WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை ஜனாதிபதி அரசியல் எதிரியை சிறை வைக்கின்றார்
By K. Ratnayake
5 October 2010
Use
this version to print | Send
feedback
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, முப்படைத் தளபதி என்ற முறையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இராணுவக் கொள்வனவு நடைமுறைகளை கடைப்படிக்கத் தவறியமைக்காக அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.
பெப்பிரவரி 8 அன்று கைது செய்யப்பட்டதிலிருந்து கடற்படை தலைமையக கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொன்சேகா, செப்டெம்பர் 30 அன்று கொழும்பு நகரிலுள்ள வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இராணுவ நீதிமன்றமானது அவருக்கு 30 மாத கால கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
பொன்சேகா சிறைவைக்கப்பட்டமை, ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் பரந்த தாக்குதலின் பாகமாகும். ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு பிரதான எதிரியாக இருந்தவருக்கு குற்றத்தீர்ப்பு வழங்குவதன் மூலம், தனது அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் எதிர்ப்பின் மீதும் அவர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற சமிக்கையை இராஜபக்ஷ காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜெனரல், இராஜபக்ஷவை வெளியேற்றவும் அவரது சகோதரர்களை படுகொலை செய்யவும் சதித் திட்டம் தீட்டினார் என்று குற்றஞ்சாட்டி அரசாங்கம் மேற்கொண்ட சீற்றம் நிறைந்த பிரச்சாரத்தின் மத்தியிலேயே தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் பொன்சேகா கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டுக்களில் எதற்கும் ஆதாரம் காட்டப்படவில்லை.
மாறாக, சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக முன்னாள் இராணுவத் தளபதியை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்களை இராஜபக்ஷ நியமித்தார். முதலில், சேவையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டார் என்று பொன்சேகா மீது குற்றஞ்சாட்டப்பட்டதோடு அவரது பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் பதவி அந்தஸ்தும் பறிக்கப்பட்டதோடு அவர் இராணுவ கட்டிடங்களுக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டது.
ஹைகோர்ப் கம்பனியின் ஆணையாளராக அவரது மருமகன் தனுன திலகரத்ன இருந்த போது, இராணுவக் கொள்வனவுக்கு அதிகாரமளித்தது சம்பந்தமாக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவிடம் குற்றங்கண்டது. நீதிபதிகளின்படி, கொள்வனவு ஒப்பந்தத்தை கண்காணித்தவாறு சபையில் அங்கம்வகித்த பொன்சேகா, திலகரத்னவுடனான தனது உறவை மறைத்ததன் மூலம் “மோசடி நடவடிக்கையில்” ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி இராஜபக்ஷ, இரண்டாவது குற்றத்தீர்ப்பை பாராளுமன்ற சபாநாயகராக உள்ள தனது சகோதரரான சமல் இராஜபக்ஷவுக்கு அறிவித்தவுடன் பொன்சேகா தனது பாராளுமன்ற ஆசனத்தையும் இழப்பார் என கடந்த வெள்ளிக்கிழமை ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலில் ஆசனமொன்றை வென்ற பின் பாராளுமன்ற கூட்டங்களில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டிருந்த பொன்சேகா, அங்கு அரசாங்கத்தை விமர்சித்தார்.
சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் பொன்சேகா மீது குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டமை, ஆளும் கும்பலில் சில பகுதியினரின் கவலையை தூண்டிவிட்டுள்ளது. நாட்டின் செல்வாக்கு நிறைந்த நான்கு பௌத்த பீடங்களின் தலைவர்களும் அண்மையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். ஓய்வு பெற்ற ஜெனரல், தமிழீழ விடுதலைப் புலிகளின் “பயங்கரவாதத்தை” அழித்ததன் மூலம் நாட்டுக்கு “பெரும் மதிப்பு மிக்க சேவையை” ஆற்றியுள்ளார் என அந்தக் கடிதம் பிரகடனம் செய்தது.
இராணுவத் தளபதி என்ற முறையில், இராஜபக்ஷ 2006 நடுப்பகுதியில் மீண்டும் தொடங்கிவைத்த புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை ஈவிரக்கமற்று முன்னெடுத்தார். இராஜபக்ஷவுடன் சேர்ந்து, அவரும் பத்தாயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தமை உட்பட யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளியாவார். இராஜபக்ஷவுடன் நெருக்கமாக ஒத்துழைத்த பொன்சேகா, 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியுடன் மனமுறிவுகொண்டதோடு பிரதம பாதுகாப்பு அதிகாரி என்ற பெருமளவில் சம்பிரதாயபூர்வமான பதவிக்கு ஓரங்கட்டப்பட்டார்.
எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதன் பேரில், பொன்சேகா 2009 நவம்பரில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பொன்சேகாவுக்கோ அல்லது எதிர்க் கட்சிகளுக்கோ இராஜபக்ஷவுடன் எந்தவொரு அடிப்படை வேறுபாடுகளும் கிடையாது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி., உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு வரை ஆதரவளித்ததோடு அரசாங்கத்தின் சந்தை சார்பு பொருளாதார வேலைத் திட்டத்தையும் ஆதரித்தன.
மன்னிப்பளிப்பதற்கான எந்தவொரு வேண்டுகோளும் பொன்சேகாவிடமிருந்தே வரவேண்டும் என இராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். வட-மத்திய மாகாணத்தில் முன்னணி பௌத்த பிக்குகள் மத்தியில் பேசிய அவர் தெரிவித்ததாவது: “அரசியலமைப்பு ரீதியில் மன்னிப்பு வழங்குவதற்கு ஒரு முறை இருக்கின்றது. வேண்டுகோள் ஒன்று இருந்தால் அதில் கவனம் செலுத்த நான் தயாராக இருக்கின்றேன்.”
பொன்சேகா குற்றத்தை ஏற்றுக்கொள்வதையே இராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். இன்றுவரை சகல குற்றச்சாட்டுக்களையும் மறுத்துவரும் பொன்சேகா, அவை அரசியல் ரீதியில் தூண்டிவிடப்பட்டவை என வகைப்படுத்தியுள்ளார். அவரது மனைவி அனோமா பொன்சேகா, தனது கணவர் வேண்டுகோள் விடுக்க மாட்டார் என சிறைச்சாலையில் அவரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சிவில் நீதிமன்றில் மேலும் இரு வழக்குகளுடன் பொன்சேகாவுக்கு தண்டனையளிக்கும் தனது செயற்பாட்டை அரசாங்கம் தொடர்கின்றது. முதலாவது, ஹைகோர்ப் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட மேலதிக குற்றச்சாட்டுக்கள் பற்றியதாகும். இரண்டாவது வழக்கு, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இரு பகுதிகள் குறித்து மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்காகும். இராணுவத்தை விட்டு ஓடியவர்களை பொன்சேகா தன்னுடன் வைத்திருந்ததாகவும் ஜனாதிபதியின் இன்னொரு சகோதரரான, பாதுகாப்பு அமைச்சர் கோடாபய இராஜபக்ஷவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தியதாகவும் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“இராணுவத்தை விட்டோடியவர்களை தன்னுடன் வைத்திருந்தார்” என்ற குற்றச்சாட்டு, பொன்சேகா சதிப்புரட்சியொன்றை திட்டமிடுகின்றார் என்று அரசாங்கம் கூறிக்கொண்டதன் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனேயே, பொன்சேகாவை ஆதரித்த முன்னாள் இராணுவ அலுவலர்கள் மற்றும் சிவிலியன்களை சுற்றிவளைத்த அரசாங்கம், அவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்துகொண்டிருந்தனர் எனக் கூறியது.
இருவரைத் தவிர ஏனைய அனைவரும் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். பொன்சேகாவும் அவரது செயலாளரும், “இராணுவத்தை விட்டோடியவர்களை வைத்திருந்ததாகவும்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கப்டன் ஹரிப்பிரிய டி சில்வாவுமே இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிகேடியர் துமிந்தி கெப்பட்டிவலான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான சுனில் அமரசேன டி சில்வா மற்றும் உபாலி எதிரிசிங்க, மற்றும் ஊடக நிருபர் ருவன் வீரகோன் ஆகிய மேலும் நான்கு “சதிகாரர்கள்”, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸின் அறிவுறுத்தலுடன் செப்டெம்பர் 24 அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக கூறப்படும் இரண்டாவது குற்றச்சாட்டு உயர்ந்தளவு அரசியலாலானதாகும். தேர்தல் பிரச்சாரக் காலத்தின் போது, சண்டே லீடர் பத்திரிகைக்கு பேட்டியளித்த பொன்சேகா, யுத்தத்தின் கடைசி மோதலின் போது சரணடையும் எதிர்பார்ப்புடன் வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் உயர்மட்ட தலைவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ இராணுவத்துக்கு கட்டளையிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேசிய பாதுகாப்பை சமரசப்படுத்துவதாகவும் இராணுவத்தை மாசுபடுத்துவதாகவும் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டி அரசாங்கம் அவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை முன்னெடுத்தது. உடனடியாக பின்வாங்கிய பொன்சேகா, தான் குறிப்பிட்டவை கட்டுரையில் தவறாக கூறப்பட்டுள்ளன என பிரகடனம் செய்தார். எவ்வாறெனினும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கவலை என்னவெனில், இராணுவத்தின் அனைத்து குற்றங்கள் பற்றிய அந்தரங்க அறிவு பொன்சேகாவுக்கு உள்ளதோடு அவர் அதை பகிரங்கப்படுத்த முடியும் என்பதேயாகும்.
இராணுவம் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என ஜனாதிபதி இராஜபக்ஷ முழுமையாக மறுத்ததோடு சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துமாறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் விடுத்த அழைப்பையும் நிராகரித்தார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த போதிலும், கொழும்பில் வளர்ச்சியடைந்துவரும் சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதற்காக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் இந்த மனித உரிமை விவகாரத்தை சுரண்டிக்கொள்கின்றன.
இந்த வெள்ளைக் கொடி சம்பவம் என சொல்லப்படுவது, குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் இராஜபக்ஷவுக்கு கூருணர்வு ஏற்படுத்துவதாகும். அது நிரூபிக்கப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறிமைக்கு அவரை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக்கும். இந்தக் குற்றச்சாட்டுக்கள், புலிகள் தோல்வியடைந்து குறுகிய காலத்துக்கள் சண்டே டைம்ஸ், காடியன் ஆகிய இரு பிரிட்டிஷ் பத்திரிகைகளில் அம்பலத்துக்கு வந்தது. இந்தச் சரணடைவுக்கு தரகு வேலை செய்வதற்காக ஐ.நா., அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அலுவலர்களை சம்பந்தப்படுத்தி தனிப்பட்ட முறையில் கடைசி நிமிட முயற்சியில் ஈடுபட்டிருந்தது சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் மாரி கொல்வின் ஆவார். (பார்க்க: “இலங்கையில் புலிகளின் தலைவர்கள் மெய்சிலிர்க்கும் விதத்தில் கொல்லப்பட்டதை பிரிட்டிஷ் பத்திரிகை அம்பலப்படுத்துகிறது”)
நேற்று தொடங்கிய மேல் நீதிமன்ற விசாணையில் பொன்சேகா குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகளான யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் “யுத்த வீரர் பொன்சேகா” சிறைவைக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. தான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எண்ணியிருப்பதாக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொன்சேகாவின் விடுதலைக்காக “ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம்” ஒன்றை ஜே.வி.பி. தலைவரான விஜித ஹேரத் அறிவித்தார்.
அதற்கு பதிலிறுக்கும் வகையில், எந்தவொரு ஆர்ப்பாட்டத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பொலிசுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரசாங்க-விரோத செயற்பாடுகளை முன்னெடுக்க “பொதுஜனங்களை தூண்டிவிடும்” சுவரொட்டி பிரச்சாரங்களை அடக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளவாறு வாகன ரோந்துகள், மோட்டார் சைக்கிள் படை மற்றும் நடந்து ரோந்து செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளின் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரத்துக்கு அரசாங்கம் பதிலிறுத்த விதமானது, அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளின் இன்னுமொரு காட்சிப்படுத்தலாகும். இவை அடிப்படையில் கொழும்பில் உள்ள அதன் எதிரிகளை இலக்காகக் கொண்டவை அல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டவையாகும். சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள இராஜபக்ஷ, வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதோடு, தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள வெகுஜன எதிர்ப்பை நசுக்கவும் தயாராகின்றார். |