World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Howard Zinn, 1922-2010

ஹோவார்ட் ஷின், 1922-2010 A People’s History of the United States புத்தகத்தின் ஒரு மதிப்பாய்வு

By Tom Eley
15 February 2010

Back to screen version

ஒரு வரலாற்றாளரும், சமூக செயற்பாட்டாளரும், A People’s History of the United States நூலின் ஆசிரியருமான ஹோவார்ட் ஷின், அவருடைய 87வது வயதில் ஜனவரி 28இல் இயற்கை எய்தினார்.

1922ல், ஆலை-தொழிலாளர்களான புலம்பெயர்ந்த யூதப் பெற்றோர்களுக்கு (அவருடைய தந்தையார் ஆஸ்திரியா-ஹங்கேரியிலிருந்து வந்தவர்; தாயார் சைபீரியாவிலிருந்து வந்தவர்) மகனாக புரூக்லெனில், பெரும் மந்தநிலையின் (Great Depression) போது ஒழுங்கின்றிகிடந்த தொழிலாள வர்க்கத்தில் ஷின் பிறந்தார். குறிப்பாக, சோசலிசத்தின் தாக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பும் அந்த காலக்கட்டத்திலும், அந்த இடத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. தம்முடைய இளம் வயதிலேயே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டதையும், அங்கே தாம் ஒரு பொலிஸ்காரரால் தடியால் தாக்கப்பட்டதையும் ஷின் நினைவுகூர்ந்தார். அவருடைய தந்தை, அவருக்கு சார்லஸ் டெக்கென்ஸினுடைய ஒரு புத்தக தொகுதியை வாங்கி அளிப்பதற்கு முன்னால் வரையில், அவர் வெகுசில புத்தகங்களே வாசித்திருந்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு குண்டுவீசும் விமானத்தின் விமானவோட்டியாக ஷின் பணியாற்றினார். யுத்த முடிவில் தேவையற்ற ஒரு யுத்த நடவடிக்கையில் அவர் ஈடுபடுத்தப்பட்டு, அந்த நடவடிக்கையின் போது அவருடைய விமானம்―அது அப்போது தான் முதன்முறையாக இராணுவ பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது―பிரான்ஸை இலக்காக கொண்டு இரசாயன குண்டுகளைப் (napalm) பொழிந்த சம்பவத்தில் அவர் ஆழமாக தொந்தரவிற்கு உள்ளானார். அதில் ஜேர்மன் இராணுவ படையினரும், சுமார் 1,000 பிரெஞ்சுக் குடிமக்களும் கொல்லப்பட்டார்கள். அந்த யுத்தம் முடிந்த பின்னர், அவர் குண்டுவீசிய அந்த பகுதிக்குத் திரும்பிச் சென்று பார்த்ததை அவர் தம்முடைய The Politics of History புத்தகத்தில் எழுதியுள்ளார். எல்லா விதத்திலும், ஷின் மனிததன்மையோடு இருந்தார்.

1963இல் ஜோர்ஜியாவின் ஸ்பெல்மேனில் அனைத்து-கருப்பின மகளிர் பாடசாலையில் (all-black women’s school) பணியாற்றிய போது, மாணவர்களின் உள்நாட்டு உரிமைகளுக்காக போராடிய செயற்பாட்டாளர்களுக்கும், மாணவர் வன்முறையற்ற ஒருங்கிணைப்பு கழகத்திற்கும் (Student Non Violent Coordinating Committee - SNCC) அவர் அளித்த வெளிப்படையான ஆதரவு, அவரின் முதல் கல்வித்துறை பணியிலிருந்து அவரைப் பதவி நீக்கம் செய்யப்படும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. பின்னர் அவர் 1988இல் ஓய்வு பெறும் வரையில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பதவியில் இருந்தார்.

மேலும் ஷின் ஒரு குறிப்பிடத்தக்க வியட்நாம் யுத்த எதிர்ப்பாளராகவும் இருந்தார். 1968இல், ரெவிரெண்ட் டேனியல் பெர்ரிகனுடன் (Reverend Daniel Berrigan) ஹனாய்க்குச் சென்று பார்வையிட்ட அவர், மூன்று அமெரிக்க யுத்த கைதிகளின் விடுதலைக்கு உதவினார். 1971இல், “பெண்டகன் குறிப்புகள்" (Pentagon Papers) என்று அறியப்பட்டதன் ஒரு நகலை டேனியல் எல்ஸ்பெர்க் ஷின்னிடம் அளித்தார். ஷின் அவருடைய நீண்டகால கூட்டாளியான நியோம் சாம்ஸ்கியுடன் இணைந்து அதை தொகுத்து, பிரசுரிக்க வேண்டியிருந்தது.

ஒரு வரலாற்றாளராக ஷின்னின் பணி ஐந்து தசாப்தங்களுக்கு நீண்டிருந்தது. அதன் விளைவாக பல புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் பிரசுரமாயின. ஆனால் 1980இல் வெளியான அவரின் A People’s History of the United States புத்தகம் தான் அவரை பிரபலமான ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியது. பல்வேறு பதிப்புகளுடன் அந்த புத்தகம் 2 மில்லியன் நகல்களுக்கும் மேலாக விற்றிருக்கின்றன. அதை அடிப்படையாக கொண்ட ஒரு தொலைக்காட்சி ஆவணப்படமான “The People Speak,” 2009இல் ஒளிபரப்பானது. மாட் டேமன், மோர்கன் இஃப்ரீமேன், பாப் டெலன், மரிசா டோமி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் டேனி குளோவர் மற்றும் ஏனையவர்களின் சிறந்த நடிப்பும், வாசிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தன.

அந்த புத்தகத்தின் தாக்கத்தால், ஷின்னின் எந்த மதிப்பீடும், ஒரு வரலாற்றாளராக அவருடைய படைப்புகளின் மீது ஆழமான கவனிப்பைக் கொண்டு வந்துவிடுகிறது.

A People’s History புத்தகம் பல்வேறு காரணங்களுக்காக மிகவும் நேசிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அணுகும் முறையிலும், வெளிப்படையான மொழிநடையிலும், ஷின் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார மேற்தட்டின் ஆழமற்ற வெளிப்பாட்டையும், அனைத்துமே பெயரளவிற்கு உள்ள, அதன் உத்தியோகப்பூர்வ சொல்லாடலில் எழுதப்பட்டிருந்த அமெரிக்க வரலாற்று விஷயங்களையும் அறிமுகப்படுத்தினார்.

சுயநலத்தையும், “அரசியலமைப்பின்" கொடூரத்தையும் (இவ்வாறு தான் அவர் அதை அழைத்தார்) அவர் பாரபட்சமின்றி வெளிப்படுத்தி இருந்தார். அதேநேரத்தில், அமெரிக்க வரலாற்றில் ஒடுக்கப்பட்ட குழுக்களின்―அதாவது, தொழிலாளர்கள், ஏழைகள், பூர்வீக அமெரிக்கர்கள், ஆபிரிக்க அமெரிக்கர்கள், பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்களின்―மறைக்கப்பட்டிருந்த அரசியல் மற்றும் சமூக போராட்டங்களுக்கும் அதில் உயிர் கொடுத்து வெளியில் கொண்டு வருகிறார். வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அவருடைய இரக்கவுணர்வை ஷின் மறைக்கவில்லை. அவர் எழுதினார்: “இம்மாதிரியான ஒரு முரண்பட்ட உலகத்தில் - தண்டிப்பவர்கள் மற்றும் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள் இருக்கும் ஓர் உலகத்தில், ஆல்பர்ட் காமஸ் குறிப்பிட்டதைப் போல, தண்டிப்பவர்களின் பக்கம் இல்லாமல் இருப்பது தான் சிந்தனையாளர்களின் வேலை.”

A People’s History புத்தகம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஜனநாயக பாசாங்குகளில் வளர்ந்துவரும் ஐயுறவுவாதத்திலிருந்து (skepticism) வளர்த்தெடுக்கப்பட்டது; ஒரு வகையில்—குறிப்பாக இளைஞர் மத்தியில்—அதற்கு பங்களிப்பும் அளித்தது. ஷின்னின் படைப்பிலிருக்கும் இத்தகைய பண்புகள், கல்லூரி மற்றும் உயர் பாடசாலைகளின் பாடத்திட்டங்கள் இன்னும் இறுக்கமாக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் வெறுப்பை அவருக்குச் சம்பாதித்துத் தந்தது; பெருந்திரளான மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியமைக்காக, ஷின்னின் இறப்பிற்குப் பின்னர் எழுதப்பட்ட தலையங்கத்தில், வலதுசாரி முன்னாள் தீவிரப்போக்குடையவர்களான (ex-radicals) டேவிட் ஹோரோவிட்ஜ் மற்றும் ரோனால்ட் ரடோஷூம் அவரைத் தாக்கி எழுதினார்கள். உண்மையில், A People's History புத்தகத்தைப் படித்த எவரும், "வாஷிங்டன் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க விரும்பவில்லை" என்ற ஜனாதிபதி ஒபாமாவின் முறையீட்டையும் மற்றும் “சுதந்திரத்திற்கான ஒரு முறையான போராட்டத்திற்கு வாஷிங்டன் மதிப்பளிக்கும் என்ற அவரின் முறையீட்டையோ அல்லது வலதுசாரியின் பொருத்தமில்லாத மந்திரமான "உலக வரலாற்றில் அமெரிக்க இராணுவமே தலைச்சிறந்த படையாக இருக்கிறது" என்பதையோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

புத்தகத்தின் 23வது சிறிய அத்தியாயங்கள், 1492இல் கிறிஸ்தோபர் கொலம்பஸ் அமெரிக்காவில் வந்திறங்கியதிலிருந்தும், பூர்வீக அமெரிக்கர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களிலிருந்தும் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து காலவரிசைப்படி அமெரிக்க வரலாற்று விஷயங்கள் தொடர்கின்றன. பெரும்பாலும் குறிப்பாக இவை வெவ்வேறு சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. இவற்றில் காலக்கட்டத்தைச் சார்ந்து வரலாற்று விஷயங்களைப் பல்வேறு கோணங்களில் ஷின் அளிக்கிறார். ஆனாலும் இறுதியில், இதுவொரு வரம்புக்குட்பட்ட முறையாக, நாம் தொடர்ந்து எடுத்துக்காட்டவிருக்கும் ஒரு பிரச்சினையாக தான் இருக்கிறது. ஆனால் முக்கியமாக அனுபவவாத அணுகுமுறையில் இருக்கும்―அதாவது, மறைக்கப்பட்ட உண்மைகளை அல்லது மாற்று உண்மைகளை எடுத்துக்காட்டி இருப்பதன் மூலமாக உத்தியோகப்பூர்வ சொல்லாடலைத் தலைகீழாக ஆக்கியிருக்கும் அணுகுமுறையில்―ஷின்னின் பங்களிப்புகள் நிறைய படிப்பிக்க கூடியனவாக உள்ளன.

அவரின் இந்த அனுபவவாத பலம் (empirical strength) புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓடுகிறது. ஆனாலும் பெரும் கவனத்தோடு விஷயங்களோடு இணையும் அத்தியாயங்களும் உள்ளன. “ஒரு மக்கள் யுத்தம்" என்று - இரண்டாம் உலக யுத்தத்தை அவர் கையாளும்விதம், இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான தாராளவாத மற்றும் தீவிரத்தன்மை கொண்ட வரலாற்றாளர்களால் எது ஒரு "பாசிசத்திற்கு எதிரான யுத்தம்" என்று மேம்போக்காக அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதை கணக்கில் எடுத்திருப்பது ஓர் அரிய நேர்மையாக இருக்கிறது; அது கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது.

இந்த அத்தியாயம், முந்தைய தசாப்தங்களினூடாக வாஷிங்டனின் பல ஏகாதிபத்திய தலையீடுகளைப் பட்டியலிடுகிறது. மேலும் 1935இல் எதியோப்பியாவைச் சின்னாபின்னமாக்கிய பாசிச இத்தாலிக்கும் இதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும், அத்துடன் ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் பிரான்ஸ்கோ பிரான்கோவின் பாசிச துருப்புகளுக்குச் சார்பாக ஜேர்மனியின் மற்றும் இத்தாலியின் தலையீடுகளையும் சுட்டிக் காட்டுகிறது. ஷின் விளக்குகிறார்: இது, "பாசிசத்தை தடுத்துநிறுத்துவதற்கு மாறாக, தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்துப் போவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தின் தர்க்கரீதியிலான கொள்கையாக" இருந்தது. “அத்தகைய நலன்களுக்கு, முப்பதுகளில், ஒரு சோசலிச-எதிர்ப்பு கொள்கை சிறந்ததாக தெரிந்தது. பின்னர், ஜப்பானும், ஜேர்மனியும் அமெரிக்காவின் சர்வதேச நலன்களை அச்சுறுத்திய போது, சோவியத்திற்குச் சார்பான, நாஜி எதிர்ப்பு கொள்கை ஏற்புடையதாக ஆனது.”

இந்த கொள்கை வெளிப்பார்வைக்கு பாசிச-எதிர்ப்பாக காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் "யுத்தம் முடியும் போது, அந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளில் தங்கியிருந்த எல்லா வியாபாரங்களிலும், அமெரிக்காவின் பொருளாதார சக்தி இரண்டாவதாக ஊடுறுவி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, யுத்தங்கள் மற்றும் குண்டுவீச்சுக்களுக்குப் பின்னாலிருந்து, அமெரிக்க இராஜதந்திரிகளும், வர்த்தகர்களும் கடினமாக வேலை செய்தார்கள்.”

உள்நாட்டில், “பாசிசத்திற்கு எதிரான ஒரு யுத்தம்" என்ற பாசாங்குத்தனமானது ஆபிரிக்க அமெரிக்கர்களையும் (இந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் வடக்கில் வேலை மற்றும் வீட்டுவசதியில் பிரித்துப் பார்க்கப்பட்டார்கள்), ஜிம் கிரோவ் பிரிவினையையும் (Jim Crow segregation), தெற்கிலிருந்த பயங்கரவாதம் மற்றும் உரிமைபறிப்புகளையோ (disenfranchisement) விட்டுவிடவில்லை. அதுபோலவே, 110,000 ஜப்பானிய அமெரிக்கர்கள்―இவர்களில் பலர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையேச் சேர்ந்த குடிமக்கள்―சுற்றி வளைக்கப்பட்டு, ஜனாதிபதி பிரான்க்லின் ரோஸ்வெல்டின் உத்தரவின்பேரில் தடுப்புக்காவல் முகாம்களில் சிறை வைக்கப்பட்டார்கள்.

முக்கிய நினைவுகளிலிருந்து மறைக்கப்பட்ட இன்னும் எவ்வளவோ விஷயங்களில், யுத்தத்தின் போதிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் கடுமையான போராட்டங்களும் உள்ளடங்கும். “AFL மற்றும் CIOஇன் 'வேலைநிறுத்தம் வேண்டாம்' என்ற வலியுறுத்தல்களுக்கு இடையிலும், அங்கே 14,000 வேலைநிறுத்தங்கள் நடந்தன. ஓப்பீட்டளவில், அமெரிக்காவின் வரலாற்றில் வேறெந்த காலக்கட்டத்தையும் விட மிக அதிகமாக 6,770,000 தொழிலாளர்கள் அவற்றில் பங்கெடுத்தார்கள்,” என்று ஷின் எழுதினார். “1944இல் மட்டும், சுரங்கங்களிலும், எஃகு ஆலைகளிலும், வாகனத்துறை மற்றும் போக்குவரத்து சாதன தொழில்துறையில் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். யுத்தம் முடிவுற்ற போது, வேலைநிறுத்தங்கள் எண்ணிக்கையில் சாதனையளவில் தொடர்ந்தன―1946இன் முதல் பாதியில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்."

வேலைநிறுத்த அலைகளுக்கு இடையில், “எந்த ஆதாரங்களிடமிருந்தும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய எதிர்ப்பு கூட இருக்கவில்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார். “கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் உற்சாகமாக ஆதரவளித்தது... ஒரேயொரு ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிச குழு மட்டும் தான் யுத்தத்தை மிக தெளிவாக எதிர்த்தது. அது தான் சோசலிச தொழிலாளர்கள் கட்சி. 'அரசாங்கத்தைத் தூக்கியெறிய வேண்டும்' என்று கூறிய எந்த குழுவுடனும் சேர்வது சட்டப்படி குற்றமாகும் என்று அறிவித்திருந்த, ஸ்மித் சட்டத்தை மீறியமைக்காக, 1943இல் மினியாபொலிஸில் கட்சியின் பதினெட்டு உறுப்பினர்கள் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.” அந்த காலக்கட்டத்தில் சோசலிச தொழிலாளர்கள் கட்சி அமெரிக்காவின் ட்ரொட்ஸ்கிச இயக்கமாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனினால் ஜேர்மனி மற்றும் ஜப்பானிய மக்கள் முகாம்கள் (population centers) மீது நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவீச்சைக் குறித்து தொடர்ந்து வந்த அத்தியாயத்தில் ஷின் எழுதுகிறார்; சந்தேகத்திற்கிடமின்றி ஐரோப்பாவில் ஒரு குண்டுவீசும் விமானத்தின் விமானவோட்டியாக இருந்த அவருடைய அனுபவம் இந்த பக்கங்களில் உணர்வுகளைக் குவித்துள்ளது. உத்தியோகபூர்வ புராணத்தில், 'அவசியப்பட்ட இராணுவ நடவடிக்கைகள்' என்று புனிதமாக்கப்பட்டிருக்கும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலையும் ஷின் வெளிப்படுத்துகிறார். உண்மையில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைச் சாம்பலாக்கிய மற்றும் கொன்று குவித்த அந்த தீர்மானம், யுத்தத்திற்குப் பின்னர் திட்டமிடப்பட்டிருந்த அமைப்புமுறையை நோக்கிய ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்பட்டது. கொரிய தீபகற்பத்திற்குள் செம்படை நெருங்கி சென்றுவிடுவதற்கு முன்னரே, ஜப்பானை விரைவாக சரணடையச் செய்வதன் மூலமாக, கிழக்கு ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று இட்ரூமேன் நிர்வாகம் நம்பியது.

அந்த "நல்யுத்தம்" (the Good War) என்பதில், அமெரிக்காவின் வெற்றியால் உருவாக்கப்பட்ட ஆரம்பகால பனிப்போர் மற்றும் செம்பயம் (Red Scare) ஆகியவற்றைப் பற்றிய ஒரு விவாதத்துடன் அத்தியாயத்தை முடிப்பதற்காக ஷின்னைப் பாராட்டியே ஆக வேண்டும். யுத்தத்திற்குப் பின்னர், அமெரிக்க தாராளவாதம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சுற்றி சேர்ந்த அதன் தீவிர நேச நாடுகளின் பக்கம் திரும்பியது. "இராணுவ நிதி ஒதுக்கீட்டைக் கூர்மையாக அதிகரிக்க கூடிய, அத்துடன் யுத்தம் தொடர்பான உத்தரவுகளுடன் பொருளாதாரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய ஒரு பய சூழலை—கம்யூனிசத்தைக் குறித்த ஒரு கட்டுப்படுத்த முடியாத பயத்தை—இட்ரூமேன் நிர்வாகம் உருவாக்கியது.” என்ன தேவைப்பட்டதென்றால், "கன்சர்வேடிவ்களாலும் மற்றும் உள்நாட்டில் தாராளவாதிகளுக்கு சாதகமான நலவாழ்வு திட்டங்களை அளிப்பவர்களாலும் ஆதரிக்கப்பட்ட ஒரு தீவிர வெளிநாட்டு கொள்கையை உடைய ஒரு தாராளவாத ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த உடன்படிக்கை தான் தேவைப்பட்டது.”

வியட்நாம் குறித்த ஷின்னின் அத்தியாயமான “The Impossible Victory,” வாசிப்புக்கு ஊக்கமளிக்கிறது. வெறும் பத்து பக்கங்களில், பிரான்ஸிற்கு எதிராகவும், இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானுக்கு எதிராகவும், பின்னர் மீண்டும் பிரான்ஸிற்கும் மற்றும் இறுதியாக அமெரிக்காவிற்கு எதிராகவும் சுதந்திரத்திற்காக போராடிய வியட்நாமின் நீண்டகால போராட்ட வரலாறு குறித்து அவர் ஒரு சிறந்த பார்வையை அளிக்கிறார். புள்ளிவிபரங்களுடனும் நன்கு புலப்படக்கூடிய விளக்கங்களுடனும், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துக்காட்டுகிறார். “யுத்த முடிவின் வாக்கில், தென்கிழக்கு ஆசியாவின் மீது ஏழு மில்லியன் டன் குண்டுகள் வீசப்பட்டிருந்தன.” இது இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரண்டின் மீதும் பயன்படுத்தப்பட்டிருந்த "அளவைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்”. My Lai படுகொலை, இரசாயன குண்டுகள் (napalm), போனிக்ஸ் நடவடிக்கை (operation Phoenix) என்றழைக்கப்பட்ட அமெரிக்க படுகொலை நடவடிக்கை, மற்றும் ஏனையபிற கொடூரங்களை ஷின் எடுத்துக்காட்டும் விதம், 'வியட்நாம் மக்களைப் பாதுகாக்கவே அமெரிக்க இராணுவம் அங்கே இருந்தது' என்ற வாஷிங்டனின் முறையீட்டைக் குற்றஞ்சாட்டிக் கொண்டது. அந்த அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி, வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிற்குள்ளேயே கல்வி வளாகங்களிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும், மற்றும் இராணுவத்திலேயே கூட வளர்ந்து வந்த பெருந்திரளான எதிர்ப்பின் மீது கவனம் செலுத்துகிறது.

புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கே கவனிப்பது சாத்தியமல்ல. ஆனால் பொதுவாக, அது உள்நாட்டு யுத்தத்திற்கு பிந்தைய மறுகட்டமைப்பின் இறுதியிலிருந்து வியட்நாம் யுத்தத்தின் இறுதி வரையிலான நூற்றாண்டில் நடந்தவைகளை வலுவாகவும், அனுபவச் செறிவோடும் கொண்டு வந்துவிடுகிறது.

முதலாம் உலக யுத்தம் (“யுத்தம் தான் அரசின் ஆரோக்கியம்”) குறித்து ஷின் எழுதுகையில், யுத்த நடவடிக்கை மீதான பித்தத்தைத் தெளிவாக விவரித்திருப்பதுடன், அமெரிக்க நுழைவிற்கு பெருந்திரளான மக்களின் எதிர்ப்பையும் மற்றும் அதை தடுப்பதற்கான முழுவீச்சுடனான முயற்சிகளையும் விளக்கியுள்ளார். ஸ்பானிஷ்-அமெரிக்க யுத்தத்தில் ஏகாதிபத்தியத்தின் மீதான அமெரிக்காவின் பேராசையைக் குறித்த அவருடைய அத்தியாயம், அமெரிக்க முதலாளித்துவத்தின் சந்தைகளுக்கான ஒரு போராட்டமாக இருக்கும் உந்துதலைச் சரியாக குறிப்பிட்டுக் காட்டுகிறது. அவருடைய புள்ளிகளை விவரிக்க பொருத்தமான இடங்களில் பயனுள்ள மேற்கோள்களுக்குத் திரும்பும் ஷின், இங்கே ஸ்பானிய தோல்விக்குப் பின்னர் பிலிப்பைன்ஸை அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க முயற்சிகள் குறித்த மார்க் இட்வைனின் கருத்துக்களை அளிக்கிறார்: “சில ஆயிரக்கணக்கான தீவு கூட்டத்தினரை நாம் சமாதானப்படுத்தி, அவர்களைச் சமாதியாக்கி இருக்கிறோம்; அவர்களின் உழவு நிலங்களை அழித்திருக்கிறோம்; அவர்களின் கிராமங்களை எரித்திருக்கிறோம். அவர்களை விதவைகளாகவும், வீடற்ற அனாதைகளாகவும் ஆக்கி இருக்கிறோம். ஆகவே, இத்தகைய கடவுளின் அருளால்—இந்த வார்த்தை அரசாங்கத்தினுடையது, என்னுடையதல்ல—நாம் ஓர் சர்வதேச சக்தியாக உருவாகியுள்ளோம்.”

“The Socialist Challenge” என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில் ஷின், சோசலிசத்தை முற்போக்குவாத சகாப்தத்தின் மையத்தில்—அதாவது ஏறக்குறைய 1900இல் இருந்து 1917வரையிலான சகாப்தத்தில்—மிகச் சரியாக கொண்டு வந்து நிறுத்துகிறார். ஷின் குறிப்பிடுவது போல, சோசலிசத்திலிருந்து முற்போக்குத்தன்மை விலகி இருந்ததை அது புரிந்து கொண்டிருந்ததாக தெரிந்தது. அந்த அத்தியாயத்தில், 1909இல் நியூயோர்க்கில் நடந்த தொழிலாளர்களின் மிகப்பெரிய ஆயத்த ஆடை போராட்டம்—அதன்பின்னர் Triangle ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து—சர்வதேச தொழில்துறை தொழிலாளர்களின் (IWW) லாரன்ஸ், மாசாசூசெட்ஸ் ஜவுளித்துறை போராட்டம் மற்றும் 1914இல் கொலொராடோவில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் லூட்லோ படுகொலை ஆகியவற்றையும் சுருக்கமாக உள்ளே சேர்க்கிறார்.

19ம் நூற்றாண்டில் நடந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களைக் குறித்த “Robber Barons and Rebels” and “The Other Civil War” ஆகிய இரண்டு அத்தியாயங்களும், இன்றைய தொழிலாளர் வர்க்கத்தின் பூர்வீக சொத்தாக இருந்துவரும் சமத்துவவாதத்தின் (egalitarianism) செறிவார்ந்த வரலாற்றின் எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகின்றன. கான்சாஸ் வெகுஜனவாதியான மேரி எல்லென் லீஸிடமிருந்து ஒரு 1890ஆம் ஆண்டு மேற்கோளைத் தேர்ந்தெடுத்திருக்கும் ஷின்னின் தேர்வு, சரியாக இடத்திற்குப் பொருந்துவதாக இருக்கிறது: “வோல் ஸ்ட்ரீட் நாட்டை சொந்தமாக்கி கொண்டிருக்கிறது. இது இனியும் மக்களின் ஒரு நாடாக, மக்களால் நடத்தப்படும் ஒரு நாடாக, மக்களுக்கான ஒரு நாடாக இல்லை. மாறாக வோல் ஸ்ட்ரீட்டின் ஓர் அரசாங்கமாக, வோல் ஸ்ட்ரீட்டால் நடத்தப்படும் ஓர் அரசாங்கமாக, வோல் ஸ்ட்ரீட்டிற்காக நடத்தப்படும் ஓர் அரசாங்கமாக இருக்கிறது... நம்மைக் காவல் காத்துவரும் பண வேட்கைப் பிடித்த வேட்டைநாய்கள் மக்களைப் பார்த்து குரைத்து கொண்டிருக்கின்றன; அவைகளிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

இருந்தபோதினும், சாதாரண பாடப்புத்தகத்தைப் போன்று எழுதப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் உதவியாக இருக்கும். ஷின்னின் படைப்பு அமெரிக்க வரலாறை ஆரம்பநிலையில் புரிந்து கொள்வதற்கு மட்டும் தான் உதவ முடியும். A People’s History புத்தகத்தில் ஒரு வரலாற்றுரீதியான பின்னிழை இருந்த போதினும், சந்தேகத்திற்கு இடமின்றி காலவரிசைக்கு முரண்பாடானவையும் இருக்கின்றன. அது ஒரு கருவுருவைக் (theme) கொண்டிருக்கிறதென்றால், ஷின்னின் விருப்பமான இரண்டு வார்த்தைகளான, “எதிர்ப்புக்கும்" “கட்டுப்பாட்டுக்கும்" இடையிலான ஒரு முடிவில்லாத நேருக்குநேர் மோதலாக அது இருக்கிறது. ஒருபுறம், அவருடைய வரலாற்று நிலையைப் பிரபலப்படுத்தும் வகையில், இந்த கட்டுப்பாட்டைத் தக்கவைக்கும் "நிர்வாக அமைப்பு" வில்லன்களின் தொடர்ச்சியான ஒரு மறைமுக போக்கு இருக்கிறது. மறுபுறம், பெரும்பாலும் தங்களின் சொந்த வாக்குறுதிக்கு எதிராகவே நிற்கும் நாடோடி கூட்டங்கள் (benighted groups) இருக்கின்றன. பெயர்களும், தேதிகளும் மாறுகின்றன; ஆனால் கதை மாறுவதேயில்லை.

சிக்கலும், முரண்பாடும் இதுபோன்றவொரு சூழலிலேயே சௌகரியமாக தங்கி இருந்துவிடுவதில்லை. இந்த அணுகுமுறையில் இருக்கும் குறைபாடுகள், அமெரிக்க புரட்சியையும், அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தையும் குறித்து ஷின் கையாண்டிருப்பதில் மிக தெளிவாக இருக்கின்றன. மேற்தட்டுக்கள் அவற்றின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த மக்களை எவ்வாறு தவறாக இட்டுச்செல்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக அவர் அவற்றை எடுத்துக்காட்டுகிறார்.

“1776 வாக்கில், ஆங்கில காலனி நாடுகளில் இருந்த சில குறிப்பட்ட முக்கிய நபர்கள், அதற்கடுத்த இருநூறு ஆண்டுகளுக்குப் பெரும் பயனை அளிக்கக்கூடிய ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்,” என்று அமெரிக்க புரட்சியைக் குறித்து தமது முதல் இரண்டு அத்தியாயங்களைத் தொடங்குகிறார். “அமெரிக்கா என்றழைக்கப்படும் ஒரு தேசத்தை, ஓர் அடையாளத்தை, ஒரு சட்டப்பூர்வ ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலமாக, பிரிட்டிஷ் பேரரசின் கைகளிலிருந்து நிலத்தையும், இலாபத்தையும், அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் கண்டார்கள்... நவீன காலக்கட்டத்தில் திட்டமிடப்பட்ட மிக துல்லியமான தேசிய கட்டுப்பாட்டு அமைப்பையும் அவர்கள் உருவாக்கினார்கள்.”

உள்நாட்டு யுத்தத்தையும் அதே வகையில் ஷின் எடுத்துக்காட்டுகிறார். அடிமைகளின் ஓர் எதிரெழுச்சி அல்லது ஒரு முழு-அளவிலான யுத்தம் மட்டும் தான் அடிமைமுறையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்று அவர் எழுதினார்: “ஓர் எதிரெழுச்சியென்றால், அது கையை மீறி சென்றுவிடக்கூடும் என்பதுடன், உலகின் முதலாளித்துவ செல்வசெழிப்பின் மிக வெற்றிகரமான அமைப்புமுறைக்கு, அது அடிமைமுறைக்குப் பின்னால் இருக்கும் அதன் சீற்றத்தையும் வெளிப்படுத்திக் காட்டும். ஒரு யுத்தமென்றால், அந்த யுத்தத்தை ஏற்படுத்தியவர்களே அதன் விளைவுகளையும் அனுபவிப்பார்கள்.” (உண்மையில், உள்நாட்டு யுத்தமே ஒரு முழு-அளவிலான யுத்தமாகவும், ஓர் அடிமைமுறையின் எதிரெழுச்சியாகவும் இரண்டுமாகவும் மாறும்.) “அரசாங்க உத்தரவால் இல்லாதொழிக்கப்பட்ட அடிமைமுறையுடன், எந்தளவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற வரம்பும் அதன் முடிவில் இணைந்திருக்கும்,” என்று வலியுறுத்தினார். இது ஆப்ரகாம் லிங்கனைத் தவிர வேறு யாரையும் குறிப்பிடவில்லை. ஷின்னின் வெளிப்படுத்தலில் இருக்கும் அவர், "துல்லியமாக வியாபார தேவைகள், புதிய குடியரசு கட்சி, மற்றும் மனிதநேயவாதத்தின் (humanitarianism) கலவையாக ஓர் ஆரவார அரசியல் காரியதாரியாக இருந்தார்.”

அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த இரண்டு முக்கிய முற்போக்கான நிகழ்வுகளை இது ஆழமான அகநிலை வெளிப்பாடுகளாக காட்டியிருக்கிறது. வரலாற்றில் தனிநபர்களின் மற்றும் குழுக்களின் உந்துசக்திகளுக்குப் பின்னால் எம்மாதிரியான வரலாற்றுரீதியிலான சக்திகள் தங்கியிருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாத ஓர் அணுகுமுறையான “பழைய சடவாத" மெய்யியலைக் குறித்து பிரெடரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்ட, "இந்த நடிகர்களின் மூளைகளில் இருக்கும் இந்த உந்துசக்திகளுக்குள்ளே, வரலாற்றுரீதியிலான சக்திகள் தம்மைத்தாமே மாற்றிக் கொள்கின்றன” என்ற கருத்துக்களை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

“பழைய சடவாதம் இந்த கேள்வியை ஒருபோதும் தனக்குத்தானே கேட்டுக்கொண்டதில்லை,” ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். “இதுவரையில் முற்றிலும் ஒரேமாதிரியாக இருக்கும் அதன் வரலாற்றுக் கருத்து, இவ்வகையில் முக்கியமாக நடைமுறைவாதமாக இருக்கிறது; வரலாற்றில் மேதமையோடு பாத்திரமேற்பவர்களையும் அல்லது கீழ்தரமாக பாத்திரமேற்கும் மனிதர்களையும் அது பிரிக்கிறது. பின்னர் மேதைகள் ஏமாற்றப்படுகிறார்கள், கீழ்தரமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அது ஒரு விதியாக காண்கிறது.” சுருக்கமாக கூறுவதானால், ஹோவர்டு ஷின்னின் ஆய்வைக் கொண்டு போகும் முறையும் இவ்வாறே உள்ளது.

வரலாற்றில் உந்துசக்திகளின் மூலவேரைக் குறித்த அவரின் தேடலில், சில இடங்களில் ஷின் அறநெறியாக்கலில் (moralizing) சிதைந்து போனார். அமெரிக்க புரட்சியைக் குறித்து எழுதுகையில்— குணாதிசயப்படுத்தல் குறித்து அவர் மறுத்தார். "சாத்தியப்படாத அறநெறி சுமைகளைத் தாம் அந்த காலக்கட்டத்தின் மீது திணிக்கப் போவதில்லை" என்று அவர் கூறினார். ஆனால் மிக முற்போக்கான புரட்சியாளர்கள் விஷயத்திலும் கூட, இதைத் தான் மிக துல்லியமாக அவர் செய்தார்.

காலனித்துவ நாடுகளைக் குறித்த டாம் பெயினின் எழுத்துக்களின் பலச்சுற்று விவாதத்திற்குப் பின்னர், பெயின் காலனிய மேற்தட்டோடு மிகவும் தொடர்புபட்டிருந்தார் என்று ஷின் தீர்மானிக்கிறார். “அவர் அடிமட்ட மக்களின் கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கவில்லை,” ஏனென்றால் "பெல்சில்வேனியாவில் செல்வவளம் மிக்கவர்களில் ஒருவருக்கு பெயின் கூட்டாளி ஆகியிருந்தார். அத்துடன் மோரிஸின் உருவாக்கமான Bank of North Americaஇன் ஆதரவாளராகவும் இருந்தார்" என்று ஷின் குற்றஞ்சாட்டுகிறார். "புரட்சியைக் குறித்த கட்டுக்கதைகளுக்குப் பெயின் முற்றிலுமாக தன்னைத்தானே விட்டுக்கொடுத்தார்—அதுவும் ஓர் ஐக்கியப்பட்ட மக்களின் சார்பாக அதை செய்தார்,” என்பது அந்த சகாப்தத்தின் தலைச்சிறந்த புரட்சியாளர்களில் ஒருவரின் மீதான ஷின்னின் தீர்மானமாக இருக்கிறது. தாமஸ் ஜெஃபர்சனைப் பொறுத்த வரையில், அவர் அடிமைகளை விலைக்கு வாங்கினார் என்ற இரண்டு நிகழ்வுகளின் மீது ஷின் தமது மறுப்பை மேற்கோளிட்டுக் காட்டி இருந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், லிங்கனையோ அல்லது ஜெஃபர்சனையோ சுற்றியிருந்த கட்டுக்கதைகள் மீதான விமர்சனம் ஒருவேளை பயனுள்ளதாக இருந்திருக்கலாம். லிரோன் பென்னெட் போன்ற தலைச்சிறந்த மேதைகளால் அறநெறிகள் மீதான பல தசாப்த தாக்குதல்களுக்குப் பின்னர், இன்று இதுபோன்ற வரிகள் மிகவும் சலிப்பாக தெரிகின்றன. ஒரு வரலாற்றாளர் வேறெதையும் செய்யவில்லை என்றாலும், அந்த ஆணோ அல்லது பெண்ணோ அவர்களின் கருத்துக்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்தன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, உள்நாட்டு யுத்தத்தையும், அமெரிக்க புரட்சியையும் பொறுத்த வரையில், ஷின்னின் காலக்குளறுபடியானது (anachronism) அந்த போராட்டங்களின் முற்போக்கான பாத்திரத்தைக் குறைத்து வரலாற்று நிஜத்தைத் திரித்துவிட்டது.

வரலாற்றாளர் பெர்னார்டு பெய்ல்னையும், ஜோர்டன் உட்டையும் குறித்த வேலைகள் குறிப்பிடத்தக்க மதிப்புடையன. பெய்ல்ன், அவருடைய Ideological Origins of the American Revolutionஇல், காலனிய நாடுகளில் பொதுவாக வாசிக்கப்பட்ட அரசியல் பிரச்சாரங்களில் செய்த பகுப்பாய்வின் மூலமாக, புரட்சியாளர்களின் சிந்தனைகள் தீவிரமாகவும், முற்போக்காகவும் இருந்தன என்பதையும், இறுதியில் அவை அறிவொளி சிந்தனையின் ஒரு நூற்றாண்டில் வேரூன்றி இருந்தன என்பதையும் வெளிப்படுத்திக் காட்டினார்.

The Radicalism of the American Revolution (1992) என்பதில் உட் குறிப்பிடுவதானது, சுதந்திரத்திற்கான யுத்தம் "மொத்தத்தில் ஒரு புரட்சியாக இருக்கவில்லை" என்ற ஷின்னின் ஒருவகையான வாதத்தையே எடுத்துக்காட்டுவதாக தெரிகிறது. “அது உலகம் அறிந்திருக்கும் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்று, அத்துடன் அமெரிக்க வரலாற்றில் மிக தீவிரத்தன்மை உடையதும், பரந்துவிரிந்த நிகழ்வுமாகும்” என்று உட் எழுதுகிறார். புரட்சியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சமூக சக்திகளை ஏற்றுக்கொண்டிருந்த ஸ்தாபக தந்தைகள் (Founding Fathers), அரசியலமைப்பைக் கொண்டு ஜனநாயகத்தை உள்ளடக்க விரும்பினார்கள் என்பதை உட் ஒப்புக் கொள்கிறார். ஆனால் சமூக நனவிற்குள் பரந்தளவில் ஊடுருவியிருந்த புரட்சியின் தீவிரத்தன்மையை இந்த முயற்சி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடவில்லை என்பதையும் உட் எடுத்துக்காட்டுகிறார்.

தூண்டுதலை ஏற்படுத்த உதவிய பிரெஞ்சுப் புரட்சியைப் போன்றே, அமெரிக்க புரட்சியும் பெரியளவில் வரலாற்று முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியது. அது எழுச்சிமிக்க மொழியில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியது; ஆனால் சுதந்திர பிரகடனத்திலும் (Declaration of Independence), உரிமைகள் சாசனத்திலும் (Bill of Rights) அவற்றை கைவிட்டுவிட்டது. அது ஆட்சி செய்வதற்கான அரசரின் புனித உரிமையை மறுத்து, மணிமுடிக்கு ஆதாயமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்திகளின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தூக்கி வீசியது.

புரட்சியால் எழுப்பப்பட்ட முரண்பாடுகளை இதுவரை அதனால் தீர்க்க முடியவில்லை—அடிமைமுறையைத் தக்கவைத்துக் கொண்டே, சுதந்திரத்திற்கான அதன் பிரகடனங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கின்றன—இந்த சாதனைகளை அழிக்கவும் முடியவில்லை. உண்மையில் புதிய ஆளும் வர்க்கம் (இதை ஓர் ஒட்டுமொத்த வலிமையாக எடுத்துக்காட்ட இதற்கு தான் ஷின் வளைந்துகொடுத்தார்) அடிமைமுறை குறித்தும், பிரிட்டனை நோக்கி இருந்த பொருளாதார கொள்கையைக் குறித்தும் ஆழமாக பிளவுப்பட்டிருந்தது. உள்நாட்டு யுத்தம் இத்தகைய முரண்பாடுகளைத் தீர்த்து, தொழிலாளர் வர்க்கத்திற்கும், முன்னொருபோதும் இல்லாத வகையில் அமெரிக்க வரலாற்றின் அச்சாணியாக இருந்த முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்ததன் மூலமாக, அதனிடத்தில் புதியவைகளைக் கொண்டு வந்து நிறுத்தியது.

ஏனைய மிகப்பெரிய முற்போக்கான விளைவுகளைப் போன்றே, அமெரிக்க புரட்சியானது—அடிமைமுறைக்கு (slavery) எதிரான போராட்டம் உட்பட—அதைத் தொடர்ந்து வந்த முற்போக்கான போராட்டங்களைத் தூண்டிவிட்டதன் மூலமாகவும், அவற்றிற்கு உயிரூட்டியதன் மூலமாகவும் அதன் காலக்கட்டத்தால் அதன்மீது திணிக்கப்பட்ட வரம்புகளைக் குறிப்பிட்ட மட்டத்திற்கு ஊடுறுவிச் சென்றுள்ளது. ஓர் உதாரணத்தைக் குறிப்பிட வேண்டுமானால், வியாட்நாமிய ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்கள் அவர்களின் சொந்த சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தார்கள்; அது குறித்து ஜெஃபர்சனும் எழுதியுள்ளார் என்று ஷின்னே கூட குறிப்பிட்டார்.

எழுச்சிமிக்க சமூக வர்க்க போராட்டங்களின் மூலமாகவும், பொருளாதார உற்பத்தியின் சமூக உறவுகளில் வேரூன்றிய ஒரு போராட்டத்தினூடாகவுமே வரலாறு முன்னேறிச் செல்கிறது என்று விளக்கும் மார்க்சியத்தோடு, ஷின்னின் அணுகுமுறை சற்றும் மார்க்சியத்தோடு தொடர்புபட்டதல்ல என்பதை தெளிவாக குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும், இது மேன்மை பொருந்திய ஒரு படைப்பின் மதிப்பைப் புறக்கணித்துவிடவில்லை. ஒரு வரலாற்றாளராக ஷின்னின் வரம்புகள் மீது, அவருடைய அரசியல் கண்ணோட்டங்களுக்காக சிறிது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவை அமெரிக்க தீவிரபோக்கு வாத (radicalism) பாரம்பரியத்திலிருந்து முளைத்தெழுந்தவை. அவரே அறிவித்ததைப் போல, அந்த இரண்டும் பரஸ்பரம் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

ஷின் அவருடைய தகவல்களை அவரின் சொந்த ஆராய்ச்சியிலிருந்து எடுத்துவரவில்லை. மாறாக, அமெரிக்க கல்லூரி வளாகங்களில் தீவிரப் போக்குத்தன்மை கொண்டவர்கள் (radicals) நுழைந்த ஒரு காலக்கட்டத்தின் போது, “சீர்திருத்த" மேதைமையுடன் வளர்ந்து கொண்டிருந்த அமைப்புகளிலிருந்து அவற்றை எடுத்தாள்கிறார். 1960களின் பிற்பகுதியின் தொடக்கத்தில், கல்வித்துறையில் புதிய நாட்டங்கள் (pursuits) தோன்றின: அதாவது, அரசியல், இராஜாங்கம் மற்றும் தொழில்துறை வரலாற்றைக் குறித்த ஆழமான திருத்தல்வாத (revisionist) ஆய்வுகளும், ஆபிரிக்க அமெரிக்க வரலாறு, பெண்கள் வரலாறு, பூர்வீக அமெரிக்க வரலாறு போன்றவைகளும், இன்னும் ஏனையவைகளும் தோன்றின. இந்த அணுகுமுறை—அதாவது, நிர்வாகஅமைப்பு வரலாற்றைப் (establishment history) பற்றிய விமர்சனம் மற்றும் எழுத்துப்பூர்வ ஆவணங்களைச் சிறிதளவில் விட்டுவிட்டிருந்த அல்லது ஒன்றுமே இல்லாமலிருந்த ஒடுக்கப்பட்டவர்களின் சமூக வரலாற்றைக் குறித்த வெளிப்பாடு—புதிதாக இருந்தது என்பதுடன், குறைந்தபட்சம் அதன் ஆரம்ப நிலைகளில், கணிசமான விளைவுகளையும் ஏற்படுத்தியது.

பின்னர், 1980களின் தொடக்கத்தில், சீர்திருத்தவாத வரலாறும் (revisionist history), கல்வி வளாக தீவிரமயமாக்கலும் அடையாள அரசியல் (identity politics) மற்றும் பின்நவீனத்துவத்தின் பொதுவான பிற்போக்கு திட்டங்களுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட நச்சாவியில் (miasma) அதிகளவில் மாட்டிக் கொண்டன. அந்த நேரத்தில், அணுகுமுறையின் அஸ்திவாரத்தில் இருந்த பலவீனமும், அரசியல் குழப்பமும், அங்கிருந்து தொடங்கி, மிகவும் தெளிவாக வெளிப்பட்டது. ஆகவே, 1960கள் மற்றும் 1970களில் இருந்த சீர்திருத்தவாத மேதமையின் (revisionist scholarship) ஒரு தொகுப்பாக விளங்கும் A People's History புத்தகம் அதன் பங்களிப்பையும், அத்துடன் அதன் குறைபாடுகளையும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

அமெரிக்க தாராளவாதமும், தொழிற்சங்கவாதமும் (Unionism) மற்றும் ஜனநாயக கட்சியும் அவற்றின் கொள்கைகளுக்காக தொழிலாளர் வர்க்கத்திற்கு வெளியே ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க விரும்பிய நிலையில், அடையாள அரசியலின் தோற்றம் மற்றும் கல்வி வளாகங்களுக்குள் புகழாரங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு உடனிகழ்வாக புதிய ஆய்வுகள் அபிவிருத்தி அடைந்தன என்பது ஏதோ தன்னிச்சையாக அதற்கு பொருத்தமாக நடந்துவிடவில்லை. புதிய கல்வித்துறை வரலாறு அந்த அரசியல் அபிவிருத்திக்கு உதவியது; அதற்கு கைமாறாக, அரசியல் அபிவிருத்தியால் அது ஊட்டி வளர்க்கப்பட்டு கொண்டிருந்தது. உண்மையில், மிக மேம்போக்கான வரலாற்று ஆய்வுகள், கடந்தகாலத்தின் ஒடுக்கப்பட்ட குழுக்களை வெறுமனே 1970களில் தோன்றிய பல்வேறு "தன்நலக் குழுக்களின்" (interest groups) மாற்றுகளாக (transpositions) அவற்றை எடுத்துக்காட்டுகின்றன. புதிய வரலாறானது, அரசியல் பொருளாதாரத்தையும், அரசியலையும் மேலோட்டமாக கையாண்டன—அல்லது கையாளவே இல்லை—அது ஒடுக்கப்பட்ட குழுக்களின் "முகமைகளை" வரலாற்று நிகழ்முறையிலிருந்து சுயாதீனமானவையாக காட்ட முயன்றன அல்லது அவற்றை தனிமனித ஆர்வத்தாலோ அல்லது நீதிநெறியின் தேர்வாகவோ அறிமுகப்படுத்தியது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதை மனதில் கொண்டு, வரலாற்றாளர் ஷின்னுக்கும் அரசியல் விமர்சகர் ஷின்னுக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாடுகளை எதிர்ப்பது ஒருவகையில் சுலபமாக இருக்கிறது. இந்த அரசியல் விமர்சகர் ஷின் தான் Nation மற்றும் Progressive இதழ்களில் அடிக்கடி எழுதியவர். மேலும் இவருடைய கண்ணோட்டங்கள் தான் தீவிர வட்டாரங்களில் மிகவும் விரும்பப்பட்டது.

ஒரு வரலாற்றாளராக, “இந்த அமைப்புமுறையில்" எதையுமே முற்போக்காக அவர் காணவில்லை. “எதிர்ப்பெழுச்சிமிக்க ஒரு காலக்கட்டத்தில், ஒரு கட்சியானது மிகுந்த கட்டுப்பாட்டு நிலையில் இருந்தால் சற்றே கூடுதலாக ஜனநாயகதன்மையோடு இருக்கும் மற்றொன்றைத் தேர்ந்தெடுக்க வசதியாக, இரண்டு வெவ்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்க இரு-கட்சி அமைப்புமுறை அவர்களை அனுமதிக்கிறது," என்று ஷின் எழுதினார். "பல ஆண்டு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னரும் கூட, அமைப்புமுறையைத் தக்கவைப்பதற்கான வழிகள் தான் தேர்தல்கள்" என்று ஷின் எழுதினார். எவ்வித மாற்றமில்லாமல் ஷின் சீர்திருத்தங்களைக் கருவிகளாகவும், அதைக் கொண்டு தான் பெருந்திரளான மக்களிடையே செல்வசெழிப்பைக் மேற்தட்டு கொண்டு வந்தது என்றும் எடுத்துக்காட்டுகிறார்.

இருந்தபோதினும், லிங்கனின் குடியரசு கட்சிக்கும் ஜெஃபர்சன் டேவிஸின் அடிமைமுறைக்கு ஆதரவாக இருந்த ஜனநாயக கட்சிக்கும் இடையே தயக்கத்தோடு சில வேறுபாடுகளைக் கண்ட அதே ஷின் தான், 2008இல் ஒபாமா, சிறப்பானவர் இல்லையென்றாலும், முடிவெடுப்பதில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை விட பரவாயில்லை என்று வாதிட்டு, பராக் ஒபாமாவிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தார். 'ஜனநாயக கட்சியினர் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஒருமுறையேனும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியும்' என்று வாதிட்டதன் மூலமாக, ஒபாமா பதவி ஏறுவதற்கு ஒப்புதல் அளித்தார். 1970களில் இருந்து அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் தான்தோன்றித்தனமான வலதுசாரி மாற்றங்களிலிருந்து தவிர்க்கமுடியாமல் எவ்வித முடிவையும் அவரால் காணமுடியவில்லை.

A People’s History புத்தகத்தின் பக்கங்களில் இருக்கும் அவருடைய "எதிர்ப்பைப்" பற்றிய அடையாளப்படுத்தல் (idolization), ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தை மறைத்திருந்தது. எதிர்ப்பைக் குறித்த ஒவ்வொரு விஷயத்திலும், ஷின் ஒன்று நிர்வாக கட்டுப்பாட்டின் பக்கம் சேர்ந்திருந்தார் அல்லது அதனால் நெருக்கப்பட்டிருந்தார். இந்த வகையில், அதிகபட்சம் நிச்சயமாக சீர்திருத்தங்களுக்கான ஒத்துழைப்பைத் தான் எதிர்பார்க்க முடியும். எவ்வித மூலோபாய பாடங்களும் அதில் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை; இந்நிலைமை மீண்டும் அதையே தான் திரும்ப கொண்டு வருவதாக இருந்தது.

A People's Historyஇல் அரசியலைப் பற்றிய ஷின்னின் பொதுவான அதிருப்தியும், சிந்தனையும்—வரலாற்றில் நனவுப்பூர்வமான ஆக்கக்கூறாக இருக்கக்கூடிய ஒன்று—அவருடைய இறுதி அத்தியாயத்தில் மிக வெளிப்படையாக வெளிப்பட்டிருக்கிறது. 1970களை அவர் எட்டும் போது, ஷின்னின் எதிர்ப்பாளர்களும் கூட குறைந்த முனைப்புடன் காணப்படுகிறார்கள்: அதாவது சீற்றம்மிக்க விவசாயிகள், தொழிற்சங்கவாதிகள், தொழில்துறை உலகின் அங்கத்தவர்கள் (Woobblies), மற்றும் சோசலிசவாதிகள் போன்றோர் அடையாள அரசியல், சுற்றுச்சூழல் சீர்திருத்தம், மற்றும் ஜனநாயக கட்சி ஆதரவிலான யுத்த-எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றின் ஆலோசகர்களுக்கு வழிவிடுகிறார்கள்.

“The Coming Revolt of the Guards” எனும் ஷின்னின் இறுதி அத்தியாயத்தில், அவர் "கட்டுப்பாட்டு அமைப்புமுறை" எவ்வாறு இறுதியில் உடைக்கப்பட வேண்டும் என்பதை ஆழமாக விளக்கி முடிக்கிறார். அது அவருடைய அரசியலுக்கும், அவருடைய வரலாற்றிற்கும் இடையிலான தொடர்பை மிகத் தெளிவாக கொண்டு வருகிறது.

அத்தியாய தலைப்பில் குறிப்பிடப்பட்ட “The Guards” என்பது தொழிலாளர்களைக் குறிப்பிட்டு காட்டுகிறது. இந்த அமைப்புமுறையைத் தொடர்ந்து எடுத்துச்செல்வதற்கு, குறைந்தளவிலேயே சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்த மில்லியன்கணக்கான மக்களின் பணிவும், ஒழுங்கமைக்கப்பட்ட பண்பும் இல்லாமல் இந்த நிர்வாகம் உயிர்வாழ முடியாது: அதாவது ஷின்னின் கருத்துப்படி இந்த அமைப்புமுறையில் இருக்கும் இராணுவ துருப்புகள் மற்றும் பொலிஸ், ஆசிரியர்கள் மற்றும் மந்திரிகள், நிர்வாகிகள் மற்றும் சமூக தொழிலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் உற்பத்தி தொழிலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு தொழிலாளர்கள், குப்பை அள்ளும் ஆண்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்” ஆகியோர். "வேலை பெற்று, ஏதோவொரு அளவிற்கு சலுகை பெற்றிருந்த இந்த மக்கள், மேற்தட்டுடன் கூட்டு வைத்து கொள்கிறார்கள். அவர்கள் தான் இந்த அமைப்புமுறையின் காவலர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தான் மேற்தட்டுக்கும், நடுத்தர வர்க்கங்களுக்கும் இடையில் இருக்கும் இடைமருவிகளாக (buffers) இருக்கிறார்கள். அவர்கள் அடிபணிவதை நிறுத்தினால், இந்த அமைப்புமுறை வீழ்ந்துவிடும்."

"உலக வரலாற்றில் அமெரிக்க அமைப்புமுறை மிகவும் நேர்த்தியற்ற கட்டுப்பாட்டு அமைப்புமுறையாக இருக்கிறது,” என்று ஷின் எழுதுகிறார். “இயற்கை வளங்களில், திறமையில், மற்றும் உற்பத்தி சக்தியில் இந்தளவிற்கு செழிப்பாக இருக்கும் ஒரு நாட்டில், தொந்தரவிற்குள்ளான சிறுபான்மையினரின் அதிருப்தியை வரம்பிற்குள் வைத்திருக்க குறைந்தளவு மக்களுக்கு குறைந்தளவிலான செல்வவளத்தை மட்டும் தான் அந்த அமைப்புமுறையால் வழங்க முடிகிறது."

இந்த வார்த்தைகள் "புதிய இடதின்" (New Left) நெறியற்ற முன்னோக்கையும், பிராங்க்போர்ட் சிந்தனைக்கூடம், மார்கூஸ் மற்றும் ஏனைய உட்கூறுகளின் சித்தாந்த தாக்கங்களையுமே பிரதிபலிக்கின்றன. இந்த உட்கூறுகள், முதலாளித்துவ அமைப்புமுறையால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிற்போக்குத்தனமான மக்கள் கூட்டமாக தொழிலாளர் வர்க்கத்தை பார்த்தது; அவற்றின் புரட்சிகர பாத்திரத்தைக் குறித்து எதிர்மறையாக எழுதின. 2003இல் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் திருத்திய பதிப்பில், 'அவர்கள் இப்போது ஓரளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது' என்று சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த கணிசமான தத்துவார்த்த மற்றும் அரசியல் குறைபாடுகளைக் கடந்து செல்வோமேயாயின், A People’s History of the United States புத்தகத்தில் ஷின்னின் பங்களிப்புகள்—அதாவது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களின் எதிர்ப்பைக் குறித்து புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும் விளக்கம்—குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.