WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஓய்வூதிய வேலைநிறுத்தங்களை விற்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களுக்குப் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் ஆதரவு
By Alex Lantier
17 November 2010
Use
this version to print | Send
feedback
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக நடந்த அக்டோபர் வேலைநிறுத்தங்களை கணக்கிடவும், அடுத்த தேசிய மாநாட்டிற்கு அதனை தயார்படுத்திக் கொள்வதற்காகவும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA - New Anti-Capitalist Party) கடந்தவாரம் அதன் தேசிய அரசியல் குழு (Comité politique national -CPN) கூட்டத்தை நடாத்தியது. வேலைநிறுத்தங்களை விலை பேசி முடித்த தொழிற்சங்கங்களையும் மற்றும் "இடது" கட்சிகளையும், ஆதரிக்கும் கட்சியின் நிலைப்பாட்டை CPN இன் அறிக்கை மூடிமறைக்க விரும்புகிறது.
கடந்த மாத வேலைநிறுத்தங்களின் தோல்வியும், ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்துவதை உட்கொண்டிருக்கும் பெரும் அதிருப்தி நிறைந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட ஒரு நேரடி விளைபொருளாக இருந்தது. சார்க்கோசியுடன் வெட்டுக்கள் குறித்து முதலில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சார்க்கோசியின் அரசியல் அதிகாரத்திற்கு சவால்விடாத தொடர்ச்சியான ஒருநாள் போராட்டங்களை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள், அதன் மூலம் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை ஒடுக்க வேலை செய்தன.
சக்திவாய்ந்த எண்ணெய் மற்றும் துறைமுக தொழிலாளர் வேலைநிறுத்தத்தை பொலிஸ் நசுக்கிய போது, ஒதுங்கி நின்றிருந்த தொழிற்சங்கங்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக எவ்வித தொழிற்துறை சார்ந்த நடவடிக்கையையும் ஒன்றுதிரட்ட மறுத்தன. வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு பெருந்திரளான மக்கள் ஆதரவு தொடர்ந்து கொண்டிருந்த போதினும், தொழிற்சங்கங்களின் மேற்கூறிய நடவடிக்கையால், போராட்டங்களில் கலந்து கொள்வதில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது. சட்டமசோதாவைக் கொண்டு திணித்ததன் மூலமாக அதன் முனைவில் வெற்றி பெற்ற அரசாங்கம், புதிய வெட்டுக்களுக்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது.
NPA இந்த சாதனையையும், அதன் சொந்த பாத்திரத்தையும் ஆவேசமான வாய்ஜாலங்கள் மூலமாக மூடிமறைக்க பார்க்கிறது. “பிரான்சில், ஓய்வூதிய சட்டம் தான் ஒரு பெரும்-மக்கள்விரோத திட்டத்திற்கான முதல் நடவடிக்கையாக இருக்கிறது,” என்று அதன் அறிக்கை அறிவிக்கிறது. “அழிவின் முன்னால், நாம் ஐக்கியப்பட்டு பிரதிபலிப்பைக் காட்டுவோம்! ஓய்வூதியங்களுக்கு எதிரான சட்டத்தின் முன்னால், அந்த சட்டத்திற்கு ஓய்வளிக்க நாம் ஒன்றுபட்டு போராடுவோம்! அதன் பிரகடனத்திற்கு முன்னால், நாம் வழக்கொழிந்துவிட்டதை கூறுவோம்!” என்று அது முழங்குகிறது.
இதுபோன்ற வார்த்தை-முழக்கங்கள் முற்றிலும் வீணானதாக இருக்கின்றன. ஒருசில போராளித்தனமான பணியிடங்களில் மட்டும் வேலைநிறுத்தங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை புறக்கணிக்க சார்க்கோசி திட்டமிடுகிறார். சார்க்கோசியின் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கான அதன் கோரிக்கையை வலியுறுத்தி செய்ய NPA க்கு எந்த வழியும் இல்லை.
மிக முக்கியமாக, சமூக எதிர்ப்பை தொடரச் செய்வதற்கான ஓர் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க NPA விரும்பவில்லை. ஆனால் இதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது முறையிட்டுக் கொள்கிறது. சார்க்கோசியைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான ஓர் அரசியல் போராட்டத்திலும் மற்றும் சோசலிச கொள்கைகளுக்காக போராடும் தொழிலாளர்கள் அரசாங்கம் ஒன்றைக் கட்டியமைப்பதிலும் தொழிற்சங்கங்களிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை NPA மறுக்கிறது என்பது மட்டும் தான் சமூக வெட்டுக்களுக்கு எதிரான புதிய போராட்டங்களில் இருக்கும் அதன் நிலையான முன்னோக்காக இருக்கிறது.
இதில்லாமல், தொழிற்சங்கங்களின் நிர்வாகத்திற்கும், வணிக ஆதரவான "இடது" ஸ்தாபனங்களிற்கும், குறிப்பாக தனது சொந்த தேர்தல் தேவைகளுக்காக சார்க்கோசிக்கு எதிராக பெரும் எதிர்ப்பைத் திருப்பிவிட விரும்பும் சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) NPA முட்டுக்கொடுப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. வேலைநிறுத்தம் முழுவதும், மக்கள் விரோத முறைமைகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு வலதுசாரி கட்சியான PS உடன் சேர்ந்து ஓர் "ஐக்கியவாத" (unitarian) பிரச்சாரத்திற்கான தேவையைக் குறித்தே NPA வலியுறுத்தியது.
வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் தலைமையின்கீழ் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து தொடர வேண்டும் என்று NPA வலியுறுத்துகிறது: “போர்குணம் கொண்ட தொழிற்சங்கங்களால் நம்முடைய பணியிடங்களில் கொண்டு வரப்படும் நடவடிக்கை தான் வெளிப்படையாக இன்றைக்கு பொருத்தமானதாக இருக்கிறது."
ஓய்வூதியங்களை வெட்டுவதை PS ஆதரிக்கிறது என்பதை NPA ஒப்புக்கொள்கின்ற போதினும், சோசலிஸ்ட் கட்சிக்கு அது அளித்து வரும் ஆதரவையும் NPA குறிப்பிடுகிறது: “சோசலிஸ்ட் கட்சி (PS) ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கிறது—அது நல்ல விஷயம் தான்—ஆனால் அது ஒரு தீர்க்கமுடியாத முரண்பாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறது. ஓய்வூதியங்களின் பிரச்சினையைப் பொறுத்த வரையில் PS இன் நிலைப்பாடு அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து வேறுபட்டு இல்லை.”
வணிக சார்பான ஒரு கட்சியான PS ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதும், தொழிலாளர்களின் மற்றும் இளைஞர்களின் மத்தியில் அதன் விருப்பங்களைத் திணிக்க முயல்வதும் உண்மையில் ஒரு நல்ல விஷயம் அல்ல. இது குழப்பங்களுக்கு மட்டும் தான் விதை தூவும். அத்துடன் தொழிலாளர்களின் வர்க்க நனவையும் அது சோர்வடையச் செய்யும். மேலும் தொழிற்சங்கங்கள் விலை போவதற்கும், தொழிலாளர்களுக்கும் சார்கோசிக்கும் இடையிலான ஓர் அரசியல் மோதலைத் தவிர்ப்பதற்கும் தான் அது உதவும். முதலாளித்துவ மக்கள் விரோத அரசியலை நோக்கிய அதன் சொந்த சமரச போக்கிற்காக மட்டும் தான், NPA இனால் இதை வரவேற்க முடியும்.
“தீவிர" கோரிக்கைகள் என்ற அதன் இறுதி வாக்கியத்துடன் NPA அதன் அறிக்கையை முடிக்கிறது. இந்த சூழ்நிலைக்கு "முதலாளித்துவ-எதிர்ப்பு திட்டம் ஒன்று தேவைப்படுகிறது. முக்கிய உற்பத்தி கருவிகளின் மற்றும் நிதி ஆதாரங்களின் சமூக ஒப்புதலும், செல்வச் செழிப்பை மறுபங்கீடு செய்வதும், ஆதாரவளங்களைப் பாதுகாப்பதும், ஏனைய அமைப்புகளுடன் உடைத்து கொண்டு நிற்பதும் தேவைப்படுகிறது" என்று அது எழுதுகிறது.
இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பது ஒரு வாசகரின் முடிவிற்கே விடப்படுகிறது. ஒருபுறம் மார்க்சிஸ்டுகளால் நெறிப்படுத்தப்பட்ட சோசலிசப் புரட்சியின் ஒரு பழைய கோரிக்கையான வங்கிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகளின் உரிமை சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுமக்களுக்கான கோரிக்கை நிற்கிறது. எவ்வாறிருப்பினும், NPA விடமிருந்து வருவோமேயாயின் இது வெறுமனே ஓர் அரசியல் புனைவாக மட்டுமே இருக்கிறது: இந்த கோரிக்கைகளை NPA முன்னெடுத்து கொண்டே, வேலைநிறுத்தங்களை உடைத்து கொண்டிருந்த பொலிஸிற்கு எதிராக தொழிலாளர்களை ஆதரித்து ஒன்றுமே செய்யாத தொழிற்சங்கங்களின் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டுடன் ஒரு புரட்சியை நடத்த முடியும் என்று அது அறிவிக்கிறது.
பொய்களை ஒன்றுபடுத்தி, அரசியல் ஸ்தாபனத்தின் பாதுகாப்புடன் போலி-புரட்சிகர வாய்ஜாலங்களை அள்ளிவிடுவது தான் உண்மையில் NPA இன் தனித்தன்மையாக இருக்கிறது.
தொழிலாளர்களின் தொழிற்சாலை போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்களே சட்டப்பூர்வ தலைமையை வகிக்கக்கூடியவை என்ற நிலைப்பாட்டை NPA படிப்படியாக எடுத்துள்ளது—தொழிற்சங்கங்களின் உத்திகளை எப்போதாவது விமர்சிப்பதன் மூலம், ஏமாற்ற விரும்பும் ஒரு நிலைப்பாடு. எவ்வாறிருப்பினும், தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் ஒதுக்கிவிட்டுவிட்டு ஆளும் ஆட்சியுடன் சேர்ந்து சமூக வெட்டுக்களுக்குத் திட்டமிடும் நிலைமைகளின் கீழ், இது தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவ அரசிற்கு அடிபணியச் செய்வதையே குறிக்கிறது.
நவம்பர் 11இல் வெளியான “Must we separate the political and the social” எனும் கட்டுரையில் NPA இந்த பிரச்சினையின் மீதான அதன் நிலைப்பாட்டை விளக்குகிறது. அது "பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள தொழிலாளர்களின் ஒரு பிரிவைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பதற்காக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை (PCF) விமர்சித்தது. அது குறிப்பிட்டதாவது: கட்சிகள் தேர்தல்களையும், அரசியல் அமைப்புகளையும் கையாள்கின்றன. தொழிற்சங்கங்களோ வீதிகளில் இறங்கி, சமூக போராட்டங்களில் ஈடுபடுகின்றன. இது பல்வேறு விதத்திலும் கேள்விக்குரியதாக உள்ளது.”
எவ்வாறிருப்பினும், அதை மீண்டும் உறுதி செய்வதற்காக மட்டுமே அடுத்த சில வரிகளில் NPA இந்த பிரிவுகளுக்குக் கேள்வி எழுப்புகிறது: “தொழிற்சங்க சுயாதீனம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியமான சமூக உரிமையாகும்—அது தொழிற்சங்கங்களின் நோக்குநிலையை முடிவு செய்கிறது என்பது தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயே இருக்கிறது.”
கடந்த ஆண்டு தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு தொழிற்சங்கத்தின் (CGT) ஒரு கூட்டத்தின் போது NPA தடுமாற்றத்துடன் அதன் நிலைப்பாட்டை அறிவித்தது. கடந்த ஆண்டின் வாகனத்துறை வேலைநிறுத்தங்களை CGT புறக்கணித்ததைக் குறித்து அதன் சிறிய விமர்சனங்களையும் அது கைவிடும் என்பதற்கு அந்த கூட்டத்தின் போதே NPA மறு-உத்தரவாதம் அளித்தது.
“NPA-CGT கூட்டம்” எனும் அக்டோபர் 9, 2009 அறிக்கையில் CGT அறிவித்ததாவது: “NPA தன்னைத்தானே ஓர் அரசியல் அமைப்பாக ஒரு செயல்திட்டத்துடன் வெளிப்படுத்துமேயன்றி, அது தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக தன்னைத்தானே நிறுத்த முயற்சிக்காது என்று NPA உறுதியளித்திருக்கிறது. Medef [வணிக கூட்டமைப்பு] மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்குப் பிரதிபலிப்பு காட்டும் ஒருவகையான உடனடி முறையீடுகளில் அது அதன் கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான தொழிற்சங்கங்களின் தற்சார்பான கொள்கையில் NPA தலையிடாது.”
இதுபோன்ற அறிக்கைகள் சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராக போராடும் தொழிலாளர்களை நோக்கிய வர்க்க நிலைப்பாட்டில் NPA கொண்டிருக்கும் அடிப்படை விரோதத்தை மட்டுமின்றி, மாறாக ட்ரொட்ஸ்கிச மரபியத்திற்கு எதிரான விரோதத்தையும் வெளிப்படுத்துகிறது. முன்னர் NPA புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமாக (LCR) இருந்தபோது, பெயரளவிலான ட்ரொட்ஸ்கிச அமைப்பாக இருந்தது. எவ்வாறிருப்பினும் அது ட்ரொட்ஸ்கிச மற்றும் புரட்சிகர மார்க்சிச பாரம்பரியத்தில் இருந்து தன்னைத்தானே விலக்கிக் கொள்ளவே NPA வை அமைத்தது.
CGT இன் 1906 ஆம் ஆண்டு மாநாட்டில் கொண்டு வரப்பட்ட Amiens தீர்மானம் என்பது தான் பிரெஞ்சு தொழிற்சங்க இயக்கத்தில் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் தனித்தனியாக வைப்பதற்கு ஒப்புக்கொண்ட பாரம்பரிய ஆவணமாக இருக்கிறது. அந்த காலகட்டத்தில், சோசலிஸ்ட் கட்சியில் இருந்த நாடாளுமன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு விரோதமாக இருந்த புரட்சிகர தொழிற்சங்கவாதிகளை (revolutionary syndicalists) CGT கொண்டிருந்தது. “அரசியல் கட்சிகள் மற்றும் அரசிடமிருந்து முற்றிலும் சுயாதீனமடைவதற்குத் தேவையான ஓர் உலகளாவிய சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு அந்த தீர்மானம் அழைப்பு விடுத்தது.”
முதலாம் உலக யுத்தம் வெடித்த பின்னரும், 1917 புரட்சியின் போது ரஷ்யாவில் தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், 1906 Amiens தீர்மானத்தில் தங்களின் புரிதல்களை மாற்றிக்கொள்ள மறுத்தவர்களை ட்ரொட்ஸ்கி விமர்சித்தார். உலகம் முழுவதும், அரசு அதிகாரத்திற்காக போராடும் புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சிகளின் தேவை ஏற்பட்டு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
அராஜக-தொழிற்சங்கவாதத்தின் (anarcho-syndicalism) தாக்கத்தின்கீழ் இருந்த பாட்டாளி வர்க்க போராளிகளை வென்றெடுக்க 1923 இல், “The Errors of Principle of Syndicalism” என்பதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “ஒரெயொரு நாட்டை மட்டும் (USSR) விதிவிலக்காக விட்டுவிட்டு, உலகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரம் பூர்ஷூவாக்களின் கைகளில் உள்ளது. இதில் தான், இதில் மட்டும் தான், அதாவது, பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திலிருந்து, அரசு அதிகாரத்தின் அபாயம் இதில் தான் தங்கியுள்ளது. பூர்ஷூவாவின் கரங்களில் இருந்து அடக்குமுறையின் இந்த மிக சக்திவாய்ந்த கருவியைப் பறிப்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று கடமையாக உள்ளது.”
அதற்குப் பின்னர் நிறைய மாறியிருக்கிறது என்பது உண்மை தான்; வர்க்க போராளிகளாக 1920களில் இருந்த அராஜக-தொழிற்சங்கவாதிகளை, வேலைநிறுத்தங்களை உடைக்கும் அரசிற்கு இன்று தந்திரமாக ஆதரவு காட்டும் NPA போன்றவர்களிடமிருந்து ஓர் அரசியல் இடைவெளி பிரிக்கிறது. எவ்வாறிருப்பினும், அந்த அராஜக-தொழிற்சங்கவாதிகளை மார்க்சிசத்தின்பால் வென்றெடுக்க ட்ரொட்ஸ்கி செய்த வாதங்கள் இன்றைய அரசியல் நயவஞ்சகர்கள் வகுத்திருக்கும் கொள்கைகளில் கண்டனங்களாக வாசிக்கப்படுகின்றன. ட்ரொட்ஸ்கிசத்துடன் NPA விற்கு மெல்லிய தொடர்பு இருப்பதைப் போன்றும், மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதைப் போன்றும் காட்டிக்கொள்ளும் அதன் முறையீடுகள் அனைத்தும் வெறும் ஏமாற்று வேலைகளே ஆகும்.
|