World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Millions march in France against austerity as opposition to Sarkozy grows

சார்க்கோசிக்கு எதிர்ப்பு அதிகரிக்கையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸில் மில்லியன் கணக்கானோர் அணிவகுக்கின்றனர்

By Antoine Lerougetel
4 October 2010

Back to screen version

சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு பெருகிய வெகுஜன எதிர்ப்பு சனியன்று பிரெஞ்சுத் தெருக்களில் வெளிப்பட்டது—நாடெங்கிலும் 240 ஆர்ப்பாட்டங்களில் ஒன்று முதல் 3 மில்லியன் மக்கள் அவற்றில் பங்கு பெற்றனர்.

அரசாங்கத்தின் ஓய்வூதிய “சீர்திருத்த” சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு குறைந்து வருகிறது என்னும் அதன் கூற்றுக்களை பொய்யாக்கும் வகையில் மக்களில் 71 சதவிகிதம் பேர் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பது கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது செப்டம்பர் 23 நடவடிக்கை தினத்தன்று முன்னதாக 68 சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது.

ஒரு TNS-Sofres கருத்துக் கணிப்பு 2007 ஜூன் மாதம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் மீது 63 சதவிகிதம் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பதிவாகியிருந்தது. ஆனால் இப்பொழுது அக்டோபர் தொடக்கத்தில் இது 26 சதவிகிதம் என சார்க்கோசிக்கு ஆதரவு சரிந்துள்ளது. அவரை ஏற்றுக்கொள்ளாத சதவிகிதம் 72 எனப் பதிவாகியிருக்கிறது.

விடுமுறை நாள் என்பதால் ஆர்ப்பாட்டங்களில் குடும்பத்தினர் பெரும் அளவில் கலந்து கொண்டனர்—கைக்குழந்தைகளும், சிறுவர்களுமாக குழுக்களாக இவர்கள் தொழிற்சங்க அல்லது அரசியல் கட்சி பதாகைகள் பின்னர் அல்லாமல் தன்னியல்பாக பங்குபற்றியிருந்தனர். WSWS நிருபர்கள் ஒரு நிதானமான, தீவிர, சிந்தனை உணர்வுப் போக்கைக் கண்டனர். இளைஞர்கள் அவர்களது குடும்பங்களுடன் காணப்பட்டனர். ஆயினும் சிறு எண்ணிக்கையிலான உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சோசலிஸ்ட் கட்சியின் (PS) செல்வாக்கு படர்ந்துள்ள அமைப்புக்களில் காணப்பட்டிருந்தனர்.

அணிவகுப்பில் பங்கு பெற்ற எண்ணிக்கைகள் செப்டம்பர் 7 மற்றும் 23 திகதிகளில் நடைபெற்றதற்கு ஒப்பாக இருந்தன. அவையே ஜூன் மாதம் நடைபெற்றவற்றைவிட 40 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கைகளைக் கொண்டிருந்தன. ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் ஆக்கிரோஷம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே பற்பல தேதிகளில் இவற்றிற்கு ஏற்பாடு செய்தும் இந்த ஆதரவு புலப்பட்டது.

இந்த எதிர்ப்புக்கள் Intersyndicale என்னும் பிரான்ஸின் எட்டு பெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் கூட்டு கமிட்டி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு, கம்யூனிஸ்ட் கட்சி (PCF) செல்வாக்கு உடைய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தலைமை தாங்கியது. மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) சார்பு பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பும் (CFDT) வழி நடத்தின.

இடது கட்சிகள் எனப்படுபவற்றின் உத்தியோகபூர்வ ஆதரவு Intersyndicale க்கு இருந்தது. இவை அனைத்தும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்றன. PS, PCF மற்றும் PG எனப்படும் இடது கட்சி, பசுமைவாதிகள் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் தலைமையில் பிளவுற்ற கோலிசப் பிரிவு ஆகியவையும் இருந்தன.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மிருகத்தனமான ஊதிய வெட்டுக்கள், நலன்கள், ஜனநாயக உரிமைகள் இவற்றிற்கு எதிராக 10 மில்லியன் ஸ்பெயின் தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் நடத்திய ஐந்து நாட்களுக்குப் பின்னர் சனிக்கிழமை எதிர்ப்புக்கள் வந்தன. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சிக்கன நடவடிக்கைகளுக்கு இணக்கமாக இருந்தன. வரவு-செலவுப் பற்றாக்குறைகள், தேசியக் கடன்களை வங்கிகளின் ஆணைகளுக்கு ஏற்ப குறைத்து, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் யூரோவைக் காப்பாற்றுவதற்காக அரசாங்ககச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அது.

குறிப்பிடத்தக்க வகையில் பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு (ETUC) ஏற்பாடு செய்திருந்த ஐரோப்பா தழுவிய நடவடிக்கை தினத்திற்கு ஆதரவு கொடுக்க பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இத்தீவிர அதிகாரத்துவ, முதலாளித்துவ சார்புடைய அமைப்பை அவை எதிர்க்கின்றன என்பதால் அல்ல. இவை அனைத்துமே அதன் உறுப்பு அமைப்புக்கள்தாம். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி கிரேக்கத்திற்கு பிணைஎடுப்பு கொடுக்க EU-IMF கூட்டு முயற்சி சிக்கன நடவடிக்கைகள் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தது என்னும் உண்மையை அவை அம்பலப்படுத்த விரும்பவில்லை. அதன்படி ஊதியங்கள் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டன, சமூக நலன்களை அவை அழித்ததுடன் வேலையின்மையையும் அதிகரித்து விட்டன. இவை அனைத்தும் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களால், இவை ஐரோப்பா முழுவதும் படர்ந்த தொழிலாளர் இயக்கமாக வளர்ந்து விடுமோ, அது முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையே தகர்த்துவிடுமோ என்ற பெரும்பீதியை அடைந்துள்ளனர்.

இயக்கம் தீவிரப்போக்குத் தன்மையை அடைந்துவிடுமோ என்ற அச்சம் Liberation ஆல் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது: “அரசாங்கம் மாணவர்கள் திரட்டை அடுப்பில் கொதித்துவரும் பாலைக் கண்காணிப்பது போல் பார்க்கும்….ஏற்கனவே சில தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள திட்டமானது இயக்கத்தின் தீவிரப்போக்குத் தன்மை என்னும் பிரச்சினை எப்பொழுதைக் காட்டிலும் கூடுதலாகச் செயற்பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.” Le Republiique du Centre தொழிற்சங்கங்களையும் இடதையும், “இளைஞர்களைத் தூண்டிவிட்டதற்கு” சாடியுள்ளது –“அவர்கள் என்ன செய்வர் என்பதை அளவிட முடியாது.” ஏனெனில் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் அவர்கள் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.

அக்டோபர் 7ம் தேதி உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் எவையும் ஸ்பெயின், கிரேக்க தொழிலாளர்களுடன் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்தவில்லை. இதில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் (NPA) அடங்கும். இது ஜூலை மாதம் ETUC முயற்சிகளில் சற்றே ஆர்வம் காட்டியிருந்தது.

சார்க்கோசி ஓய்வூதியங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை தெருக்களில் இருந்து அழுத்தம் கொடுப்பதின் மூலம் கைவிடச் செய்யலாம் என்று தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ இடதுகளும் நம்புகின்றன. இக்கருத்துத்தான் செப்டம்பர் 28 இல் NPA அறிக்கையில் சுருக்கமாகக் கூறப்படுகிறது: “அரசாங்கம் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்ற உறுதி உண்மையில் உள்ளது. அவ்வாறு செய்யவும் முடியும், அதற்க நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், வரவிருக்கும் வாரங்களில் சார்க்கோசிக்கு நாட்டில் தெருக்களின் சக்தியை காட்டி இயக்கங்களை அதிகரித்து, கடினப்படுத்துவோம்.” PS பாராளுமன்றப் பிரிவின் தலைவரான Jean-Marc Ayraualt சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் கூறியதைப் போல், “அரசாங்கம் அணிதிரள்வின் தன்மையைப் புறக்கணிக்க முடியாது.”

ஆனால் பிரதம மந்திரி Francois Fillon ஓய்வூதியச் சட்டவரைவில் எந்த மாற்றமும், அதன் நிதிய “சமசீர் நிலைக்கு” பாதிப்பை ஏற்படுத்தாது என்பதைத் தெளிவாக்கியுள்ளார். 70 பில்லியன் யூரோக்கள் சேமிக்கப்பட வேண்டும், இதற்கு ஓய்வூதிய வயது 62 என உயர்த்தப்பட வேண்டும், ஓய்வூதியம் பெறக்கூடிய வயதுத் தகுதி 67 என்று உயர்த்தப்பட வேண்டும், பங்களிப்பு கொடுக்கும் ஆண்டுகள் 41.5 என 2018க்குள் உயர்த்தப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் பிரச்சாரத்தின் முழுக்குவிப்பும் சார்க்கோசியின் மீது காட்டப்படுகிறது. ஆனால் அவரோ பழைய, புதிய உலகப் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் முழு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறார். அதேபோல் பிரான்சின் AAA கடன்தரத்தை தக்கவைக்கவும் முயல்கிறார். அதுதான் பிரான்சின் பெருகும் மலைபோன்ற கடனான 1632 பில்லியன் யூரோக்கள் மீதான வட்டி விகிதத்தை அப்படியே வைத்திருக்க உதவும்—இந்த வட்டியை கொடுப்பதற்கே பிரான்சின் வரவு-செலவுத் திட்டத்தில் 20 சதவிகிதத்திற்கும் மேல் ஒதுக்கப்படுகிறது—அதிக ஒதுக்கீடு இதுதான்.

இறுதியில் பிரான்ஸில் முதலாளித்துவ இடதும் தொழிற்சங்கங்களும் ஒரே இலக்கைத்தான் பகிர்ந்து கொள்கின்றன. இதேபோல்தான் இச்சக்திகள் ஓய்வூதிய வெட்டுக்களை ஒற்றைப் பிரச்சினையாக கருதி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் முழுத் தன்மையையும் தவிர்க்கின்றன. நீஸ் ஆர்ப்பாட்டங்களின் முடிவில் CGT பேச்சாளர்கள் சார்க்கோசியைத் தாக்கிப் பேசியதின்மூலம் கரவொலி பெற்றனர். ஆனால் அவர்களுடைய பொதுச் செயலாளர் பேர்னார்ட் திபோ தான் ஜனாதிபதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து ஒத்துழைத்து அவருடைய சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படவும் பிரெஞ்சு முதலாளித்துவ முறையின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறார் என்பதைக் கூறவில்லை.

தொழிலாளர்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் அழிக்கப்படுவதற்குக் காட்டும் ஆழ்ந்த விரோதப் போக்கு நிர்வாகம் தீவிர வலது மற்றும் தீவிர தேசிய வெறிவாதத்திற்கு திரும்புவதின் காரணத்தை விளக்குகிறது. அத்தகைய நிலை 1930 களில்தான் அரசாங்க மட்டத்தில் இருந்தது. இப்பொழுது இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும் தேசிய சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது—அதாவது குடியேறியவர்களின் குடியுரிமை பறிப்பு மற்றும் ரோமாக்களை நாடு கடத்துவது என்பவை பற்றி. இது தொழிலாள வர்க்க்தைப் பிரிக்கும் வடிவமைப்பு கொண்டது. மிகப் பிற்போக்குத்தன கூறுபாடுகளைத் தூண்டுவதுடன், ஒரு பொலிஸ் அரசை கட்டமைக்க உதவுவது. ஏற்கனவே அத்தகைய நிலை பயங்கரவாதம் பற்றிய கடுமையான சட்டங்கள், சட்டம் ஒழுங்கு பற்றிய சட்டங்கள் ஆகியவற்றால் அதிகமாகியுள்ளது. இவை அனைத்திற்கும் கொள்கை அளவில் PS ஆதரவு கொடுக்கிறது.

சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி (1984-86) Laurent Fabius, ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் காலத்தில் கடும் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தவர், வெள்ளியன்று கூறினார்: “தொழிலாளர்கள் மற்றும் மூலதனத்தில் இருந்து வருவாய் இவற்றைத் தளமாகக் கொண்ட மற்றொரு சீர்திருத்தம் நமக்குத் தேவை. இல்லாவிடில் நாம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பழையபடி செயல்படத் தொடங்க வேண்டும்.” தொழிலாளர்கள் மீது தான் முழுச்சுமையும் விழும் என்பதை பாபியுஸ் நன்கு அறிவார். மூதலனத்தின் மீது அதிக வரிகள் என்பது AAA தரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் ஒரு PS அரசாங்கமும் கிரேக்கத்தின் PASOK மற்றும் ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் போல்தான் செயல்பட வேண்டும் என்பதையும் நன்கு அறிவார்.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மீண்டும் பிற்போக்குத்தன கொள்கைகளைத்தான் செயல்படுத்தும் என்பதற்கு இன்னும் நிரூபணம் தேவையென்றால், கட்சித்தலைமை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கானுக்கு 2012 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்குக் கொடுக்கும் ஆதரவு மூலம் அறியப்படலாம்.

முதன்மைச் செயலாளர் Martine Aubry தன் விழைவுகள் அவருடைய வழியில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு நம்பிக்கையாளர் PS ன் முன்னாள் முதன்மைச் செயலாளர் பிரான்சுவா ஹோலந்தும் கூறியுள்ளார். கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுவதற்கு ஸ்ட்ராஸ் கான் பொறுப்புக் கொண்டுள்ளார் என்பது மட்டும் இல்லாமல், ஏனையவைகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக வறிய நாடான ருமேனியா பிணை எடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் தொடர்பு கொண்டுள்ளார். அங்கு அரசாங்கம் 25 சதவிகிதம் ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதிய வெட்டுக்கள் 15 சதவிகிதம் ஆகியவற்றை சுமத்தி நாட்டின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க முற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் வினியோகிக்கப்பட்ட NPA துண்டுப்பிரசுரம் வெகுஜனத் திருப்திக்காக அறிவிப்பதாவது: “அக்டோபர் 2 வெற்றி என்பது ஒரு பொது வேலைநிறுத்தத்தை கட்டமைக்க இயலும் என்பதைக் காட்டுகிறது.” தொழிற்சங்கங்களின் பங்கு, PS அல்லது அதன் துணை அமைப்புக்கள், கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி ஆகியவற்றின் பங்கு குறித்து ஏதும் கூறவில்லை. இவற்றுடன்தான் அது தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தைத் திசை திருப்ப முயல்கிறது. ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை சுயாதீனமாக வளர்ப்பதையும் தடைக்கு உட்படுத்துகிறது.

“நான் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன், மாணவராக 20 வயதில், வேலையற்றவராக 25ல்…. ஆனால் ஒரு சரியான வேலை இல்லாமல் 67 வயதிலா? நன்றி, வேண்டாம்!” என்ற பதாகையை வைத்திருந்த மாணவர்களிடம் பாரிஸில் WSWS பேசியது. மாணவர்களில் ஒருவரான Jocelyn கூறினார்: “நாம் உலகமயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். மூலதனம் எல்லைகள் கடந்து சுரண்டி இந்நிலைமைகளைத் தோற்றுவிக்கிறது. எனவே நமக்கும் ஐரோப்பிய, உலகத் தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு, அவர்கள் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முன்னோக்கு தேவையாகும்.”

ஓய்வூதியம் பெறும் அர்மண்ட் தன் குடும்பத்துடன் வந்திருந்தார்: “கடும் சிக்கன நடவடிக்கைக்கும் ரோமாக்களை அகற்றுவதற்கும் இடையே தொடர்பு உள்ளது. அவர் (சார்க்கோசி) தீவிர வலதிற்கு அவர்களுடைய ஆதரவைக் கொடுப்பதற்கு முறையிடுகிறார். ரோமாக்கள் அதற்கான நல்ல வாய்ப்பை அவருக்குக் கொடுத்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.