World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The assault on culture and the crisis of American capitalism

கலாச்சாரம் மீதான தாக்குதலும், அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும்

David Walsh
5 October 2010

Back to screen version

திங்களன்று தொடங்கிய, டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு (Detroit Symphony Orchestra - DSO) உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் முக்கியத்துவமிக்க ஒரு நிகழ்வாகும். வாழ்க்கைத் தரங்களை கடுமையாக வீழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய நிர்வாக முறையீடுகளுக்காக இசைவாசிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். அதாவது, அடிப்படை சம்பளத்தில் 33 சதவீத வெட்டு மற்றும் புதிதாக வருபவர்களின் சம்பளத்தில் 42 சதவீத குறைப்பு, கூடியமானவரைக்கும் குறைக்கப்பட்ட சுகாதார நலன்கள், ஓய்வூதியங்களில் முடக்கம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்தன.

அத்துடன், அவர்கள் எல்லாவிதமான தொடர்பில்லாத வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுவதாகவும் இசைக்குழுவினர் (orchestra) தெரிவிக்கின்றனர்; அது அவர்களை "சேவகர்களைப்" போல மாற்றிவிடுவதாக ஒரு பிரதிநிதி தெரிவித்தார்.

1914 இல் இருந்தே, நீண்டகாலமாக பெருமைமிக்க வரலாறைக் கொண்டுள்ள டெட்ராய்ட் சிம்பொனி குழு, அமெரிக்காவின் சிறந்த இசைக்குழுக்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. நிலவும் பொருளாதார நெருக்கடி மிச்சிகன் மாநில மற்றும் டெட்ராய்ட் நகரத்தைப் பேரழிவுக்குள்ளாக்கி இருக்கிறது. நுழைவுச்சீட்டு விற்பனை சரிந்துவிட்டிருக்கும் நிலையில், தனிநபர் நன்கொடைகளும் குறைந்துவிட்டிருப்பதால் இசைக்குழு $9 மில்லியன் நிதியிழப்பை முகங்கொடுத்து வருகிறது. New York Times செய்திகளின்படி, “இதற்குமேல் வங்கிகள் அதற்கு [DSO'விற்கு] நிதியுதவி வழங்கமாட்டார்கள்... அது அதன் செயல்பாட்டு செலவுகளை மானியத்தை கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறது."

DSO விற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, தேசிய அபிவிருத்தியின் ஒரு பாகமாகும். செல்வம்கொழுத்த தனிநபர்களும், பெருநிறுவனங்களும் அவர்களின் நிதி பங்களிப்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கலைக்குழுக்கள் மற்றும் கலை கல்விக்கான நிதிஒதுக்கீடுகள் அமெரிக்காவின் எல்லாமட்டத்திலும் அரசாங்கங்களின் இரக்கமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. ஏனைய நகரங்கள் மற்றும் மாகாணங்களோடு சேர்ந்து, போனிக்ஸ், ஹோஸ்டன், சின்சின்னாட்டி, சீயாட்டெல், இன்டியானாபொலிஸ், மில்வௌக்கி, பால்திமோர், அட்லாண்டா, வெர்ஜினியா, வடக்கு கரோலினா மற்றும் உத்தாஹ் ஆகிய இடங்களிலும் சிம்பொனி இசைக்குழுவினருக்கு சம்பள வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு அருங்காட்சியகங்களின் இயக்குனர்களுக்கும், அவர்களுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான அருங்காட்சிய தொழிலாளர்களுக்கும் அக்டோபர் 2009 வாக்கில் சம்பள வெட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.

2011 க்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படலாம் என்று முப்பத்தியொரு அரசு கலை முகவர்கள் (agencies) முன்கூட்டியே கணிக்கின்றன. கலைகளுக்கான பாராட்டு மாநில மட்டத்தில் கடந்த தசாப்தத்தில் 34.7 சதவீதம் குறைந்துள்ளது.பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது, இது பத்து ஆண்டுகளில் 45 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

2009 ஆம் நிதியாண்டில் சுமார் 100,000 இலாபநோக்கமற்ற கலைக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட கூட்டமைப்பின் மொத்த மானியம் —கலைகளுக்கான தேசிய மானியத்திலிருந்து அளிக்கப்படுவது— 155 மில்லியன் டாலர் வரைக்கும் அதிகரிக்கப்பட்டது (இது ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் செலவிடப்படும் ஒருநாள் அல்லது இரண்டுநாள் செலவுத்தொகையாகும்). 1978 இல் கலைகளுக்கான தேசிய மானியத்தின் நிதிஒதுக்கீடு 123 மில்லின் டாலராக, அல்லது தற்போதைய டாலர் மதிப்பில் 416 மில்லியன் டாலராக இருந்தது.

வீழ்ச்சியிலிருக்கும் அமெரிக்க முதலாளித்துவம் கலைப்படைப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்கவோ அல்லது அவற்றில் ஆர்வம் காட்டவோ விரும்பவில்லை. மிகவும் செல்வசெழிப்புடன் இருந்தபோது, பெருநிறுவன மேற்தட்டு பல்வேறு கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு உதவி வழங்குவதில் குறிப்பிட்டளவிற்கு கௌரமான மதிப்பை உணர்ந்தது. அதனிடத்தில் சேராத ஒவ்வொரு டாலரும் வீண் செலவு என்றும், ஏதோ நிந்தனைக்குரிய ஒன்றாகவும் அமெரிக்க ஆளும் மேற்தட்டு தற்போது பார்க்கிறது. அமெரிக்காவின் கலாச்சார வாழ்க்கை, இயக்குனர்கள் பொதுக்குழுக்களிலும், சட்ட வளாகங்களிலும் வீற்றிருக்கும் நாசவேலைகாரர்களின் ஆழமான ஆபத்துக்களில் உள்ளது.

டெட்ராய்டிலோ அல்லது அமெரிக்காவில் வேறேதேனும் ஓரிடத்திலோ இருக்கும் ஓர் இசைக்குழுவிற்கு உதவுவதற்கு —அல்லது ஒரு நூலகத்திற்கோ அல்லது ஒரு பாடசாலைக்கோ உதவுவதற்கு— "பணம் சுத்தமாக இல்லை" (Detroit News) என்ற கூறப்படும் வாசகம் கேலிக்குரியதாக இருக்கிறது. “குறைந்த வருமானத்திற்காக அதிகளவில் உழைப்பதென்பதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் டெட்ராய்டு சிம்பொனி இசைக்குழுவை ஆதரிக்கும் சமூகம் இதைத் தான் கடந்த தசாப்தத்தில் செய்து கொண்டிருந்தது," என்று The News வாதிடுகிறது.

எந்த சமூகம்? மிகவும் செல்வச்செழிப்புடன் மிச்சிகனில் இருப்பவையும் (ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இருப்பவையும் கூட) முன்னர் இருந்ததைவிட செல்வவளத்துடன் இருக்கின்றன. அமெரிக்காவில் உயர்ந்த வருமானம் பெறும் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் புளூம்பீல்டு ஹில்ஸ், வடக்கு டெட்ராய்ட் ஆகியவை நான்காவது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் மிச்சிகனின் நடுத்தரவாசிகளின் வருமானம் கடந்த தசாப்தத்தில் 21 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துவிட்டிருக்கிறது. அத்துடன் டெட்ராய்டின் உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 36 சதவீதத்தை எட்டியுள்ளது.

2006இல், 16.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட 8 பில்லியனர்களை Forbes இதழ் மிச்சிகனில் பட்டியலிட்டது. இந்த ஆண்டு அந்த இதழ் 21 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட 10 பில்லினியர்களைக் குறிப்பிட்டிருக்கிறது (இது 22 சதவீத உயர்வாகும்).

மலிவு-கூலி தொழிலாளர்களுக்கு எதிராக DSO இசைக்கருவி வாசிப்பாளர்களையும், ஏனைய தொழில்துறை வல்லுனர்களையும் கட்டுக்குள் வைத்திருக்க முயலும் போலி-ஜனரஞ்சக முயற்சிகள் முழுஎதிர்ப்புடன் புறக்கணிக்கப்பட வேண்டும். மக்களில் சற்றே வசதிபடைத்த பிரிவுகளின் ஆதாயங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அவர்களின் முயற்சிகளை எதிரொலிப்பது என்று வரும் போது, ஊடகங்களால் மட்டும் தான் பிந்தையவர்களின் (ஏனைய தொழில்துறை வல்லுனர்களின்) நலன்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வருமானத்தைப் பொறுத்த வரையில் சமூகரீதியாக தெளிவாக இருக்கும் வேறுபாடுகள், 30,000 டாலர் வாங்குபவர்களுக்கும், 130,000 டாலர் வாங்குபவர்களுக்கும் இடையில் இல்லை. மாறாக ஒட்டுமொத்தமாக கூலி-மற்றும் சம்பளம்-வாங்கும் வர்க்கத்திற்கும், ஆண்டொன்றுக்கு மில்லியன்கணக்கான, பில்லியன்கணக்கான டாலர்களில் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கும் பெரும் செல்வசெழிப்பான தனிநபர்களுக்கும், வோல்ஸ்ட்ரீட் ஹெட்ஜ் நிதி மேலாளர்களுக்கும் இடையில் இருக்கிறது!

அமெரிக்க அரசாங்கங்கள் ஒருபோதும் கலைகளைப் போதியளவிற்கு ஆதரித்ததும் இல்லை அல்லது அவற்றிற்கு நிதியுதவி அளித்ததும் இல்லை. ஒருபுறம், “கட்டுப்பாடற்ற பெருநிறுவன" பிலிஸ்தீன் சித்தாந்தவாதிகள், 'சந்தையின் கருணைக்கேற்ப ஒட்டுமொத்தமாக கலைஞர்கள் அவர்களை அவர்களே அதன்பக்கம் நிறுத்தி கொள்ளவேண்டும், அதாவது, இலாபமளிக்கும் வேலைகளில் அவர்கள் தங்களின் திறமையைத் திருப்பிவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் "வரிசெலுத்துவோரைக்" கொண்டு கலைஞர்களுக்கு மானியம் அளிக்கப்படக்கூடாது என்றும் அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். அதன் துயரமான விளைவுகளை, தற்போது வெளியாகும் இலாபத்திற்கான திரைப்படங்கள் (Hollywood) மற்றும் தியேட்டர் (பிராட்வே) தொழில்துறைகளில் காண முடிகிறது.

மற்றொருபுறம், பெருநிறுவனங்களும், பணக்காரர்களும் அவர்களின் இலாபத்தால் இடைவெளியை அடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2007 இல் NEA தகவலின்படி, இலாபத்திற்காக அல்லாத கலைக்குழுக்களின் வருமானத்தில் தனியார் நன்கொடைகள் சுமார் 43 சதவீதமாக இருந்தன; அரசாங்கங்கள் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே அளித்தன.

இந்த பெரும் பங்களிப்பைச் சார்ந்திருக்க வேண்டி இருப்பதானது, அதற்குரிய காலக்கட்டத்தில் சிறந்த படைப்புகளைக் கொண்டு வர முடியாமல் செய்துவிடுகிறது என்பதுடன், புத்திஜீவித்தனத்திற்கும் வரம்புகளை நிர்ணயிக்கிறது. ஒரு நெருக்கடி காலக்கட்டத்தில், அது பேரழிவிற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தற்போது நிலவும் சமூகத்தில் இசை, கலை மற்றும் நாடகத்தின் இப்போதைய பிரசன்னம், அதிபெரும் பணக்காரர்களின் நிதியியல் ஏற்றத்தாழ்வுகளைச் சார்ந்திருக்கலாம்.

'மனிதர்களுக்கு மனிதத்தன்மையை அளிக்கக்கூடிய படைப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய நடவடிக்கைகளில் கலையும் ஒன்றாக இருக்கிறது; அறிவொளிமிக்க மற்றும் உணர்வுபூர்வமானவர்களின் வாழ்க்கைக்கும், நல்வாழ்விற்கும் அது முக்கியமாக ஒன்றாக இருக்கிறது; கலைத்துவ படைப்பின் தாக்கத்தைக் குறைப்பதென்பது அதனால் அபகரிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை சடத்துவரீதியில் நாசமாக்குவதாக இருக்கும் என்பன போன்ற கருத்துக்கள் முற்றிலுமாக பயனற்ற முயற்சியாகும். இதுபோன்ற வாதங்களை வெறும் வெற்றுப்பார்வைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்' என்பது தான் அமெரிக்காவில் "மதிக்கப்படும்" மக்களாக இருக்கும் வங்கியாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் குறிப்பாக உள்ளது.

டெட்ராய்டிலும், ஏனைய இடங்களிலும் சிம்பொனி இசைவாசிப்பாளர்களின் கூலிகள் மற்றும் நலன்களை வெட்டுவதற்கான முயற்சி, 'பெருநிறுவன ஊடகத்தின் கைப்பிடியில் இருக்கிறது' என்ற மற்றொரு கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. இதன் விளைவாக, இசைக்கருவி வாசிப்பாளர்களும் இப்போது மில்லியன்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஏனைய தொழிலாளர்கள் இருக்கும் அதே நிலைப்பாட்டில் தங்களைத்தாங்களே காண்கிறார்கள். அவர்களை அவர்களே "நிபுணர்களாக" கருதிக் கொண்டு, அமெரிக்காவில் பல தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதிருக்கும் ஒருவகையான தாக்குதலில் இருந்து எப்போதும் விலகி நின்றார்கள். இதை உலகமே அறிந்திருக்கிறது. ஆனால் தற்போதைய நிலைமை விஷயங்களைத் தெளிவுபடுத்த உதவிக் கொண்டிருக்கிறது.

ஆளும் மேற்தட்டு மற்றும் அதன் ஊடகங்களின் கண்களில், டெட்ராய்ட் உறுப்பினர்கள் "சேவகர்களாக" இருக்கிறார்கள். நிர்வாகத்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் நிலைமைகளின்கீழ் அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளர் மற்றும் மாணவர்களால் முழுவதுமாக ஆதரிக்கப்பட வேண்டிய அவர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை, பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தும் முயற்சிக்கு அது காட்டும் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பாகமாகவும் இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, கலைஞர்கள் மகிழ்ச்சியை அனுபவித்த காலக்கட்டம் சார்புரீதியாக கடிவாளம் இல்லாமல் இருந்தது. அது "தொழிலாள வர்க்கத்தின் மேலடுக்கிற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளாக" அதே வரலாற்று அடித்தளத்தில் இருந்த அதிகாரங்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்களின் அழிவு, தவிர்க்கமுடியாமல் முன்வந்திருக்கிறது. மேலும் அது டெட்ராய்ட் இசைக்கருவி வாசிப்பாளர்கள் மற்றும் ஏனைய கலைஞர்கள்மீதும் முன்தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

இறுதி பகுப்பாய்வில், DSO (டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு) ஒரு வளைந்துகொடுக்காத நிஜத்தை வெளிப்படுத்துகிறது: அதாவது, அமெரிக்காவில் கலையின் வாழ்வும், முன்னேற்றமும் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய தன்மையிலும் இருக்கும் பெருநிறுவன அதிகாரத்துடன் சற்றும் பொருந்தி இருக்க முடியாது. அமெரிக்காவிலிருக்கும் உண்மையான ஒவ்வொரு கலைக்குழுவிற்கும் மற்றும் டெட்ராய்ட் இசைக்குழு உறுப்பினருக்கும், அத்துடன் பிரபல பாடகர்களுக்கும், ஓவியர்களுக்கும், புகைப்பட நிபுணர்களுக்கும், கவிஞர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும் பாதுகாப்பான பொருளாதார நிலைமைகளுடன் நிதியளிக்கும் அளவிற்கு செல்வவளம் குவிந்திருக்கிறது. ஆனால் அந்த செல்வவளம் முழுவதும் பேராசைமிக்க ஏகபோகமாக்கப்பட்டவர்களின் கரங்களில் இருக்கின்றன.

டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு போராட்டம் ஒரு சாதாரணமான விஷயமோ அல்லது ஒரு தொழிற்சங்கத்தின் முதன்மையான முரண்பாடோ அல்ல. இது பெரும் உட்பொருளைக் கொண்ட ஓர் அரசியல்ரீதியான மற்றும் கலாச்சாரரீதியான போராட்டமாகும். இசைக்குழுவின் இசைவாசிப்பாளர்கள் மீதான தாக்குதலுக்கு இருக்கும் ஒரே மேதமை பொருந்திய பதில், பெருநிறுவன மேற்தட்டின் தாக்குதல்களுக்கு அளிக்கப்படும் நனவுபூர்வமான எதிர்ப்பிலும், அவர்களின் வாதங்கள் மற்றும் பிரச்சாரங்களை நிராகரிப்பதிலும், தொழிலாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சோசலிச போராட்டத்தை உருவாக்குவதிலும் தான் தங்கியுள்ளது.