World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan shuts key Afghan war supply-route

ஆப்கானிஸ்தானுக்குப் போர்ப் பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதையை பாக்கிஸ்தான் மூடுகிறது

By Keith Jones
1 October 2010

Back to screen version

அமெரிக்கா-நேட்டோவின் ஆப்கானியப் போருக்கு பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதையை நேற்று பாக்கிஸ்தான் மூடியது. இது பாக்கிஸ்தானிய எல்லைச் சாவடியில் மூன்று பாக்கிஸ்தானிய எல்லைப் பாதுகாப்புத் துருப்பினர் கொலையுண்டதோடு ஏனைய மூன்று பேர் ஒரு நேட்டோ தாக்குதலில் காயமுற்றதைத் தொடர்ந்து வந்துள்ளது.

அமெரிக்கா-நேட்டோ சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படை (ISAF) ஹெலிகாப்டர்கள் மூலம் இருமுறை தாக்கின. இவை கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பழங்குடிப் பகுதியில் (FATA) முதலில் வியாழன் காலை 5:30 மணிக்கும் பின்னர் இரண்டாவது முறை நான்கு மணி நேரம் கழித்தும் குர்ரம் என்ற இடத்தில் நடைபெற்றன.

நேட்டோ அதிகாரிகள் மான்டாடா காண்டஹோ புறச் சாவடியின் மீதான தாக்குதல் ஒரு “தற்காப்பு நடவடிக்கை” என்று நியாயப்படுத்தினர். இதேபோல்தான் 50 பேருக்கும் மேல் போன வாரம் ஹெலிகாப்டர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதையும் அவர்கள் கூறினர்.

ஒரு பாக்கிஸ்தான் இராணுவச் செய்தித்தொடர்பாளர் கருத்தின்படி, மான்டாடா காண்டாஹோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் IASF ஹெலிகாப்டர்களுக்கு அவை பாக்கிஸ்தான் வான்வழியில் நுழைந்துவிட்டனர் என்பதைக் குறிப்பதற்கு ஆகாயத்தை நோக்கிச் சுட்டனர். “எச்சரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக ஹெலிகாப்டர்கள் இரு ஏவுகணைகளைச் செலுத்தி சாவடியை அழித்துவிட்டன.”

நேற்றைய தாக்குதல்களுக்குப் பின்னர் பாக்கிஸ்தானிய அதிகாரிகள் பேஷாவருக்கு வடக்கே ஆப்கானிஸ்தானிற்குள் செல்லும் டோர்க்காம் பாதையை மூடிவிட்டனர். பிற்பகலையொட்டி இந்தத் தடுப்பினால் 150க்கும் மேற்பட்ட நேட்டோ டிரக்குகளும் எண்ணெய் லாரிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

பாக்கிஸ்தானிய அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் தேசிய இறைமை மீறப்படல் மற்றும் அதன் குடிமக்கள் படுகொலை ஆகியவற்றிற்குப் பதிலடியாக எல்லை மூடப்பட்டது என்று பகிரங்கமாகக் கூறவில்லை. ஆனால் செவ்வாயன்று பாக்கிஸ்தானிய இராணுவம் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோத் தலைவர்களிடம் நேட்டோத் துருப்புக்கள் தொடர்ந்து பாக்கிஸ்தானுக்குள் இராணுவத் தாக்குதல்களை நடத்தினால் பாக்கிஸ்தான் IASF பொருட்கள் செல்லும் தொடர் அணியின் “பாதுகாப்பை உறுதி செய்ய இயலாது” என்று எச்சரித்து விட்டனர்.

பல ஆண்டுகள் பாக்கிஸ்தானிய அரசாங்கம் FATA பகுதியில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களை உட்குறிப்பாக ஏற்றிருந்தாலும், அது அமெரிக்க, நேட்டோப் படைகள் பாக்கிஸ்தானுக்குள் நுழைந்தபோதெல்லாம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற மறைமுகமான அச்சுறுத்தல்களும் அதில் அடங்கும்.

இது அசாதாரணமானது என்று கூறுவதற்கில்லை. சர்வதேசச் சட்டப்படி எல்லை கடந்த தாக்குதல்கள் ஒரு போர்ச் செயலுக்குச் சமமாகும்.

வியாழக்கிழமை நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் பாக்கிஸ்தானின் உள்துறை மந்திரி ரெஹ்மான் மாலிக், “நாம் நண்பர்களா அல்லது எதிரிகளா என்று பார்க்கப்பட வேண்டும்.” என்றார்.

வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பசிட் பாக்கிஸ்தான் “அதன் இறைமையை அனைத்துச் சூழ்நிலையிலும் பாதுகாக்கும்” என்று உறுதிமொழி கூறினார். பாக்கிஸ்தான் எப்படிப் பதிலடி கொடுக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, “நீங்களே அதை ஊகித்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார்.

அமெரிக்கக் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவரான அட்மைரல் மைக் முல்லன் “கடந்த வார இறுதியில் பாக்கிஸ்தானுக்குள் ஊடுருவல் குறித்து பாக்கிஸ்தானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அஷ்பக் கியானியுடன் ஒரு நேர்மையான புரிதலையடைந்து மூன்று நாட்களுக்குப் பின்னரும், CIA இயக்குனர் லியோன் பனேட்டா உயர்மட்ட பாக்கிஸ்தானிய அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்திய மறுநாளும்” சமீபத்திய அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளில் இத்தகைய வெடிப்பு வந்துள்ளது.

பனேட்டாவிற்கும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரிக்கும் இடையே பேச்சுக்களுக்குப் பிறகு, ஜனாதிபதியின் அலுவலகம் அவர் CIA இயக்குனரிடம் “பாக்கிஸ்தான் அரசாங்கம் அதன் இறைமை மீறப்படும் எந்த நிகழ்வையும் ஏற்காது என்பதை” வலுவாகத் தெரிவித்தார். “சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள கொள்கைகளில் எத்தகைய மீறல் வந்தாலும் அது முறையாகாது, ஏற்கப்படமாட்டாது” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

கைபர் கணவாயில் உள்ள டோர்க்காம் எல்லையைக் கடக்கும் சாவடி அமெரிக்க-நேட்டோத் துருப்புக்களுக்குப் பொருட்களை அளிப்பதற்கு மிக முக்கியமான வழியாகும். இதன்மூலம்தான் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க நேட்டோப் படைகள் பயன்படுத்தும் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றில் பாதிக்கும் மேலாகச் செல்கின்றன.

நேட்டோ அதிகாரிகள் இந்த மூடல் பற்றி அதிகம் பேசவில்லை. எழுச்சி எதிர்ப்புப் போரில் இதனால் அதிகம் பாதிப்பு இராது என்றனர். தன்னுடைய பங்கிற்கு பாக்கிஸ்தான் எப்பொழுது இத்தடை அகற்றப்படும் என்பது பற்றி ஏதும் கூறவில்லை. இத்தகைய முந்தைய தடைகள் சில நாட்கள் மட்டுமே நீடித்தன.

ஆனால் உண்மையில் ஆப்கானியப் போர் தொடங்கி ஒன்பது ஆண்டுகளில் அமெரிக்கா பாக்கிஸ்தானின் பலவித ஆதரவை, ஆப்கானிஸ்தானை அடக்குவதற்கும், எண்ணெய் வளமுடைய மத்திய ஆசியாவில் இராணுவ-புவியியல் நிலையைக் கொள்வதற்கு, அதிகமாக நம்பித்தான் உள்ளது.

அமெரிக்க-பாக்கிஸ்தான் உறவு பல அழுத்தங்களுடன் உள்ளது—இந்த அழுத்தங்கள் எந்த நேரமும் கட்டுப்பாட்டை விட்டு மீறிப்போகலாம்.

கடந்த தசாப்தத்தில் வாஷிங்டன் பல முறையும் பாக்கிஸ்தான் மீது ஆழ்ந்த அழுத்தம் கொடுத்து, இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களையும் கொடுத்து, பாக்கிஸ்தானின் இராணுவ-புவிசார்-அரசியல் தன்மையை அமெரிக்கக் கொள்ளை நலன்களுக்கு ஏற்பக் கொண்டுவர முயன்றுள்ளது.

சமீபத்தில் வெளிவந்துள்ள Bob Woodward உடைய Obama’s War என்னும் புத்தகத்தின் கருத்துப்படி, அமெரிக்கா இஸ்லாமாபாத்திடம் அமெரிக்கா அல்லது இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் பாக்கிஸ்தான் பகுதியில் இருந்து வந்தது என்றால், பென்டகன் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் முகாம்களுக்கு எதிராக பெரும் குண்டுவீச்சு நிகழ்வுகளை நடத்தும் என்று கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் உட்வர்ட் அமெரிக்கா அத்தகைய தாக்குதலில் சிவிலிய இறப்புக்கள் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். “சில இடங்கள் இப்பொழுது பயன்படுத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் இருக்கும் திட்டத்தின்படி அங்கு இருப்பவர்கள் பற்றி அக்கறை இருக்காது. பதிலடித் திட்டம் என்பது குறைந்தது 150 அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புடைய அமைப்புக்கள் மீது மிருகத்தன தண்டனை அளிப்பதாக இருக்கும்.”

ஆப்கானியப் போருக்கு பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு “இன்னும் அதிக ஆதரவு” கொடுக்க வேண்டும் என்று இடைவிடாமல் கோருகையில், அதற்காகப் பாக்கிஸ்தானில் பெரும்பகுதி உள்நாட்டுப்போரில் ஆழ்ந்தாலும், வாஷிங்டன் இஸ்லாமாபாத்தின் புவிசார்-அரசியல் நிலைமை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் தன் கொள்கைகளைகளைத் தொடர்கிறது. இவ்விதத்தில் அமெரிக்கா பாக்கிஸ்தானின் முதல் விரோதியான இந்தியாவுடன் ஒரு மூலோபாய பங்காளித்தனத்தை உறுதிபடுத்திக் கொண்டு, பல முக்கிய பாக்கிஸ்தானிய முயற்சிகளையும் தடுத்துவிட முயன்றுள்ளது. இதில் ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுக் குழாய்த்திட்டம் கட்டமைத்தலும், சீனாவில் இருந்து அணு உலைகள் பெறுவதும் அடங்கும்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாக்கிஸ்தான் வெள்ளங்களால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. 20 மில்லியனுக்கும் மேலான மக்கள், பாதிக்கும் மேல் சிறுவர்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்தவர் எண்ணிக்கையானது அவசரக்கால உணவு, மருத்துவ உதவித் தேவைப்படுவோர் என்ற எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஐ.நா. பலமுறையும் பாக்கிஸ்தானிய வெள்ளங்கள் அதன் 65 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் இக்காலக்கட்டத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் கீழ் அமெரிக்க மிகப் பெரிய அளவில் பாக்கிஸ்தானுக்குள் ட்ரோன் தாக்குதலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டும் அத்தகைய தாக்குதல்கள் 20 நடைபெற்றன. பாக்கிஸ்தானிய இறைமையை பலமுறை நேட்டோ ஹெலிகாப்டர்கள் கடந்த வாரம் மீறியுள்ளது இது இந்தப் புதிய இன்னும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டின் ஒரு பகுதிதான்.

ஒரு பெயரிடப்படாத பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டிடம் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஊடுருவல்கள் இஸ்லாமாபாத் வடக்கு வஜீரிஸ்தானில் தாலிபானுடன் தொடர்புள்ள குழுக்களை நசுக்குவதற்கு ஒரு புதிய இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான “அழுத்தம் கொடுக்கும் தந்திரோபாயங்கள்” என்றார்.

ஆப்கானியப் போர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பெரும் இகழ்விற்கு உட்பட்டுள்ள நிலையில், வாஷிங்டன் பாக்கிஸ்தானியத் துருப்புக்கள் அதிகம் போராடி உயிரிழக்கவும் வேண்டும் என்று விரும்புகிறது.

பாக்கிஸ்தானிய இராணுவம் பொறுப்பற்ற வன்முறைப் பயன்பாட்டிற்கு இழிவுற்றது என்பது குறிப்பிடப்பட வேண்டும். இதில் கிராமங்கள் மற்றும் எழுச்சிக்கு ஆதரவு கொடுப்பதாகக் கருதப்படும் பகுதிகள் மீது ஒட்டுமொத்தமாக குண்டுவீச்சும் கூட்டுத் தண்டனையும் அடங்கும்.

கடந்த ஆண்டு இரு மில்லியன் மக்கள் பாக்கிஸ்தானிய இராணுவ நடவடிக்கைகளினால் FATA பகுதியில் இருந்தும் கைபர் பக்டுன்க்வா (முன்னாள் வடமேற்கு எல்லை மாகாணம்) ஆகியவற்றில் இருந்து வெளியேற நேர்ந்தது. இத்தாக்குதலில் பாக்கிஸ்தானிய இராணுவம் பயன்படுத்திய கொடூர வழிவகைகளில் ஒரு உதாரணம்—வாஷிங்டனால் பெரிதும் பாராட்டப்பட்டது—ஒரு வீடியோ காட்சியில் இணையத்தளத்தில் வந்துள்ளது, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளே ஆதாரபூர்வம் என்று ஒப்புக் கொள்ளுவது, பாக்கிஸ்தானியத் துருப்புக்கள் எவ்வித விசாரணையும் இன்றி 6 இளைஞர்களைக் கொன்றதைக் காட்டியது.

பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் வாஷிங்டன்-இஸ்லாமாபாத் பங்காளித்துவம், பென்டகன்-பாக்கிஸ்தான் இராணுவ பங்காளித்துவமானது பாக்கிஸ்தானிய மக்களுக்கு பேரழிவைக் கொடுத்துள்ளது என்று நிரூபணமாகியுள்ளது.

மக்களை மிருகத்தனமாக அடக்கிய தொடர்ச்சியான பல இராணுவச் சர்வாதிகாரங்களுக்கு அமெரிக்கா பெரும் ஆதரவைக் கொடுத்து வந்திருக்கிறது. வாஷிங்டனின் தீவிர ஊக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உந்துதலின் ஒரு பகுதியாக ஆப்கானிய முஜாகிதீன்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் கொடுத்த விதத்தில், தளபதி ஜியாவின் கீழ் பாக்கிஸ்தான் இஸ்லாமியப் போராளிகள் வளர்ச்சி உட்பட இஸ்லாமிய அடிப்படைவாதம் வளரப் பெரிதும் உதவியது.

இரு ஆண்டுகளுக்குச் சற்று முன்பு தான் சமீபத்திய இராணுவ ஆட்சி—ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் நல்ல நண்பரான ஜெனரல் பர்வேஸ் முஷரப் தலைமையில்—வெகுஜன மக்கள் எதிர்ப்பையொட்டி அகற்றப்பட்டது.

ஆனால் அமெரிக்காவானது பாக்கிஸ்தானின் முக்கிய நிறுவன அமைப்பாக இராணுவத்தைத்தான் போற்றுகிறது, அதனுடன் நேசம் கொண்டுள்ளது.

இந்த ஆதரவினால் ஊக்கம் பெற்று, சிவிலிய அராசங்கங்களின் திறமையின்மை, வெளிப்படையான ஊழல், அமெரிக்க ஆதரவு பெற்ற IMF மறுசீரமைப்புத்திட்டம் தொடரப்படுவது பற்றி மக்கள் சீற்றத்தைப் பயன்படத்தும் வகையில், பாக்கிஸ்தானிய இராணுவம் இப்போது மீண்டும் அன்றாட அரசியல் முடிவுகளில் தலையிட தன்னை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டது.

செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸ், “பாக்கிஸ்தானிய இராணுவமானது நாட்டின் பேரழிவு வெள்ளங்கள் திறமையற்றுக் கையாளப்பட்டதால் கோபம் அடைந்தும், பொருளாதாரச் சரிவினால் எச்சரிக்கை அடைந்தும் இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை உலுக்குவது என்ற முடிவிற்கு வந்துள்ளதுடன், நீண்டகாலக் கருத்தில் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி அவருடைய உயர்மட்ட உதவியாளர்களை அகற்றுவது என்று கூடத் தீர்மானித்துள்ளது.” என்று வலியுறுத்திக் கூறியுள்ளது.

“அமெரிக்க அதிகாரிகளும் பெருகிய முறையில் திரு ஜர்தாரி பற்றி ஏமாற்றம் அடைந்துவிட்டனர் என்று கூறிகின்றனர்” என்றும் அது கூறியுள்ளது.

கடந்த காலத்தைப் போலவே, வெற்றுப் பாக்கிஸ்தானிய முதலாளித்துவமும் வாஷிங்டனும் நீடித்த பசி, வறுமை, பெருகும் சமூகச் சமத்துவமின்மை, நிலவுடமை, கணக்கிலடங்கா நிலபுரபுத்துவ எச்சங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கைக்கூலி போல் செயல்படும் பாக்கிஸ்தானின் பங்கு இவற்றிகு எதிரான மக்கள் அமைதியின்மையை அடக்குவதற்கு எதிர்நோக்கியுள்ளன.

சமீபத்திய வாரங்கள் வெள்ள நிவாரணம் இல்லாதது பற்றிய எதிர்ப்புக்கள், மின்வசதிக் குறைப்புக்கள், உறுதியளிக்கப்பட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பை அரசாங்கம் மறுத்துவிட்டது இல்லாமற் போனவற்றால் பெருகும் எதிர்ப்பு அலைகளைக் கண்டுள்ளன.

டைம்ஸ் கட்டுரைப்படி, “ஒபாமா நிர்வாகத்திற்குப் பெருகியுள்ள கவலை, பொருளாதாரம் இன்னும் சரிந்தால் ஏற்படக்கூடிய அமைதியின்மைத் திறன் அதிகமாகும். சில கருத்துக் கணிப்புக்கள் பணவீக்கம் வரவிருக்கும் காலத்தில் 25 சதவிகிதம் உயரும் என்று கூறுகின்றன.