WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத் தலைவர் பொப் கிங் வோல் ஸ்ட்ரீட் குறித்து
By Jerry White
19 November 2010
Use
this version to print | Send
feedback
ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஆக்கெர்சன் நியூ யோர்க் பங்குச் சந்தையில் வியாழன் காலையில் ஆரம்ப மணி அடிக்கும்போது அவருக்கு நேர் பின்னால் ஐக்கியக் கார்த் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான பொப் கிங் நின்று கொண்டிருந்தார். GM பங்கு விற்பனை தொடங்கியதும் UAW தலைவர் GM ன் அடையாள முத்திரைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய அரங்கில், ஆர்வத்துடன் கைதட்டி முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன இயக்குனர் குழு உறுப்பினர்களுடன் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டதைக் காண முடிந்தது.
UAW தன்மையை இந்த நிகழ்வு சிறிய, ஆனால் உறுதியான வகையில் நிரூபித்தது. இந்த அமைப்பு முற்றிலும் தொழிலாளர்கள் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது. தொழிலாளர்கள் அமைப்பின் எந்தத் தலைவரும் இத்தகைய நிகழ்வில் பங்கு பெற்றிருக்க முடியாது, அதைப்பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்கவும் முடியாது. ஏனெனில் கூடியிருந்த கூட்டம் GM ன் இலாபங்கள் குறித்து உமிழ்நீர் சுரந்து கொண்டிருந்தது. இந்த இலாபமோ வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது மிருகத்தனத் தாக்குதல்களை நடத்தியதால் முக்கியமாக அடையப்பட்டன.
இச்சூழலில் கிங் பெரிதும் களித்து, Detroit News ஆனது இது ஒரு வரலாற்றுப் புகழ் படைத்த தினம் என்றும் GM பங்குகளுக்கு அதிக தொடக்க விலை கிடைத்துள்ளதை வரவேற்றதாகவும் கூறினார். “இன்று ஒரு புதிய ஜெனரல் மோட்டர்ஸ் பிறந்துள்ளது. வெற்றியடைவதற்கு முற்றிலும் வியத்தகு மாற்றங்களைக் கொண்ட நிறுவனம்” என்றார் அவர்.
இந்தப் புதிய GM எப்படி வெளிப்பட்டது? உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிறுவன எதிர்காலம் பற்றிய குறிப்பில் இது வட அமெரிக்க “செலவு வகைகளை நேர்த்தியாகக் கொண்டுள்ளது” என்று நிறுவனம் விளக்கியுள்ளது. “நிறுவன அடையாள முத்திரை பகுத்தறிவார்ந்த முறையில் புதுப்பிக்கப்பட்டது, தேவையான அடிச்சுவடு உற்பத்தி, வழங்குனர் இணையம் சீரான முறையில் அமைக்கப்பட்டது, ஊதியம் மற்றும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியம் அளிப்பதில் ஊழியர்களுக்கு நேர்த்தியாக வைக்கப்பட்டது, புதிய VEBA விற்கு மணி நேர ஓய்வு பெற்றவர்கள் சுகாதாரப் பாதுகாப்புக் கடமைகளை மாற்றிய வகையில் தொழிலாளர்களுடன் உடன்பாடு ஆகியவற்றைக் கையாண்டு இது சாதிக்கப்பட்டது” என அது கூறுகிறது.
“எமது வாகனங்களில் கிட்டத்தட்ட 43 சதவிகிதம், சீனா, மெக்சிக்கோ, கிழக்கு ஐரோப்பா, இந்தியா மற்றும் ரஷ்யா என்று நாம் குறைவூதிய இடங்கள் என நம்பும் இடங்களில் உற்பத்தியாகின்றன. இப்பகுதிகளில் மொத்தத் தொழிலாளர் வகை செலவினங்கள் அனைத்தும் ஒரு மணித்தியாலத்திற்கு 15 டொலருக்கும் குறைவுதான்” என்று மேலும் கூறியுள்ளது.
இவை அனைத்துமே UAW வின் தீவிர ஒத்துழைப்பு இல்லாமல் சாதிக்கப்பட்டிருக்க முடியாது. அது வோல் ஸ்ட்ரீட், கார்த் தயாரிப்பு முதலாளிகள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் ஆணைகளின் பேரில் கார்த் தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் அனைத்தையும் அடக்கிவிட்டது. மாபெரும் சலுகைகளைக் கொடுக்கவும் UAW உடன்பட்டது. அதில் அனைத்துப் புதிய தொழிலாளர்களுக்கும் ஒரு மணித்தியால ஊதியம் 14 டொலர் எனச் சுமத்தியதும் அடங்கும்—அமெரிக்க தொழிலாளர்களுக்கும் ஆசிய, இலத்தீன் அமெரிக்காவிலுள்ள அவர்களுடைய மிருகத்தனமாகச் சுரண்டப்படும் சக தொழிலாளர்களுக்கும் இடையேயுள்ள ஊதிய இடைவெளியை மூடும் பெருநிறுவன-அரசாங்க மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதி இது.
ஜனாதிபதி “அமெரிக்க நிறுவனம், அமெரிக்கத் தொழிலாளர்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்” என்று கூறிய விதத்தில் வியாழன் அன்று கிங், ஒபாமாவைப் பாராட்டவும் செய்தார். உண்மையில் அரசாங்கம் UAW ல் தான் முதலீடு செய்துள்ளது, தொழிற்சங்க நிர்வாகிகளிடம் மில்லியன் கணக்கான GM பங்குகளை அதன் பணிகளுக்கு விலையாகக் கொடுத்ததின் மூலம்.
கிங் மற்றும் UAW வைப் பொறுத்தவரை, IPO ஒரு பெரிய வெற்றியாகும். UAW 102 மில்லியன் GM பங்குகளை அதன் VEBA ஓய்வுபெற்றோர் சுகாதார அறக்கட்டளை நிதியில் இருந்து விற்று, கிட்டத்தட்ட 3.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள தொகையை ஈட்டியுள்ளது. ஒரே இரவில், UAW நிர்வாகிகள் தங்கள் சொத்துக்கள் நான்கு மடங்கிற்கும் அதிகமாக்கிவிட்டனர். UAW க்கு இத்தகைய பணமழை அமைப்பின் Detroit Solidarity House தலைமையகங்கள், அதன் பிராந்திய மற்றும் உள்ளூர் சங்க அலுவலகங்கள் அனைத்திலும் பெரும் பரபரப்பு அலைகளை ஏற்படுத்தியது என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.
ஆனால் பெருநிறுவன மறுகட்டமைப்பினால் தங்கள் வேலைகளை இழந்த UAW உறுப்பினர்களுக்கு கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை. அதேபோல் IPO ஒன்றும் மிச்சிகன், ஓகையோ, இந்தியானா மற்றும் பிற மாநிலங்களில் ஆலைகள் மூடல்கள், பணிநீக்கங்கள் மற்றும் வழங்குனர் நிலைய மூடல்கள் ஆகியவை டஜன் கணக்கான தொழிலாள வர்க்க சமூகங்களில் ஒரு வெற்றியாகவும் கருதப்படவில்லை.
கார் முதலாளிகள் மற்றும் நிதிய ஊக வணிகர்களுடன் கிங்கும் கரவொலி கொடுத்து ஆர்ப்பரித்ததைப் பார்த்த ஒரு GM தொழிலாளி—இந்தியானாபொலிஸ் உலோக முத்திரைப் பிரிவுத் தொழிலாளர்கள் மீது UAW சுமத்த முயன்ற 50 சதவிகித ஊதியக் குறைப்புக்களுக்கு எதிராக போராடியவர்—WSWS இடம் “தனக்குப் பணம் பண்ணிக் கொள்வதில் கிங் பெரும் களிப்படைகிறார்” என்றார்.
UAW நிர்வாகிகள் பெரும் செல்வந்தர் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை. தொழிலாளர்களுக்கும் மத்தியதர வர்க்க முயல்வோர் மற்றும் UAW ஐ நடத்தும் முதலாளித்துவத்தினராக விரும்புவர்களுக்கும் இடையே உள்ள பெரும் வர்க்கப் பிளவைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பங்கு விற்பனைக்குப் பின்பும், UAW, ஜெனரல் மோட்டார்ஸில் 13 சதவிகித உரிமையையும், நிறுவனத்தில் இயக்குனர் குழுவில் ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளும். இது UAW ல் உள்ள நிறுவனத்தின் முகவர்களுக்கு தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதில் கார்த் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பதற்கு தொடர்ந்து நேரடியான நிதிய உந்துதலைக் கொடுக்கும்.
கிங் அங்கு சமூகமளித்தது வோல் ஸ்ட்ரீட்டிற்கு “புதிய UAW” கார் முதலாளிகளின் போட்டித்தன்மை மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கு எதையும் செய்யும் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. 21ம் நூற்றாண்டில் UAW கார் நிறுவனங்களை “விரோதிகள், எதிர்ப்பாளர்கள் என்று காணவில்லை, புதியன புனைதல் மற்றும் தரத்தில் பங்காளிகள் என்றுதான் கருதுகிறது” என்று கிங் முன்னரே கூறியுள்ளார். தொழிலாளர்களை பொறுத்தவரை, கடந்த மாதம் மிச்சிகனிலுள்ள லான்சிங்கில், “ஒரு மணித்தியாலத்திற்கு 15 டாலர் என்னும் ஊதியத்தில் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றி அனைத்தையும் பெறுதல் என்பது மிகக் கடினம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறைஸ்லர் ஆகியவை போட்டித் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று கூறினார்.
வோல் ஸ்ட்ரீட்டில் கிங்கின் பெரும் களிப்பு UAW அதன் உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும், வடிவமைப்பிலும் பொறுப்புக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது போலி இடதுகள், போலி “தொழிற்சங்க பிளவுற்றவர்கள்” UAW கீழிருந்து அழுத்தத்தின் மூலம் சீர்திருத்தப்பட முடியும் என்று கூறியவர்கள் உட்பட அனைவரையும் அம்பலப்படுத்துகிறது.
தங்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காப்பதற்கான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு இந்த அழுகிய அமைப்பில் இருந்து ஒரேயடியாக முறித்துக் கொள்வதின் மூலம்தான் கார்த் தொழிலாளர்கள் தொடங்க முடியும். புதிய போராட்டத்திற்கான அமைப்புக்கள் —அதாவது அனைத்து சாதாரண தொழிலாளர் குழுக்கள், ஜனநாயக முறையில் தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படுபவை— UAW ல் இருந்து சுயாதீனமாகவும் அதை எதிர்த்தும் நிறுவப்பட வேண்டும். இந்தப் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம், முன்முயற்சி ஆகியவற்றைக் கொண்ட புதிய முன்னோக்கினால் வழிகாட்டப்பட வேண்டும். அது ஜனநாயகக் கட்சியினர், கட்சியின் தேசியப் பொருளாதாரம் மற்றும் கட்சி முதலாளித்துவ முறைக்கு இறுதிவரை கொடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றில் உடன்பாடு கொண்டுள்ள UAW ஐ நிராகரிக்க வேண்டும்.
|