WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Paris seizes on Niger kidnapping to sow “war on terror” panic
நைஜெர் கடத்தலைப் பயன்படுத்தி பாரிஸ் “பயங்கரவாதத்தின் மீதான போர்” குறித்துப் பீதியைக் கிளப்புகிறது
By Kumaran Ira
28 September 2010
Back to
screen version
சமீபத்திய வாரங்களில் இஸ்லாமிய மக்ரெப்பிலுள்ள (Maghreb) அல் கெய்டாவினால் (AQIM) தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பிரான்ஸ் மீதான ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மையில் நைஜெரிலுள்ள பிரெஞ்சு சுரங்க நிறுவனங்களில் 7 தொழிலாளர்களை கடத்தியதற்கு AQIM பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
செப்டம்பர் 16ம் திகதி, ஐந்து பிரெஞ்சுக் குடிமக்கள், ஒரு மாலகசி மற்றும் ஒரு தோகோலியர் வடக்கு நைஜெரில் ஆர்லிட் பிராந்தியத்தில் கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சொந்தமான நைஜெரில் உள்ள யுரேனியச் சுரங்க நிறுவனங்களான Areva மற்றும் Satom இல் பணிபுரிந்து வந்தவர்கள். சில நாட்கள் கழித்து அல் ஜசீரா செய்மதி செய்தி இணையத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தி ஒன்றின் மூலம் கடத்தலுக்குப் AQIM பொறுப்பேற்றனர். வடக்கு மாலி பாலைவனப் பகுதிகளில் இப்பணையக் கைதிகளை AQIM வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
பணையக் கைதிகள் உயிரோடு இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாரிஸ் கூறியுள்ளது. இதில் AQIM உடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் அடங்கும். செப்டம்பர் 23ம் திகதி பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி Herve Morin, RTL வானொலியிடம் தெரிவித்தார்: “தற்பொழுது நம்முடைய கவலை அல் கெய்டாவுடன் தொடர்பு கொள்தல் மற்றும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டல், இதுவரை அது கேட்கப்படவில்லை. அல் கெய்டா எப்படியும் அதன் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.”
கடந்த வராம் பிரான்ஸ் 80 சிறப்புப் படைத் துருப்புக்களையும் இராணுவ விமானம் ஒன்றையும் நைஜெரின் தலைநகரான Niamey க்கு அனுப்பியதுடன், பணையக் கைதிகளை தேடத் தொடங்குவதற்கு இராணுவத் தளம் ஒன்றையும் அமைத்தது. முதல் தடவையாக, நைஜெர் பிரான்ஸை தன் நிலப்பகுதி, வான்வழி ஆகியவற்றை பணையக் கைதிகளைத் தேடுவதற்காகப் பயன்படுத்த அனுமதித்துள்ளது. Le Monde கருத்துப்படி, இம்முயற்சிகளின் அண்டைப் பகுதியான ஷாட்டில் இருந்து முன்கண்காணிப்பிற்காக ஜெட்டுக்கள் பறக்கும் என்பதுடன் மௌரிடானியாவிலிருந்தும் பிரெஞ்சுச் சிறப்புப் படைகள் செயலாற்றும்.
இவ்நடவடிக்கைகளானது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அதன் போலிப் படைக் குவிப்புக்களை இப்பகுதியில் தீவிரமாகத் தலையிடுவதற்கு வகை செய்துள்ளது. செப்டம்பர் 19 அன்று இரு மாலியப் பெண்கள் டிம்பக்டுவிற்கு அருகே AQIM க்கு எதிராக மௌரிடானியாவிலிருந்து விமானத்தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டனர். மாலிய அரசாங்கம் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளது.
ஒரு முன்னாள் மாலிய மந்திரி Le Monde இடம் கூறினார்: “இன்று நம்முடைய நாடு வெளி சக்திகளுக்கு இடையே நடக்கும் போரில் ஒரு அரங்காக உள்ளது.”
அரசாங்கமும் செய்தி ஊடகமும் இந்நிகழ்வைப் பயன்படுத்தி பிரான்ஸில் அரசியல் சூழலை மாற்றும் விதத்தில் பலமுறையும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கை கொடுத்துள்ளன. AQIM இடமிருந்து அச்சுறுத்தல் என்பது பிரான்ஸில் பல முக்கிய செய்தித்தாள்களுக்கு ஏராளமான தலையங்கங்களை அளித்துள்ளன.
தேசிய அச்சுறுத்தல் நிலை “சிவப்பு” என்ற இரண்டாவது உயர்ந்த மட்டமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி, “ஆவிப் பெண்மணி” என்று அவர்களால் குறிக்கப்படுபவர், பாரிஸ் போக்குவரத்து அமைப்புகளில் தாக்குவதற்குத் தயார் செய்து கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். படையினர் பாரிஸின் முக்கிய தெருக்கள், ஈபிள் கோபுரம் மற்றும் முக்கிய இரயில் நிலையங்கள் உட்பட முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர், தேசியப் பொலிஸின் பொது இயக்குனரான Frederic Pechenard “ஆவிப் பெண்மணி” பற்றிய அறிக்கைகளை ஒதுக்கினார். Liberation இடம் அவர் தெரிவித்ததாவது: “இது நாங்கள் பெற்ற உளவுத்தகவல். ஆனால்—நான் செயற்பாட்டு விளக்கங்கள் பற்றிக்கூற விரும்பவில்லை—இது இனி நம்பகத்தன்மை உடையதாக இல்லை.” Le Journal de Dimnche க்கு செப்டம்பர் 12ம் திகதி கொடுத்த பேட்டியில், பிரான்ஸின் உளவு-எதிர்ப்பு நடவடிக்கை, பயங்கரவாத எதிர்நடவடிக்கைப் பிரிவு அமைப்பின் தலைவர் கூறினார்: “ஆபத்து இதுபோல் அதிகமாக இருந்தது இல்லை.” ஆனால் 1995 ல் அல்ஜீரிய இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பாரிஸ் பிராந்திய இரயில் தடங்களில் குண்டு வைத்தபோது இருந்த அச்ச நிலை இருந்தது.
இந்த எச்சரிக்கையை பிரதிபலித்து, பிரெஞ்சு உள்துறை மந்திரி Brice Hortefeux கூறினார்: “சமீபத்திய நாட்களாகவும் மணித்தியாலங்களாவும் திரட்டப்பட்ட தொடர்ச்சியான தடயங்கள் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் வெகு உயர்ந்த மட்டத்தில் இருந்ததைக் காட்டுகின்றன.” அவர் மேலும் கூறியதாவது: “இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக நம் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் நாம் இன்னும் “சிவப்பு” எச்சரிகை மட்டத்தில் உள்ளோம். எனவேதான் “சிவப்பு” எச்சரிக்கை மட்டமும் வலுவாக்கப்பட்டுள்ளது.”
சார்க்கோசியின் அரசியல் எதிர்ப்பாளர்கள் பயங்கரவாத எச்சரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்ட விதம் குறித்துக் குறைகூறியுள்ளனர். முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன், “நடவடிக்கை எடுத்தல் மற்றும் செயலில் ஈடுபடுதல் முக்கியமாகும். நம் நாட்டில் இங்கும் அங்கும் பீதியைக் கிளப்புவது எதற்கும் உதவாது.” என்றார். அரசாங்கத்தின் பொது உறவுக் கொள்கை “நயமற்றதாகவும், சில நேரம் இழிந்ததாகவும் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
தொழிலாள வர்க்கத்திடையே சார்க்கோசியின் அரசாங்கம் பெருகிய அதிருப்தியைக் கொண்டுள்ள நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. பர்க்காவிற்கு எதிரான தடை மற்றும் ரோமாக்களை ஏராளமாக நாடு கடத்தியது, ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்பில் பங்கு கொண்டுள்ளது போன்ற அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல்தான் அதன் சமூகக் கொள்கை, குறிப்பாக ஓய்வூதியங்களில் பாரிய வெட்டுத் திட்டங்களும் செல்வாக்கற்று உள்ளன.
செப்டம்பர் 25ம் திகதி Le Monde ஆபிரிக்கத் தலையீடு சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களை அடக்கிவிடக்கூடும் என்ற நம்பிக்கைகளை குறித்து விவாதித்த விதத்தில் எழுதியது:"நைஜரில் பிரெஞ்சுக்காரர்கள் அல் கெய்டாவினரால் கடத்தப்பட்டுள்ளது ஒரு 'union sacree' சூழலை உருவாக்கலாம்."
'Union Sacree' என்பது சமூக ஜனநாயகக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளானது பிரான்ஸில் முதல் உலகப் போரின் போது வேலைநிறுத்தங்களை அடக்கவும், வர்க்கப் போராட்டத்தை நசுக்கவும் பயன்படுத்தப்பட்ட உடன்பாடு ஆகும். தற்போதைய சூழ்நிலையில், இது ஆளும் வர்க்கம் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொழிலாள வர்க்கத்தின் சமூகநல வெட்டுகளுக்கான எதிர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்ற ஐயத்திற்கு இடமில்லாத நம்பிக்கைகள் பற்றிய குறிப்பு ஆகும்.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" பீதி பற்றி ஆளும் வர்க்கம் கொண்டுள்ள அக்கறையையொட்டி, பிரெஞ்சு அரசின் பகுதிகள் கடத்தல் பற்றிய திட்டங்களை அறிந்திருந்தன--அது தொடர அனுமதித்தன--என்று வெளிப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அறிக்கைகள் பிரெஞ்சு அரசு அல்லது பாதுகாப்புக் கருவியின் பகுதிகள் வேண்டுமென்றே ஒரு பயங்கரவாதம் குறித்த பீதியை தோற்றுவித்து பொதுமக்கள் கருத்தை நச்சுப்படுத்த வேண்டும் என்று கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்ற வாய்ப்பையும் எழுப்பியுள்ளன.
ஆர்லிட் பிராந்தியத்தில் உள்ளூர் அதிகாரிகள் கடத்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு Areva விற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். செப்டம்பர் 1ம் திகதி நைஜர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்ப ப்பட்ட எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை Le Monde வெளியிட்டுள்ளது. அதில், அரேவா சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதியில் "பாதுகாப்பு நிலைமை" மோசமாக உள்ளது என்றும் ஆர்லிட் குறித்து வெளிப்படையான எச்சரிக்கையும் இருந்தன.
இக்கடிதம் "ஆயுதமேந்திய குழுவினர் எட்டு டோயோடாக்கள் தொடர் கார் வரிசையில்" முந்தைய வாரங்களில் வந்திருப்பது பற்றி எச்சரித்தது. அது தொடர்ந்து எழுதியது: "பாதுகாப்புப் படைகளின் பகுதிகள் தங்கள் இலக்கைச் சாதிக்க முடியால் இந்த ஆயுதக்குழுவைச் செய்துவிட்டன. நம் உளவுத்தகவலின்படி இராணுவத் தளவாடங்களையும் வெளிநாட்டு நபர்களையும் கடத்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அக்குழுவிற்கு இருந்தது." "இச்சூழ்நிலையில் AQIM குழுவிடமிருந்து வந்துள்ள அச்சுறுத்தல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" என்று அது முடிவுரையாகக் கூறியிருந்தது.
ஆனால், பின்னர் நடந்த கடத்தலில் நிறைய நபர்களைக் கொண்ட பெரிய குழு ஒன்று பெரும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் நுழைந்து அரேவாவின் ஊழியர்களை எந்த எதிர்ப்பையும் சந்திக்காமல் கடத்த முடிந்தது. "குறைந்தது ஐந்து கார்களும் 40 ஆயுதமேந்திய நபர்களும் நகரத்திற்குள் எந்தவித எதிர்ப்பையும் எதிரெகொள்ளாமல் ஊடுருவ முடிந்தது" என்று அரேவா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2007ம் ஆண்டில் குறுகிய காலம் அரேவாவில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி கில்லெஸ் டெனமுர் கூறினார், "ஆர்லிட் போன்ற நகரத்தில், அவர்கள் வந்து ஒரு மணி நேரத்திற்குள் அறிமுகமாகாதவர்களைக் கண்டுபிடித்துவிடக்கூடிய ஒரு நகரத்தில் தாடிவைத்த மனிதர்கள் குழு எப்படி வரமுடிந்தது, பின் அனேகமாக 48 மணி நேரம் தங்கி கடத்தலைச் செய்ய முடிந்தது?"
EPEE யின் தலைவரான ஜாக்விஸ் ஹோகர்ட்--அரேவாவிற்கு இந்த நிறுவனம் இடத்திற்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூறி நைஜெர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது--கடத்தலானது, "ஒரு வகையான இராணுவ நடவடிக்கை ஆகும்" என்றார். "கடத்தல்காரர்கள் துல்லியமாக அறிந்திருந்தனர், அரேவாவிற்குள் எவரேனும் துணைபுரிந்திருந்தாலொழிய செயல்பட்டிருக்க முடியாது" என்றும் அவர் கூறினார். "உள்ளேயே காட்டிக் கொடுப்புக்கள்" இருந்தன என்று அவர் மீண்டும் கூறினார்.
அரேவாவானது ஒரு முக்கிய பிரெஞ்சு அரசு நடத்தும் நிறுவனம் என்பதோடு, அதிக மூலோபாய, தொழில்துறை மற்றும் அணுசக்தி நிறைந்த பகுதியில் செயல்படுகிறது, இவ்விடம் பிரெஞ்சுப் பாதுகாப்புப் பிரிவினருடன் நெருக்கமான தொடர்புகளை உடையது என்பது அடிக்கோடிடப்படவேண்டும். இச்சூழ்நிலையில், அரேவா இத்தாக்குதலுக்கு உடந்தையாக உள்ளது என்று உயர்மட்டத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுவது பிரெஞ்சு அரசும் இத்தாக்குதல்களுக்கு உடந்தையாக உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல் என்ற பதாகையின் கீழ் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் முன்னாள் காலனித்துவ அதிகாரத்தைக் கொண்டிருந்த சாஹேலில் மீண்டும் தன் நிலையை நிலைநிறுத்த வலிமையைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறது. ஜூலை மாதம் பிரான்ஸும் மௌரிடானியாவும் வடக்கு மாலியில் உள்ள AQIM முகாம் மீது தாக்குதல் ஒன்றை இணைந்து நடத்தின. ஒரு பிரெஞ்சு பணையக் கைதியை விடுவிப்பதற்கு அது நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் சில AQIM உறுப்பினர்கள் இறந்தனர். பின்னர் AQIM பிரெஞ்சுப் பிணைக் கைதியை பிரான்ஸ்-மௌரிடானியாத் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கொன்றுவிட்டதாகக் கூறியது.
இப்பகுதியில் படைகளையும் போர் விமானங்களையும் உள்ளூர் அரசாங்கங்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுப்பித் தலையிடும் பிரெஞ்சு அரசாங்கத்தின் தலையீடு போருக்குப் பிந்தைய காலனி அகன்றுவிட்டது எனக்கூறுப்படுவதின் போலித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் அந்நாட்டு குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகள் தலைமை தாங்குகின்றன. இன்று இந்த ஆட்சிகளில் எதுவும் தங்கள் நாடுகளில் இருக்கும் வெகுஜனங்களைத் அணிதிரட்ட விரும்பம் இல்லாதவை மற்றும் அணிதிரட்டவும் முடியாது. அதே போல் ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்ட முடியாது.
உலகின் மூன்றாவது பெரிய யுரேனிய உற்பத்தி செய்யும் நாடாக நைஜெர் உள்ளது. இதன் யூரேனிய இருப்புக்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன. தனது மின்சக்தியை 78 சதவிகிதம் அணுசக்தி மூலம் பெறும் பிரான்ஸ் நைஜரின் யுரேனியத்தின் பெரும் பகுதியை நம்பியுள்ளது. 40 ஆண்டுகளாக அரேவா இந்த யுரேனிய இருப்புக்களைச் சுரண்டி வருகிறது. ஆர்லிட் மற்றும் அகௌடா சுரங்க இருப்புக்களில் அது 3,000 மெட்ரிக் டன்களுக்கு மேலாக 2008ல் உற்பத்தி செய்தன. Imouraren இருப்புக்களில் அரேவா 1.2 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. இது அடுத்த 35 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு ஆளும் வர்க்கம் சாகேலில் ஒரு பொறுப்பற்ற கொள்கையை தன் நலன்களுக்காகத் தொடர்கிறது. அதே நேரத்தில் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார நிலைமைகளை பேரழிவு தரும் வகையில் புறக்கணிக்கிறது. சாகேலில் உள்ள பல நாடுகள் பெரும் வறுமையில் உள்ளன. நைஜெர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் பஞ்சத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் நைஜெர் கடைசி இடத்தில் உள்ளது. 60 சதவிகிதத்திற்கும் மேலான அதன் மக்கள் நாள் ஒன்றிற்கு 1 டொலருக்கும் குறைந்த பணத்தில் வாழ்கின்றனர்.
|