WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Sweden issues international arrest warrant for WikiLeaks founder Assange
விக்கிலீக்ஸ் நிறுவனரான அசாங்கேயை பிடிக்க ஸ்வீடன் சர்வதேச கைது ஆணையை பிறப்பிப்பு
By David Walsh
19 November 2010
Back to
screen version
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே மீது குற்ற விசாரணையை முடுக்கிவிடும் வகையில் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் ஒரு போலியாக உருவாக்கப்பட்ட “பாலியல் பலாத்காரக் குற்றம்” தொடர்பாக அவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சர்வதேச கைது பிடி ஆணையை வெளியிட்டுள்ளனர்.
ஸ்வீடனின் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குனரான Marianne Ny, அசாங்கே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். “இதுவரை விசாரணைகளுக்காக அவரை நாங்கள் சந்திக்க முடியவில்லை” என்று அவர் கூறினார். நீதிமன்ற ஆணையானது விசாரணையாளர்களுக்கு அவரைக் கைது செய்வதற்கு மற்ற நாடுகளின் உதவியைப் பெறுவதற்கு அனுமதிக்கும்.
அசாங்கேக்கு எதிரான வழக்கு விக்கிலீக்ஸை குறைமதிப்பிற்கு அல்லது வலுவிழக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களின் குற்றத் தன்மையை அம்பலப்படுத்தும் நூறாயிரக்கணக்கான ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது (See “The WikiLeaks documents and the rape of Iraq”). ஸ்வீடனின் குற்ற விசாரணையாளரின் பிரச்சாரம் பென்டகன் அல்லது CIA அல்லது இரண்டுமே ஏற்பாடு செய்யும் அல்லது ஊக்குவிக்கும் “கறைபடிந்த தந்திரோபாயங்களின்” முக்கிய தன்மைகள் அனைத்தையும் கொண்டுள்ளது.
செய்தி ஊடகங்கள் பரபரப்புடன் உரத்த குரலில் கூவினாலும் குற்றச்சாட்டுக்கள் பாலியல் தாக்குதலுடன் தொடர்பை கொள்ளவில்லை. இவை அசாங்கே கடந்த கோடைகாலத்தில் இரு ஸ்வீடிஷ் பெண்களுடன் கொண்ட மோதல்களுடன் தொடர்புடையவை. விசாரணையாளர் Ny யின் கருத்துக்களை வலுவாக எதிர்த்த ஒரு அறிக்கையில் அசாங்கேயின் பிரிட்டிஷ் வக்கீல்களில் ஒருவரான மார்க் ஸ்டீபன்ஸ் இக்குற்றச்சாட்டுகள் “எந்த முன்னேற்றகர சட்டமுறையும் பாலியல் பலாத்காரம் என்று எடுத்துக் கொள்ளாத தன்மையைத்தான் கொண்டுள்ளன. பல செய்தி ஊடகங்களும் குறிப்பிட்டுள்ள பாலியல் பலாத்காரம் எனக் கூறப்படுவது, “பாலியல் பலாத்காரத்திற்கான ஆதாரம்” எனப்படுவது, இசைவுடன், பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொண்ட நிகழ்விற்கு சில நாட்களுக்குப் பின்னர் வெளிப்பட்ட பூசல்களை ஒட்டியது” என்றார்.
உண்மையில் அசாங்கேக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் Eva Finne தலைமை அரசாங்க வக்கீலால் 24 மணி நேரத்திற்குள், “அசாங்கே பாலியல் பலாத்காரம் செய்தார் என்று சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று கண்டறிந்து கைவிடப்பட்டது. ஆனால் அசாங்கே பற்றிய அடையாளம் ஏற்கனவே வலதுசாரிச் செய்தி ஊடகத்திற்கு சட்டவிரோதமாக ஸ்வீடன் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டுவிட்டது. “பாலியல் பலாத்காரம் என அழைக்கப்படுவது பற்றிய கட்டுக்கதை உலகம் முழுவதும் கூறப்பட்டது, திரு. அசாங்கேக்கும் அவருடைய அமைப்பிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டது” என்று ஸ்டீபன்ஸ் வலியுறுத்தினார்.
அசாங்கே மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்ட முடிவை மாற்றியது “பெண்கள் சார்பில் இப்பொழுது செயல்படும் Claes Borgström என்னும் அரசியல்வாதியின் குறுக்கிட்டை அடுத்து” ஏற்பட்டது என்று ஸ்டீபன்ஸ் தெரிவிக்கிறார். உண்மையில் Borgström ஒரு புகழ்பெற்ற வக்கில் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஆவார். 2000 த்தில் இருந்து 2007 வரை அவர் ஸ்வீடன் அரசாங்கத்தில் பணிபுரிந்தார். சமூக ஜனநாயக அரசியல்வாதியும் முன்னாள் நீதித்துறை மந்திரியுமான தோமஸ் போட்ஸ்ட்ரோனுடன் ஒரு சட்ட நிறுவனத்தில் பங்காளியாக உள்ளார்.
ஸ்டாக்ஹோமில் Göran Persson கீழ் நடக்கும் ஒரு சமூக ஜனநாயக அரசாங்கம், 2001ல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து 2002 தொடக்கத்தில் 500 ஸ்வீடிஷ் துருப்புக்களையும் அனுப்பி வைத்தது. குற்றச்சாட்டுக்களைக் கூறிய இரு பெண்களில் ஒருவர் ஸ்வீடிஷ் சமூக ஜனநாயக கிறிஸ்துவப் பிரிவுடன் தொடர்புடையவர்.
அக்டோபர் மாதம், ஸ்காண்டிநேவிய நாட்டில் வசித்து, வாழ வேண்டும் என்ற அசாங்கேயின் விண்ணப்பத்தை ஸ்வீடிஷ் குடியேற்ற நிர்வாகம் நிராகரித்தது. ”அவருக்கு வசிக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்” என்று இம்மனு தொடர்பாக பொறுப்புடைய Gunilla Wikström குறிப்பிட்டார். “தேவையான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை” என்று வலியுறுத்திய Wikström கூடுதல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
தன்னுடைய நவம்பர் 18 அறிக்கையில், அசாங்கே மற்றும் அவருடைய வக்கீல்கள் “அவருக்கு எதிரான விசாரணை பற்றிய ஆதாரம் நிறைந்த தகவல்களை செய்தி ஊடகத்தின் மூலம்தான் கண்டறிய முடிந்துள்ளது” என்று ஸ்டீபன்ஸ் குறிப்பிட்டுள்ளார். “கடந்த மூன்று மாதங்களில் பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டபோதிலும், அசாங்கேயோ அவருடைய சட்ட ஆலோசகரோ ஸ்வீடனின் அதிகாரிகளிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் பற்றி எழுத்து மூலம் ஒரு சொல்லைக் கூடப் பெறவில்லை.” இது ஐரோப்பிய மரபுகளை மீறியதாகும். அவை குற்றம்சாட்டப்பட்டவர் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும், அதுவும் அவர் நன்கு அறிந்துள்ள மொழியில் அவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பற்றித் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அசாங்கே பலமுறையும் பேட்டிக்குத் தயார் என்று, முதலில் அந்நாட்டை விட்டு நீங்கு முன் ஸ்வீடனிலும், பின்னர் பிரிட்டனிலும், “தானே தொலைபேசி மூலம், அல்லது வீடியோ உரையாடல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் இது நடத்தப்படலாம், என்றும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயார்” என்றும் கூறினார். ஆனால் இந்த கோரிக்கைகள் அனைத்தும் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அரசாங்க வக்கீலால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர் அசாங்கே ஸ்வீடனுக்குத் தன் செலவில் வந்து தான் செயல்படுத்த இருக்கும் மற்றொரு செய்தி ஊடக சர்க்கஸில் பங்கு பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என்று ஸ்டீபன்ஸ் விளக்கியுள்ளார். அவர் மேலும், “இந்த நடவடிக்கை குற்ற விசாரணை அல்ல, பெரும் துன்புறுத்தல் ஆகும்” என்றும் சேர்த்துக் கொண்டார்.
அசாங்கேயின் ஸ்வீடன் நாட்டு வங்கீல்களில் ஒருவரான Björn Hurtig எழுதிய கடிதம் ஒன்றும் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அதில் அவருடைய சட்டக்குழு அசாங்கே விசாரிக்கப்படுவதை ஏற்பாடு செய்வதவற்கு ஸ்வீடிஷ் அதிகாரிகளுடன் கொண்ட முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றால் பலன் ஏதும் கிட்டவில்லை.
தன்னுடைய செய்தி ஊடகத்திற்கான அறிக்கையை கீழ்க்கண்டவாறு ஸ்டீபன்ஸ் முடிக்கிறார்….. ”எங்கள் கட்சிக்காரர் தன்னுடைய குற்றமற்ற தன்மையைத்தான் எப்பொழுதும் கூறிவருகிறார்….. இந்தத் தவறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விந்தையான சட்ட விளக்கங்களினால் அவருடைய பெயரும் புகழும் களங்கத்திற்கு உட்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான செய்திக் கட்டுரைகள், 3.6 மில்லியன் வலைத்தளப் பக்கங்கள் இப்பொழுது அவருடைய பெயர் மற்றும் “பாலியல் பலாத்காரம்” சொல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உண்மையில் நான்கில் மூன்று வலைத்தளங்கள், திரு. அசாங்கேயின் பெயரைக் குறிப்பவை “பாலியல் பலாத்காரம்” என்னும் சொல்லையும் குறிக்கின்றன…. இது ஸ்வீடிஷ் அரசாங்க வக்கீல்களின் திறமையற்ற, தீமை நிறைந்த நடவடிக்கையின் நேரடி விளவாகும்.”
மற்றொரு தனியான செய்தி ஊடகத்திற்கான கருத்தில், ஸ்டீபன்ஸ் “தன்னுடைய 30 ஆண்டுகால சட்டச் செயலில் இது போன்றதைக் கண்டதில்லை” என்றும் விளக்கியுள்ளார்.
ஜூலை 2010ல் விக்கிலீக்ஸ், ஆப்கான் போர் பற்றிய பென்டகனின் 77,000 இரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இன்னும் 400,000 ஆவணங்களை ஈராக்கியப் போர் பற்றி வெளியிட்டது.
மிகச் சமீபத்திய ஆவணத் தொகுப்புக்கள், பிறவற்றுடன், குறைந்தது இதுவரை வெளியிடப்படாத 15,000 ஈராக்கிய சிவிலிய இறப்புக்கள் பற்றிய தகவலைக் கொடுக்கின்றன. குறிப்பிட்ட போர்க் குற்றங்கள் பற்றிய தெளிவான சான்றுகள், ஈராக்கிய குடிமக்களை அட்டூழியமாக வேண்டுமென்றே கொலை செய்தவையும் இதில் அடங்கும். அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகளில் 834 ஈராக்கியக் குடிமக்கள் கொலை செய்யப்பட்டது. ஈராக்கிய இராணுவம் மற்றும் பொலிஸ் முறையாக நடத்திய சித்திரவதை பற்றிய தகவல்கள், இதற்கான அமெரிக்க இராணுவத்தின் உடந்தை, இன்னும் பற்பல.
இத்தகைய இழிந்த அம்பலங்கள், அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தால் அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றன. என்றாலும் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறைக் கருவிகளுக்கு சீற்றத்தைக் கொடுத்துள்ளன. எனவேதான் அசாங்கேக்கு எதிராக இப்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ள பிரச்சாரம் நடக்கிறது. |