World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thanksgiving in America

US corporations shatter profit records

அமெரிக்காவில் நன்றிவழங்கல்

அமெரிக்க பெருநிறுவனங்கள் இலாப சாதனைகளை முறியடிக்கின்றன

Tom Eley
25 November 2010

Back to screen version

அமெரிக்க பெருநிறுவனங்கள் மூன்றாவது காலாண்டில் 1.659 டிரில்லியன் டாலர்கள் இலாபமீட்டியுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்பு தான் இத்தகையதொரு சாதனை நிகழ்த்தப்பட்டதாக செவ்வாயன்று வெளியான வர்த்தகத் துறை அறிக்கை ஒன்று தெரிவித்தது. தொடர்ந்து ஏழாவது முறையாக “வரலாற்றின் மிக வேகமான விகிதங்களில்” இலாப வளர்ச்சி எட்டப்பட்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்தது.

“தடையற்ற சந்தையும்” தனியார் வணிகங்களும் மட்டுமே தேசத்தின் 9.6 சதவீதமாய் இருக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை மறுபக்கமாய் திருப்ப முடியும் என்று ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரே வகையாய் ஊக்குவித்து வந்த பொய்யை மூன்றாம் காலாண்டு இலாப சாதனை அம்பலப்படுத்துகிறது, இன்னுமோர் ஆதாரம் என்பது போல். பெருநிறுவனங்களும் வங்கிகளும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் பணமூட்டையின் மீது தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பணம் எல்லாம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அல்ல, மாறாக நிர்வாகிகளின் மற்றும் உயர் பங்குமுதலாளிகளின் பைகளை  நிரப்பத் தான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜூலையில் இருந்து செப்டம்பர் வரையான காலத்தில் கிட்டியிருக்கும் இந்த இலாப மழை 2006 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (நிதித்துறை கனவான்களின் பண வெறியுடனான ஊகம் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை பெருமந்த நிலை காலத்திற்குப் பிந்தைய மோசமான பொருளாதார நெருக்கடியை நோக்கித் தள்ளிச் சென்று கொண்டிருந்த அந்த சமயத்தில் தான்) எட்டப்பட்ட 1.655 டிரில்லியன் டாலர்கள் என்னும் பழைய சாதனையை விஞ்சியிருக்கிறது.

அதற்குப் பின்விளைந்த 2008 இலையுதிர்காலத்தில் வெடித்த நிதி நெருக்கடி உலக நிதி அமைப்புமுறையையே ஒட்டுமொத்தமாய் நிலைகுலையச் செய்ய அச்சுறுத்தியது. இதற்கு பதிலிறுப்பாய், உலகத்தின் அரசாங்கங்கள் எல்லாம் (அமெரிக்கா தான் முன்னணியில் நின்றது) பேரிடரைப் பயன்படுத்தி பொதுச் சொத்துகளில் இருந்த பல பத்து டிரில்லியன் கணக்கான தொகைகளை நெருக்கடியை முடுக்கி விட்ட அதே நிதி நிறுவனங்களின் கைகளிலேயே ஒப்படைத்தன.

நிதித்துறை மற்றும் பெருநிறுவன உயரடுக்கை பிணையெடுக்கும் புஷ் மற்றும் ஒபாமாவின் நடவடிக்கை செல்வந்தர்களின் தனிச் சொத்துகளை பாதுகாக்கும் தனது நோக்கத்தை சாதித்திருக்கிறது என்பதற்கான சமீபத்திய அடையாளமே மூன்றாவது காலாண்டில் அமெரிக்க பெருநிறுவனங்கள் ஈட்டியிருக்கும் இந்த வானளாவிய இலாபம் ஆகும்.

*சென்ற நிதி ஆண்டில் 450 மிகப்பெரும் பெருநிறுவனங்களில் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர கொடுப்பனவுகள் 11% அதிகரிப்பு கண்டிருந்ததாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்திருந்தது. ஒட்டுமொத்தமாக, சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள், பங்குவாய்ப்புகள் மற்றும் பிற ஊக்கத்தொகைகள் அனைத்தும் சேர்த்த சராசரியான ஊதியம் 2009ல் மூன்று சதவீதம் வரை அதிகரித்து 7.3 மில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. பங்குதாரரின் வருவாய் 29 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

* 35 பெரிய வங்கிகள், முதலீட்டு வங்கிகள், சாகச நிதிகள் (ஹெட்ஜ் பண்டு), பண மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை மையங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 2010ல் சாதனை அளவாக 144 பில்லியன் டாலர் தொகையை ஊதியமாய் பெற இருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் அக்டோபர் மாத கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்தது.

* சொத்துமதிப்பில் முன்னணியில் இருக்கும் 400 அமெரிக்கர்களின் மொத்த சொத்து மதிப்பு 2010 ஆம் ஆண்டில் 8 சதவீதம் வரை உயர்ந்து 1.37 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்திருப்பதாக போர்ப்ஸ் இதழ் கூறுகிறது. இது 1.2 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகமானதாகும். தொழிலாள வர்க்கத்தை, அதாவது தன்னை பராமரிக்க உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பரந்த பெருவாரியான மக்களை, வறுமையில் தள்ளுவதன் மூலமே இந்த பரந்த செல்வம் சாத்தியமாகி இருக்கிறது.

* 2009 ஆம் ஆண்டில், அனைத்து அமெரிக்க வீடுகளிலுமான 15 சதவீதம் பேர், அதாவது சுமார் 50 மில்லியன் மக்கள் ஆண்டு முழுவதிலுமோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ போதுமான உணவுக்கும் வழியின்றி இருந்தனர் என்று அமெரிக்க விவசாயத் துறையின் (USDA) சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள் வாழும் வீடுகள் தொடர்ந்து உணவிற்கு வழியற்ற நிலையிலேயே கழிக்க நேர்ந்தது.

* கடந்த வருடத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதி காலத்திலேனும் சாதனை அளவாய் 49.9 மில்லியன் வயதுவந்த அமெரிக்கர்கள் சுகாதாரக் காப்பீடு இன்றி இருந்தனர். இது 2008 ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 46 மில்லியன் அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (CDC) இருந்தான ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த வயதுவந்தோரில் இப்போது காப்பீடு இல்லாதவர்கள் 26.2 சதவீதமாகி விட்டனர். இது நான்கில் ஒருவருக்கும் அதிகமான எண்ணிக்கையாகும். இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த அளவை விட 24.5 சதவீதம் அதிகம்.

* அமெரிக்க தொழிலாளர்களின் சராசரியான வருடாந்திர ஊதியங்கள் 2009 ஆம் ஆண்டில் 457 டாலர் வரை குறைந்தன. வருடாந்திர ஊதிய நடுவன் மதிப்பு 247 டாலர்கள்  குறைந்து 26,261 டாலர்களாய் சரிந்தது என்று சமூக பாதுகாப்பு அமைப்பின் ஒரு சமீபத்திய தரவு தெரிவிக்கிறது.

* சுமார் 44 மில்லியன் அமெரிக்கர்கள் 2009 ஆம் ஆண்டில் வறுமையில் வாழ்வதை அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அமைப்பு கண்டது. இது தான் பதிவேடுகளில் இருப்பதில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும், ஒரு வருடத்தில் 3.8 மில்லியன் அதிகரித்திருக்கிறது.

சுமார் 19 மில்லியன் அமெரிக்கர்கள் 2009 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ வறுமை மட்டத்தில் பாதியாக வரையறுக்கப்பட்ட அதீத வறுமையில் உழன்று கொண்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஒரே வருடத்தில் 11 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த ஒரு சோற்றுப் பதம் (இதே போன்ற பல புள்ளிவிவரங்களைக் காட்டலாம்) நிதியத்துறையின் ஒரு சிலர் ஏறக்குறைய மக்களின் நலன்களைப் பலியிட்டு விழுங்கிக் கொண்டிருப்பதான சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. ஆனாலும், அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியிருக்கக் கூடிய இந்த யதார்த்தமானது உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் சேவகர்களின் பசியை அதிகப்படுத்தவே செய்திருக்கிறது.

வெளியேறவிருக்கும் 111வது நாடாளுமன்றம், செல்வந்தர்களுக்கான இருவருட கால சொத்து மறுவிநியோகத்தில் இறுதி வேலைப்பாடுகளை செய்ததை விடுமுறை பருவத்தில் கண்டோம். மிகப் பணம்படைத்த அமெரிக்கர்களுக்கு புஷ் சகாப்தத்தின் வருமான வரி வெட்டுகள் நீட்டிக்கப்படுவது என்பது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று.

நவம்பர் 30 அன்று, நன்றிவழங்கல் விடுமுறை தினத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின்மையால் 1.2 மில்லியன் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பற்றோருக்கான சலுகைகள் காலாவதியாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்குள்ளாக இந்த எண்ணிக்கை 2 மில்லியனாகி விடும். பண வருவாய் இல்லாமல் ஏழு தசாப்தங்களின் மிக மோசமான வேலைவாய்ப்புச் சந்தைக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கும் இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பியிருக்கும் ஏழு மில்லியன் குழந்தைகளின் தலைவிதி குறித்து நாடாளுமன்றத்தை நிரப்புகிற இந்த மில்லியனர்கள் மற்றும் பன்மில்லியனர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

இந்த கொள்கைகளின் ஒரு விளைவு, முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள், வேலைகளில் இருப்பவர்களும் கூட இலவச உணவகங்களை நோக்கி திரும்ப தள்ளப்படுகிறார்கள், அதிலும் ”அமோகமான அறுவடை”யுடன் தொடர்புடைய ஒரு நாளன்று குடும்பத்துடன் பாரம்பரியமாகக் கூடிக் கொண்டாடிடும் நாளிலும் கூட. உள்நாட்டுப் போரின் மத்தியிலும் கூட குடியரசில் சாதனை அளவாய் பொருள் வளம் இருந்ததைக் கொண்டாடும் வகையில் 1863ல் ஆபிரகாம் லிங்கனால் உருவாக்கப்பட்ட ஒரு தேசியக் கொண்டாட்டமான நன்றிவழங்கல் தினத்தில், உதவி வேண்டி சாதனை அளவிலான கோரிக்கைகள் வந்திருப்பதாக நாடெங்கிலும் இருக்கும் தொண்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சமூகப் பிளவின் இன்னொரு பக்கத்தில் பேராசையின் கூச்சமற்ற களிப்பாட்டம் நடக்கிறது. சமீபத்தில் நியூயோர்க் டைம்ஸில் வெளியான புதன் சிறப்புக் கட்டுரையில் (”ஆரவாரத்தின் அறிகுறிகள், பணப்பைகள் வெளிவருகின்றன, வோல் ஸ்ட்ரீட் கொண்டாடுகிறது (“Signs of Swagger, Wallets out, Wall Street Celebrates.”)) இது ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.  அழகுக்கான அறுவைச் சிகிச்சை தொடங்கி உயர்ந்த விலை கொண்ட கலைப்பொருள் ஏலங்கள் வரை, பத்தாயிரக்கணக்கான டாலர்கள் செலவு வைக்கக் கூடிய ஹேம்ப்டன்களின் வாடகை இல்லங்களில் இருந்து பிரம்மச்சாரிகளின் விருந்து நிகழ்ச்சிகள் வரை “வோல் ஸ்ட்ரீட்டின் பணம்படைத்த உயர்தட்டினர் மீண்டும் இயல்பான சுவாசத்திற்கு திரும்பியிருப்பதாக”அந்த கட்டுரை கூறுகிறது. இந்த ஒட்டுண்ணித்தனமான சமூக அடுக்கினால் நவீன கால பிரபுத்துவத்தால் சமூகத்தின் மீதும் பொருளாதாரத்தின் மீதும் இடப்படும் கழுத்தைநெரிக்கும் பிடியானது ஒரே தடவையில் மொத்தமாய் நொறுக்கப்பட வேண்டும்.