World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan budget implements IMF austerity measures

இலங்கை வரவுசெலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகிறது

By Saman Gunadasa
26 November 2010

Back to screen version

நிதி அமைச்சரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, இந்த வாரம் ஒரு சிக்கன வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். இது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில், வாழ்க்கை தரங்களின் செலவில் வியாபார இலாபங்களை பெருக்குவதற்காக திட்டமிடப்பட்டதாகும். உலகம் பூராவும் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போல், இராஜபக்ஷவும் நிதி சந்தைகள் மற்றும் பூகோள முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை இட்டு நிரப்புவதற்காக தற்போதைய உலகப் பொருளாதர நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்றார்.

நாணய நிதியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையானது இந்த ஆண்டின் 8 வீதத்தில் இருந்து 2011ம் ஆண்டில் 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 ஆண்டுகளின் பின்னர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வெட்டாகும். பொதுத் துறை சம்பள அதிகரிப்பை தொடர்ச்சியாக நிறுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை அதிகரித்து மற்றும் விலை மானியங்களை வெட்டிக்குறைத்துமே இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது.

இன்னமும் மோசமானவை வரவுள்ளன. வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 2012ல் 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என நாணய நிதியம் கோருகின்றது. உலகரீதியான நிதி நெருக்கடி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் நீண்டகால இனவாத யுத்தத்துக்கு செய்த பிரமாண்டமான செலவாலும் ஏற்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி நெருக்கடியொன்றை தவிர்ப்பதன் பேரில், அரசாங்கம் 2009 ஜூலையில் நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்வாங்கத் தள்ளப்பட்டது.

திங்களன்று ஆற்றிய வரவுசெலவுத் திட்ட உரையில், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உள்ளூர் பெரும் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரும் வரிக் குறைப்புக்களை இராஜபக்ஷ அறிவித்தார். சகல ஏற்றுமதிகளுக்கும் மற்றும் சுற்றுலாத்துறை கம்பனிகளுக்குமான வரிகள் 15 சதவீதத்தில் இருந்து 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், நிதிச் சேவைகளுக்கான வரிகள் இன்னும் அதிகமாக, அதாவது 20 சதவீதத்தில் இருந்து 12 வரை குறைக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் நிதிய நிறுவனங்களின் இலாபங்கள் மீதான வரிகள் 35 சதவீதத்தில் இருந்து 28 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு முரணான விதத்தில், நான்கு ஆண்டுகால சம்பள அதிகரிப்பு நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா (22.50 அமெரிக்க டொலர்) மாத சம்பள அதிகரிப்பு வழங்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியையும் இராஜபக்ஷ ஆத்திரமூட்டும் வகையில் அலட்சியம் செய்தார். மாறாக, 5 சதவீத மாதாந்தக் கொடுப்பனவையும் 600 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் பிரேரித்துள்ளார் இதன் விளைவாக அநேகமான அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் சுமார் 1,000 ரூபா மட்டுமே அதிகமாக கிடைக்கும். 300 ரூபா அற்ப மாதாந்த கொடுப்பனவு ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது, இத்தகைய அதிகரிப்புகள் அற்பமானதாகும். இலங்கையில் ஒரு தொழிலாளிக்கு ஆகவும் மலிவான சாப்பாடு 100 ரூபாவுக்கும் அதிகமான விலையிலேயே கிடைக்கும்.

யுத்தத்தின் போது, அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை நிறுத்துவதற்கான ஒரு சாக்குப் போக்காக, பெரும் இராணுவச் செலவை இராஜபக்ஷ மேற்கோள் காட்டி வந்தார். இந்த வரவுசெலவுத் திட்டத்தில், மெகா உட்கட்டமைப்பு திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைகள் தொடங்கியுள்ள காரணத்தால் சம்பள அதிகரிப்புக்கு செலவிட அரசாங்கத்தால் முடியாதுள்ளது என அவர் கூறிக்கொள்கின்றார். ஆயினும், இத்தகைய திட்டங்கள் வியாபார முதலீட்டுக்கு வசதியேற்படுத்துவதற்காகவே அன்றி வெகுஜனங்களின் எரியும் தேவைகளை இட்டு நிரப்புவதற்காக திட்டமிடப்பட்டவை அல்ல.

அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் மீதும் எண்ணெய் மீதும் அதிகளவான வரிகளை ஏற்கனவே சுமத்தியுள்ள இராஜபக்ஷ, மோட்டார் வாகன அனுமதிப்பத்திரங்கள், வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் கேபல் டீ.வி. போன்றவைற்றுக்கு உட்பட மேலும் பல வரி அதிகரிப்புக்களை அறிவித்துள்ளார். மதுபானம் மற்றும் சிகரட்டுக்களுக்கான வரிகள் 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. அரசாங்கம் மின்சார சபைக்கான எண்ணெய் மானியத்தையும் நிறுத்தி, 2011 ஜனவரியில் இருந்து மின்சாரக் கட்டண த்தை 8 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

இத்தகைய இறக்குமதி வரிகள் வாழ்க்கைச் செலவை துரிதமாக அதிகரிக்கச் செய்யும். செப்டெம்பரில், அரசாங்கம் கோதுமை மாவுக்கான மானியத்தை 75 வீதத்தால் குறைத்ததால் மா மற்றும் பாணின் விலை அதிகரித்தது. உழைக்கும் மக்களின் இரண்டாவது பிரதான உணவு கோதுமை மா ஆகும். அக்டோபரில், அரசாங்க வரிகளின் காரணமாக, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் இரட்டிப்பானதுடன் சீனியின் விலை கிட்டத்தட்ட 20 சதவீதத்தால் அதிகரித்தன.

நாணய நிதியத்தை திருப்திபடுத்தும் அதே வேளை, வரவு செலவுத் திட்டத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை பாதுகாப்புச் செலவை பேணுவதாகும். புலிகளுக்கு எதிரான யுத்தம் 18 மாதங்களுக்கு முன்னரே முடிந்துவிட்டாலும், பாதுகாப்புக்கான செலவு 7 சதவீதத்தால் 214 பில்லியன் ரூபாய்கள் வரை, அல்லது மொத்த திட்டத்தின் செலவில் 20 வீதமாக அதிகரித்துள்ளது. அரசாங்கம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை பேணுவதற்காகவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக தயாராகவும் பாதுகாப்புப் படைகளை அதிகரிக்கின்றது.

சுகாதாரத்துக்கும் கல்விக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை ஒன்றாகக் கூட்டி, அதில் ஏறத்தாழ இரண்டு மடங்கை இராணுவச் செலவு விழுங்கியுள்ளது. சுகாதாரத்துக்கு 62 மற்றும் கல்விக்கு 51.5 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகள் 10 மற்றும் 5.5 பில்லியன்களால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துவரும் பண வீக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

மொத்த கடன் சேவை செலவுகள் இவை அனைத்தையும் சுருக்கியுள்ளன. இந்தச் செலவு 815 பில்லியன் ரூபாவாகவும் கடந்த ஆண்டை விட 48 பில்லியன் ரூபா அதிகரித்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்க வருமானம் வெறும் 987 பில்லியன் ரூபாவாக உள்ள நிலையில், அரசாங்கம் பெருந்தொகையில் கடன் வாங்க தொடர்ந்தும் நெருக்கப்படும். ஆகஸ்ட் அளவில், மொத்த பொதுக் கடன் 4,465 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 20 வீதம் கடன் சேவைக்கான செலவுக்கே சென்றது. அக்டோபர் 31 அன்று சண்டே டைம்ஸ் பந்தி எழுத்தாளர் எச்சரித்ததாவது: 2010 இறுதியில், வெளிநாட்டு கடன், வெளிநாட்டு வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கக்கூடும், மற்றும் இந்த ஆண்டின் ஏற்றுமதி வருமானத்தின் நான்கில் ஒரு பகுதியை கோருவது சாத்தியமாகும் என்றார்.

இந்த ஆண்டு உத்தேசிக்கப்பட்ட 7.6 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 2011ல் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக இருக்கும் என இராஜபக்ஷ முன்னறிவித்தார். ஆனால் இந்த ஆண்டின் வளர்ச்சி வீதம், பிரதானமாக கடந்த ஆண்டின் மிகவும் குறைந்த 3.5 சதவீதத்தின் விளைவாகும். இந்த மதிப்பீடு மிகவும் நிச்சயமில்லாததாகும். இலங்கையின் பிரதான பொருளாதார பங்காளிகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் பொருளாதாரச் சரிவில் மூழ்கியுள்ளன. இலங்கையின் ஏற்றுமதி 2008ல் இருந்த மட்டத்துக்கு இன்னமும் மீளவில்லை. கடந்த 10 மாதங்களாக மொத்த ஏற்றுமதி வருமானம் 10.7 சதவீதத்தால் உயர்ந்தாலும், மிக அதிக வருமானம் ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதி, 5.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்து. அதே காலப்பகுதியில், ஏற்றுமதி விலைகளின் அதிகரிப்பானது வர்த்தகப் பற்றாக்குறை 3,630 மில்லியன் டொலர்கள் வரை விரிவடைந்திருந்திருப்பதை கண்டது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 103 சதவீத உயர்வாகும்.

 “தாய்நாடு, உள்நாட்டு வளர்ச்சிக்கான தீர்வுகள் மற்றும் உள்நாட்டு வசதிகள் பற்றி இராஜபக்ஷ அடிக்கடி வாய்வீச்சாக குறிப்பிட்டப போதிலும், அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஏக்கம் நிறைந்த முயற்சியில், அந்நிய செலாவணி நிர்வாகத்தில் மேலும் தாராளமயமத்தை அறிவித்தார். 2008ல் ஏற்பட்ட பூகோள நிதிய நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே வெளிநாட்டு நேரடி முதலீடு வீழ்ச்சியடைந்ததோடு இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 208 மில்லியன் அமெரிக்க டொலர் வரை, அதாவது 2009ல் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 253 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து மேலும் வீழ்ச்சியடைந்தது.

பெரும் வர்த்தகர்கள் வரவுசெலவுத் திட்டத்தை பொதுவில் வர்த்தகர்களுக்கு சினேகமானது என பாராட்டினர். இந்த வரவுசெலவுத் திட்டம் ஆக்கமுறையானது. உயர்ந்த வரிகளால் துன்பப்பட்ட வங்கியாளர்கள் வரி குறைப்புக்களால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். என வங்கியாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் உபாலி டீ சில்வா பிரகடனம் செய்தார். இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைர் லால் டீ அல்விஸ், இந்த முதலீட்டுக்கு நட்பான சூழலில், தனியார் துறையினரும் முதலீட்டாளர்களும் மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக்கெடுப்பதை எதிர்பார்க்க முடியும், என்றார்.

எவ்வாறெனினும், பூகோள நிதியாளர்களும் முதலீட்டாளர்களும் திருப்தியடையவில்லை. இந்த வார வோல் ஸ்ரிட் ஜேர்னல், ஒரு அமைதி பங்கீட்டை செய்கின்றோம் என்ற அரசாங்கத்தின் கூற்றின் மீது குளிர் தண்ணீரை வீசியுள்ளது. ஆனால் ஒரு அமைதியான பங்கீடானது ஒருதடவை இலாப பங்கீடு செய்வதாகும், வளர்ச்சிக்கான அடித்தளத்தில் ஒரு உயர்ச்சியாகும். ஒரு பொருளாதாரம் இயல்பாக விரிவடைகின்ற நிலையில், பங்கீடுகளை மீண்டும் நிகழச்செய்வது பற்றி என்ன சொல்லப்படுகிறது? இங்கு, குறுகிய-கால வாய்ப்புகள் மலர்ந்த போதிலும், நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு கலப்புச் சித்திரமாகவே உள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தான் வாக்குறுதியளித்ததை விட மிகவும் குறைந்ததை வழங்கும் வழியிலேயே இருக்கின்றார், என அதன் அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த வரவுசெலவுத் திட்டம், அரசாங்கத்தை சவால்செய்யக் கூடிய, அரசியல் ஸ்தாபனத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய ஒரு சமூக மற்றும் வர்க்க அமைதியின்மைக்கும் ஏற்கனவே களம் அமைத்துள்ளது பற்றி இலங்கையின் ஆளும் கும்பலின் பகுதியினர் கவலை தெரிவித்துள்ளனர். ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு, வரவுசெலவுத் திட்டத்தை பாராட்டும் அதே வேளை: யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் தீவிரமாக உயர்ந்துள்ளதோடு அவர்கள் ஒரு பெரிய அளவில் நிவாரணத்துக்காக ஏங்குகின்றனர் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும், என எச்சரித்துள்ளது.

 “கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலில் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்கு, அவர் இப்போது 500 ரூபா மட்டுமே பெறுவார் என சொல்வது உண்மையில் புண்படுத்துவதாகும். பின்னர், வழங்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி காணும் வழிபற்றி விளக்க முயற்சிப்பதன் மூலம் அதை நியாயப்படுத்துவது மேலும் இகழ்ச்சியை ஏற்படுத்துவதாகும், என டெயிலி மிரர் பத்திரிகை எழுதியுள்ளது.

பூகோள நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை இட்டு நிரப்பும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முயற்சிகளின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், வர்க்க பதட்ட நிலைமைகள் வளர்ச்சியடைவது பற்றி ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவும் நுண்ணுணர்வுகளையே இத்தகைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. அவை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்காக அரசாங்கமும் இராணுவமும் பயன்படுத்தவுள்ள கொடூரமான பொலிஸ்-அரச நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கைகளுமாகும்.