WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
சோ.ச.க. (இலங்கை) தோழர் பியசீலி விஜேகுணசிங்கவின் மரணச் சடங்கை நடத்தியது
By our correspondents
14 September 2010
Use
this version to print | Send
feedback
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினரான தோழர் பியசீலி விஜேகுணசிங்கவின் மரணச் சடங்கில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். செப்டெம்பர் 6 அன்று நடந்த இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பகுதிகளின் பிரதிநிதிகள், சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சக கல்விமான்கள் மற்றும் மாணவர்கள், புத்திஜீவிகள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்களும் அடங்குவர்.
இலங்கை சோ.ச.க. க்கு நான்காம் அகிலத்தின் அனைத்தலகக் குழுவின் அனுதாபச் செய்திகளை கொண்டுவந்த, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோ.ச.க. யின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், பியசீலியின் மறைவு “பதிலீடு செய்யமுடியாத ஒரு இழப்பு” எனத் தெரிவித்தார். இங்கு நாம் ஒன்றுகூடியிருப்பது அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமன்றி, மிகவும் முன்கூட்டியே முடிவடைந்த ஒரு அசாதாரணமான வாழ்க்கையை நினைவு கூர்வதற்குமாகும்…. பியசீலி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வரை அவர் அறிவார்ந்த முறையிலும் அரசியல் ரீதியிலும் செயலூக்கத்துடன் இயங்கினார்,” என நோர்த் தெரிவித்தார்.
வாழ்க்கை முழுவதும் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக இருந்த பியசீலி, கொழும்பு ஆஸ்பத்திரி ஒன்றில் மார்பு புற்று நோய்க்காக சத்திர சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து, செப்டெம்பர் 2 அன்று காலை தனது 67வது வயதில் மரணமானார். அவர் சோ.ச.க. யின் பொதுச் செயலாளர் விஜே டயஸின் மனைவியாவார்.
பியசீலி இலங்கையில் மார்க்சிச இலக்கிய விமர்சனத்துக்கான போராட்டத்தில் ஒரு முன்னணி புள்ளியாக இருந்தார். அவர் நான்கு தசாப்தங்களாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் சிங்கள பீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார். 1997ல் பேராசிரியராகவும் சிங்கள இலக்கியப் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதோடு கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார்.
ஏறத்தாழ இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் பியசீலியின் மரணத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்ததோடு அவரது வேலையின் பரந்தளவிலான செல்வாக்கையும் தாக்கத்தையும் சுட்டிக்காட்டியிருந்தன. பல பத்திரிகைகள் கலை மற்றும் இலக்கிய விமர்சகர் என்ற முறையில் அவரது பார்வை மற்றும் அவரது வகிபாகத்தையும் விளக்கி நீண்ட கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியும் அவரது மரணத்தை அறிவித்தது.
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பியசீலியின் இலக்கியங்களை வாசிக்கின்றனர்.
செப்டெம்பர் 2 முதல் இறுதிச் சடங்கு நடக்கும் வரை பியசீலியின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கொழும்பு ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்தனர். ட்ரொட்ஸ்கிஸ்ட், ஒரு இலக்கிய விமர்சகர் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர் என்ற வகையில் அவரது வேலைகளைப் பற்றி தமது பாராட்டுக்களை பலர் அனுதாபச் செய்தி புத்தகத்தில் எழுதியிருந்தனர்.
மார்க்சிய இலக்கிய விமர்சனம் பற்றிய பியசீலியின் நூல்கள், அதே போல் அவரது கலை திறனாய்வுகள் மற்றும் அவர் மொழி பெயர்த்த லியோன் ட்ரொட்ஸ்கியின் நூல்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பூதவுடலுக்கு அருகில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மலர் வலையங்கள் வைக்கப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சார்பில் ஒரு இராணுவ அலுவலர் மலர்ச்சாலைக்கு எடுத்து வந்த மலர்வலயத்தை சோ.ச.க. ஏற்றுக்கொள்ள மறுத்தது.
விஜே டயஸ் மரண ஊர்வலத்தைத் தொடர்ந்து கொழும்பு பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த அனைத்துலக ட்ரொட்ஸ்கிஸ இயக்கத்தின் பிரதிநிதிகள், சோ.ச.க. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இறுதிச் சடங்குக்கு தலைமை வகித்த விஜே டயஸ் நன்றி தெரிவித்தார்.
டேவிட் நோர்த் தனது உரையில், நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தம் வெடித்த 1983ல் பியசீலி எழுதிய ஒரு கட்டுரையை பற்றிக் குறிப்பிட்டார். வன்முறையானது உயிரியல் ரீதியில் மனித சிறப்பியல்பில் வேரூண்றியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்த, கொழும்பு மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் கார்லோ பொன்சேகாவுக்கு பதிலளித்தே பியசீலி அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். “வன்முறையானது அடிப்படையில் தனிமனித சிறப்பியல்பில் இருந்து எழுவதில்லை, மாறாக, அது சமுதாய முரண்பாடுகளில் இருந்தே எழுவதோடு, அதை தூக்கி வீசுவதன் மூலம் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்,” என பியசீலி பதிலளித்திருந்தார்.
நோர்த் தெரிவித்ததாவது: “உண்மையில் அவர் இலங்கையில் உள்ள ஒரு புத்திஜீவி எதிரிக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அவர் சமுதாயம் மற்றும் மனித வாழ்க்கை பற்றி ஒரு தோல்வி மனப்பான்மையுள்ள மற்றும் கடுமையான பிற்போக்கு பார்வையைக் கொண்டுள்ள ஒரு பரந்த சர்வதேச நிலைப்பாட்டுக்கே பதிலளித்துள்ளார்... மனித சமுதாயத்தின் முரண்பாட்டில் இருந்தே வன்முறை தோன்றுகின்றது என்றால், அந்த சமுதாயத்தை மாற்றியமைப்பதன் மூலம் வன்முறைக்கு முடிவுகட்ட முடியும்.
“இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் முடிவற்ற வன்முறைக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைத்து, தன் பக்கம் இருந்து ஒரு மிகச் சிறந்த அறிவார்ந்த மற்றும் நன்னெறி சார்ந்த உத்வேகத்தை வெளிப்படுத்தினார். பியசீலி உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு புரட்சிகரவாதியாக இருந்தார். அவர் சமுதாயத்தை மாற்றியமைப்பதில் மனிதனின் இயலுமையை ஆழமாக நம்பினார்.”
பியசீலி “சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு ஊக்குவிப்பாளராக விளங்குவார்” என கூறி நோர்த் தனது உரையை முடித்தார்.
ஆஸ்திரேலிய சோ.ச.க. யின் துணை தேசியச் செயலாளர் லின்டா லெவின், ஆஸ்திரேலிய சோ.ச.க. யின் உறுப்பினர் பீட்டர் சிமன்ட்ஸ் ஆகியோர் ஏனைய சர்வதேச பிரதிநிதிகளாவர். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) தமிழ் ஆதரவாளர்களின் சார்பில் அதியன் மற்றும் இந்திய ஆதரவாளர்களின் சார்பில் அருன்குமாரும் வருகை தந்திருந்தனர்.
இறுதி நிகழ்வின் போது இலங்கை சோ.ச.க. க்கும் மற்றும் பியசீலியின் கனவர் விஜே டயஸ், மகன், மருமள் மற்றும் பேத்திக்கும் நா.அ.அ.கு. வின் ஆஸ்திரேலிய பகுதி உறுப்பினர்களின் அனுதாபச் செய்தியை கொண்டுவந்த லின்டா லெவின், 1960களின் முற்பகுதியில் ட்ரொட்ஸ்கிஸத்துக்காக இலங்கையில் வென்றெடுக்கப்பட்ட ஒரு அசாதாரணமான பரம்பரையின் பகுதியாக பியசீலி இருந்தார் எனத் தெரிவித்தார். “உயர்ந்த கருத்துக்கள், கொள்கைகள் மற்றும் புரட்சிகர அனைத்துலகவாத முன்நோக்காலும் ஈர்க்கப்பட்ட அவர், எண்ணிலடங்கா அரசியல் மற்றும் தனிப்பட்ட சிரமங்கள் மற்றும் சவால்களின் ஊடாக, தனது தொழில்சார் வல்லமைக்குள்ளும் மற்றும் இலங்கை தொழிலாள வர்க்கத்துக்குள்ளும் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் இத்தகைய கொள்கைகள் மற்றும் முன்நோக்குக்கான போராட்டத்துக்கான தனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை அவர் அர்ப்பணித்திருந்தார்,” என அவர் தெரிவித்தார்.
பியசீலி “வியக்கத்தக்க தகுதி மற்றும் அமைவடக்கம், பெருந்தன்மை மற்றும் நட்பும் நிறைந்த ஒரு ஆழமான கலைத்துவமிக்க மனிதராக திகழ்ந்த” போதிலும், “தனது உறுதியான நம்பிக்கைக்காகப் போராடுவதில் வல்லமைமிக்க அறிவாற்றல் மற்றும் நெஞ்சழுத்தம் மிக்க உறுதிப்பாடும் ஊக்கமும் கொண்டவராக இருந்தார். அவர் மதவாத மற்றும் கருத்துவாத கருத்தியலுக்கும் அவை இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கும் எதிராக மார்க்சிய சடவாதத்துக்காகப் போராடினார். அவர் பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்,” என லெவின் விளக்கினார்.
உலக சோசலிச வலைத் தளத்துக்கு அவர் எழுதிய கலை திறனாய்வுகளைப் பற்றியும் லெவின் குறிப்பிட்டார். அதில் பியசீலி, “தசாப்தகால யுத்தம், வன்முறை மற்றும் இனவாதத்தையும் தேசியவாதத்தையும் குறைவின்றி முன்னிலைப்படுத்தல் மூலம் இலங்கையில் சமூக உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகரமான மாற்றங்கள்” குறித்த தனது கூருணர்வை வெளிப்படுத்தினார். இலங்கை திரைப்பட இயக்குனர் பிரசன்ன வித்தானகேயின் பவுரு வலலு (சுவர்களுக்கிடையில்) என்ற திரைப்படத்தைப் பற்றிய விமர்சனத்தில், “பொதுவில் முதலாளித்துவ சமுதாயத்தில், மற்றும் குறிப்பாக பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில், இருந்துகொண்டுள்ள சமூக மற்றும் குடும்ப முறைமை மூலம் ஆண்களையும் பெண்களையும் பற்றிக்கொண்டுள்ள மனவியல் துன்பத்தை பவுரு வல்லு வெளிப்படுத்துகிறது”, என அவர் எழுதியிருந்தார்.
லியோன் ட்ரொட்ஸ்கி 1940ல் தான் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக எழுதிய ஒரு பந்தியுடன் அந்த விமர்சனத்தை பியசீலி நிறைவு செய்திருந்தார். “இப்போதுதான் நடாஷா வீட்டு முற்றத்தில் இருந்து யன்னலுக்கு அருகில் வந்ததோடு, எனது அறைக்குள் காற்று சுதந்திரமாக நுழையக்கூடிய வகையில் அதை அகலமாகத் திறந்தாள். சுவருக்குக் கீழாக புற்களின் தெளிவான பச்சை கீற்றுக்களையும் சுவருக்கு மேல் தெளிவான நீல வானத்தையும், மற்றும் எல்லா இடங்களிலும் சூரிய வெளிச்சத்தையும் என்னால் காண முடிகிறது. வாழ்க்கை அழகானது. சகல தீமைகள், ஒடுக்குமுறை மற்றும் வன்முறையில் இருந்து அதை தூய்மை படுத்தி அதை முழுமையாக அனுபவிக்க எதிர்காலப் பரம்பரைக்கு இடம்கொடுங்கள்.”
“இத்தகைய வேலைகள்... தோழர் பியசீலியின் வாழ்க்கை மற்றும் வேலைகளை ஊக்குவித்த உணர்வுகளின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்” என லெவின் குறிப்பிட்டார்.
இறுதிச் சடங்கில் பங்குபற்றிய கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் உல்ரிச் ரிப்பர்ட் மற்றும் பீட்டர் சுவாட்சும், பிரிட்டன் சோ.ச.க. யின் சார்பில் கிரிஸ் மார்ஸ்டன் மற்றும் கனடா சோ.ச.க. யின் சார்பில் கீத் ஜோன்சும் அனுப்பிய அனுதாபச் செய்திகளை விஜே டயஸ் வாசித்தார். (பார்க்க: “இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட்டின் மறைவுக்கு சர்வதேச அனுதாபச் செய்திகள்”)
பிரான்சில் உள்ள நா.அ.அ.கு. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுதாபச் செய்தியை அதியன் கொண்டுவந்தார். “வரலாற்றின் ஒரு தீர்க்கமான நிலைமையில் ஒரு மிக முக்கியமான மற்றும் அறிவாற்றல் மிக்க தோழர்யை இழப்பது மிகவும் கவலைக்குரியது. 1960களில் பியசீலி மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஏனைய தோழர்களும் முன்னெடுத்த சக்திவாய்ந்த அரசியல் மற்றும் கோட்பாட்டுப் போராட்டங்களின் விளைவாகவே இன்று நாங்கள் இங்கு இருக்கின்றோம்,” என அவர் குறிப்பிட்டார்.
“நாம் ஒரு தீர்க்கமான மற்றும் முக்கியமான காலகடத்துக்குள் நுழைகின்றோம். அதில் நாம் எண்ணிலடங்கா அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் தோழர் பியசீலியின் மரணம் எமக்கு மாபெரும் இழப்பாகும். நாம் நா.அ.அ.கு. வின் போராட்டத்தின் பாகமாக இருப்போம்.”
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களப் பீடத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரியவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். சிங்கள இலக்கியத்தில் பியசீலியின் மாணவனாக இருந்ததை நினைவுகூர்ந்த அவர், பியசீலி ஒரு பெரும்புள்ளியாக இருந்தார் என்றார். “எங்களது பல்கலைக்கழக விரிவுரைகள் அனைத்திலும் அவர் அர்த்தபுஷ்டியான செல்வாக்கைச் செலுத்தியிருந்தார்… அவர் நம்பிக்கை கொண்டிருந்த அரசியல் கருத்தியலின் அடிப்படையில் இலக்கியத்தைப் பற்றி அவர் முன்னெடுத்த கற்கையினால் உருவாக்கப்பட்டதே அவரது மிகச் சிறந்த அறிவாற்றல் என்பதை மாணவர்கள் என்ற முறையில் நாம் புரிந்துகொண்டிருந்தோம். அவரது அரசியல் கொள்கைகளே அவர் ஒரு பொருத்தமான இலக்கிய விமர்சகராக செயற்படுவதற்கு உதவியது என்பதில் நாம் அனைவரும் உடன்பாடு கொண்டுள்ளோம்.
கல்விமான்களில் பெரும்பான்மையினர் முதலாளித்துவ கருத்தியலை முன்னிலைப்படுத்திய அதே வேளை, மார்க்ஸியத்துக்காக குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை பியசீலியே முன்னெடுத்தார் என்பதை இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பின் செயலாளர் கபில பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார். “சோவியத் ஒன்றியத்தின் பொறிவின் பின்னர் ‘சோசலிசம் செத்துவிட்டது’ என்ற பிற்போக்கு பிரச்சாரத்துக்கு எதிராக, சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் பாதுகாக்க பியசீலி போராடினார்.”
இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. யை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட பெர்ணான்டோ, “பியசீலியின் படைப்புக்களை வாசிப்பதன் ஊடாகவே உலகத்தை சடவாத முறையில் பார்க்க கற்றுக்கொண்டதாக நாம் சந்தித்த பல மாணவர்கள் தெரிவித்தார்கள்,” என்றார்.
கட்சியின் சார்பில் உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க உரைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார். “ஒரு மார்க்ஸிய கலை திறனாய்வாளர் என்ற வகையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட, உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்துக்கான ஒரு உறுதியான போராளியான ஒரு தோழர்யிடமிருந்து நாம் இன்று உடல் ரீதியில் விலகிச் செல்கின்றோம். ஆனால் அவரது கருத்துக்கள் உயிர்வாழும்.”
பியசீலியை ஒரு “இரும்புப் பெண்” என வருனித்த ஒரு பத்திரிகை கட்டுரையை ரட்னாயக்க மேற்கோள் காட்டினார். “அவர் சமரசமின்றி நம்பிக்கை கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிய கொள்கைகளுக்காக போராட முன்வந்த காரணத்தினாலேயே அவர் அவ்வாறு பண்புமயப்படுத்தப்பட்டிருந்தார். சடவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இலக்கியம் மற்றும் கலையில் பௌத்தத்தின் செல்வாக்கு உட்பட கருத்துவாத கருத்தியலுக்கு எதிராக போராடுவதில் அவர் மிகவும் வல்லமையுடன் இருந்தார்.”
ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் உலக யுத்தத்துக்கான அச்சுறுத்தல் நிலைமைகளின் மத்தியிலேயே அவரது மரணம் நிகழ்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம் புரட்சிகரப் போராட்டத்துக்கு வரும் நிலையில், அதற்கு பியசீலி தனது வாழ்நாள் பூராவும் போராடிய உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டமும் கட்சியும் அவசியமாகும்.
அனைத்துலக கீதத்தை பாடிய பின் இறுதிச் சடங்கு முற்றுப்பெற்றது.
இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டான பியசீலி விஜேகுணசிங்கா 67 வயதில் காலமானார் |