World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s government rocked by G2 mobile license scandal

இரண்டாம் தலைமுறை செல்பேசி உரிம ஊழலால் இந்திய அரசாங்கம் அதிர்ந்தது

By Kranti Kumara
26 November 2010

Back to screen version

மேற்கத்திய நாடுகளின் உயர்தட்டினாலும், பெறுநிறுவன ஊடகங்களில் இருக்கும் அவற்றின் பணிவான இதழாளர்களாலும், எது "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று வழக்கமாக போற்றப்படுகிறதோ அதன் அடித்தளம் எந்தளவிற்கு அழுகிப்போய் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில், ஒரு தொடர்ச்சியான ஊழல் மோசடிகள் இந்திய தேசிய கூட்டணி அரசாங்கத்தையும், நாட்டின் முன்னனி கட்சியான காங்கிரஸ் கட்சியையும் அதிர வைத்திருக்கின்றன.

இந்தியாவின் நிதியியல் தலைநகராக விளங்கும் மும்பையில் இராணுவ வீட்டுவசதி குடியிருப்பைச் சார்ந்து நடந்த ஒரு மோசடி, மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சி முதலமைச்சரைக் கடந்த மாதம் இராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளியது. இந்த மோசடியில், யுத்தத்தில் தங்கள் கணவன்மார்களை இழந்த விதவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2008இல் தொலைதொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் உரிமங்கள் அடிமட்ட விலையில் விற்கப்பட்டிருக்கும் ஊழல் தான் இதுவரையில் இல்லாத மிக மோசமான ஒன்றாக காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கும் கவலை அளிக்கச் செய்திருக்கிறது.

அமைச்சகத்தால் உரிமங்கள் ஒருதலைபட்சமாகவும், நேர்மையற்ற முறையிலும், நியாயத்திற்குப் புறம்பாகவும் விற்கப்பட்டன என்றவொரு குற்றச்சாட்டு அறிக்கையை இந்தியாவின் கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம் (comptroller and auditor general - CAG) சமர்பித்தது. ஒரு முந்தைய நடவடிக்கையில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்முதலில் வருபவர்களுக்கு முதலில் முன்னுரிமை" என்ற அடிப்படையில் உரிமங்களை விற்றதுஇதில் சில நிறுவனங்கள் தேவையான அனைத்து முறைமைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்ற போதினும் கூட, அவற்றின் விண்ணப்பங்கள் எவ்வித விசாரணையுமின்றி முன்னெடுக்கப்பட்டன. ஏனையவை ஓரங்கட்டப்பட்டன.

"இன்றைய நிலையில் ஒரு பெரும் இழப்பை" ஏற்படுத்தும் வகையில், ஜி2 உரிமங்களை CAG குற்றஞ்சாட்டிய CIT அமைச்சகம் எவ்வித முயற்சியுமின்றி 2001ஆம் ஆண்டு விலையில் விற்றது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் செல்பேசி சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது என்பதும், தற்போது உலகில் மிகப் பெரியளவிற்கு 500 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.

விற்பனையின் போது ஒரு போட்டியை CIT ஏற்படுத்தத் தவறியதும், 2001இல் இருந்த விலை மதிப்பீட்டின் அடிப்படையில் விற்றதும் $40 பில்லியனுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக CAG மதிப்பிட்டுள்ளது. இது இந்திய அரசாங்கம் கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கும் தொகையை விட ஆறுமடங்கு அதிகமாகும்.

இந்த இழப்புகளை நிச்சயமாக "நிரூபிக்க" முடியாது என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உடனடியாக குறிப்பிட்டார்கள். ஆனால் பல நிறுவனங்கள் அவற்றின் உரிமம் பெற்ற சில நாட்களிலேயே வேறு நிறுவனங்களுக்கு அவற்றின் உரிமங்களை விற்றுவிட்டு, இதன்மூலம் பெரும் இலாபங்களைச் சம்பாதித்தன என்பதை எடுத்துக்காட்டும் உதாரணங்கள் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

CAG அறிக்கையால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் கூப்பாடு, தொலைதொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ஆண்டிமுத்து இராஜாவை இராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளியது. ராஜா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (UPA) தமிழ்நாட்டின் ஒரு பிராந்திய கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK) பிரதிநிதியாவார்.

இந்த ஜி2 மோசடி (இது இவ்வாறு அழைக்கப்படும் நிலைக்கு வந்திருக்கிறது) முன்னனி பெருநிறுவன பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும், பெருநிறுவன தரகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு கூலிபேர தொடர்பையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. ராஜாவின் இராஜினாமாவிற்குப் பின்னர் வெளிப்பட்ட செய்திகளின்படி, பணத்திற்குக் கைமாறாக பத்திரிகை ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் அவர்களின் செல்வசெழிப்பான வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான கதைகளையும், கருத்துகளையும் வெளியிடுவதற்காக அவர்களுக்கும் பெறுநிறுவன தரகர்களுக்கும் இடையில் நடந்த பல பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் அரசாங்க வருமான வரித்துறை ஆய்வாளர்களிடம் உள்ளன.

ஜி2 மோசடியை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (JPC) நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்து, இந்தியாவின் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியான இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியும், ஏனைய எதிர்கட்சிகளும் நாடாளுமன்றம் நடத்துவதிலிருந்து கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அரசாங்கம் ஒரு பொதுக் கணக்குக் குழுவை நியமித்தது. ஆனால் பாராளுமன்ற எதிர்கட்சியாளர்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவைப் போன்று அமைச்சர்களை அதன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அதிகாரம் பொதுக் கணக்கு குழுவிற்கு இல்லை என்பதை உடனடியாக குறிப்பிட்டுக் காட்டின.

2004இல் தேசிய பதவியிலிருந்து வெளியேறியதில் இருந்தே பிஜேபி ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் RSSக்கும், (நீண்டகாலமாக பல பிஜேபி-க்கு தொண்டர்களையும், முன்னனி தலைவர்களையும் அளித்து வரும் இந்து ஐக்கியத்திற்கான அரசியல்சாரா அமைப்பு போன்று வெளிவேடமிட்டிருக்கும் ஓர் அமைப்பு) முஸ்லீம்களை இலக்காக கொண்ட பயங்கரவாத குண்டுவெடிக்குகளை நடத்திய நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டதில் அது அதிர்ந்து போய் இருக்கிறது.

இந்த ஜி2 மோசடியை, ஊழலுக்கு எதிரான ஒரு கவசமாக நிலைநாட்ட பிஜேபி இதை கையில் எடுக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், தரகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இடையில் நடந்த பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் ஒலிநாடாவை வெளியிட வேண்டும் என்று அது முறையிட்டு வருகிறது. ஆனால் ஊழல்களில் பிஜேபி அதன் சொந்த பங்கைக் கொண்டிருக்கிறது. கர்நாடாகவின் பிஜேபி முதலமைச்சர் பி.எஸ். எட்டியூரப்பாவின் அரசாங்கம், முக்கிய நிலங்களை அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுக்கியது என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அவர் தம்முடைய பதவியைத் தக்க வைத்து கொள்ள தற்போது போராடி வருகிறார்.

சுதந்திர இந்தியாவின் ஆறு தசாப்த வரலாற்றில் ஜி2 ஊழலே மிகப் பெரிய ஒன்றாக கூறப்படுகிறது. “பணத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இதை நீங்கள் வேறு எந்த ஊழலுடனும் ஒப்பிட முடியாது. CAGஆல் வெளியிடப்பட்ட பெருமதிப்பையும், அளவையும் கவனித்து பாருங்கள். இந்த ஊழல் ஏனைய அனைத்து ஊழல்களையும் வெட்கப்பட வைத்துவிடும்,” என்று நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலிஅரசாங்கம் தொடக்கத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தபோது இந்த வழக்கில் தலையிட்ட உச்சநீதிமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தவர்தெரிவித்தார்.

ஜி2 அலைவரிசை விற்பனையில் முன்னாள் அமைச்சர் ராஜா என்ன பங்கு வகித்தார் என்பது உட்பட அதன் மீது ஒரு கிரிமினல் புலனாய்வைத் தொடங்கி இருக்கும், இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை வியாழனன்று நடந்த விசாரணையில் ராஜாவைக் கேள்வி கூட கேட்கவில்லை என்பதற்காக கங்குலியும், அவரின் சகாவான மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியான ஜி.எஸ். சிங்வியும் சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தனர். “சட்டவிரோதமான நடவடிக்கை முகத்திற்கு முன்னால் வெளிப்படையாக இருக்கையில், “புதரைச் சுற்றிக் கொண்டிருக்கும் மத்திய புலனாய்வு ஆணையத்தை" நீதிபதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

தேசிய முற்போக்கு கூட்டணியின் ஒரு முக்கிய கூட்டாளியும், தென்மாநிலமான தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான திமுக-வில் தலிச் சமூகத்தைச் சேர்ந்த (அல்லது முன்னர்-தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த) ராஜா வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்பட்டார். மாஃபியா போன்ற பாணியில் திமுக-வை ஆக்கிரமித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. கருணாநிதியின் குடும்பத்தோடு அவருக்கிருந்த நெருங்கிய மற்றும் பணிவான இணக்கத்தின் விளைபொருளாக ராஜாவின் எழுச்சி இருந்தது.

இந்தியாவில் தலித் மக்கள் காட்டுமிராண்டித்தனத்தினாலும், சமூக அவமதிப்புகளாலும் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜாவின் செல்வாக்கு வீழ்ந்திருப்பதானது ஓர் ஊழலின் பரிதாபகரமான அடையாளமாகவும் இருக்கிறது. இந்த குட்டி-முதலாளித்துவ அடுக்கு இந்தியாவின் சீர்கெட்ட உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து இலாபம் தேடவும், அதற்குள்ளேயே தன்னைத்தானே இணைத்துக்கொள்ளவும் அதன் தலித் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டது. நீண்டகாலமாக அரசியலில் காலூன்றி இருக்கும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பதவியில் ஏறுவதென்பது, ஒட்டுண்ணித்தனத்தாலும் வெளிப்படையான திருட்டுத்தனத்தாலும் செல்வத்தை அபகரிப்பதற்கான கருவியாகவே ஆகியிருக்கிறது.

ராஜாவின் இராஜினாமாவோடு ஜி2 ஊழல் முடிந்துவிடும் என்று தேசிய முற்போக்கு கூட்டணி நம்பியது. ஆனால் வெளியான ஊழலின் படுமோசமான அளவு, இந்திய அரசியலமைப்பையே கூட அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருதலைபட்சமாக உரிமங்கள் அளிக்கப்பட்ட தன்மையானது, சந்தேகத்திற்கு இடமின்றி சில சக்திமிக்க நலன்களுக்கு கோபமூட்டியது.

காங்கிரஸ் கட்சி மற்றும் தே.மு.கூட்டணி அரசாங்கத்தின் சில குறிப்பிட்ட கவலைகள் என்னவென்றால், ஜி2 உரிம ஊழலை மூடிமறைக்கும் முயற்சியில் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் சிக்குகிறார் என்பது தான்.

தொலைதொடர்புகள்துறை மந்திரி ராஜாவிற்கு எதிராக உடனடியாக ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பிரதம மந்திரி மன்மோகன்சிங் ஏன் முயலவில்லை என்பதற்கு விளக்கும் கேட்டு அவருக்கு இந்திய உச்சநீதிமன்றம் நவம்பர் 18இல் கேள்வி எழுப்பியது.

ஜி2 அலைவரிசை விற்பனை தொடர்பாக சட்டமுரண்பிழை செய்தமைக்காக ராஜாவிற்கு எதிராக ஒரு வழக்கு தொடர இந்திய சட்டத்தின்கீழ் அனுமதி வழங்க கோரி பிரதம மந்திரிக்கு, 2008 நவம்பரில், தமிழ்நாட்டின் வலதுசாரி எதிர்கட்சி அரசியல்வாதியான சுப்ரமணியசுவாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார். முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி இதுபோன்ற ஒரு மனுவிற்கு மூன்று மாத காலத்திற்குள் பிரதம மந்திரி பதிலளித்தாக வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில், பதிலளிக்க பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு 16 மாதங்கள் எடுத்தது.

காங்கிரஸ் கட்சியும், இந்திய ஊடகங்களும் சிங்கை பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகளில் இருந்து வேறுபட்டவராகவும், பெரும் நாணயமும், கண்ணியமும் கொண்ட ஒரு மனிதராகவும் நீண்டகாலமாக எடுத்துக்காட்டி வருகிறது. உண்மையில், 1990களின் முதல் பாதியில் இந்தியாவின் நிதிமந்திரியாக இருந்த சிங், “காங்கிரஸ் சோசலிசத்தில்" இருந்து (பெரும் பொதுத்துறையுடன் கூடிய தேசியளவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம்) இந்தியாவை உடைப்பதிலும் மற்றும் "சந்தை-சார்ந்த" “வியாபாரங்களுக்கு ஆதரவான" கொள்கைகளைக் கைக்கொள்வதிலும் முக்கிய வடிவமைப்பாளராக இருந்தார். இந்த கொள்கைகள் தான் இந்தியாவை அன்னிய முதலீட்டிற்கான காந்தமாக மாற்றியது. அத்துடன் இது கிராமப்புற இந்தியாவை நெருக்கடிக்குள் மூழ்கடித்து, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையை அதிகரித்திருந்த போதினும், இந்த கொள்கை தான் ஒரு குறுகிய அடுக்கை செழிப்பூட்டியது.

பெரிய வியாபாரங்களின் குறுகிய நலன்களுக்கு உதவ, இந்திய அரசாங்கங்களால் கடந்த இரண்டு தசாப்தங்களில் என்ன மாதிரியான கொள்கைகள் அவர்களால் கொண்டு வரப்பட்டிருந்த என்பதையே இந்த ஜி2 ஊழல் எடுத்துக்காட்டுகிறது.

இந்திய மற்றும் வெளிநாட்டு பெருவணிகங்கள் அவற்றின் நலன்களுக்கான ஒரு மதிப்பார்ந்த மெய்காப்பாளராக, சிங் மீது மதிப்பைக் கொண்டுள்ளன என்பதற்காக தானே தவிர, இந்திய மக்கள் மத்தியில் இருக்கும் சிங்கின் செல்வாக்கினால் அவர் அந்த பதவியில் இல்லை. அவர் ஒருபோதும் முக்கிய தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கவில்லை. அவர் பிரதம மந்திரியாக இருக்க முடிகிறதென்றால், அது ஓர் நியமிக்கப்பட்ட அமைப்பாக அனைத்து விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்காக இருந்து கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் அவர் ஓர் இடத்தைக் கொண்டிருக்கும் தகுதியால் தான்.

இந்திய உணவு-தானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படாமல் வீணாகும் உணவு-தானியங்களை ஏழைகளுக்கு குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ வினியோகிப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறைகூவல் இடுவதற்கு சிங்கின் தலைமையிலான அவருடைய அரசாங்கம் செயல்பட்ட போது, இந்திய மக்கள் மீதான சிங்கின் இரக்கமற்ற புறக்கணிப்பு சமீபத்தில் வெளிப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் போதிய ஊட்டச்சத்தைப் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உணவு வீணானாலும் பரவாயில்லை என்பதில் சிங் உறுதியாக இருந்தார். அதை இலவசமாக கொடுப்பதோ அல்லது மலிவாக விற்பதோ, விவசாயிகளுக்கு "ஊக்கத்தை இழக்கச் செய்யும்" என்று அவர் கூறி வாதிட்டார்.