World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Students demonstrate in UK against increased fees and education cuts

இங்கிலாந்தில் மாணவர்கள் கட்டண அதிகரிப்பு, கல்விச் செலவுக்குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்

By our reporters
26 November 2010


Back to screen version

புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் நாடு முழுவதும் அரசங்கத்தின் கல்விச் செலவுக் குறைப்புக்களை எதிர்த்து ஆறாம் படிவ மாணவர்களும் பள்ளி மாணவர்களும்  ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சியிலும் (Socialist Equality Party), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பிலும் (International Students for Social Equality) இருந்து பல குழுக்கள் இவற்றில் பங்கு பெற்றவர்களுடன் பேசினர்.

லீட்ஸ் மற்றும் லீட்ஸ் மெட்ரோபோலிடன் பல்கலைக்கழகத்தில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் லீட்ஸ் நகர மையத்தில் அணிவகுத்து சென்றனர். வழிமுழுவதும் பாரியளவு பொலிஸ் குவி்க்கப்பட்டிருந்தனர்ஒளிப்பதிவு படம் பிடிக்கும் எட்டு வாகனங்களும் மற்றும் பல பொலிஸ் ஒளிப்பதிவு குழுக்கள் கூரைகள் மேல் இருந்தன. இதைத்தவிர குறைந்தது 10 பொலிஸ் நாய்கள் மற்றும் கனரக ஆயுதம் தாங்கிய பொலிஸ், நூற்றுக்கணக்கான சாதாரண பொலிசார் ஆகியோரும் இருந்தனர்.

நகரத்தின் வழியே அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அலுவலகத்தில் இருந்த தொழிலாளர்கள் சன்னல்கள் அருகே கூடி நின்று அவர்கள் கடந்தபோது கரவொலி, பாராட்டுக்களை முழங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை லீட்ஸ் கலைக்காட்சிக் கூடத்தின் (Leeds Art Gallery) வாயிற்படிகளில் கிட்டத்தட்ட 1,000 பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வித்துறைக் கல்லூரி மாணவர்கள் சந்தித்தனர். அவர்களும் பிரச்சாரத்திற்கு ஆதரவாக வகுப்புக்களில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

Allerton Grange Comprehensive School மாணவர்கள் நகரத்திற்குள் ஐந்து மைல்தூரம் அணிவகுத்து நகர மையத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர். அவர்கள் வரும் வழியில் Roundhay Comprehsnsive இல் இருந்தும் சக மாணவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் Leeds College of Building மற்றும் Thomas Danby  கல்லுரியைக் கடந்து வருகையில், அவற்றின் மாணவர்கள் வெளியே வந்து இவர்களை வரவேற்றனர்.

அலெக்ஸ்

Allerton Grange School  ஐ சேர்ந்த அலெக்ஸ், World Socialist Web Site நிருபர்களிடம் கூறினார்: “இந்தக் குறைப்புக்கள் வருங்காலத்தில் மட்டும் அல்ல இப்பொழுதே மாணவர்களைப் பாதிக்கும். கல்விப் பராமரிப்பு மானியம் (EMA) வாரம் ஒன்றிற்கு £30 இழக்கப்பட்டுள்ளமை பள்ளி மாணவர்களுக்கு அட்டூழியமானது. பல்கலைக்கழகக் கட்டணத்தை £9,000 என்று உயர்த்தியுள்ளமை மில்லியன் கணக்கான இளைஞர்களிடம் இருந்து, குறிப்பாக வறிய குடும்ப மாணவர்களுக்கு உயர்கல்வி என்னும் கனவு பறிக்கப்பட்டுவிட்டது என்ற பொருளைத்தரும். என்னுடைய தாயார் நிலைமை பற்றிப் பெரிதும் கவலைப்படுகிறார். நாங்கள் எமது வருங்காலத்திற்காகப் போராடுகிறோம்.”

Allerton Grange ல் உள்ள மற்றொரு மாணவரான Seyamak கூறினார்: “கல்வி என்பது ஒரு உரிமை என நான் நினைக்கிறேன். நாங்கள் வருங்காலத்திய மாணவர்கள். ஒரு நாகரிகமான சமுதாயத்தில் கல்விக்கு விலை நிர்ணயிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். செயற்பட்டியலின் முதலில் வங்கிப் பிணை எடுப்புக்கள் இருக்கக் கூடாது. கல்விக்கான உரிமையைப் பறிந்துவிட்டால், வேறு எது எங்களுக்கு மிஞ்சி இருக்கும்?

அணிவகுப்பில் கலந்து கொள்ள 15 மைல்கள் தொலைவில் இருந்து Ilkley Grammar பள்ளியின் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களின் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுடைய பெற்றோர்களுக்கு இந்த நிகழ்வு பற்றி எச்சரித்து, பள்ளிமாணவர்கள் பள்ளியில் இருந்து வெளிநடப்புச் செய்தால் பள்ளி பொறுப்பு ஏற்க முடியாது என்று எழுதிய கடிதங்கள் அஞ்சல் மூலம் வரப்பெற்றுத்தான் நடவடிக்கை தினம் பற்றி அவர்கள் அறிந்தனர்.

மாணவர்களில் ஒருவர் தங்கள் ஆசிரியர்கள் பள்ளியின் அனைத்து வாயில்களிலும் நிறுத்தப்பட்டிருந்தனர் என்று விளக்கினர். ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்களுக்குச் செல்லும் வரை மாணவர்கள் காத்திருந்து, பின்னர் வெளியே வந்துவிட்டனர்.

லீட்ஸ் இசைக்கல்லூரியில் உள்ள கிட்டார் படிக்கும் மாணவர் கிறிஸ் கூறினார்: “இத்தாக்குதல்கள் வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. இவை எல்லா இடங்களலும் நடைபெறுகின்றன. கலாச்சார நடவடிக்கைகள்தான் எப்பொழுதும் அனைத்துப் பிரிவுகளிலும் அதிகப் பாதிப்பிற்கு உட்படும். அரசாங்கத்தின் கூற்றுப்படி சமூகத்தின் கலாச்சாரத்திற்கு நிதி வழங்குவது கட்டுபடி ஆகாதாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் இசையில் மட்டும் இன்றி அனைத்து வடிவங்களிலும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. மக்களுக்கு கலாச்சாரம் தேவை.”

Ormskirk இல் உள்ள Edge Hill பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் டேவ் பின்வருமாறு கூறினார், “என்னுடைய வருங்காலம் பற்றியது மட்டும் அல்ல இது; ஏனெனில் எனக்குக் கட்டணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. நான் இங்கு வந்திருப்பதன் காரணம் இலவசக் கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்பனதுதான். என்னுடைய பெற்றோருக்கு ஒருவேளை இந்த உயர்கட்டணத்தைக் கொடுக்கும் வசதி இருக்கலாம், ஆனால் பல சாதாரண மக்களுக்கு இது முடியாது. எனவேதான் நான் இதில் பங்கு பெறுகிறேன். இது அடுத்த தலைமுறைக்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். என்னுடைய குழந்தைகளும் மற்றவர்களுடைய குழந்தைகளும் இதையொட்டி பாதிக்கப்படுவர்.”

மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்த ஒரு வேலையிழந்த தொழிலாளியான கேயில் Boddington மாணவர் வசிப்பிடத்தில் தொழிலாளியாக இருந்தார். செப்டம்பர் மாதம் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் கூறியது: “பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறையில் உள்ள ஏராளமான பலரும் ஜூலை மாதம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நான் வேறு ஒரு வேலைக்கு முயற்சி செய்துவருகிறேன், ஆனால் இன்னும் ஏதும் கிடைக்கவில்லை.”

இவருடைய மகள் ஒரு 20 வயது மாணவி ஆவார்; தற்பொழுது உயர் கல்வி பயில்கிறார். அவர் வீட்டில் வசிப்பதில்லை, பல நண்பர்கள், உறவினர்களுடன் வசிக்கிறார். கேயில் கூறினார்: “அவள் மிகவும் கஷ்டப்படுகிறாள். வாரம் £30 EMA ஐத் தவிர வேறு எந்த நிதியும் கிடைக்கவில்லை. அரசாங்கம் அதை நிறுத்திவிட்டால் கையில் ஒரு பென்னிக் காசு கூட இல்லாமல்தான் நிற்பாள்இதில் அவள் உணவு, உடை மற்ற தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்; இதைத்தவிர அவள் கல்லூரிக்கும் செல்கிறாள். அவள் சட்டம், மற்றும் குற்றவியல்பிரிவு பற்றி படிக்க விரும்புகிறாள், லீட்ஸ் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் எது நடக்கும் என்று எவருக்குத் தெரியும்? எல்லா அரசாங்கங்களும் இப்பொழுதெல்லாம் எவருக்கும் உதவுவதில்லை. தொழிற்கட்சி பதவியில் இருந்தாலும் இவளுக்கு ஒன்றும் கிடைத்திருக்காது.”

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற மற்றொரு எதிர்ப்பாளர் கூறினார்: “பல்கலைக்கழகக் கல்வி என்பது நாடும் அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டும். கட்டணங்களை இன்னும் அதிகமாக்குவது என்பது வறுமையான குடும்பங்களில் இருந்து வருவோரை இன்னும் துணிவிழக்க செய்யும். நான் 2008 இல் படித்துமுடித்தேன். வருடாந்த கட்டணமான £1200 இனை தவிர திருப்பிக் கொடுக்க வேண்டிய கடனான £3,000  என்பது இப்பொழுது என்னைக் கடன் சுமையில் தள்ளியுள்ளது. வருங்காலத்தில் மாணவர்கள் கிட்டத்தட்ட இதேயளவு பணத்தை ஓராண்டுக் கட்டணமாக  செலவழிக்க வேண்டும்.

Lawnswood உயர்நிலைப்பள்ளியில் இருந்து வரும் நடாஷா கூறினார்: “அவர்கள் EMA ஐக் குறைத்து கல்லூரிக் கட்டணத்தையும் உயர்த்தினால், எங்களுக்கு பல்கலைக் கழகப்படிப்பிற்கு வசதி இல்லாமல் போய்விடும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும், £80,000 கடனுடனும் இன்னும் அதிகச் செலவுடனும்தான் வெளியே வருவோம். நாங்கள் பல்கலைக்கழகத்தில் பயிலாவிட்டால் வருங்காலம் மக்டோனால்ட்ஸ் (McDonalds)  இனைத்தான் சென்றடைவோம்.”

அவருடைய நண்பர்களில் ஒருவர் கூறினார்: “எங்கள் தலைமுறை உழைக்கும் தலைமுறையாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும், ஓய்வு பெறும் மக்களுக்குக் கொடுப்பதற்கான நிதிக்கு எவர் வரிகளை கொடுப்பர்?”

மற்றொருவர் கூறினார்: “அவர்கள் EMA வைக் குறைக்கின்றனர், கலைப்பிரிவு, விளையாட்டு நடவடிக்கைகளைக் குறைக்கின்றனர், ஆனால் பாதுகாப்பு அமைச்சரகத்திலோ, அணுவாயுதத் தயாரிப்புக்களிலோ செலவைக் குறைக்கவில்லை. இது கேலிக்குரியது. அவர்கள் முன்னுரிமையைச் சரியாக தேர்ந்தெடுக்கவேண்டும்.”

லீட்ஸ் மையப் பகுதிக்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன்பு லீட்ஸில் ஒரு ஆசிரியராக தன் உழைக்கும் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த ஒரு மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான பார்பரா சுலோட்டர் மாணவர்களிடையே உரையாற்றினார். தன்னை உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதி என்று அவர் அறிவித்துக் கொண்டபோது, அமைப்பாளர்கள் ஒலிபெருக்கி வசதியை அகற்றிவிட்டனர். “இது அரசியல் சார்பற்ற அணிவகுப்பு. நாங்கள் அரசியல் எது பற்றியும் விரும்பவில்லை. நீங்கள் இடதுசாரிக் கருத்துக்களை இந்த அணிவகுப்பில் எழுப்ப அனுமதி இல்லை.” என்றனர்.

ஆனால் சுலோட்டர் உரைநிகழ்த்த அனுமதிக்கும் கட்டாயத்திற்கு அவர்கள் உட்பட்டனர். ஒரு மாணவர் கருத்து வேறுபாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு ஓடிவந்து மைக்கை மறுபடியும் போட்டார். தன்னுடைய உரையில் சுலோட்டர், International Students for Social Equality யின் ஆதரவாளர்கள் வினியோகிக்கும் துண்டுப்பிரசுரம் பற்றிக் கவனத்தை ஈர்த்து, பொலிசார் கடந்த வார மில்பாங் டவர்சில் நடந்த நிகழ்வுகளைப் பயன்படுத்தி வெறித்தனச் சூழலைத் தூண்டி, எதிர்காலத்தில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மிருகத்தனமான பொலிஸ் தாக்குதல்களை நியாயப்படுத்த விரும்புகின்றனர் என்று கூறினார்.

உலகில் எந்த இடத்திலும் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் கட்சியைக் கொண்டிராத சூழ்நிலையில், தேவைப்படுவது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனக் கட்சியைக் கட்டமைப்பதுதான்என்று அவர் கூறினார்.

மான்செஸ்டரில் கிட்டத்தட்ட 5,000 எதிர்ப்பாளர்கள், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழக மாண்வர்கள் மற்றும் நகரத்திலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களும் முக்கிய பல்கலைக்கழகப் பகுதியில் இருந்து நகர மையத்திற்கு அணிவகுத்து வந்தனர். 76 மைல்கள் தொலைவில் உள்ள கும்ப்ரியா கெண்டலில் இருந்து ஆறாம் படிவ மாணவர்கள் குழு ஒன்று அணிவகுப்பில் பங்கு பெற  வந்திருந்தது.

ISSE அறிக்கை ஒன்றுதான் ஆர்ப்பாட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கையாகும், ஒரு மாணவர் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கும் பணியைத் தன்னார்வத்துடன் எடுத்துச் செயல்பட்டார்.

இந்த அணிவகுப்பிலும் பலத்த பொலிஸ் பிரசன்னம் இருந்தது. நகர அரங்கில் இருந்து அது இதைத் திசைதிருப்பப் பார்த்தது.

ஆறாம் படிவக் கல்லூரி மாணவரான ஓவன், வெட்டுக்களை எந்த முக்கியக் கட்சிகளும் எதிர்க்காது என்று தான் உணர்வதாகக் கூறினார்: “அவை சமூகத்தில் மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு கல்வியை மறுக்கின்றன.” தொழிலாளர்களின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்துவதற்கு அவர் ஒப்புக் கொண்டார், “ஏனெனில் அவர்கள் அனைவரும் இடைத்தொடர்பு  உடையவர்கள்.”

Trafford கல்லூரியின் குழுவில் இருந்து வந்த மற்றொரு மாணவர் கூறினார்: “பள்ளி மற்றும் கல்லூரியில் நான் கடினமாக உழைத்துள்ளேன். ஆனால் நான் பல்கலைக்கழகத்திற்கு ஒருபோதும் போகமுடியாது என்று நினைக்கிறேன். படித்ததெல்லாம் வீண்தான். என்று நினைக்கிறேன்.”

நல்ல தகுதியும் அனுபவமும் உடையவர்கள் பலர் பெருகிய வேலையின்மையில் வாடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “எங்களக்கு எல்லாம் என்ன வாய்ப்பு உள்ளது?” என்று வினவினார்.