World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stench of dictatorship

சர்வாதிகாரத்தின் துர்நாற்றம்

Joseph Kishore
1 October 2010

Back to screen version

கடந்த வாரம் FBI போர் எதிர்ப்புச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடத்திய சோதனை முற்றுகைகள் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு ஆபத்து நிறைந்த எச்சரிக்கை ஆகும். பொலிஸ்-அரச தந்திரோபாயங்கள் எந்த அளவிற்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள்—பேச்சுரிமை மற்றும் அரசியல் அமைப்பு ஏற்படுத்துதல் உட்பட—அமெரிக்காவில் தகர்க்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

பல தனிநபர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு உட்படுத்த ஒபாமா நிர்வாகம் உத்தரவிட்டது—முக்கியமாக Freedom Road Socialist Organization உறுப்பினர்களுடையவை—மற்றும் ஆவணங்கள், கைத்தொலைபேசிகள், புகைப்படக் கருவிகள் இன்னும் தனிப்பட்ட மற்றும் அரசியல் தொடர்புடைய பொருட்களையும் கைப்பற்ற உத்தரவிடப்பட்டது. இலக்கிற்கு உட்பட்டவர்கள் அக்டோபர் 12ம் தேதி குறுக்கு விசாரணை செய்யும் குழுவிற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு “பொருள்சார் உதவி” என்ற குற்ற விசாரணையை அவர்கள் எதிர்கொள்ளக்கூடும்.

இந்த நடவடிக்கைகளின் பின்னே உள்ள காரணங்கள் யாவை? அமெரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக “பயங்கரவாதிகள்” என்று அழைக்கும் குழுக்களிடம் சென்றதாக தெளிவற்ற ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. இத்தகையை பெயரிடல்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தனிச்சிறப்புக் கருத்துக்களால் தான் முற்றிலும் வழிநடத்தப்படுகின்றன—அதாவது மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா அல்லது உலகின் ஏனைய பிரிவுகளில் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா என்பதைப் பொறுத்து அமைப்புக்கள் “பயங்கரவாதி” என்று கூறப்பட்டுவிடும்.

இத்தாக்குதலுக்கு ஒரு அமைப்பு மட்டும் உட்பட்டிருக்கவில்லை. அரசாங்கமும் அதன் ஏராளமான இராணுவ-பொலிஸ் பிரிவுகளும் அமெரிக்காவில் எதிர்த்தரப்புக் கருத்துக்களை குற்றம் வாய்ந்தவை என்று விரிவாக்குவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளன.

FBI மற்றும் ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உண்மையில் ஒரு சோதனை பலூன் போல்தான் உள்ளது. இவை மக்கள் மற்றும் செய்தி ஊடகத்திலிருந்து எத்தகைய விடையிறுப்பு வரும் என்பதைக் கணிக்கவும் ஒரு முன்னோடிச் செயல் என்ற விதத்தில் அமையவும் முயல்கின்றன. கடைசிச் செயலைப் பொறுத்தவரையில் நிர்வாகம் ஐயத்திற்கு இடமின்றி அது எதிர்கொண்ட விதத்தைப் பற்றிக் களிப்படைந்திருக்கும். கிட்டத்தட்ட பெரும் அமைதி என்பதுதான் அது. செய்தித்தாள்கள் நிகழ்வைப் புதைத்துவிட்டன, தொலைக்காட்சிச் செய்திகள் அதைப் பற்றிக் கூறவில்லை. தாராளவாத ஸ்தாபனத்தின் குரலான New York Times உட்பக்கம் ஒன்றில் ஒரு சிறிய கட்டுரையை அச்சிட்டது.

“இடது” என்று கூறப்படும் செய்தி ஊடகமும் மௌனமாக இருந்துவிட்டது. நேஷன் இதழ் இதுபற்றி இன்னும் ஒரு கட்டுரையும் எழுதவில்லை, அதன் வலைத் தளத்தில் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இத்தகைய விடையிறுப்பு ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. நேஷன் மற்றும் அதன் ஜனநாயகக் கட்சி ஆதரவுடைய அமைப்புக்கள் ஒபாமா நிர்வாகத்தையும் அதன் கொள்கைகளையும்—போர் விரிவாக்கம், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல், அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் இன்னும் தகர்ப்பிற்கு உட்படுத்தப்படல் ஆகியவை உட்பட. அவற்றின் முக்கிய நோக்கம் அரசாங்கத்தின் உண்மைத் தன்மை அம்பலமாவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஒவ்வொரு புறத்திலும் ஒபாமா, புஷ்ஷின் கொள்கையைத் தொடர்ந்து அரசின் உளவு வேலை, சிறையில் அடைத்தல், சித்தரவதை மற்றும் எதிராளிகளைப் படுகொலை செய்தல் ஆகியவற்றைப் பெரிதும் விரிவாக்கியுள்ளார். இப்பொலிஸ் சோதனை முற்றுகைகளானது நிர்வாகம் அரசாங்கத்தின் உளவு வேலைகளை Facebook, Skype மற்றும் Blackberry தொடர்புகள் உட்பட பலவற்றில் விரிவாக்கப் போவதாக வந்துள்ள அதே நேரத்தில் நடந்துள்ளன. நிர்வாகம் பல நேரமும் “அரச இரகசியங்கள்” என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி நீதிமன்றங்களானது கடத்தல், சித்திரவதை, ஆணைகள் இல்லாத ஒட்டுக் கேட்டல் பற்றிய வழக்குகளை விசாரிக்கத் தடை செய்துள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் உட்பட எவரையும் ஜனாதிபதியின் ஒரே அதிகாரத்தின் மூலம் படுகொலை செய்யும் அரசாங்கத்தின் உரிமையை நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. இது புஷ் காலத்தில் இயற்றப்பட்ட Patriot Act இன்னும் பிற ஜனநாயக விரோதச் சட்டங்களை விரிவாக்கியுள்ளது. இதைத்தவிர நிர்வாகம் உலகளாவிய திரித்தல் மிரட்டல் வேலையை விக்கீலீக்ஸின் மீது நடத்தும் பிரச்சாரத்தையும் கொண்டுள்ளது. அது வெளிநாடுகளில் அமெரிக்கா நடத்தும் போர்களின் குற்றம் சார்ந்த தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தைத் தகர்த்தல் என்பது இரு இடைத்தொடர்புடைய வழிவகைகளுடன் தொடர்பு உடையது ஆகும். முதலில் பெருகி வரும் அமெரிக்கத் தலைமையிலான போர்கள் கூடுதலான வகையில் உலக மக்களுடன் நேரடி மோதலுக்குள் நுழைகிறது. சித்திரவதைப் பயன்பாடு, குவாண்டநாமோபேயில் காவல் மையம் நிறுவப்பட்டது இன்னும் பல ஜனநாயக விரோத நடவடிக்கைகள் இறுதியில் இந்தக் குற்றம் நிறைந்த போர்களின் விளைவுதான். இதே தந்திரோபாயங்கள் அமெரிக்காவிற்குள் உள்ள எதிர்ப்புக்களுக்கு எதிராகவும் பெருகிய முறையில் பயன்படுத்தப்படும்.

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஒபாமா இப்பொழுது பெரும் குருதி படிந்த தாக்குதலை நடத்துகிறார். சீனா, இன்னும் பிற சக்திகளுடன் அழுத்தங்களை அதிகரிக்கத் துடிக்கிறார். இவை ஒரு உலகப் பேரழிவை அச்சுறுத்துகின்றன. எந்த ஏகாதிபத்திய சக்தியும் தன் நலன்களுக்கு எதிராக இருப்பவற்றை குற்றத்தன்மை உடையதாக ஆக்குவது வாடிக்கையான செயல் ஆகும். அதற்கு “பயங்கரவாதம்” என்ற முத்திரையிடப்படும். இச்சொல்லுக்கு புறநிலைப் பொருள் ஏதேனும் உண்டு என்றால், அது அமெரிக்க அரசாங்கத்தின் செயல்களுக்கும் பொருந்தும். உலகின் தொலை பகுதிகளில் திக்கற்ற சிவிலிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் ட்ரோன் தாக்குதல்கள் –இவை லாங்லியில் குளிர்சாதன வசதியிலுள்ள CIA அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.

இரண்டாவதாக, அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி தவிர்க்க முடியாமல் அமெரிக்காவில் பெருகும் சமூக நெருக்கடியுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமத்துவமற்ற நிலை வரலாறு காணாத உயர்நிலையில் உள்ளது. நிதியப் பிரபுத்துவம் நெருக்கடியை பயன்படுத்தித் தன்னை இன்னும் பெரும் செல்வக் கொழிப்புடையதாக ஆக்கிக் கொண்டுள்ளது. அது இப்பொழுது அதற்கான விலை தொழிலாள வர்க்கத்தால் ஊதிய வெட்டுக்கள், வெகுஜன வேலையின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.

”சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல், “சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி என்பது ஜனநாயகத்துடன் பொருந்தி இருக்க முடியாது. புதிய பிரபுத்துவம் தன்னுடன் பிரபுத்துவ அரசாங்கக் கொள்கையைக் கொண்டுவருகிறது. இதில் வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக அரசாங்கம் இன்னும் கூடுதலான முறையில் செயல்படும்.”

ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகள் மக்களிடமிருந்து எதிர்ப்பைப் பெறும் என்பதை நன்கு அறியும். தன்னுடைய தீய வழியில் சேகரித்த பணத்தை எப்படியும் காப்பாற்றி, பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் அது இன்னும் வெளிப்படையான அரசியல் அடக்குமுறை வடிவங்களில் ஈடுபடும்.

FRSO இன்னும் அதே போன்ற குழுக்களான மாவோயிஸ்ட் மற்றும் தேசியவாத அரசியல் கொள்கைகளுடன் சோசலிச சமத்துவக் கட்சி பல அடிப்படை அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இது சிறிதும் தயக்கமின்றி அவற்றின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது. விசாரணைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருவதுடன், அமெரிக்க அரசாங்கம் நடத்தும் அச்சம் நிறைந்த மிரட்டலும் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை முதலாளித்துவ முறையின் விளைவுகள் ஆகும். வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்களின் அரசியல், பொருளாதாரச் சர்வாதிகாரத்தின் விளைவுகள் ஆகும். எனவே இந்த உரிமைகளைக் பாதுகாப்பதற்கான போராட்டம் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் அணிதிரள்வைக் கொள்வதுடன் இணைந்துள்ளது. அத்தகைய போராட்டத்தை நடத்த விரும்பும் அனைவரும் அதன் வேலைத்திட்டத்தை படிக்குமாறு SEP வலியுறுத்துவதுடன் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர முடிவெடுக்குமாறும் கோருகிறது.