World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stench of the police state at US airports

அமெரிக்க விமான நிலையங்களில் போலிஸ் அரசின் துர்நாற்றம்

David North and Patrick Martin
23 November 2010

Back to screen version

பத்துமில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் நன்றிவழங்கல் வார இறுதியை செலவிடுவதில் பரபரப்பாய் இருக்க, அவர்கள் கூட்டரசின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தினால் நிறுவப்பட்டிருக்கும் புதிய ஆட்சிநிர்வாகமுறையை நேருக்குநேர் காண இருக்கிறார்கள். 70க்கும் அதிகமான முக்கிய விமானநிலையங்கள் முழு உடல் சோதனைக் கருவிகளை நிறுவியுள்ளன. இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்பின்றி தெரிவு செய்யப்படும் பயணிகள் நிர்வாண சோதனைக்கு சமமான மின்னணு சோதனைக்கு கட்டாயம் ஆட்பட்டாக வேண்டும். இந்த சோதனையை மறுக்கும் பயணிகள் மிக ஆழமான மனித வழி உடல் சோதனைக்கு ஆட்படுத்தப்படுவார்கள். இதில் அந்தரங்கமான பகுதிகளுக்குள் உள்ளங்கை பகுதியைக் கொண்டு தேடுவது வரை இருக்கும்.

அந்தரங்க உரிமைகளுக்குள் ஊடுருவுவதையும் பயணிகள் ஏச்சுக்கு ஆளாவதையும் குறித்து ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. ஒரு தேடலின் போது ஒரு விமான ஊழியை அவரது செயற்கை மார்பகத்தை காட்டும்படி ஆனது. 12 வயதிற்கு கீழான சிறுவர்களிடம் பொதுவாக தீவிர தேடுதல் நடத்தப்படுவதில்லை என்கிற நிலையில் சால்ட் லேக் சிட்டியில் ஒரு 8 வயது பையன் தனது சட்டையைக் கழற்ற நிர்ப்பந்திக்கப்பட்டான். இத்தகையதொரு தேடுதல் வேட்டையின் போது மிச்சிகனின் லேன்சிங் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்புக் கல்வி ஆசிரியர் ஒருவரின் கீழ்ப்பகுதியில் சிறுநீர் சேகரப் பையின் மூடி உடைந்து போய் அவர் அவமானப்பட நேர்ந்தது. இந்த தேடுதல்கள் பாலியல்ரீதியான குறும்பின் ஒரு வடிவம் என பல பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விமானநிலையங்களில் வருடத்தின் மிக அதிக பரபரப்பான நாளாக இருக்கும் நவம்பர் 24, புதன்கிழமை அன்று உடல் பரிசோதகர்களின் உத்தியோகபூர்வமற்ற புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மக்களின் வெறுப்பின் ஆழத்தை விளங்கப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அப்படியொரு புறக்கணிப்பு நடப்பது குறித்து ரொம்பவும் கவலையடைந்த TSA இயக்குநர் ஜோன் பிஸ்டோல் அப்புறக்கணிப்புக்கு எதிராக திங்களன்று ஒரு வேண்டுகோளை வெளியிட்டார். இப்புறக்கணிப்பு நடவடிக்கை “தங்களது வீட்டுக்குச் சென்று தங்களது விருப்பமானோரைக் காணச் செல்கிற மக்களை கட்டிப் போட்டு விடும்” என்றார் அவர்.

நவம்பர் அன்று TSA ஆல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கைகள் அடிப்படை அரசியல்சட்ட உரிமைகள் மீதான ஒரு தாக்குதலைக் கொண்டிருக்கிறது. எல்லாப் பயணிகளையுமே பயங்கரவாத அச்சுறுத்தல்களாய் அணுகும் காரணமற்ற தேடுதல்கள் மற்றும் பறிமுதல்களை தடைசெய்யும் நான்காவது திருத்தத்தை இந்த ஆங்காங்கான முழு உடல் மின்னணு சோதனைகளும் மற்றும்/அல்லது கைவழி பரிசோதனைகளும் எல்லா வகைகளிலும் மீறுகின்றன. இத்தகைய வழிமுறைகளுக்கான காரணம் அவற்றுக்கே வெளிச்சம். ஒரு விமானப் பயணியிடம் இத்தகைய மிகவும் அத்துமீறலான வகையில் தேடுதல் நடத்துவது அவசியமென்றால், அதே நியாயம் தொடர்வண்டிகள், பேருந்துகள், குகைப்பாதைகள் போன்ற வெகுஜனப் போக்குவரத்துக்கான மற்ற வடிவங்களுக்கும், பேரங்காடிகள், திரையரங்குகள், அல்லது ஏராளமான மக்கள் கூடும் வேறு எந்த இடங்களுக்கும் கூட பொருந்தும். விளைவு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு போலிஸ்-அரசு சூழல் தான் உருவாகும்.

சென்ற கிறிஸ்துமஸில் ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெட்ராயிட் நோக்கி சென்ற விமானத்தில் தனது கால்சட்டையில் வெடிபொருட்களுடன் இருந்த ஒரு நைஜீரியர் விமானத்தைக் கடத்த முயற்சி செய்தார் என்பதை புதிய தேடுதல் வழிமுறைக்கான காரணமாகக் காட்டுகிறார் பிஸ்டோல். இத்தகைய காரணங்கள் ஒரு மோசடி வேலை. 2001ன் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடங்கி மிக சமீபத்தில் ஏமனில் இருந்தான சரக்கு வரத்துகள் குறித்த திகில்பீதி வரை ஒட்டுமொத்த “பயங்கரவாதத்தின் மீதான போருமே” அமெரிக்க பாதுகாப்பு எந்திரத்தின் விளங்காத மிக சந்தேகத்திற்குரிய பாத்திரத்தின் குணாதிசயத்தைக் கொண்டுள்ளது. பயங்கரவாத தூண்டுதல்களை தடுப்பதைக் காட்டிலும் அவற்றை ஊக்குவிக்கிற வகையிலும் வழிசெய்து தரும் வகையிலும் தான் இந்த அமைப்பு நடந்து கொள்கிறதோ (இதன் பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட முடியும்) என்று கருதும் வகையிலேயே இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.

உதாரணமாக, இந்த “கால்சட்டை குண்டு” உமர் பாரூக் அப்துல்முதாலப்பின் தந்தையான பிரபலமான நைஜீரிய தொழிலதிபர், தனது மகனுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு முன்பே துப்புக் கொடுக்க முயன்றிருந்த நிலையிலும் கூட, உமர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டிருந்தார். தந்தை அபுஜாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று பார்த்து, தகவலறிக்கை வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறையில் பதிவாகி இருக்கிறது. “உமர் பரூக்” என்கிற பெயருடன் இருக்கக் கூடிய ஒரு நைஜீரியரைப் பயன்படுத்தி ஏமனிலிருந்து ஒரு பயங்கரவாத சதித் திட்டம் தீட்டப்படுவது குறித்த விவரங்களை அமெரிக்க உளவுத் துறை முன்னமே கண்டுபிடித்திருந்த நிலையிலும் கூட, இது எந்த ஒரு எச்சரிக்கைக்கும் தூண்டவில்லை. இந்த விவகாரத்தின் முடிவுகள் இரண்டுதிசையாய் செல்கின்றன: ஏமனில் அமெரிக்க இராணுவ/உளவு செயல்பாடுகள் பெரும் அதிகரிப்பு காண்கின்றன, இப்போது அமெரிக்க விமானநிலையங்களில் உள்நாட்டு பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் அபத்தமான எரிச்சலூட்டும் நடைமுறைகள் பெருகிச் செல்வதற்கும் மக்களை கூடுதலாய் “பாதுகாப்பாக” உணரச் செய்வதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. உண்மையில், அமெரிக்காவில் ஒரு போலிஸ் அரசுக் கட்டமைப்பாய், பாதுகாப்பு எந்திரத்தின் அதிகாரத்தை பாரிய அளவு அதிகரிப்பதன் பாகமே இவை. 9/11 தொடங்கி (முதலில் புஷ்ஷின் கீழ், இப்போது ஒபாமாவின் கீழ்) “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது உள்நாட்டில் ஒற்றுவேலையை விரிவுபடுத்துவது, குற்றச்சாட்டுகள் இன்றி காலவரையின்றி கைது செய்து வைத்திருப்பது, உலகெங்கிலுமான எவரொருவரையும், அது அமெரிக்கக் குடிமகன்களே ஆனாலும், படுகொலை செய்வதற்கு நியாயம் கற்பிப்பது, அத்துடன் சித்திரவதைகளை செயல்படுத்துவது என எதற்கும், எல்லாவற்றுக்குமான நியாயமாய் காட்டப்படுகிறது. எல்லைகளிலும் விமானநிலையங்களிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் அச்சம் மற்றும் பயமுறுத்தலின் சூழல் என்பது இதன் பாகமே. 

புதிய நடைமுறைகள் குறித்து பரவலாக எழுந்திருக்கும் புகார்களுக்கு ஒபாமா நிர்வாகத்தின் பதிலிறுப்பைப் பார்த்தால், ஒபாமா ஒரு சில மாதங்களுக்கு முன்னால் தானே இயக்குநரை நியமித்த ஒரு முகமையை தடுத்து நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகைக்கு அதிகாரம் இல்லாததைப் போன்று தோற்றமளிக்கிறது. “கிறிஸ்துமஸ் தின வெடிகுண்டு சம்பவத்தில் நாம் கண்டதைப் போன்ற அச்சுறுத்தல் வகைகளுக்கு எதிராக தாங்கள் இப்போது செயல்படுத்தியிருக்கும் நடைமுறைகள் தான் இப்போதைக்கு தாங்கள் திறம்பட்டதாய் கருதும் ஒரே வழிவகை என்று TSA பயங்கரவாதத் தடுப்பு நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் என்னிடம் சுட்டிக் காட்டியிருக்கிறது” என்று ஒபாமா அறிவித்தார்.

இந்த தேடுதலுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பை சுரண்டிக் கொள்ளத் தலைப்படும் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினர் தங்களது பங்கிற்கு விமான நிலையங்களில் விரிவான இனரீதியான வகைப்படுத்தலை மாற்றாக ஆலோசனை கூறி வருகின்றனர். “சமூகபாதுகாப்புக்காக” பாட்டிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்களை எல்லாம் தீவிரமான தேடுதலுக்கு ஆட்படுத்த வேண்டியதாகிறது என்ற அவர்கள் அதற்குப் பதிலாய் இலக்குகளை வகைப்படுத்தும் (உதாரணமாக இளைஞர்கள், வெள்ளை இனத்தவரல்லாதோர் போன்று) இஸ்ரேல் பாணி வழிமுறைகளை பயன்படுத்த ஆலோசனையளித்தனர். இந்த நிச்சயமான இனவாத அணுகுமுறை TSAவின் கேள்விகேட்க முடியாத அதிகாரத்துவ நபர்களுக்கு பச்சை சமிக்ஞையை அளிப்பது என்னும் ஒபாமாவின் அதே முடிவுக்குத் தான் கொண்டு செல்கிறது.

முதலாளித்துவ அரசின் அதிகாரத்தை அதன் மிகவும் அடக்குமுறையான வடிவத்திற்கு, அதாவது மார்க்சிச வார்த்தைகளில் சொல்வதென்றால் “ஆயுதபாணியான மனிதர்களாக” விரிவுபடுத்துவதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பெருவணிகக் கட்சிகளும் உறுதிப்பாட்டுடன் உள்ளன. 9/11 முதலான பத்து வருடப் போர்கள் அமெரிக்க சமுதாயத்தை பெருகிய அளவிலான விகாரமான நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன. இப்போது அமெரிக்க அரசாங்கம் அபு கரீப் மற்றும் குவாண்டனமோ வளைகுடாவின் வழிமுறைகளையும், வன்முறை மற்றும் அவமதிப்பையும் அமெரிக்க மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கும் கொண்டு வருகிறது.

இந்த போலிஸ்-அரசு வழிமுறைகள் எல்லாம் “பயங்கரவாதத்திற்கு” எதிராக செலுத்தப்படுவன அல்ல. மாறாக நாளுக்கு நாள் வெகுஜன விரோதத்தை சம்பாதித்து வரும் நிதிய உயரடுக்கின் கொள்கைகளுக்கு வரும் எந்த எதிர்ப்பின் மீதும் தான் திருப்பப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுகின்ற, சமூக வேலைத்திட்டங்களை கிழித்தெறிகிற தங்களது கொள்கைகள் வெகுஜன எதிர்ப்புக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பிரிவுகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. இதற்கு பாரிய அடக்குமுறை என்பதைத் தவிர அவர்களிடம் வேறு பதில் இல்லை.

இதுதவிர, உள்நாட்டில் போலிஸ்-அரசு நடவடிக்கைகள் என்பவை வெளியே புதிய போர்களுக்கும் ஏகாதிபத்திய சாகசங்களுக்கும் தயாரிப்பு செய்வதில் அதிமுக்கியதொரு பாகமாகும். ஒவ்வொரு “பயங்கரவாத அச்சுறுத்தலும்” உலகின் முக்கியமான பிராந்தியங்களில், பொதுவாக ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மீது உட்கார்ந்திருக்கின்ற அல்லது முக்கியமான கப்பல் வழித்தடங்களை இணைக்கின்ற பிராந்தியங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை ஊக்குவிப்பதுடன் பிணைந்திருக்கிறது.

இப்படியெல்லாம் சொல்வதனால், பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் அபாயமே இல்லையென்று சொல்வதாய் அர்த்தமல்ல. மாறாக அத்தகைய அபாயத்தின் ஊற்றுக்கண்ணே அமெரிக்க அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. இதுவே தனது செயல்பாடுகள் மூலம் உலகின் எங்கோ மூலையில் இருக்கும் பகுதிகளிலும் எதிர்ப்பையும் ஆழமான கோபத்தையும் வளர்த்தெடுக்கிறது. பயங்கரவாதம் குறித்து இடைவிடாது பீதியை விற்பனை செய்தாலும், அரசியல் ஸ்தாபனத்திலோ அல்லது ஊடகத்திலோ இருக்கும் ஒருவர் கூட அந்த அபாயத்தை கையாளுவதற்கு அவசியமாக இருக்கும் மிக உடனடியான நடவடிக்கையை, அதாவது மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்கா நடத்தும் குருதிபாயும் போர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதை, கூறுவதில்லை. 

இறுதி ஆய்வில், உள்நாட்டிலும் வெளியிலும் போலிஸ்-அரசு வழிமுறைகளை அமெரிக்க ஆளும் உயரடுக்கு பெருகிய அளவில் சார்ந்திருப்பதென்பது ஏகாதிபத்தியத்தையும் ஜனநாயகத்தையும் கூட்டுசேர்ப்பது சாத்தியமில்லாதது என்பதை விளங்கப்படுத்துகிறது. ஆழமான சமூக முரண்பாடுகளால் அமெரிக்க சமுதாயம் கிழித்தெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது. சலுகை பெற்ற உயர் தட்டின் பிரம்மாண்டமான சொத்து அளவுகளுக்கும் பரந்த மக்களின் பெருகி வரும் துயரங்களுக்கும் இடையிலான பிளவு முன்னெப்போதையும் விட மிகப் பெரியதாய் இருக்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது பிரிக்கமுடியாத வகையில், உழைக்கும் மக்களை வேலைகளுக்கும், கண்ணியமான வாழ்க்கைத் தரங்களுக்கும் மற்றும் பொதுச் சேவைகளுக்குமான அவர்களது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அணிதிரட்டுவதற்கான போராட்டத்துடன் பிணைந்திருக்கிறது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைகிற தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாக அமைகிறது.