சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India-China relations strained

இந்திய சீன உறவுகள் முறிவடைகின்றன

By Vilani Peiris
1 October 2010

Use this version to print | Send feedback

சீனாவுடனான எல்லைக்கு அருகே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் இருந்ததாக வந்த செய்திகளை அடுத்து சென்ற மாதத்தில் இந்தியா சீனா இடையிலான பதற்றங்கள் மேலும் ஒரு படி அதிகரித்தன.

7000 லிருந்து 11,000 சீனப் படையினரை வரை நுழைய அனுமதித்திருப்பதன் மூலம் பாகிஸ்தான் சீனாவிடம் அந்த மூலோபாய பிராந்தியத்தின் "உண்மையான கட்டுப்பாட்டை ஒப்படைத்திருப்பதாக" நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆகஸ்டு 26 அன்று வெளியான செலிக் ஹாரிசனின் கோபமூட்டும் கட்டுரையால் இந்த சர்ச்சை தூண்டிவிடப்பட்டுள்ளது. "அயலக உளவுத்துறை ஆதாரங்கள், பாகிஸ்தான் செய்தியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் மனித உரிமை பணியாளர்கள்" ஆகியோரிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

இந்த "துருப்புகள்" சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சாலை மற்றும் தொடர்வண்டிப் பாதைகளை அமைப்பதில் தான் உண்மையில் ஈடுபட்டிருந்தன என்பதை ஹாரிசன் ஒப்புக் கொள்ளத் தள்ளப்பட்டிருந்தார். ஆயினும் அந்த உண்மை, எந்த ஆதாரமும் இன்றி கட்டுமானம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் 22 சுரங்கங்களும் "ஏவுகணை சேமிப்பு களங்களாக" பயன்படுத்தப்படக் கூடும் என்று ஊகிப்பதில் இருந்து அவரை தடுக்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளுக்குக் குழிபறிக்க அமெரிக்க உளவுத்துறை நட்டு வைத்த ஒரு கதைக்கான முத்திரைகளை அந்த கட்டுரை கொண்டிருந்தது. சீனாவில் இருந்து கில்ஜித்-பல்திஸ்தான் வழியாக தெற்கு பாகிஸ்தானில் உள்ள சீனாவால் கட்டப்பட்ட துறைமுகங்களுக்கு உள்ள சாலை வழிகள் பற்றிக் கூறுகையில் ஹாரிசன் அறிவித்தார்: "தலிபானுக்கான அதன் ஆதரவுடன் சேர்ந்து, [பாரசீக] வளைகுடாவுக்கு சீன அணுகலுக்கு வழி ஏற்படுத்தித் தருவதில் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதும் பாகிஸ்தான் அமெரிக்க 'கூட்டாளி' அல்ல என்பதைத் தெளிவாக்குகிறது."

உண்மையில், பாகிஸ்தான் 2001ல் தலிபான் உடனான இணைப்புகளை முறித்துக் கொண்டது. அத்துடன் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு தனது எல்லைப் பகுதிகளில் ஒரு வெளிப்படையான போரையும் அமெரிக்க நெருக்குதலின் கீழ் பாகிஸ்தான் நடத்தி வருகிறது. கில்ஜித்-பல்திஸ்தான் வழியான பாதையைப் பொருத்தவரை, அரேபியன் கடலுக்கு சாலை வழியாக வர்த்தக மற்றும் எரிசக்தி பாதைகளை உருவாக்கும் சீனாவின் திட்டங்களில் பாகிஸ்தானிய "வஞ்சகக் கூட்டு"எதனையும் எதிர்க்கிற அமெரிக்க ராணுவ மற்றும் அயலுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்காக ஹாரிசன் பேசுகிறார்.

பாகிஸ்தான் மற்றும் சீனா இருநாடுகளுமே இச்செய்தியை திட்டவட்டமாய் மறுத்தன. சீன அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ஜியாங் யு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் சீனா கொஞ்சம் இராணுவத்தை நிறுத்தியிருப்பதாக கூறப்படும் இச்செய்தி முற்றுமுதலாய் ஆதாரமற்றதுடன் எவ்விதமான மறைமுகமான தேவைகளுமற்றது" என்றார்.

டான் பத்திரிகையில் செப்டம்பர் 1 அன்று வெளிவந்த செய்தியில், பாகிஸ்தான் அயலுறவுத் துறை அலுவலக செய்தியாளரான அப்துல் பஸித் கூறினார்: "நிலச்சரிவு, மற்றும் வெள்ளப் பாதிப்பு பகுதிகளிலும் மற்றும் சிதைக்கப்பட்ட கோரகோரம் நெடுஞ்சாலையிலும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.... அந்த அறிக்கைகள் அரைகுறையான தகவல்களின் அடிப்படையிலானவை."

எவ்வாறிருப்பினும் இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் இந்த பிரச்சினையை விடுவதாய் இல்லை. கில்ஜித்-பல்திஸ்தான் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாலும் உரிமை கோரப்படும் காஷ்மீர் பகுதி ஆகும். 1947ல் இந்திய துணைக் கண்டம் சுதந்திரமடைந்து இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பின் காஷ்மீர் மீதான கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு இருநாடுகளும் போரிட்டதை அடுத்து இந்த பிராந்தியம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலான ஆசாத் காஷ்மீர் என பிளவுபட்ட நிலையிலுள்ளது.

தனது பிராந்தியமாக தான் எண்ணும் ஒரு பகுதியில் சீனாவின் எந்த ஒரு தலையீட்டையும் இந்தியா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. புஞ்சி அணை மற்றும் நீர்மின் திட்டக் கட்டுமானத்தில் சீனா உதவுவதற்கு இந்தியா ஆட்சேபித்தது. சென்ற ஆண்டில், முன்பு வடக்குப் பகுதி என்று அழைக்கப்பட்டதை கில்ஜித்-பல்திஸ்தான் என்று பெயர் மாற்றி அப்பிராந்தியத்திற்கு சுயாட்சி அரசாங்கத்தை அனுமதித்த பாகிஸ்தானின் முடிவையும் இந்தியா கண்டனம் செய்திருந்தது.

நியூயோர்க் டைம்ஸ் கட்டுரைக்கான பதிலிறுப்பாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் குறிப்பிடப்பட்ட சீனாவின் இராணுவ பிரசன்னத்தின் அபாயங்கள் குறித்து பல்வேறு இந்திய ஊடகங்களுக்கும் விளக்கினார். செப்டம்பர் 7 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான செய்தியில், சிங் அறிவித்தார்: "தெற்காசியாவில் சீனா ஆழமாகக் காலூன்றியிருக்க விரும்பும், இந்த யதார்த்தத்தின் மீது நாம் பிரதிபலித்தாக வேண்டும்." அவர் தொடர்ந்து பேசுகையில் "சீனர்களிடையேயான ஒரு புதிய தன்முனைப்பு" குறித்தும் எச்சரித்தார். இந்தியாவின் காஷ்மீரிலுள்ள ''மெதுமையான அடிவயிற்றினை'' சீனா பயன்படுத்தி இந்தியாவை சமநிலையற்ற நிலையில் வைத்திருக்கமுயலலாம் எனவும் சிங் குறிப்பிட்டார்.

சீனா தொடர்பான விடயத்தில் இந்தியா "தனது கவசத்தை கீழே போட முடியாது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி செப்டம்பர் 13 அன்று ஒரு இராணுவக் கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார். "சீனாவுடன் நட்புடனான உறவுகளை அபிவிருத்தி செய்ய நாம் விரும்புகிறோம்.... ஆயினும் சீனா தனது இராணுவ மற்றும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை நம் பார்வையில் படாமலில்லை. உண்மையில், சீன தரப்பில் ஒரு தன்முனைப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்திய மற்றும் சீன அரசாங்கங்கள் பின்னர் கில்ஜித்-பல்திஸ்தான் பிரச்சினையில் தொனியைத் தணித்து விட்ட அதே சமயத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தானின் ஊடகங்களில் அது தொடர்ந்து அதிர்வுற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை டானில் வெளிவந்த ஒரு கருத்து நியூயோர்க் டைம்ஸில் வந்த ஹாரிசன் கட்டுரையை கண்டனம் செய்தது. "கில்ஜித்-பல்திஸ்தான் விடயத்தில் இந்தியாவின் கதையை" கட்டுரையாளர் பற்றிக் கொண்டிருந்ததாய் அது அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் அயலுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங் புதனன்று வெளியானதொரு கருத்தில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஏராளமான சீன துருப்புகள் இருப்பது பற்றி எச்சரித்தார்: "இப்போது நிலம், நீர் மற்றும் கச்சாப் பொருட்களுக்காக பசியுடன் இருக்கும் சீனா தனது தசைகளை முறுக்குகிறது, இமாலயத்தின் காப்பரண்களில் ஊடுருவுகிறது, இந்தியாவுக்கு நேரடியாய் சவால் விடுகிறது" என்றார்.

இந்த தொடர்ந்த சர்ச்சையானது 1962ல் எல்லைச் சண்டையில் ஈடுபட்ட இரண்டு எழுச்சியுறும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான உரசலின் இன்னுமொரு அறிகுறி ஆகும். இப்போது அருணாச்சல பிரதேசம் என்னும் வடகிழக்கு இந்திய மாநிலமாக இருக்கும் பகுதியிலும் சீனா சுமார் 90000 சதுர கிமீ பரப்பிற்கு உரிமை கொண்டாடுகிறது; அதேபோல் வட மேற்கு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அருகேயுள்ள சீனாவின் அக்சாய் சின் பிராந்தியத்தில் 33,000 சதுர கிமீ பரப்பிற்கு தனது உரிமையை இந்தியா உறுதிபட தெரிவிக்கிறது. 1962ல் சீனப் படைகள் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துரிதமாய் முன்னேறின, பின் ஒரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பின் 1963ல் தானாகவே திரும்பப் பெறப்பட்டன.

தீர்வுக்கு வராத எல்லை உரிமைப் பிரச்சினை தொடர்ந்து உறவுகளில் மனக்கசப்பை அதிகப்படுத்தி வருகிறது. 2009 ஏப்ரலில் அருணாச்சலப் பிரதேசத்திற்கான ஒரு வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு இந்தியாவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கொடுக்கவிருந்த 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை தடுக்க சீனா முயன்றது. இறுதியில் ஜூன் மாதத்தில் இந்தியா இந்த கடனை பெற்று விட்டது, அமெரிக்கா ஜப்பான் ஆதரவுக்கிடையேயும் சீனாவின் எதிர்ப்பிற்கிடையேயும் தான் இது நிகழ்ந்தது என்பது வெளிப்படை. அத்துடன் 2009 ஜூன் மாதத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு அருகிலிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் டாங்கிகள் மற்றும் போர்விமானங்களுடன் 60,000 கூடுதல் துருப்புகளை நிறுத்தவிருப்பதாக இந்தியா அறிவித்தது, சீன ஊடகங்களில் இந்த நடவடிக்கை கோபமான பிரதிபலிப்பை தூண்டியது.

எல்லைப் பகுதிகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்குமே எளிதில் உணர்ச்சியூட்டக் கூடியவையாக இருக்கின்றன. திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிரான தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களுக்கு சீனா முகம் கொடுத்து வருகையில் திபெத்தை ஒட்டி அருணாச்சலப் பிரதேசம் உள்ளது. வட இந்தியாவில் தலாய் லாமா தலைமையில் நாடு கடந்த திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்திற்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதற்கு சீனா ஆட்சேபிக்கிறது. காஷ்மீர் மற்றும் அக்சாய் சின்னின் சர்ச்சைக்குரிய பகுதிகள் சின்சியாங் மாகாணத்தை அடுத்து உள்ளன, இந்த மாகாணத்தில் தான் சீனா ஒரு இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கத்துடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுடன் சீனா இணைந்து செயல்படுவதானது அந்த பகுதியில் இந்தியாவின் உரிமை கோரலை பலவீனப்படுத்துகிறது.

ஆகஸ்டு மாதத்தின் பிற்பகுதியில் இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளையகத் தளபதியான ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு நுழைவுஅனுமதி அளிக்க சீனா மறுத்தது. பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் ஜம்மு காஷ்மீர் என்னும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் பிறந்தார் என்பதே அதன் காரணம். சீனாவுக்கான ஒரு உயர் மட்ட இந்திய இராணுவ தூதுக் குழுவின் ஒரு பகுதியாக ஜஸ்வால் செல்லவிருந்தார். இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்பு பயிற்சிவகுப்பில் பங்கேற்கவிருந்த இரண்டு சீன அதிகாரிகளுக்கு இந்தியா அனுமதி மறுத்தது. இந்திய இராணுவம் நடத்தும் ஒரு கல்விநிறுவனத்தில் சீனத் தளபதி வழங்கவிருந்த ஒரு உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஏற்கனவே பதற்றமுற்று இருக்கும் சூழ்நிலையில் முக்கியமான ஸ்திரக்குலைப்பு காரணியாக இருப்பது அமெரிக்காவாகும். கடந்த தசாப்தத்தில் இந்தியாவுடன் நெருக்கமான ஒரு மூலோபாய உறவை அபிவிருத்தி செய்திருக்கும் அமெரிக்கா, ஆசியாவில் பெருகும் சீன செல்வாக்கை தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளது. கடந்த வருடத்தில், இந்தியா கூடுதல் தன்முனைப்பான நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவிக்கும் வண்ணம், ஒபாமா நிர்வாகமானது வட கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பல்வேறு பிரச்சினைகளிலும் சீனா மீதான நெருக்குதலை தீவிரப்படுத்தி வந்திருக்கிறது.

2008ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க-இந்திய உறவுகளில் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்தது. இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டிருக்கவில்லை, அத்துடன் அது அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கிறது என்ற போதிலும் தனது அணுமின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு கதவு திறந்தது. ஆனால் இதேவகையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு அணு உலைகளை கட்டுமானம் செய்து தரும் சீனாவின் திட்டங்களுக்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒரு போரை நிகழ்த்துவதற்கு பாகிஸ்தான் இராணுவத்தை அமெரிக்கா பெருமளவில் சார்ந்திருப்பது, தெற்காசிய உறவுகளை இன்னும் சிக்கலாக்குகிறது. பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கான அமெரிக்க ஆதரவு இந்தியாவில் அமெரிக்காவுடனான அதன் சொந்த மூலோபாய உறவின் வலிமை குறித்த கவலைகளை எழுப்பியிருக்கிறது. அதே சமயத்தில், பாகிஸ்தானுடனான சீனாவின் நீண்டகால உறவினை - குறிப்பாக காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியின் பதட்டம் நிரம்பிய எல்லைப் பகுதிகளில் - வெட்டிவிடுவதற்கான அமெரிககாவின் எந்த முயற்சிகளையும் இந்தியா ஓசையின்றி வரவேற்கும்.

கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியின் "உண்மையான கட்டுப்பாடு" சீனாவிடம் இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதன் மூலம் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையானது ஒரு பதற்றமான பிரச்சினையை பற்றவைத்துள்ளதோடு, இந்தியா பாகிஸ்தான் சீனா ஆகிய மூன்று அணுஆயுத நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலுக்குள் அமெரிக்காவைக் கொண்டு வரவும் அச்சுறுத்தியுள்ளது.