WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Pakistani, European officials charge US manufactured terror scare
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களை அமெரிக்கா உருவாக்குவதாக பாகிஸ்தானிய, ஐரோப்பிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்
By Robert Stevens
9 October 2010
Back to
screen version
பயங்கரவாத தாக்குதல் குறித்த சமீபத்திய அமெரிக்க எச்சரிக்கைகள் அரசியல்ரீதியாக நோக்கமுடையவை என்று கூறும் உயர் நிலை பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளினதும் மற்றும் ஐரோப்பாவின் உளவுத்துறை அதிகாரிகளினதும் கருத்துகளை பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் வெள்ளியன்று வெளியிட்டது. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் போரை தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை அமெரிக்காவால் பயன்படுத்தப்படுவதாக பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வஜித் சம்சுல் ஹசன் கார்டியன் செய்தித்தாளிடம் தெரிவித்தார். ஐரோப்பாவின் ஏதோ ஓரிடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் வெகுசீக்கிரத்தில் நிகழும் அபாயம் இருப்பதாக கூறும் ஒபாமா நிர்வாகத்தின் கூற்றினை ஐரோப்பாவின் முன்னணி அரசியல்வாதிகளில் பலரும் வெளிப்படையாக மறுத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இவரின் கருத்து வந்திருக்கிறது
ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பிரஜைகளை குறிவைத்து அல்கெய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் மூலம் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கும் ஒரு தெளிவற்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அக்டோபர் 3 அன்று விநியோகித்தது. எந்த குறிப்பிட்ட நாட்டின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை, “பயங்கரவாத தாக்குதல்களுக்கான சாத்தியம்” மட்டுமே அதில் இருந்தது. உடனே பிரிட்டன், ஜப்பான், சுவீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் உடனடியாக ஐரோப்பாவில் தங்கள் குடிமக்களும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள எச்சரிக்கையூட்டின.
ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை ஆணையரான விவியேன் ரேடிங் மற்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சரான தோமஸ் டி மெசியர் உட்பட, ஏராளமான ஐரோப்பிய குறிப்பாக ஜேர்மனியில்- அரசியல்வாதிகள் உடனடியாக தாக்குதல் அபாயம் நிலவுவதான கூற்றை மறுக்க முன்வந்தனர்.
வஜித் சம்சுல் ஹசன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரிக்கு நெருக்கமானவர். அவர் கார்டியனிடம் கூறுகையில், ‘மேற்கு ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற இடங்களையும் நகரங்களையும் தாக்குவதற்கு அல்கொய்தா மூலமான சதிகளின் சாத்தியம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை வழங்கி உஷார்படுத்தியுள்ள போதிலும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு எந்த திட்டவட்டமான விவரங்களும் அளிக்கப்பட்டிருக்கவில்லை’ என்றார். “பயங்கரவாதிகள் மற்றும் அல்கொய்தா நபர்கள் குறித்து அமெரிக்கர்கள் திட்டவட்டமான தகவல்களைக் கொண்டிருப்பார்களாயின், எங்களுக்கு அவை வழங்கப்பட்டிருக்க வேண்டும், அப்போது நாங்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியும்” என்றார் அவர்.
"[அமெரிக்காவிடம் இருந்தான] இத்தகைய அறிக்கைகள் விரக்திகள், கையாலாகாத்தனம் மற்றும் கள யதார்த்தங்களை உணர மறுப்பது ஆகியவற்றின் கலவையாகத் தான் உள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மையை வலுவில் மீறுவதற்கான எந்த முயற்சியும் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் பிரதான நோக்கமாய் அனுமானிக்கப்படும் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடியாது.”
ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானில் பயன்படுத்துவது உள்ளிட்ட அமெரிக்காவின் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கைகள் பரந்துபட்ட மக்களுக்கு கோபமூட்டிக் கொண்டிருப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் பெற்றுள்ள கவலையையே ஹசனது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஒவ்வொன்றும் தனது சொந்த ஆட்சிக்குத் தான் கூடுதலாய் குழிபறிக்கிறது என்பது சர்தாரி ஆட்சிக்குத் தெரியும். அமெரிக்காவினது இப்போதைய எண்ணிலடங்கா போர்க் குற்றங்களில் பாகிஸ்தானிய அரசாங்கமும் உடந்தையாக இருக்கிறது. அமெரிக்க ஆளில்லா விமான மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நாட்டையே “பற்றியெரியச் செய்திருக்கின்றன” என்றார் ஹசன். ”எங்கள் மீது ஏன் அவர்கள் அளவுகடந்த நெருக்குதலை அளிக்கிறார்கள்? இது ஜனநாயக அமைப்புக்கான அச்சுறுத்தலாகும்... ஆனால் இது குறித்து அமெரிக்காவுக்கு அக்கறையில்லை என்றே பாகிஸ்தானிய மக்கள் நினைக்கின்றனர்.”
எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் சந்திக்கக் கூடிய பதிலடிகளில் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் குறிவைக்கப்படக் கூடும் என்று ஹசன் எச்சரித்தார். “இந்த பாதையில் செல்ல அரசாங்கம் விரும்பவில்லை” என்றார் அவர். “ஆனால் மக்கள் தாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக உணர்கின்றனர். அவர்கள் [அமெரிக்கர்கள்] இன்னொருமுறை யாரையேனும் கொல்வார்களேயானால், அம்மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். பாகிஸ்தானில் 3,000 அமெரிக்கர்கள் வாழ்வதாய் ஒரு கணக்கு கூறுகிறது. அவர்கள் வெகு இலகுவான இலக்குகளாகக் கூடும்.”
இத்தகைய இலக்குகளில் ஜகோபாபாதில் உள்ள பாகிஸ்தானிய விமானப் படைத் தளத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் அமெரிக்கர்களும் இடம்பெறக் கூடும். சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருக்கும் இந்த தளம் செப்டம்பர் 11, 2001 தொடங்கி நிரந்தர அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜகோபாபாத்தில் தான் அமெரிக்க மத்திய உளவுத் துறை படைகளின் இருப்பிடமாக உள்ளதுடன், ஆளில்லா விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கொட்டகைத்தளமாகவும் இது இருந்து வருகிறது.
பராக் ஒபாமா அதிகாரத்திற்கு வந்த பின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தீவிரமாய் அதிகரித்திருக்கின்றன. இவரது நிர்வாகத்தின் முதலாவது ஆண்டில், அமெரிக்க ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்கள் 700க்கும் அதிகமான பாகிஸ்தானிய அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் குடித்தது. திங்களன்று, ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தான் எல்லையின் அருகிலுள்ள வடக்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தில் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் நான்கு ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர். மொத்தமாய் எட்டு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
புதனன்று, “வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் உயிரிழந்ததாக” பிபிசி தெரிவித்தது. “செப்டம்பரின் ஆரம்பம் முதல் இந்த பகுதியில் 27 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக” பிபிசி கூறியது.
ஆளில்லா விமானத் தாக்குதல்கள் 2004ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் தொடங்கின, பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு இசைவளித்தது.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டை தாண்டி சென்று விட்டதாய் இன்னுமொரு பாகிஸ்தானிய வெளியுறவுத் துறை அதிகாரியை மேற்கோள்காட்டி கார்டியன் தெரிவித்தது. அந்த அதிகாரி கார்டியன் பத்திரிகையிடம் இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தில் நாம் எப்போதும் இதை மறுத்து வந்திருக்கிறோம். ஆனால் அது நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் விழித்துக் கொள்வது அவசியம்.”
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள முக்கிய இடங்களில் ஒரேசமயத்தில் தாக்குதல் நடத்துவதற்கு சதி உருவாகிக் கொண்டிருப்பதாய் அமெரிக்காவில் இருந்து வந்த தகவல்கள் குறித்து அவநம்பிக்கை வெளியிட்ட ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்தான கருத்துக்களும் கார்டியன் செய்தியில் இடம்பெற்றிருந்தன. “ 'கமாண்டோ பாணி’ சதிகள் தொடர்ச்சியாய் நடைபெறக் கூடும் என்பதான கூற்றுகளுக்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறதென்று ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் மற்றும் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அழைக்காத கவனத்தைத் தூண்டுவதால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் சிஐஏ கடும் எரிச்சலுற்றுள்ளதாகவும்'' கார்டியன் கூறியது.
”[பயங்கரவாத சதிகளை] ஒன்றாய் தொகுத்து தொடர்ச்சியான ஒன்றாக விவரிப்பது முட்டாள்தனமானது” என்று ஒரு அதிகாரி அந்த செய்தித்தாளிடம் கூறியிருந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் மரணமடைந்தது முதல் பீடித்திருக்கும் பெரும் அச்ச உணர்வை நிராகரித்த ”பயங்கரவாத-தடுப்பு அதிகாரி” ஒருவரை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. செப்டம்பர் 8 அன்று வடக்கு வசிரிஸ்தானில் நடந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் மற்றவர்களுடன் சேர்ந்து ஜப்பாரும் கொல்லப்பட்டிருந்தார். பேர்மிங்காமைச் சேர்ந்த இவர், “பிரிட்டனின் இஸ்லாமியப் படை” என்கின்ற ஒரு புதிய குழுவுக்கு நூற்றுக்கணக்கான ஆட்களைச் சேர்ந்து புனிதப் போரை பிரிட்டனுக்குள் கொண்டுவர உறுதி கொண்டிருந்ததாய் தற்பெருமையடித்துக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
தான் இங்கிலாந்தைத் தாக்க விரும்புவதாக பாகிஸ்தானின் மிரன்சா அருகிலுள்ள சுமார் 300 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் ஜப்பார் பேசியது தெரியவந்தபின் அவர் கொல்வதற்கு குறிவைக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிகழ்வுக் குறிப்புகள் கூறுகின்றன. பாகிஸ்தான் உளவுத்துறை ஜப்பாரின் இருப்பிடம் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திற்குத் தெரிவித்தது, இங்கிலாந்து அதிகாரிகள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். ஆனால் சதித்திட்டத்தை பற்றி கூறிய ஒரு இங்கிலாந்து அரசு அதிகாரி, “அதற்கு பெரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை” என்று கூறியதாக கார்டியன் தெரிவித்தது. அதே அறிக்கையில் ஒரு “பயங்கரவாத தடுப்பு அதிகாரி” ஜப்பாரின் கூற்றுகளுக்கு “உறுதிப்படுத்தும் சான்றுகள்” ஏதும் இல்லையெனக் கூறியிருந்தார்.
கார்டியனின் வெள்ளியன்றான கட்டுரையில் ஒரு உளவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியிருந்தார்: “எல்லா விடயங்களும் விவாதிக்கப்படுகின்றன - உறுதியான சதித்திட்டமொன்று இருந்ததாக அதற்கு அர்த்தமில்லை. குழுக்களை அமைப்பது எளிதல்ல.”
இரண்டு நாட்களுக்கு முன்பு சன் பத்திரிகை செய்தியில் ஜப்பார் ”பெரிய அளவில் தன்னைக் கற்பனை செய்து கொண்டார். அவரது தற்பெருமை தான் அவரது உயிரைக் குடித்தது. உண்மையான மூத்த அல்கெய்தா ஆசாமி ஒருவர் அத்தகையதொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்” என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
|