WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஜேர்மனி மறுஇணைவுக்குப் பிந்தைய 20 ஆண்டுகள்: ஜேர்மன் ஜனநாயகக்
குடியரசு என்னவாக இருந்தது?
Peter Schwarz
4 October 2010
Use
this version to print | Send
feedback
ஜேர்மனி மறுஇணைவுற்றதன் 20வது ஆண்டுநிறைவு என்பது ஒரு வரலாற்று மைல்கல் மட்டுமல்லாது, இன்னொரு அம்சத்திலும் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். 1990ல் இருந்து கடந்திருக்கக் கூடிய இரண்டு தசாப்தங்கள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜேர்மனி) ஆயுள்காலத்தில் பாதியைக் குறிக்கின்றன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு அக்டோபர் 7, 1949 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. நவம்பர் 9, 1989 அன்று பேர்லின் சுவர் வீழ்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்நாடு தனது 40வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஒரு வருடத்திற்குப் பின் அரசியல் வரைபடத்தில் இருந்து ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மறைந்து விட்டிருந்தது. 1961 ஆகஸ்டில் எழுப்பப்பட்ட பேர்லின் சுவரானது அது வீழ்ந்த பின் இப்போது கடந்திருக்கும் காலத்தினைவிட எட்டு வருடங்கள் அதிகமான காலத்திற்கு மட்டுமே நீடித்திருந்தது.
ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மறைந்து கணிசமான காலம் கடந்திருக்கும் நிலையில், ஜேர்மன் மறுஇணைவு தினமானது உண்மையில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்பது என்னவாக இருந்தது என்பது குறித்த ஒரு தெளிவான புறநிலை மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்க ஒருவர் எதிர்பார்க்கக் கூடும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எண்ணற்ற ஆண்டுவிழா பேச்சுகள் அனைத்துமே பனிப்போர் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய அதே தத்துவார்த்த வெறிகொண்டவையாக இருந்தன. "ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னவாக இருந்தது?" என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பரிமாறப்பட்டதெல்லாம் வெற்று முழக்கங்களும், தூற்றல்களும் தான்.
ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு "அநீதியான ஆட்சியை"க் கொண்டிருந்தது என்பதை கட்சி நிர்வாகிகளின் ஒரு கூட்டத்திற்கு நினைவூட்டுவதற்கு, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், சக்கர-நாற்காலியில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் பேசவும் முடியாமல் இருந்த ஹெல்முட் கோலின் சேவையை நாடியது. அது பற்றி வேறுவிதமாக வாதிடும் எவரும் "எதனையும் கற்றுக் கொள்ளவில்லை, சுத்தமாய் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை." என அவர் முரண்நகையாக, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) ஸ்ராலினிச ஆட்சியின் ஒருங்கிணைந்த பாகமாய் இருந்த கூட்டு கட்சி என்று அழைக்கப்பட்ட அதன் கிழக்கு ஜேர்மன் சகா கட்சியுடன் இணைந்ததன் 20வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஒரு கூட்டத்தில் இந்த முன்னாள் சான்சலர் பேசினார்.
பிரேமன் நகரில் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களில் பேசுகையில் ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியான் வுல்ஃப், "இரத்தம் சிந்தாமல் சர்வாதிகாரத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட" மக்களின் பக்கமிருந்த இருந்த விடுதலை வேட்கையைப் புகழ்ந்தார். Bild am Sonntag சஞ்சிகையில் "முன்னாள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு குடிமக்களின் வாழ்நாள் சாதனைகளுக்கு" தனது பாராட்டுகளை வெளிப்படுத்திய சான்சலர் அங்கேலா மேர்க்கெல் அதே சமயத்தில் இது "ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு, அரசின் கட்டமைப்பில்" இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும் என்பதை வலியுறுத்தினார். "பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஜேர்மனியர்களின் துணிச்சலும் உறுதியும் ஒரு ஒன்றுபட்ட மற்றும் சுதந்திரமான ஐரோப்பாவுக்கான கூட்டு இலட்சியத்திற்கான" ஒரு பங்களிப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் வருணித்தார். ஜேர்மனி மற்றும் அமெரிக்கா இரண்டிலும் இருக்கும் அரசியல் ஆளும்தட்டினர் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தன்மை குறித்து தீவிரமாக பேசத் தயங்குகின்றன என்றால் அதன் காரணம் அந்த அரசு தனது மூலங்களை இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத இனவழிப்பு ஆகிய மாபெரும் வரலாற்றுக் குற்றங்களில் கொண்டிருந்தது என்பதாகும்.
இந்த குற்றங்களுக்கான பொறுப்பு ஹிட்லர் மற்றும் அவரது கூட இருந்தவர்களுடன் மட்டும் தங்கியிருக்கவில்லை, மாறாக ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் உயர் தட்டினரின் ஒரு பரந்த அடுக்கிடமும் இருந்தது. தைசென், குருப் மற்றும் குவாண்ட் (Thyssen, Krupp, Quandt) போன்ற ஹிட்லருக்கு நிதியாதாரம் வழங்கி விட்டு பலாத்கார உழைப்பால் தங்களது சொந்தச் செல்வங்களை பெருக்கிக் கொண்ட தொழிலதிபர்கள், மற்றும் கிழக்கில் அழிவுப் போரை ஒழுங்குநடத்திய தளபதிகளும் அதிகாரிகளும், இனவாத சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்திய கல்வியாளர்களும் நீதித் துறையினரும் மற்றும் இன்னும் பலர் அதில் உள்ளடங்குவர்.
போருக்கும் இனப் படுகொலைக்கும் உந்துதலளிப்பதில் முதலாளித்துவ உயர் தட்டினர் ஆற்றிய பாத்திரம் போரின் முடிவில் வெளிப்படையாய் தெரிந்தது. நிலவிய முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் போருக்குப் பிந்தைய ஆஹெலென் வேலைத்திட்டத்திலும் (Ahlen programm) கூட பிரதிபலிப்பைக் காணும் அளவிற்கு இது இருந்தது. இந்த நிலை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்த அரசாங்கங்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சியாளர்களுக்கும் கவலைக்கான ஆதாரவளமாய் அமைந்தது. ஐரோப்பாவில் ஒரு சோசலிச வெகுஜன இயக்கமானது ரஷ்யாவில் தனது சொந்த ஆட்சியை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று சிறப்புரிமை பெற்ற ஒரு அதிகாரத்துவ குடியினரில் தனது அதிகாரத்திற்கு தங்கியிருந்த மற்றும் அக்டோபர் புரட்சியின் தலைவர்களை தண்டித்து கொலை செய்திருந்த ஸ்ராலினும் அஞ்சினார்.
இதனையடுத்து, தெஹ்ரான், யால்டா மற்றும் போட்ஸ்டாமில் நடந்த மாநாட்டுக் கூட்டங்களில் ஜேர்மனியையும் ஐரோப்பாவையும் பல்வேறு செல்வாக்கு வட்டங்களாய் பிரித்துக் கொள்வதற்கு அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டின. ஸ்ராலினுக்கு கிழக்கு ஐரோப்பாவில் ஒரு இடைத்தடை மண்டலம் ஒதுக்கப்பட்டது, அதற்குப் பதிலாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கம் எதனையும் அடக்க உதவுவதாக அவர் வாக்களித்தார். ஆயுதமேந்திய கிளர்ச்சிப்படைகளுக்கு தலைமையில் இருந்த ரஷ்ய நோக்குநிலை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வகித்த பங்கு இதற்கு தீர்மானமான நிரூபணமானது.
ஜேர்மனியின் தலைவிதி நான்கு வெவ்வேறு ஆக்கிரமிப்பு மண்டலங்களாய் பிரிக்கப்பட்டு போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இறுதியாய் தீர்மானிக்கப்பட்டது. 1949 மே மாதத்தில், மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று மண்டலங்களுக்குள்ளாக பெடரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. பதிலிறுப்பாக ஜேர்மன் ஜனநாயக குடியரசு (GDR) ஐந்து மாதங்கள் கழித்து ஸ்தாபிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கொன்ராட் அடினவர் தலைமையில் இருந்த கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஜேர்மனியின் பிரிவை தனது சொந்த பிரச்சார நோக்கங்களுக்குப் பயன்படுத்தியது என்றாலும், பொருளாதார ரீதியிலும் இராணுவரீதியிலும் மேற்கத்திய சக்திகளுடன் தன்னை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு இந்த பிரிவினைக்கு ஆதரவாக திட்டமிட்டு முடிவு மேற்கொண்டது.
பனிப் போர் தீவிரமுற்ற நிலையில், பெடரல் குடியரசில் முன்னாள் நாஜி போர்க் குற்றவாளிகளை தண்டிப்பது திடீரென நிறுத்தப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த தொழில்துறை அதிபர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர், நாஜி ரகசிய சேவை மற்றும் இராணுவ அதிகாரிகள் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர், அத்துடன் ஹிட்லர் NSDAPன் ஆரம்ப உறுப்பினர்கள் அரசியல் பதவிகளின் உச்சமானதற்கு உயர்த்தப்பட்டனர். ஒற்றை நாஜி நீதிபதி கூட தனது குற்றங்களுக்குப் பொறுப்பாக்கப்படவில்லை. இதனால், நாஜி போர்க் குற்றவாளிகளை தொடர்ச்சியாக தண்டித்த ஜேர்மன் ஜனநாயக குடியரசு பல தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் ஈர்ப்பதாய் அமைந்தது.
பனிப் போரின் பெருகிய நெருக்குதலுக்குக் கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஆட்சி முதலாளித்துவ சொத்து உறவுகளுக்குள்ளாக பெருமளவில் உட்புகுந்தது. 1945ல், சோவியத் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஏற்கனவே எந்த இழப்பீடும் இன்றி 100 ஹெக்டர்களுக்கு மிகுந்த நிலப் பகுதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்திருந்ததோடு அவற்றை அரை மில்லியன் விவசாயத் தொழிலாளர்கள், மறு-குடியேற்ற மக்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு திருப்பினர். வில்ஹெமியன் சாம்ராஜ்யம் மற்றும் வைய்மர் குடியரசில் அரசியல் மற்றும் இராணுவ பிற்போக்கிற்கு அடித்தளமைத்திருந்த கிழக்கு-அடிப்படையிலான ஜங்கர்களின் (உயர்தட்டு நிலப்பிரபுக்கள்) பொருள்சார் அடித்தளத்தை இது அகற்றியது. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலாளித்துவ நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன.
ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஸ்ராலினிச ஆட்சி கிரெம்ளின் மாளிகை அதிகாரத்துவத்தின் ஒரு நீட்சியுற்ற அங்கமாக செயல்பட்டு தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைத்திருந்தது என்றாலும், கணிசமான எண்ணிக்கையில் சமூக சலுகைகளையும் செயல்படுத்த அது நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான உடைமை என்பது தொழிலாளர்களுக்கு உயர்ந்ததொரு சமூக பாதுகாப்பை உறுதியளிக்கும் விரிவானதொரு கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக அமைப்புக்கான அடிப்படையாகியது.
சுருக்கமாய் சொல்வதானால், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஒரு முரண்பாடான குணத்தைக் கொண்டிருந்தது, அதனை "அநீதியின் ஆட்சி" அல்லது "சர்வாதிகாரம்" போன்ற எளிமையான வார்த்தைகளால் குணாதிசயப்படுத்திவிட முடியாது. அது ஒரு சோசலிச அரசு அல்ல, என்றபோதிலும் அது ஒரு முதலாளித்துவ அரசாகவும் இருக்கவில்லை. சொத்துகள் சமூக உடைமையாக இருந்தமை முற்போக்கான தன்மையாக இருந்தாலும் தொழிலாளர்' ஜனநாயகத்தின் அடிப்படையிலும் இத்தகைய சோசலிச உறவுகள் மற்ற நாடுகளுக்குப் பரவுவதன் மூலமும் மட்டுமே அவற்றின் சாத்தியத் திறன் உணரப்பட்டிருக்க முடியும். ஆட்சியிலிருந்த அதிகாரத்துவம் இவை இரண்டையுமே எதிர்த்தது. இறுதி ஆய்வில், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முரண்பட்ட குணாம்சம் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கப்படாதிருந்த ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியால் வெறுமனே மூடிமறைக்கப்பட்ட தீர்க்கப்படா முரண்பாடுகளின் பகுதியாகவே இருந்தது.
ஜேர்மனியின் மறுஇணைவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து, இந்த முரண்பாடுகள் முன்னெப்போதையும் விட பட்டவர்த்தனமான வகையில் மேற்பரப்புக்கு எழுந்துள்ளன. இணைவுக்கு இருபது ஆண்டுகள் கழித்து, உலகெங்கிலும் முதலாளித்துவம் ஆழமான நெருக்கடியில் இருக்கும் சமயத்தில், பெடரல் குடியரசானது பெருகிய முறையில் 1920கள் மற்றும் 1930களின் ஜேர்மனியை ஒத்திருக்கிறது.
1990ல் சான்சலர் ஹெல்மட் கோல் வாக்குறுதியளித்த "பசுமை கொஞ்சும் வெளிகளுக்கு"ப் பதிலாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையுமே கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி இரண்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. சுமார் 6.7 மில்லியன் ஜேர்மனியர்கள் ஹார்ட்ஸ் IV நல உதவித் தொகைகளை சார்ந்திருக்கின்றனர், இன்னுமொரு 5 மில்லியன் பேர் மலிவு ஊதியமளிக்கும் அபாயமான வேலை வடிவங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் ஓய்வூதியம் மற்றும் சுகாதார அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டியெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசியவாதமும் இனவாதமும் மீண்டும் ஆளும் வட்டாரங்களில் ஆதரவைப் பெற்று வருகின்றன. தனது விழா உரையில், ஜனாதிபதி வுல்ஃப் "ஆசுவாசத்துடனான தேசப்பற்று" க்கு ஆதரவாகப் பேசினார், அத்துடன் "நமது வாழ்க்கை வழியை" ஏற்றுக் கொள்ள மறுக்கும் குடியேற்ற மக்கள் "தீர்மானமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டாக வேண்டும்" என்றும் அவர் எச்சரித்தார். கடந்த 20 ஆண்டுகளில் திறந்து விடப்பட்டிருக்கும் ஆழமான சமூக பிளவை பாதுகாக்கும் வகையில் அவர் அறிவித்தார்: "மிதமிஞ்சிய சமத்துவம் தனிநபர் முன்முயற்சிக்கு மூச்சுமுட்டச் செய்கிறது என்பதோடு சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து தான் அது சாதிக்கப்பட முடிவதாய் இருக்கிறது."
உலக அரங்கில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் தனது முன்னாள் மூர்க்கமான பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜேர்மன் துருப்புகள் மீண்டும் ஆப்கானிஸ்தானிலும் உலகின் பிற பகுதிகளிலும் போரிடவும் கொல்லவும் செய்கின்றன. ஜேர்மன் நிதி அமைச்சகமானது ஐரோப்பாவெங்கிலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்களுக்கும் நிர்ணயங்களை உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறது.
ஜேர்மனி மறுஇணைவு கண்டதற்குப் பிந்தைய 20 ஆண்டுகளில் இருந்து பெறுவதற்கான ஒரு முக்கிய படிப்பினை உண்டானால், இருபதாம் நூற்றாண்டை மனித வரலாற்றில் மிகவும் இரத்தக்களரியானதாக ஆக்கிய பிரச்சினைகளில் எதுவுமே இன்னும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது தான் அது. தொழிலாளர்கள் வர்க்க மோதல்களுக்கு தயாரித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்ராலினிசத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை அறிய கற்றுக் கொண்டாக வேண்டும் என்பதோடு ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் உண்மையான தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். |