World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Oliver Stone returns to Wall Street

ஓலிவர் ஸ்டோன் மீண்டும் வோல் ஸ்ட்ரீட் திருப்புகிறார்

By Hiram Lee
7 October 2010

Back to screen version

ஓலிவர் ஸ்டோனின் சமீபத்திய திரைப்படமான Wall Street: Money Never Sleeps, அவருடைய 1987இல் வெளியான Wall Street படத்தின் தொடர்ச்சியாக உள்ளது. நியூயோர்க்கின் முக்கிய முதலீட்டு வங்கிகள் பொறிய தொடங்கிய நிலையில் அவற்றை பிணையெடுக்க பொது கருவூலத்திலிருந்து பில்லியன்கணக்கான டாலர்களை ஒப்படைக்க கூட்டமைப்பு அரசாங்கம் தயாராகி கொண்டிருந்த போது, அதாவது தற்போதைய நெருக்கடியின் தொடக்கத்தில், அதாவது 2008இல் இந்த புதிய படத்தின் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்த புதிய படத்தின் தொடக்கத்தில், பிரபலமல்லாத வோல்ஸ்ட்ரீட் வாகனத்துறை முகவர் (wheeler-dealer) ஜோர்டன் ஜெக்கோ (மைக்கேல் டக்ளஸ்)—1987 படத்தின் முக்கிய கதாபாத்திரம்—சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருகிறார். உள்நிறுவன வர்த்தகத்தில் (insider trading) ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் கழித்திருந்த நிலையில், நிதியியல் உலகில் மீண்டும் முக்கிய இடத்தைப் பெற ஜெக்கோ விரும்புகிறார். அவர் Is Greed Good? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுகிறார். அது வாசிப்பாளர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது.

வீட்டு அடைமானக் கடன் (subprime mortgage) குமிழி வெடிப்பின் விளைவாக வீட்டுச் சந்தையின் பொறிவை அடித்தளமாக கொண்டு எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய ஒரு நிதியியல் பேரழிவு ஏற்படும் என்று அவர் கணிக்கிறார். ஒரு மாணவர் கூட்டத்தினிடையே உரையாற்றுகையில், வரவிருக்கும் நெருக்கடியையும், வோல்ஸ்ட்ரீட்டின் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் உபாயத்தின் விளைவுகளையும் ஜெக்கோ விவாதிக்கிறார். அதில் பெரும் எண்ணிக்கையிலான செல்வவளத்தின் திரட்சி, ஒட்டுமொத்தமாக உற்பத்தி அல்லது ஏனைய சமூக நல தேவைகளிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்று விளக்குகிறார். “ஊக வணிகம் தான் எல்லா கொடூரங்களுக்கும் தாயாக இருக்கிறது," என்று கெய்கோ கூறுகிறார்.

இதற்கிடையில் ஊகவணிக முதலீட்டு வங்கி Keller Zabelஇல் இருக்கும் ஓர் இளம் சொத்து வர்த்தகரான ஜேகப் மூர் (ஷியா லாபியோஃப்), அவருடைய ஆலோசகர் லிவிஸ் ஜபெல்லின் (பிரான்க் லான்ஜெல்லா) தற்கொலையால் நிலைகுலைந்து போகிறார். ஜெக்கோவை வெறுக்கும் அவருடைய மகள் வின்னியுடன் (கேரி முல்லிகன்) இவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. கடுமையான கடன் சுமையைத் தாங்க முடியாமலும், மத்திய ரிசர்வின் அழுத்தத்தினாலும் நீண்டகால Keller Zabel நிறுவனம் பொறிந்துவிடுகிறது. Zabel அதன் முதலீட்டு நிறுவனத்தை வோல்ஸ்ட்ரீட்டில் முக்கிய பிரமுகரான பிரெட்டன் ஜேம்ஸின் (ஜோஸ் புரோலின்) ஊகவணிக நிறுவனமான Churchill Schwartzனிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.

ஜேம்ஸை கீழே கொண்டு வந்து தம்முடைய ஆலோசகரின் மரணத்திற்கு பழிக்குப்பழி தீர்ப்பது எவ்வாறு என்பதில் ஜெக்கோவின் ஆலோசனையைக் கோருகிறார் ஜேகப். இதற்கு கைமாறாக, ஜெக்கோ அவருடைய மகளுடன் சேருவதற்கு ஜேகப் உதவ வேண்டியுள்ளது. அந்த இளம் வர்த்தகர் தவிர்க்க முடியாமல் ஜேம்ஸிடம் வேலை செய்ய வேண்டியதாகிறது. அங்கே அவர் ஜேம்ஸின் அதிருஷ்டத்திற்குப் பின்னணியில் இருக்கும் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தொடங்குகிறார்.

முதலில் வெளியான Wall Street திரைப்படம் 1985இல் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருந்தது. அது குறிப்பாக உள்நிறுவன வர்த்தக மோசடிகள் மற்றும் பெருநிறுவன சவாரிகளைக் கவனத்தில் எடுத்திருந்தது. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட, பங்குச்சந்தை மோசடியின் மூலமாகவும், உழைக்கும் மக்களை விலை கொடுக்கச் செய்ததன் மூலமாகவும் பெரும் எண்ணிக்கையிலான செல்வவளங்களை பெருந்திரளாகச் சேர்த்த நிதியியல் குற்றவாளிகளைப் பற்றிய, ஒட்டுண்ணித்தனமாக வளர்ந்துகொண்டிருந்த ஓர் அடுக்கைப் பற்றி சரியான நேரத்தில் வெளியான ஆய்வாக இருந்தது. (ஸ்டோனின் அந்த படத்தில், ஒரு விமானசேவை நிறுவனத்தை வாங்கி, அதன் சொத்துக்களை விற்பதன் மூலமாக தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து இலாபம் ஈட்ட ஜெக்கோ திட்டமிடுகிறார்.)

அமெரிக்காவில் இந்த நிதி மேற்தட்டின் செல்வமும், அதிகாரமும் கடந்த கால்-நூற்றாண்டில் அல்லது ஸ்டோனின் Wall Street வெளியானதிலிருந்து பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. 1985இல், ஜோர்டன் ஜெக்கோவைப் பொறுத்த வரையில், ஒருவரை வெளியேற்றி பணக்காரர் ஆவது என்றால் $50 மில்லியனிலிருந்து $100 மில்லியனாக இருக்கிறது. ஆனால் இன்று அதுபோன்றதொரு பேராசைக்கு பில்லியன்கள் மட்டுமே திருப்திப்படுத்தும். புதிய படத்தின் ஒரு காட்சியில் ஜெக்கோ கூறுகிறார், “நான் ஒருமுறை 'பேராசை நல்லது தான்' என்று கூறியதாக யாரோ எனக்கு நினைவுபடுத்தினார்கள். ஆனால் இப்போதோ அது சட்டவிரோதமாக தெரிகிறது."

இத்தகைய ஏமாற்றுதாரிகளின் இரக்கமற்றதன்மையை ஸ்டோனினால் துல்லியமாக படம் பிடித்துக்காட்ட முடிகிறது. அத்துடன் அவர்களுக்கு செல்வத்தின் மீதிருக்கும் தீராத பேராசையையும் வெளியே கொண்டு வந்து காட்டுகிறார். அவர்களைச் சுற்றியிருக்கும் வங்கியியல் அமைப்புமுறை பொறிந்து கொண்டிருக்கும் போது, பிரெட்டன் ஜேம்ஸூம், ஜேக்கப்பும் நாட்டைச் சுற்றி ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார்கள்; சாலைகளில் விலையுயர்ந்த பந்தய மோட்டார் சைக்கிள்களில் சுற்றி கொண்டிருக்கிறார்கள். மற்றொரு காட்சியில், ஜேகப்பிடம் அவருடைய "தொகை" என்ன? என்று கேட்கிறார். அதாவது, "இவ்வளவு போதும்" என்று கூறி நடையைக் கட்டத் தேவையான ஓர் இறுதித்தொகை அது. ஜேம்ஸ் சாதாரணமாக "இது போதாது" என்று கூறுகிறார்.

நிதியியல் செய்தி சேனல்களில் பேட்டியளிக்கும் அளவிற்கு வளர்ந்து வரும் ஜெக்கோ, அத்துடன் ஒரு பிரபல நிதியியல் பகுப்பாய்வாளராக வளர்ந்துவிடும் அவரின் மறுபிரவேசம் உண்மையை எதிரொலிக்கிறது. நிதியியல் மற்றும் அரசியல் உலகில் பெரும்பாலும் ஒருவர் பார்க்கும் கிரிமினல் தன்மைகள் எழுத்தாளர்களாலும், விமர்சகர்களாலும் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் வரலாறும், அநியாயமான நடவடிக்கைகளும் மறக்கக்கடிக்கப்படுகின்றன. ஓலிவர் நார்த் மற்றும் ஜி. ஜோர்டன் லிட்டி போன்ற பிரபலங்கள், கடந்த தசாப்தத்தில், கேபிள் செய்தி வலையமைப்புகளில் நன்கு பரிச்சயமான முகங்களாக இருந்தார்கள்.

நியூயோக்கில் கூட்டமைப்பு ரிசர்வ் வங்கி காட்சியில் பிரபல முதலீட்டு வங்கிகளின் தலைவர்கள் நெருக்கடியைக் குறித்து விவாதிக்கிறார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்கவும், ஓர் அரசாங்க பிணையெடுப்பிற்கான திட்டங்களை வகுக்கவும், அத்துடன் ஓர் அனுதாபத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். முன்னாள் நடிகர் எலி வால்லாச், பழைய Wall Street படத்தில் வந்த ஜீல்ஸ் ஸ்தெயின் ஹார்ட் கதாபாத்திரமாகவே இந்த காட்சிகளில் தோன்றுகிறார். இந்த நெருக்கடி 1929ஐ விட மோசமானதாக இருக்கும். ஏனென்றால் இது மிக வேகமாக பரவும் என்று அவர் கூறுகிறார். “இது உலகை முடிவுக்கே கொண்டு செல்லும்," என்கிறார்.

பல வலுவான காட்சிகள் இருந்தபோதினும், படத்தின் பெரும்பகுதி ஏமாற்றமளிக்கிறது. படத்தில் கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக இருக்கும் வின்னிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையிலான உறவையும்விட, ஜேகப்பிற்கும், வின்னிற்கும் இடையிலான காதல் காட்சிகள் காட்டப்படுவதிலும், காட்சியமைப்பிலும் முந்தி செல்கின்றன. எவ்வாறிருப்பினும், படத்தில் அவர்களுக்காக சர்வதேச பொருளாதாரம் வழிவிட்டு ஒதுங்கிவிடுகையில், மில்லியன்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாக இருக்கும் போது, வின்னிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் காட்டப்படும் பிரச்சினைகளைப் பார்க்கக்கூடியதாய் இல்லை.

இத்தகைய சித்திரவதைப்படுத்தும் உறவுகளின் பின்புலத்தைவிட உலகளாவிய முதலாளித்துவத்தின் நிலைமுறிவு சிறிதளவில் தான் அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது. ஸ்டோன் மையப்புள்ளியிலிருந்து திசைதிரும்புகிறார் அல்லது ஒருவேளை நெருக்கடியின் பல்வேறு பரிமாணங்களில் மூழ்கடிக்கப்படுகிறார் என்பதை ஒருவரால் நிரூபிக்க முடியாது என்றபோதினும், உணர முடிகிறது. இயக்குனர் எந்தவிதத்திலும் அவருடைய விஷயத்தை—அதாவது கதையுடன் அதிகளவில் கையாளக்கூடிய சாத்தியம் இருந்த வோல்ஸ்ட்ரீட் மற்றும் நிதியியல் பேரழிவை—முழுவதுமாக கையாளவில்லை. முதலாளித்துவத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த பேரழிவை போதியளவிற்கு எதிர்கொள்ள முடியாத அவரிடமிருந்த திறமையின்மையில், வர்க்க காரணங்களும், சித்தாந்த காரணங்களும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன.

வோல்ஸ்ட்ரீட்டால் கொண்டு வரப்பட்ட நிதியியல் குற்றங்களுடன் ஸ்டோன் நேரடியாக அவரை அவரே கொண்டு வந்து நிறுத்தும் போது, அவற்றை தனிநபர் குளறுபடியின் விளைவுகளாகவும், பழித்தீர்ப்பதற்கான விருப்பமாகவும் கொண்டு வந்து காட்ட முனைகிறார். Keller Zabel நிறுவனத்தை எதிர்ப்பதற்கு பிரெட்டன் ஜேம்ஸ் பங்குகளில் மோசடி செய்கிறார். அதற்கு மாறாக, ஜேகப்பும் கெய்கொவும் தங்களின் சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேம்ஸை கீழே கொண்டு வர சூழ்ச்சி செய்கிறார்கள். இது பழிக்குப்பழிவாங்கும் குணங்களும், நடவடிக்கைகளும் நிதியியல் உலகில் அறியப்படாமல் இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுவதற்காக அல்ல—நிச்சயமாக அவ்வாறு அல்ல—ஆனால், 2008 பொறிவைப் போன்றதொரு நிகழ்வு, முடிவில், தற்போதைய பொருளாதார அமைப்புமுறையின் ஒன்றோடொன்று தொடர்புபட்ட முரண்பாடுகளால் உந்தப்பட்டிருந்தது.

ஸ்டோனின் திரைப்படத்தில், வோல்ஸ்ட்ரீட் முறிவின் தன்மைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் பல்வேறு சூழ்ச்சிகளால் விளக்கப்படவில்லை. மாறாக அவற்றைக் குறைத்து காட்டுகிறது. ஸ்டோனின் அகநிலைவாதமும், பதிவுவாதமும் தெளிக்கப்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் பல இடங்களில், நெருக்கடியை துரிதப்படுத்திய வோல்ஸ்ட்ரீட்டின் குற்ற நடவடிக்கைகளும், குறுகிய கண்ணோட்ட நிகழ்முறைகளும் கதையோட்டத்திற்கும் அப்பாற்பட்டு "விளக்கப்பட்டிருக்கிறது". இந்த விளக்கங்களில் பெரும்பாலானவை ஜெக்கோவால் அளிக்கப்படும் வசனத்தில் இருக்கின்றன. வீட்டு அடைமானக் கடன்கள் தான், மோசமான கடன்களுக்கு முட்டுகொடுப்பதாக அவர் விவரிக்கிறார். இதையும், நெருக்கடியின் தன்மையையும் அவர் குறிப்பிடுகிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் கூறுகிறார். ஆனால் உண்மையில் ஸ்டோன் நமக்கு நிகழ்முறையைக் காட்டவில்லை. மேலும் இவற்றில் எதையுமே மனித தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளின் வடிவத்தில் கொண்டு வந்து, அதன் மூலம் மனித கூறுபாடுகளின் மற்றும் சமூக கூறுபாடுகளின் மையத்திலிருப்பதில் சிலவற்றை அவர் வெளிப்படுத்திக்காட்டவில்லை. இவ்வாறு அதன் தாக்கம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, இந்த நெருக்கடிக்கு யாரை, எதை குற்றஞ்சாட்டுவது? இதுவொரு சிறிய கேள்வியல்ல. ஜெக்கோ அவருடைய உரையின் ஓரிடத்தில், பேராசை 'எல்லாயிடத்திலும்' இருக்கிறது; மேலும் இந்த நிதியியல் பேரழிவிற்கு வோல்ஸ்ட்ரீட்டின் நிதியியல் ஏமாற்றுக்காரர்களை மட்டுமின்றி 'ஒவ்வொருவரையும்' குறை கூற வேண்டி உள்ளது என்று குறிப்பிடுகிறார். தங்களால் முடியாது என்ற போதும், தங்கள் சக்திக்கு மீறி கடன்களை வாங்கிய சாதாரண மக்களை அவர் குற்றவாளிகளாக்குகிறார். இது முட்டாள்தனமானது, மேலும் அமெரிக்காவில் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் பெருநிறுவன திருடர்களின் சுய-நியாயப்பாட்டையும், அவர்களின் பிரச்சாரத்திற்கு பெரும் சலுகையையும் இது குறிக்கிறது.

உண்மையில், ஏற்கனவே மோசமான வாழ்க்கை தரங்களில் வாடிக்கொண்டிருக்கும் மக்களின் பெரும் அடுக்குகள் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பெரும் கடன் அளவுகளை எட்டுவதற்கு உதவின. இறுதிபயனரின் தேவைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக சொல்லப்பட்ட ஒன்றினால், விரைவாக உயர்ந்து வந்த மதிப்புகளுக்கு எதிராக குடும்பங்கள் தங்களின் வீடுகளை முட்டுக்கொடுத்த நிலையில், வீட்டுச் சந்தை குமிழியானது வீழ்ச்சியோடு சேர்ந்து கொண்ட ஒரு கருவியாகி போனது.

ஸ்டோன் அவரே இங்கே ஓரளவிற்கு ஜெக்கோவாக இருந்து பேசுகிறார் என்பதை ஒருவரால் உணர முடியும். இப்படத்தின் பின்பகுதியில், ஜேக்கப் கூறுகிறார், “நாம்" எல்லோருமே ஒரு கதை போன்றவர்கள் தான், அதாவது, உண்மையில் நம்மில் யாரும் நிஜத்தை முகங்கொடுக்க விரும்பவில்லை என்கிறார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவையாய் உள்ளன. பரந்தளவில் ஒருவகையான அமெரிக்க சுயநலம் மற்றும் அளவிற்குஅதிகமான குவிப்பை (excess) எடுத்துக்காட்டுவதென்பது, தொழிலாளர்களால் கடந்த காலத்தில் வென்றெடுக்கப்பட்ட ஆதாயங்களை இனியும் அளிக்க முடியாது, இனி இப்போது "கடுமையான நடவடிக்கைகள்" தான் செய்யப்பட வேண்டும் என்ற உத்தியோகபூர்வ சொல்லாடல்களை ஏற்றுக் கொள்வதாகும். இந்த தர்க்கம் முற்றிலுமாக ஓர் அநியாயமான திசையில் தான் இட்டுச் செல்லும். கலைஞர்கள் இதைவிட மிகவும் சிந்தனைபூர்வமாகவும், நேர்மையோடும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.