World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: ISSE/SEP public meeting against university privatizationஇலங்கை: பல்கலைக்கழக தனியார்மயத்துக்கு எதிராக ஐ.எஸ்.எஸ்.ஈ. / சோ.ச.க. கூட்டம்22 November 2010சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வியாழக்கிழமை கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பாகமாக, தனியார் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கம் போராடி வந்த இலவசக் கல்வி உரிமையின் மீதான ஒரு பெரும் தாக்குதலாகும். இந்தப் பல்கலைக் கழகங்களில் அதிகளவு கட்டனம் அறவிடப்படுவதோடு அதைச் செலுத்தக்கூடியவர்களுக்கே, அதாவது இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செல்வந்த தட்டினரின் மகன்மார் மகள்மாருக்கு மட்டுமே அங்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த தனியார் பல்கலைக்கழகங்கள், நிதி ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களின் நிலைமையை மேலும் சீரழிப்பதோடு கல்வி முறைமையில் சமூக சமத்துவமின்மையை ஆழமடையச் செய்யும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், “பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி கிளர்ச்சியொன்றுக்கு” திட்டமிடப்படுகின்றது என்ற அவதூறான குற்றச்சாட்டுக்களுடன், எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக ஏற்கனவே பொலிஸ் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு டசின் கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்குள் ஏறத்தாழ அரசியல் கலந்துரையாடல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் ஒன்றியங்களும் அமைப்புக்களும் நசுக்கப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியைச் (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்தின் திட்டங்களை விலக்கிக்கொள்ள வைக்க அதற்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் அழுத்தம் கொடுக்க முடியும் என்ற போலி மாயையை முன்னிலைப்படுத்தி வருகின்றது. உண்மையில், சிங்களப் பேரினவாத கட்சியான ஜே.வி.பி., பல்கலைக்கழக தனியார்மயத்தை கொள்கையளவில் எதிர்க்கவில்லை என ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களால் மட்டும் பொதுக் கல்வியை பாதுகாக்க முடியாது. நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில் தொழில், நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீது கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் மாணவர்கள் திரும்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இது சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாளர்களதும் இளைஞர்களதும் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு அரசியல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாகும். (பார்க்க: “இலங்கை: பல்கலைக்கழக தனியார்மயத்துக்கு எதிராகப் போராடு” [சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களின் அறிக்கை]). ஒரு முன்னணிப் பாதையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மாணவர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் அழைப்பு விடுக்கின்றன.
திகதி: நவம்பர் 25 வியாழன்
|
|