WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
ஜேர்மனிய அரசாங்கம் பொதுநல உதவித் தொகைகளில் அற்பமான அதிகரிப்பைக் கொடுக்கிறது
By Peter Schwarz
29 September 2010
Use
this version to print | Send
feedback
ஜனவரி 1ம் திகதி முதல் Hartz IV எனக்கூறப்படும் அடிப்படைப் பொதுநல உதவி நிதி பெறுபவர்கள் 359 யூரோக்களுக்குப் பதிலாக 364 யூரோக்களைப் பெறுவர். இது தற்போதைய பணவீக்க விகிதத்தை ஒட்டி 1.4% அதிகரிப்பாக இருக்கின்றது.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகையில் அதிகரிப்பு ஏதும் இல்லாமல் அப்படியே உள்ளது. இது வயதைப் பொறுத்து உள்ளதுடன், 215 யூரோக்களுக்கும் 287 யூரோக்களுக்கும் இடையே இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பழைமைவாத கட்சிகள் மற்றும் தடையற்ற சந்தைச் சார்பு தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றின் கூட்டணியிலான ஜேர்மனிய அரசாங்கம் இந்த ஒழுங்குமுறையைக் கொண்டுவந்துள்ளது.
இந்த முடிவு 5 மில்லியன் வயது வந்தோர், 1.7 மில்லியன் குழந்தைகள் என்று Hartz IV உதவி நிதிகளைப் பெறுவோரை இலக்காகக் கொண்டுள்ள வேண்டுமென்றே வந்துள்ள ஆத்திரமூட்டலாகும்.
பெப்ருவரி மாதம் ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றம் தற்போதுள்ள Hartz IV உதவித் தொகைகள் விகிதம் அரசியலமைப்பின் 1ம் விதிக்கு ஏற்ப இல்லை என்று தீர்ப்பளித்தது; அதன்படி “மனித கௌரவத்திற்கு” ஏற்றால்போல் வாழ்வதற்கான உதவிநிதித் தரங்கள் இருக்க வேண்டும். இதன்பின் அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் உதவித் தொகையை மறு கணக்கீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படுத்தியது. Hartz IV உதவித் தொகைகள் பள்ளி செல்லும் குழந்தைகளின் தேவையை உரிய கருத்திற்கொள்ளவில்லை என்ற உண்மை பற்றியும் கவனத்தை ஈர்த்தது. தனிநபரின் கௌரவம் உடலளவில் வாழ்வைதைப் பாதுகாப்பது என்று மட்டும் இல்லாமல் குறைந்தபட்ச தரத்திலாவது சமூக, பண்பாட்டு, அரசியல் வாழ்வில் பங்கு பெற வாய்ப்பு கொடுக்கக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
இத்தீர்ப்புரை அந்த நேரத்தில் குறிப்பாக அரசாங்கம் அடிப்படை விகிதத்தை, அதுவும் குழந்தைகளுக்கு சிறப்பாக அதிகரிக்க வேண்டும் என்று விடுத்த அழைப்பு என்று விளக்கம் காணப்பட்டது. ஆனால் நீதிமன்றம் வருங்கால உதவித் தொகைகள் பற்றிப் பரிந்துரைகள் கூறாமல், கணக்கிடுதல் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று மட்டும் கூறியிருந்தது. இது இப்பொழுது அரசாங்கத்தால் அடிப்படை விகிதத்தை கருமித்தனமான 5 யூரோக்கள் மட்டும் உயர்த்தும் முடிவை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
FSO எனப்படும் கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் 2008ம் ஆண்டு சேகரித்துள்ள மக்கள் கணக்கின் அடிப்படையில் அரசாங்கம் தன் முடிவை எடுத்துள்ளது. அந்தக் கணக்கு 60,000 இல்லங்கள் பற்றிய அளவையின் அடிப்படையில் இருந்தது. Hartz IV அடிப்படை விகிதத்தைக் கணக்கிடுவதற்கு குறைந்த வருமானம் உடைய இல்லங்கள்தான் கவனத்திற்கெடுக்கப்பட்டன. அதாவது வருமான அளவில் கீழ் ஐந்தில் ஒரு பகுதியில் இருப்பவர்களிடம் மட்டும். எனவே புதிய கணக்கீட்டின் தொடக்கக் கட்டம் வாழ்க்கை தேவையைக் கருத்தில் கொள்ளமால், மக்களில் மிக வறிய கீழ்மட்ட ஐந்தில் ஒரு பகுதியினரின் சராசரி செலவினங்களைத்தான் கருத்திற் கொண்டுள்ளது.
இக்கணக்கீட்டிலுள்ள தந்திரம் Hartz IV சட்டங்களின் விளைவாக இந்த இல்லங்களே மிகக் குறைந்த வருமானத்தை உடையவை என்ற உண்மையில்தான் உள்ளது. Hartz IV முதலில் 2003, 2005ல் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டங்கள் வேலையற்றோரை Hartz IV உதவி பெறுவோராகத் தாழ்த்தியது மட்டும் இல்லாமல், பெரும் குறைவூதியத் துறைக்கான நிலைகளையும் தோற்றுவித்தது. இதனால் ஏற்பட்ட குறைவூதிய வருமானங்களின் விரிவாக்கம், பல நேரம் வாழ்வதற்கே போதாது என்ற நிலையில் இருந்தது, இப்பொழுது Hartz IV விதிகள் கொடுக்கும் உதவித் தொகைகள் மிகக்குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட அடிப்படையாக மாறிவிட்டன.
இதன்பின் அரசாங்கம் இழிந்த முறையில் காயத்தில் உப்பைத் தடவுவது போல் செயல்பட்டு அதன் சமீபத்திய கணக்கீடுகளை நியாயப்படுத்த Hartz IV உதவித் தொகைகளுக்கும் குறைந்த பட்ச ஊதிய விகிதங்களுக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசம் இருக்க்ககூடாது. ஏனெனில் பின் வேலை செய்வதற்கு “உந்துதல்” இல்லாமல் போய்விடும் என்று கூறியது. ஆனால் இதே அரசாங்கம் குறைந்தபட்ச சட்டபூர்வ ஊதியம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நிராகரிக்கிறது. அவ்வாறு செய்யப்பட்டால் வாழ்வதற்கு தேவையான பணத்தை விட ஊதிய விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மற்றவை எப்படி இருந்தாலும், FSO உடைய கணக்குகள் இன்னும் தற்போதைய அடிப்படை விகிதத்தைவிட அதிகம் என்பதால், அரசாங்கம் மது மற்றும் புகையிலைக்கான 20 யூரோ செலவுகளை மாதாந்திர கற்பனைச் செலவுப் பட்டியலில் இருந்து அகற்றிவிட்டது. அரசாங்கத்தில் தொழில்துறை மந்திரி ஊர்சுலா வான் டெர் லையென் (CDU), Bild-Zeitung பத்திரிகையிடம் மது, புகையிலை போன்ற “ஆடம்பரப் பொருட்கள்” அடிப்படைத் தேவைகள் எனக் கருதப்பட முடியாதவை என்றார்.
FSO கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின் படி, குழந்தைகள் செலவுக்குத் தேவையான பணம் உண்மையில் தற்போதைய Hartz IV தரங்களைவிட மிகக் குறைவு ஆகும். இது இப்பொழுது குழந்தைகளுக்கான விகிதங்களை அரசாங்கம் மறுப்பதற்கு நியாயப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் காரணத்தை ஒட்டித்தான் அது தீவிரமாக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் குறைகூறப்பட்டது.
சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள்மீது ஒரு ஆத்திரமூட்டும் தாக்குதலை அரசாங்கம் நடத்தியிருப்பது இது முதல் தடவை அல்ல. கூட்டணியின் சேமிப்புத் திட்டம், கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது, அநேகமாக வேலையின்மையில் உள்ளோர், Hartz IV உதவிநிதி பெறுவோர், தனிப்பெற்றோர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கு எதிராகத் தனியாக திருப்பப்பட்டது. அதே நேரத்தில் வங்கிகள் மற்றும் உயர்மட்ட வருமானம் உடையவர்கள், பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக இருந்தவர்கள் அல்லது அதன் மூலம் பயன்பெற்றவர்கள் எந்தப் பாதிப்பையும் பெறவில்லை.
Hartz IV உதவிநிதி பெறுவோரை பல வேதனைதரும் குறைப்புக்களுக்கு உட்படுத்தியது தவிர, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளும் வேலை வழங்கும் மையங்களுக்கான செலவுகளில் குறைப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இதையொட்டி வேலையற்றோர் எந்தவிதமான ஒரு வேலையையாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதன் பின் CDU வின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பலமுறையும் வங்கிகள் மற்றும் பெருவணிகச் செல்வாக்கு செலுத்தும் குழுக்களுக்கு முழுமையாக தாழ்ந்துள்ளதை நிரூபித்துள்ளார். பெருவணிக நலன்களுக்கு நிபந்தனை இன்றி தாழ்ந்துவிட்டதை, அவர்களுடைய அணுசக்தி ஆலைகள் இயக்கப்படும் காலத்தை விரிவாக்க ஒப்புக் கொண்டதின் மூலம் காட்டினார். பிரச்சினைக்குரிய ஸ்ருட்கார்ட்-21 கட்டமைப்புத் திட்டத்திற்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்; மேலும் தங்கள் ஊழியர்களுக்கு ஐந்து, ஆறு இலக்க ஊதியங்கள் வங்கிகள் கொடுப்பதை அனுமதித்த விதத்தில் அவற்றிற்கு பல பில்லியன்களை புதிய அரசாங்க உத்தராவாதங்களாக அளித்துள்ளார். இப்பொழுது அவர் Hartz IV உதவி நிதி பெறுவோருக்கு எதிரான தாக்குதலைத் தொடரும் வகையில் ஐந்து யூரோ அதிகரிப்பு “மிக, மிகப் பெரிய நடவடிக்கை” என்று இழிந்த முறையில் அறிவித்துள்ளார்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் வசந்த காலத்தில் முக்கியமான தேர்தலை இழந்தும், கருத்துக்கணிப்புக்கள் இதன் ஆதரவில் சரிவைக் காட்டியும்கூட, அரசாங்கம் இப்போக்கை தொடர்கிறது. வாக்களார்கள் விருப்பம் பற்றி அது சிறிதும் பொருட்படுத்துவதில்லை. சமூகத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மீது இது கொண்டுள்ள இரக்கமற்ற அணுகுமுறை, வணிகச் செல்வாக்குக் குழுவிற்கு தாழ்ந்து நடத்தல் ஆகியவை இணைந்து ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைப் பிரதபலிப்பதுடன், சர்வாதிகார ஆட்சியை நோக்கி ஒரு அடிவைப்பாகவும் இருக்கின்றது.
தன் ஆக்கிரோஷப் போக்கை அரசாங்கம் தொடர முடிவதற்குக் காரணம் சமூக ஜனநாயக கட்சி (SPD), பசுமைவாதிகள், இடது கட்சி, தொழிற்சங்கங்கள் ஆகியவை தனக்கு ஆதரவு கொடுக்கின்றன என்பதை அது அறிந்துள்ளது. இந்த அமைப்புக்கள் அனைத்துமே Hartz IV உதவித் தொகைகளில் சிறுஅதிகரிப்பை எதிர்த்தன. சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சிக்மார் காப்பிரியேல் சான்ஸ்லர் அரசியலமைப்பு நீதிமன்றக் கருத்தைப் புறக்கணித்ததாகக் கூறியுள்ளார். பசுமைவாதிகளின் தலைவரான செம் ஒஸ்டிமியர் இந்த முடிவு “அறம் பிறழ்ந்தது” என்றும் இடது கட்சித் தலைவர் கிளவுஸ் ஏர்னெஸ்ட் “ஒரு சமூக-அரசியல் ஊழல்”என்று குறிப்பிட்டார்.
ஆனல் இவர்களிடம் இருந்து வந்துள்ள குறைகூறல்களை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட முடியாதவை. ஏனெனில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகள்தான் Hartz IV யே முதலில் அறிமுகப்படுத்தி, அரசியலமைப்பு நீதிமன்றம் மனித கௌரவத்தை மீறியுள்ளது என்று கண்டித்த அடிப்படை விகிதத்தை அப்பொழுது நிர்ணயித்தன.
தற்பொழுது சமூக ஜனநாயக கட்சி முன்னாள் சமூக ஜனநாயக கட்சி-பசுமைவாதிகள் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) கூட்டணி அரசாங்கம் எடுத்த கொள்கைகளின் சில கூறுபாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முற்படுகிறது; அவையோ பின்னர் SPD, CDU அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான பெரும் கூட்டணியினாலும் தொடரப்பட்டன. குறிப்பாக உழைக்கும் வயது 67க்கு அதிகரிக்கப்பட்டது மற்றும் Hartz விதிகளில் சில மோசமான கூறுபாடுகளை சேர்த்தமை ஆகியவை அடங்கும். ஆனால் இப்பொழுது இது அரைகுறை மனத்துடன் தேர்தல் காரணங்களுக்கு தந்திரோபாயமாக இது பற்றிக் கூறுகிறது.
மேர்க்கெல் அரசாங்கம் தொடர்ந்து சரிவுற்றால் தான் அதற்குப் பதிலாக ஆட்சிக்கு வருவதற்கு அது தயாரிப்புக்களை நடத்துகிறது. ஆனால் சமூக ஜனநாயக கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமேயானால், அது மேர்க்கெலின் திட்டத்தைத்தான் தொடரும்; அனைத்து முக்கியப் பிரச்சினைகளிலும் -சிக்கன நடவடிக்கைகள், வங்கிகள் மீட்புத்திட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானப் போர்- அது உடன்பட்டுள்ளது. இதேதான் தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும்; அவை மேர்க்கெலும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன; இதுவரை பெயரளவு அடையாள எதிர்ப்புக்களைக் காட்டுதல் என்பதைக்கூட தொழிலாளர்கள், வேலையற்றோர் மீது அவர் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராகச் செய்யவில்லை.
Hartz IV உதவி நிதிகளின் குறைந்த அளவு பற்றிய பசுமைவாதிகளின் சீற்றமும் போலித்தனம் ஆகும். அவர்கள்தான் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தி இன்றளவும் அவற்றைக் பாதுகாத்து கடுமையான வரவுசெலவுத்திட்ட குறைப்புக்களுக்கு வாதிடுகின்றனர். இக்கட்சி வணிக வட்டங்களில் நல்ல செல்வாக்கைப் பெருக்கியுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி தீவிரமடைகையில், எவ்விதமான எதிர்கால சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கமும் ஷ்ரோடர் மற்றும் பசுமைவாத தலைவர் ஜோஷ்கா பிஷ்ஷர் கூட்டணியுடையதைவிட வலதுபுறமாகத்தான் இருக்கும்.
இடது கட்சியைப் பொறுத்த வரை, அதன் அறிவிக்கப்பட்ட நோக்கம் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகள் அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கு உதவுதல் ஆகும். பேர்லின், பிராண்டன்பேர்க் மாநிலங்களில் இடது கட்சி சமூக ஜனநாயக கட்சியில் கூட்டணி ஆட்சியை நடத்துகிறது; மேலும் பொதுத் துறை வேலைகளை அகற்றுதல், வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை செயல்படுத்துதல் என்று வரும்போது முன்னணியில் உள்ளது. சமூக ஜனநாயக கட்சி, தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக்கொள்ளல், சமரத்திற்கு இடமில்லாமல் தொழிலாளர்கள், வேலைற்றோர் உரிமைகளைக் பாதுகாக்கும் எந்தவித சுயாதீன எதிர்ப்பு இயக்கத்தைத் தவிர்ப்பதை தன் முக்கியமான பணியாக இக்கட்சி கருதுகிறது. |