ட்ரவுஸ் கான் கூறினார்: “ஒரு வெகு நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு முகம்கொடுக்கும் ஒரு முக்கிய தருணத்தில் நாம் கூடியிருக்கிறோம். வளர்ச்சி திரும்புகிறது, ஆயினும் அது உடையத்தக்கதாகவும் சமமற்றதாகவும் இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.” நாணயங்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பயனளிக்காது மற்றும் அது ஒரு “பேரழிவு”க்கும் கூட இட்டுச் செல்லக் கூடும் என்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் எச்சரித்தார்.

ஆயினும் ஸ்ட்ரவுஸ் கானின் வார்த்தைஜாலங்கள் எல்லாம், முக்கிய கொள்கை விடயங்களில் எதிலும், குறைந்தபட்சமாய் நாணயமதிப்பு பிரச்சினையிலேனும், முக்கிய சக்திகளை நெருக்கமாய் கொண்டுவர இயலாமல் தோற்றது. தனது ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு அவசியமானதை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்கா, சீனா யுவானின் மதிப்பை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அந்நாடு தனது உள்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு அதிகமாய் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோருகிறது. சீன அதிகாரிகளோ தங்கள் பங்கிற்கு, நாணய மதிப்பை உயர்த்தவே தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாய் தான் செயல்படுத்தப்பட்டாக வேண்டுமே தவிர “அதிர்ச்சி வைத்தியமாய்” செயல்படுத்தப்பட முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை அமைப்பு குழுவின் இறுதி வெளியீடானது “வர்த்தக உபரி மற்றும் வர்த்தக பற்றாக்குறை நாடுகளின் பொறுப்புகளை அங்கீகரித்த வகையில் உலகளாவிய வளர்ச்சியின் ஒரு கூடுதல் சமநிலையான வகையை நோக்கி பணியாற்ற” உறுதியளித்தது. அத்துடன் “பெரும் மற்றும் ஓயாது மாறும் மூலதன நகர்வுகள் - இவை சேதாரம் ஏற்படுத்தத்தக்கவை - முன்நிறுத்தும் சவால்களை நிவர்த்தி செய்யவும்” உறுதிபூண்டது.

ஆனால் கூட்டத்திற்குப் பின் ஸ்ட்ரவுஸ் கான் ஒப்புக்கொண்டது போல், அங்கு வழக்கத்தல் இருந்த மொழி “திறம்பட்டதாய் இருக்கவில்லை”, விடயங்கள் மாற்றி விடாது.

இக்கூட்டத்திற்கு மத்திய வங்கி தலைவர்களாலும் நிதி அமைச்சர்களாலும் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பொதுவான அணுகுமுறை இல்லாதிருப்பதை அடிக்கோடிட்டன. பெரிய சக்திகள் ஒவ்வொன்றும் தனது சொந்த நலன்களின் மீதே முக்கிய கவனத்தை வைத்தன. பெரும் பொருளாதாரங்கள் “வளர்ச்சி இலக்குகளை எட்டத் தவறியுள்ளன” என்பது உலகப் பொருளாதாரத்திற்கான மிகப் பெரும் அபாயம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளரான டிமோத்தி கேய்த்னர் அளித்த ஒரு அறிக்கை எச்சரித்திருந்தது. ஆனால், அதன்பின் அந்த அறிக்கை, பெயர் குறிப்பிடாமல், சீனாவை விமர்சிக்கச் சென்றது.

“மீட்சியானது நீடிக்கத்தக்கதாய் இருக்க வேண்டுமென்றால் உலகளாவிய வளர்ச்சி வடிவத்தில் ஒரு மாற்றம் இருந்தாக.....வேண்டும். வெகு காலமாய், பல நாடுகள் உள்நாட்டு நுகர்வை விட ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதை நோக்கி தங்கள் பொருளாதாரத்தை நோக்குநிலை அமைத்துக் கொண்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை விடவும் அதிகமான அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்ய அவை கணக்கிடுகின்றன'' என்றார்.

சுமார் 2.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய நாணய கையிருப்பு கொண்டிருக்கும் சீனா மீதான ஒரு கூடுதல் விமர்சனமாய் கேய்த்னர், பெரும் உபரிகள் கொண்டுள்ள நாடுகள் உள்நாட்டு தேவையை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றார். “தங்களது நாணய மதிப்புகளை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைமதிப்பில் வைத்திருக்கும் நாடுகள் விடயத்தில் குறிப்பாக இது முக்கியமானது”.

சர்வதேச நாணய நிதியம் ”பரிவர்த்தனை விகித கொள்கைகள் மற்றும் கையிருப்பு பெருக்க நடைமுறைகள் மீதான தனது கண்காணிப்பை வலுப்படுத்த” அழைப்பு விடுப்பதற்கும் அவர் சென்றார்.

சீன அதிகாரிகள் தங்கள் சொந்த விமர்சனங்களை முன்வைத்தனர். செல்வச்செழிப்புடனான நாடுகளின் உயர்ந்த கடன்கள், குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் மரபுசாரா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் ஒரு பெரும் உலகப் பிரச்சினையாக அமைந்திருப்பதாக சீன மத்திய வங்கி ஆளுநரான சௌ சியாசுவான் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்தார்.

“பெரும் கையிருப்பு நாணய வழங்குநர்கள் மிகக் குறைந்த வட்டிவீதங்களையும் மரபுசாரா நிதிக் கொள்கைகளையும் தொடர்வது வளரும் நாடுகளுக்கு நிதிக் கொள்கையை நடத்திச் செல்வதில் கடும் சவால்களை உருவாக்கியுள்ளன” என்று சௌவின் அறிக்கை அறிவித்தது. அமெரிக்காவின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மத்திய வங்கியாளரின் நெருப்பு எங்கு நோக்கிக் கக்கப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

”உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதலாய் சேதாரம் ஏற்படுத்தும்” முன்னேறிய நாட்டுக் கொள்கைகளை சர்வதேச நாணய நிதியம் கண்காணிக்க சௌ அழைப்பு விடுத்தார். நாணய பரிவர்த்தனை மதிப்பு கொள்கைகள் மீதான கவனம் வளர்ந்த நாடுகளை “நிதியத்தின் மொத்த கவனத்திற்கு” வெளியே திறம்பட கொண்டுசென்றிருக்கிறது.

”வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது நிதி அமைப்புமுறைகளை சரிசெய்வதிலும் சீர்திருத்துவதிலும் மந்தமாய் முன்னேறுவதும், நிதித் துறையின் ஸ்திரத்திற்கு கொள்கை ஆதரவையே தொடர்ந்து சார்ந்திருப்பதும் தான் இப்போதிருக்கும் மிக அடிப்படையான பிரச்சினைகள்” என்றார் அவர்.

”நடப்பு ஆண்டு மற்றும் வருகின்ற ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் கொண்டிருக்கும் முதிர்ச்சியுற்ற கடன்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறைகளின் பிரம்மாண்டமான அளவுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இறையாண்மை அபாயங்கள் எந்த சமயமும் மோசமடைந்து உலகளாவிய நிதித்துறை ஸ்திரத்தன்மையின் மீது படிப்படியான விளைவுகளை உருவாக்கக் கூடும்” என்று சௌ தெரிவித்தார்.

இதேபோல், மற்ற தலைவர்கள் தங்களது சொந்த நாட்டு நலன்களை முன்னெடுத்தனர். ஜப்பானிய நிதி அமைச்சரான யோஷிஹிகோ நோடா ஜப்பான் வங்கி அந்நிய நாணயப் பரிவர்த்தனை சந்தைகளில் தலையீடு செய்து யென்னின் மதிப்பை வலுவில் குறைப்பது குறித்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்க முனைந்தார். இது சந்தையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதே அன்றி, ஏற்றுமதிச் சந்தைகளில் அனுகூலத்தை சம்பாதிப்பதற்காக நாணயமதிப்பை பலவீனப்படுத்துவதற்காக அல்ல என்று அவர் தெரிவித்தார்.

நிதி உலகில் பழைய சக்திகள் கோலோச்சிய அந்த நாட்கள் திரும்புவதையே ஐரோப்பிய-மண்டல நிதி அமைச்சர்களின் தலைவரான ஜான் கிளவ்ட ஜங்கர் விரும்புவதை தெளிவுபடத் தெரிவித்தார். ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்: “ஜி20 அமைப்பில் நிறைய பேர் இருக்கிறார்கள், நிறைய நலன்கள் உலவுகின்றன, அதனால் நாணயமதிப்பு விடயத்தில் ஒரு உடன்பாட்டைக் காண முடியவில்லை. ஜி7 [அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான்] மற்றும் சீனா மட்டும் இருக்கும் கூட்டமே சிறந்ததாய் இருக்கும்.”

சிலர் தங்களது விருப்பமான எண்ணங்களில் ஈடுபட்டிருந்தனர். சென்ற மாதத்தில் ஒரு சர்வதேச “நாணயமதிப்புப் போர்” குறித்து எச்சரித்த பிரேசிலின் நிதி அமைச்சரான கிடோ மண்டேகா, ஒரு யுத்தம் தவிர்க்கப்பட முடியும் என்று தான் நம்புவதாய் தெரிவித்தார். “ஜி20 கூட்டங்களில் பிளாசா ஒப்பந்தம் மாதிரியான ஒன்றுக்கு நாம் வர முடியும்” என்று அவர் கூறினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்க டாலரின் மதிப்பை குறைத்துக் கொள்ள ஐந்து பெரிய நாடுகளிடையே 1985ம் ஆண்டில் எட்டப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.

ஆஸ்திரேலிய கருவூலச் செயலரான வேய்ன் ஸ்வான் உள்நாட்டு செய்திகளிலேயே அவரது விழிகள் நிலைகுத்தியிருக்க எந்த விரிவான விடயங்களையும் கருதும் திறனற்றவராய் தோற்றமளித்தார். சென்ற மாதத்தில் அமெரிக்காவில் இன்னுமொரு 95,000 வேலைகள் காணாமல் போன நிலையுடன் ஒப்பிட்டால் எத்தகையதொரு மேம்பட்ட வகையில் ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு நிலைமை இருந்தது என்பதை வலியுறுத்துவதற்காக அவர் ரொம்ப பிரயத்தனப்பட்டார்.

அடுத்த மாதம் தென்கொரிய தலைநகரான சியோலில் நடைபெற இருக்கும் ஜி20 கூட்டத்திற்கு இப்போது மொத்த கவனமும் குவியும். ஆனால் அச்சமயத்தில் இந்த கருத்துமோதல்கள் எல்லாம் இன்னும் நன்கு கூர்மைப்பட்டிருக்கக் கூடும் என்பதையே சர்வதேச நாணய நிதியக் கூட்ட நிலவரம் தெளிவாக்குகிறது.